மஹாவிஷ்ணு - ஓர் அறிமுகம்
மஹாவிஷ்ணு
திருமால் என்பவர் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக
அறியப்பெறுகிறார். இவர் விஷ்ணு, கேசவன், பெருமாள் என்றும் அறியப்பெறுகிறார். தமிழர்களின்
முல்லைநிலத் தெய்வமாக வணங்கப்பட்ட மாயோன் தெய்வமாக திருமால் அறியப்பெறுகிறார்.
சங்ககாலத் தமிழ்ப்பாடல்களில் மாயோன் வழிபாடு பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.
மால்,
மாலன், மாலவன், பெருமால் என்றும் அறியப்பெறுகிறார். சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம்
என்ற பஞ்சாயுதங்களை கொண்டவராகவும், பாற்கடலில்
திருமகளுடன் ஆதிசேசனின் படுக்கையில் படுத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. இவருடைய வாகனமாக கருடனும், அருவ வடிவமாகக் சாளக்கிராமம் கருதப்படுகிறது.
இந்துக்கோவில்களில் சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே
இறைவன் இவரே. திருவரங்கம் போன்ற வைணவத்தலங்களில் இந்த கோலமுள்ளது. நின்ற கோலத்தில்
திருப்பதி போன்ற தலங்களில் அருளுகிறார். மும்மூர்த்திகள் வழிபாட்டில் இவர்
காக்கும் தொழில் செய்யும் கடவுள். மற்றவர்களான பிரம்மா படைக்கும் தொழில்
செய்பவர். சிவபெருமான் அழித்தல் தொழில் செய்பவர். பிரம்மன் இவருடைய
தொப்புள்கொடியிலிருந்து தோன்றியவராகப் புராணங்கள் கூறுகின்றன. அறம் குறித்த
சிந்தனைகளும் அதைத்தொடர்ந்த செயல்களும் குறையும்பொழுது தசாவதாரம் முதலிய எண்ணற்ற
அவதாரங்களை எடுத்து அதை சரிசெய்கிறார். இவருடைய ராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும் பரவலாக வணங்கப்படுகின்றது.
கம்பராமாயணம், வில்லிபாரதம், பாரத வெண்பா, அரங்கநாதர்
பாரதம் போன்ற பல வைணவநூல்கள் திருமாலுடைய புகழை கூறுகின்றன. இதிகாசமான மகாபாரதம்
இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், இராமாயணம்
இராம அவதாரத்தினையும் மையப்படுத்தி எழுதப்பெற்றுள்ளது. பன்னிரு ஆழ்வார்களின்
பாடல்களடங்கிய நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல் திராவிட வேதம் என்று
அழைக்கப்படுகிறது. மச்சபுராணம், வாமன புராணம்
என பன்னிரு புராண நூல்களில் திருமாலின் பெருமை விவரிக்கப்பட்டுள்ளதுடன், புத்தரும் சமணரும் இவருடைய அவதாரங்கள் என்கின்றன.
திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமால், பூலோகத்தைக் காப்பதற்காக ஒன்பது முறை அவதரித்துள்ளார். 10–வது அவதாரமாக கல்கி என்ற அவதாரத்தை அவர் எடுப்பார் என்று
புராணங்கள் கூறுகின்றன.
மச்சாவதாரம்: திருமால் எடுத்த முதல் அவதாரம் இது. மச்சம்
என்றால் மீன் என்று பொருள். இந்த அவதாரத்தில் தோன்றி மகாவிஷ்ணு, வேதங்களை அபகரித்துக் கொண்டு போய், கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்றார்.
கூர்மாவதாரம்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த
போது,
மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரமே
கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து, பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாக புராணங்கள் கூறுகிறது.
வராக அவதாரம்: பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன், அதைக் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில்
அறிதுயிலில் இருந்த திருமால், வெள்ளை
வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றார். பின்னர் பூமியை தன் கொம்பில்
தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.
நரசிம்ம அவதாரம்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை
பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் இருந்து சிங்க
முகத்துடன் வெளிப்பட்ட திருமால், இரண்யகசிபுவை
வதம் செய்தார். இந்த அவதாரமே நரசிம்ம அவதாரம்.
வாமன அவதாரம்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க, பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில்
மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும், மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.
பரசுராம அவதாரம்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும்
மகனாக பிறந்ததே பரசுராம அவதாரம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை
உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம்
செய்து கொண்டிருப்பதாக ஐதீகம்.
ராமாவதாரம்: ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத்
திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின்
சிறப்பம்சங்களாகும். மனிதனின் இன்ப துன்பங்களை அனுபவித்து, மனிதர்களுக்கு முன்னோடியாக விளங்கிய அவதாரம் இது.
பலராம அவதாரம்: கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக
வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம்
இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகவும்
கூறுவர்.
கிருஷ்ணாவதாரம்: வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக
மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில், கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக
திருமால் விளங்கினார். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்டவரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.
கல்கி அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால்
எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் இந்த கல்கி அவதாரத்தை எடுத்து, உலக உயிர்களை முக்தி பெறச் செய்வார் என்று புராணங்கள்
கூறுகின்றன.
குணநலன்கள்
திருமாலின் குணங்களாக நான்கு குணங்கள் கூறப்பெறுகின்றன.
வாத்சல்யம் - தாய்ப்பசுவின் கன்று கொள்கின்ற அன்பு.
சுவாமித்துவம் - கடவுள்களுக்கெல்லாம் தலைமையேற்கும்
சிறப்பு.
சௌசீல்யம் - ஏற்றத்தாழ்வின்றி நட்பு பாராட்டுவது.
சௌலப்யம் - கடவுளின் எளிமையை குறிப்பது.
இந்த நான்கு குணங்களும் திருமாலுடைய கிருஷ்ண அவதாரத்தில்
வெளிப்பட்டதாகவும் கருதப்பெறுகிறது. அர்ஜூனனின் தவறை நோக்காது, பாரத போரினை நிகழ்த்தியமை வாத்சல்யமாகவும், அர்ஜூனனுக்கு தன்னுடைய பரத்துவத்தை விளக்கியமை
சுவாமித்தரமாகவும், குசேலனிடம்
நட்பு பாராட்டியமை சௌசீல்யமாகவும், இறைவனாகிய
திருமாலே மனித உருவெடுத்து அவதரித்தமை சௌலப்யமாகவும் சொல்லப்பெறுகிறது.
திருமாலின் அவதாரங்கள்
உலகில் அதர்மம் தலையெடுக்கும்போது திருமால் உலகில்
அவதரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர். இதற்காகத் திருமால் எடுத்த
அவதாரங்களை சப்தாவதாரம், தசாவதாரம் என
எண்ணிக்கை அடிப்படையில் குறித்துவைக்கின்றனர். பாகவத புராணத்தில் திருமால்
இருபத்தைந்து அவதாரங்களை எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
திருமாலின் அவதாரங்களை அவதாரம், ஆவேசம், அம்சம் என
பிரிக்கின்றார்கள்.
அவதாரம் - முழு சக்தியை கொண்டது.
ஆவேசம் - தேவையின் போது மட்டும் சக்தி கொண்டவனாகுதல்.
அம்சம் - திருமால் சக்தியின் ஒரு பகுதி ஓர் உருக்கொண்டு
வெளிப்படுவது.
சப்தாவதாரம்
அசுரகுருவான சுக்கிராச்சாரியாரின் மனைவியை திருமால்
கொன்றதால்,
சுக்கிராச்சாரியார் திருமாலை ஏழுமுறை மனிதனாக பூமியில்
பிறக்கும் படி சபித்தார். இதனால் தத்தாத்ரேயர், பரசுராமர், இராமர், வியாசர், கிருஷ்ணன், உபேந்திரன், கல்கி முதலிய
ஏழு அவதாரங்களும் சப்தாவதாரங்களை திருமால் எடுத்ததாக வாயு புராணம் கூறுகிறது.
தசாவதாரம்
திருமாலும், திருமகளும்
பாற்கடலில் தனித்திருக்கும் வேளையில் சில முனிவர்கள் திருமாலைக் காண வந்தார்கள்.
அவர்களை ஜெய விஜய எனும் இரு வாயிற்காவலர்களும் தடுத்தனர். இறைவனின் தரிசனத்திற்கு
வந்த தங்களைத் தடுத்தமையால் கோபம் கொண்ட முனிவர்கள் வாயிற்காவலர்களைக் கொடூர
அசுரர்களாகப் பிறக்கும்படி சாபமிட்டனர். இதையறிந்த திருமால் தன்னுடைய
வாயிற்காவலர்கள் அரக்கர்களாகப் பிறக்கும் போது, அவர்களை ஆட்கொள்ளும்படி செய்ததாகத்க் தசாவதாரங்களுக்கு
காரணம் சொல்லப்படுகிறது.
பத்து அவதாரங்கள் அல்லது தசாவதாரங்கள் என்று கூறப்படுவன:
மச்ச அவதாரம்
கூர்ம அவதாரம்
வராக அவதாரம்
நரசிம்ம அவதாரம்
வாமண அவதாரம்
பரசுராம அவதாரம்
இராம அவதாரம்
கிருஷ்ண அவதாரம்
பலராம அவதாரம்
கல்கி அவதாரம்
No comments