அவதாரங்கள் -பலராமன் அவதாரம்
பலராமன் அவதாரம்

வரலாறு
இந்து சமயத்தில் கண்ணனின் அவதாரக் கதைகளைச் சொல்வது வியாசர்
எழுதிய பாகவதபுராணம். கண்ணனின் அண்ணன் பலதேவர் என்றும் அழைக்கப்படும் பலராமர்.
இவர் ககுத்மி என்ற அரசனின் மகள் இரேவதியை மணந்ததில் ஒரு விசித்திரம் உள்ளது.
ஏனென்றால் ககுத்மியும் ரேவதியும் தோன்றியது வைவஸ்வத மன்வந்தரத்தின் முதல்
மகாயுகத்தில். பலராமர் தோன்றியது அதே மன்வந்தரத்தில் இப்பொழுது
நடந்துகொண்டிருக்கும் 28-வது
மகாயுகத்தின் துவாபர யுகத்தில். இடையில் 27 x 43,20,000 மனித ஆண்டுகள் உள்ளன. இந்தப் புராணக்கதை
ஸ்ரீமத்பாகவதத்தில் 9-வது ஸ்கந்தம்
மூன்றாவது அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது.
ககுத்மி
வைவஸ்வத மன்வந்தரத்தின் முதல் மகாயுகத்தின் முதல் யுகமான
கிருதயுகத்தில் இச்சம்பவம் நடந்தது. அரசன் ககுத்மி வைவஸ்வத மனுவின் பேரனுடைய
பேரன். ககுத்மி தன் பெண் ரேவதிக்கு மணம் முடிப்பதில் ஒரு விசித்திரமான முறையைக்
கையாண்டார். பூவுலகத்தில் உள்ள யார் சொல்லையும் கேட்பதில்லை என்று தீர்மானித்தார்.
எல்லோரையும் படைத்து எல்லாமறிந்த பிரம்மனையே கேட்டுத் தெளிவடைவது என்று பிரம்ம
லோகத்திற்கே சென்றார். போகும்போது தன் பெண் ரேவதியையும் அழைத்துச் சென்றார்.
கிருதயுகத்தில் மேலுலகத்திற்கும் பூவுலகிற்கும் அரசர்கள் இப்படிப் போய்வருவது
சாத்தியமாம்.
பிரம்மலோகத்துக்குச் சென்றவர் அங்கு ஓர் இருபது நிமிடங்கள்
காத்திருக்க வேண்டியதாயிற்று. ஏனென்றால் பிரம்மன் ஒரு சங்கீதக் கச்சேரியை
ரசித்துக் கொண்டிருந்தார். அது முடிந்தவுடன் ககுத்மி பிரம்மாவை சந்தித்து 'என் மகளுக்குச் சரியான மணவாளன் யார்?' என்ற தன் கேள்வியைக் கேட்டதும் பிரம்மா 'நீர் இங்கு வந்து காத்திருந்த 20 நிமிடங்களில் பூவுலகில் உமக்குத் தெரிந்த யாவரும்
அவர்களுடைய சந்ததிகளும் காலமாகி விட்டனர். உங்கள் மனதிலுள்ள யாரும் இப்பொழுது
அங்கில்லை. நீர் இங்கு வந்தபிறகு அங்கு 27 மகாயுகங்கள் ஆகி முடிந்துவிட்டன. இப்பொழுதுள்ள
மகாயுகத்தில் இறைவன் கண்ணன், பலதேவன் என்ற
இரு சகோதரர்களாக அவதரித்து லீலைகள் புரிந்து கொண்டிருக்கின்றான். நீர் திரும்பிப்
போய் உங்கள் பெண்ணை பலதேவனுக்கு மணமுடியுங்கள்' என்றார். ககுத்மியும் அப்படியே செய்தார்.
No comments