ஸ்ரீ ராமானுஜர் - 4 - வாழ்க்கை வரலாறு - முகவுரை
ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை
-சுவாமி ராமகிருஷ்ணானந்தர்
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேரடி சீடரும், சென்னையில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்தவருமான பெருந்தகை, சுவாமி ராமகிருஷ்ணானந்தர். அன்னார், வங்காளிகள் ஸ்ரீ ராமானுஜரை அறிய வேண்டும் என்ற பேரவாவில் வங்க மொழியில் ‘உத்போதன்’ பத்திரிகையில் எழுதிய நீண்ட தொடர் தொகுக்கப்பட்டு, பிற்பாடு ஆங்கிலத்திலும், தமிழிலும் (தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ.) மொழிபெயர்க்கப்பட்டது. அதுவே, ஸ்ரீ ராமானுஜர்- வாழ்க்கை வரலாறு என்னும் நூலாகும்.
சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடான இந்நூல் அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான நூலாகும். இந்நூலின் முகவுரையில் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் எழுதியுள்ள அறிமுகமே இக்கட்டுரை.
இந்நூலின் மொத்த பக்கங்கள்: 380; விலை: ரூ. 110.00
கிடைக்கும் இடம்: ஸ்ரீ ராம்கிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4
வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களாக, அந்த மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் இங்கே வெகு சிலரே. ஆனால் தென்னிந்தியாவில் ஸ்ரீவைஷ்ணவர்களின் பெருமை மிகவும் ஓங்கியுள்ளது. ஸ்ரீராமானுஜர் எந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு தமது கோட்பாடுகளை நிறுவினார்? அவர் காலத்துக்கு முன்னமே இந்த நெறி பரவியிருந்ததா? அவரைப் பின்பற்றுபவர்களுக்கு ஏன் ஸ்ரீவைஷ்ணவர்கள் என்று பேர்? சங்கர பகவத்பாதரின் அத்வைத தத்துவத்திற்கும் ராமானுஜரின் தத்துவத்திற்குமிடையே ஒற்றுமைகள் உண்டா? என்ற விஷயங்களைப் பற்றி வங்கநாட்டில் வாழ்பவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமே.
தொண்டர்களுக்கு அரசரான இளையபெருமாளின் அவதாரம் என்று தம் சீடர்களால் கொண்டாடப் பெறுபவரும், பிரமன் முதல் துரும்பு வரை எல்லா உயிர்களுக்கும் புகலாக விளங்கும் பெருங்கருணையும் அன்பும் பொருந்திய உள்ளம் வாய்ந்தவரும், அளவற்ற அறிவாற்றல் பெற்ற சங்கரபகவத்பாதரின் அசைக்க முடியாத அத்வைதக் கொள்கைகளை மறுப்பதற்கு, வரிசை வரிசையாக மிகவும் நுட்பமான, பெரிதும் நம்பத்தகுந்த சான்றுகளை உறுதியாக நிறுவியவருமான பகவான் ஸ்ரீராமானுஜரின் வாழ்வு பற்றியும் அவருடைய போதனைகள் பற்றியும் அறியாமலிருப்பது உசிதமல்ல.
தமது தத்துவத்தைப் பின்பற்றுபவர்களிடையே அவர் இன்றும் பேராற்றல் பொருந்திய ஒரு மகாபுருஷராக விளங்குகிறார். இந்த நூற்றாண்டில் பரவியுள்ள பௌதீகவாதத்தையும் நாத்திகவாதத்தையும் எதிர்த்து நின்று, தமது வாழ்க்கை முறையில் எவ்வளவோ மாறுதல்கள் தோன்றியிருந்துங்கூட அவற்றிற்கு ஈடு கொடுத்து, ‘நமது உடலைக் காப்பதற்காக பிற உயிர்களைக் கொன்று உண்பது இழிவான பெரும்பாவம்’ என்பதை உணர்த்துகிற ஸ்ரீவைஷ்ணவர்களின் உள்ளம், தூய தாவர உணவையே உண்ணுகின்ற முனிவர்களைப் போன்ற கருணையுள்ளம் ஸ்ரீராமானுஜரின் அரிய உபதேசங்களின் பயனாகவே இன்றும் நிலைத்துள்ளது.
மகான்களின் அவதாரம், பெரும்பான்மையான மக்களின் நன்மைக்காகவே ஏற்படுகிறது. அவர்கள் பூவுலகில் இறங்கி வருவதற்கு சுயநலமான காரணம் எதுவுமில்லை. தாழ்த்தப்பெற்ற, உதவியற்ற, ஏழையான பொதுமக்களின் துயரங்களை எவ்வாறு நீக்குவது என்பதிலேயே அவர்களின் கருத்துக்கள் எப்போதும் ஆழ்ந்திருக்கும். இதனால்தான் அவர்களின் வரலாறுகளை ஆழ்ந்து பயின்று ஆராய்வது மிக்க நன்மை தருகிறது. இந்த மகான்கள் கண்டுபிடித்துக் கூறிய வழிகளை அறிந்து, அந்த வழிகளின்படியே சென்று வாழ்வதனால், ஒருவன் ஒப்பற்ற ஆனந்தத்தைப் பெற முடியும்; ஏனெனில், இந்தப் பெரியோர்கள் உயிர்களின் நன்மைக்காக நீண்டநாள் ஆழ்ந்து தியானத்தில் பயின்று கூறிய வழிகள் இவை. இதுமட்டுமின்றி, இந்த வழிகளில் செல்வதனால், மறுமையில் தெய்வீகப் பேரின்பமான முக்திநிலையும் எய்த முடியும். இம்மையிலும் மறுமையிலும் நன்மை அளிக்கும் இன்னமுதமான இந்தப் பெரியோர்களின் வாழ்க்கைச் சரிதங்களைப் பயின்று களிப்பது, அறிவுடையோர்களின் முக்கிய கடமை அல்லவா?
இத்தகைய மகான்களிடையே ஸ்ரீராமானுஜர் மிக்க பெருமை வாய்ந்தவராகவும், மிகப் பரந்த உள்ளமுடையவராகவும் விளங்குகிறார். அவர் காண்பித்த வழி, தூய சத்துவகுணத்தின்மேல் நிலைநிற்பது. ரஜோ குணத்தையும், தமோ குணத்தையும் சார்ந்து செல்லும் வழிகளைப் போல, நிலையற்றவையும் அற்பமுமான பலன்களைத் தராமல், இந்த வழி, என்றும் நிலையான பெரும்பயன்களைத் தருகிறது. என்றுமுள்ள பேரின்பத்தை பெற விரும்பும் யாவருமே, பகவான் ஸ்ரீராமானுஜர் என்ற மகானின் திருவடி நிலையைப் பின்பற்றியே செல்ல வேண்டும். ‘இதையன்றி வேறு வாழும் வழி இல்லை’, ஏழை பணக்காரர், கற்றவர் கல்லாதவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் ஆகிய அனைவருமே இந்த மகான் காண்பித்த வழியில் எளிதில் சென்று, பெரும் பயனைப் பெற முடியும்.
இன்னும் ஒரு விஷயம்: விளங்குவதற்கு அரிய கடினமான உபதேசமொழிகளைக் கிளிப்பிள்ளைகள் போல ஒப்பிப்பதைவிட, மகான்களின் வரலாறுகளைப் பயிலுவது, பெரும்பயன் தருவதாகும். விளங்குவதற்கு அரியனவாகவும் கடினமாகவும் இருக்கும் கருத்துக்கள், மகான்களின் வாழ்வில் இடங்கொண்டு தெளிவாகவும் எளியனவாகவும் விளங்குவதனால், சாதாரண மக்களும் அவற்றை எளிதில் அறிந்து கொண்டு பின்பற்ற முடியும். மனிதர்கள் தம்மை அறியாமலே இவற்றைப் பின்பற்றினாலும் கூட, நற்பண்புப் பாதையில் சென்று, நாளடைவில் மிருகவேட்கைகளை வெற்றி கொண்டு, ஆண்டவனைப் புகலாகப் பற்றுவதற்கு உரியவர் ஆவர்.
‘எப்போதும் உண்மை பேசுவதே கடமையாக இருக்க வேண்டும்’ என்ற உபதேசத்தை மனிதன் சிறுவயது முதலே கேட்டு வருகிறான். ஆனால், உலகில் பார்த்த இடமெங்கும், தவறாமல் உண்மையை மீறியே மாந்தர் நடந்து கொள்வதை ஒருவன் நேரில் பார்க்கும்பொழுது, உண்மை பற்றிய உபதேசமெல்லாம் புத்த்கப் பக்கங்களை அணிசெய்ய உரியனவே தவிர, கலப்படமில்லாத உண்மையைப் பேசுவது நடைமுறையில் சாத்தியமற்ற செயல் என்று முடிவு கட்டுகிறான். சத்தியமே வடிவான மகான்கள் இந்த உலகில் அவதரிக்காமல் இருந்திருந்தால், மேற்சொன்ன தவறான நம்பிக்கை மனித உள்ளத்தில், அசைக்க முடியாத மேரு மலையைப் போல நிலைத்த இடம் கொண்டிருந்திருக்கும்.
அனைவருக்கும் தந்தையான சர்வசக்திமானான இறைவன், தன் மக்களிடம் அளவற்ற கருணை கொண்டு, சமய தத்துவங்களுக்குப் புத்துயிர் தந்து, இம்மையிலும் மறுமையிலும் நன்மையைத் தரும் வழியில் மாந்தர் செல்லுதற்கு உதவுவதற்காக, மகான்களின் வடிவம் கொண்டு, இந்த உலகிற்கு வருகிறான். எனவே, இத்தகைய மகான்களின் வரலாறுகளைப் பயில்வது, ஒவ்வொருவருக்கும் கடமையே அல்லவா?
- சுவாமி ராமக்ருஷ்ணானந்த
No comments