Header Ads

ஆதிதிருவரங்கம் - 2

மிகப் பழைமையானதும், எழில் மிகுந்ததுமான திருத்தலம் இது. முதல் யுகமான கிருத யுகத்தில் அமைந்த புராணத் தொடர்பு கொண்ட தலம் என்பார்கள். காரணம், முதல் அவதாரமான மச்சாவதாரம்எடுத்து, கடலுக்குள் பதுங்கி இருந்த சோமுகன் என்ற அசுரனை வென்று, நான்கு வேதங்களையும் மீட்டு நான்முகனிடம் அளித்ததோடு, அசுரனின் வசமாயிருந்த தேவலோகத்தை மீண்டும் தேவேந்திரனிடம் ஒப்படைத்துவிட்டு, இளைப்பாறுவதற்காகப் பெருமாள் சயனித்த தலமே இந்தத் திருவரங்கம் என்பதால், இதை ஆதி திருவரங்கம் என்கிறார்கள்!

கிழக்கு நோக்கியபடி சயனித்திருக்கும் ஸ்ரீரங்கநாதர் மிகப் பெரிய உருவத்தோடு சுமார் 15 அடியில், வேறு எங்கும் பார்க்கமுடியாத அளவிலும் அழகிலும், கருணை வழிந்தோடப் பள்ளிகொண்டிருக்கிற காட்சி கண்கொள்ளாதது!

பெருமாளின் திருமுகத்தை உற்றுநோக்கித் தரிசித்தால் புன்முறுவலுடன் கூடிய பவளத் திருவாயும், அருள் சுரக்கும் திருவிழிகளும், கருணை பொங்கும் திருமுகமும் நம்மை மெய்ம்மறக்கச் செய்யும்.

மூலஸ்தான நுழைவாயிலில் மணியன், மணிகர்ணன் என துவார பாலகர்கள் காவல் காக்க, உள்ளே ஆளை மயக்கும் அழகோடு சயனித்திருக்கிறார், ஸ்ரீரங்கநாதப் பெருமாள். இடது தோள்புறம் ஸ்ரீதேவி வாஞ்சையுடன் வீற்றிருக்க, திருவடிகளை மடியில் ஏந்தி வருடியபடி இருக்கிறார் பூதேவி. அனந்தன் குடைவிரித்துப் பரப்பிய படுக்கையில், வலது திருக்கையைத் தலையின் பக்கம் வைத்து அபயம் காட்டி, இடது திருக்கையால் நான்முகனுக்கு வேத உபதேசம் செய்யும் ஞான முத்திரைக் கோலத்துடன் அருள்கிறார் பெருமாள்.

வலது கரத்தின் கீழே இட்ட பணியை எப்போதும், எந்நேரமும் நிறைவேற்றத் தயார் என்பதுபோல் பணிவே உருவாக அமர்ந்திருக்கிறார் கருடாழ்வார்.

உலகத்துக்கெல்லாம் படியளந்த பெருமாள் களைப்புற்று, அளந்த மரக்காலையே தலைக்கு அணையாக, தலையணையாக வைத்துப் படுத்துக்கொண்டதாகவும் கூறுகின்றனர். தாயாரின் பெயர் ஸ்ரீரங்கநாயகித் தாயார். அழகொழுகக் காட்சி தரும் தாயார் தனிச் சந்நிதியில் அமர்ந்து, வரம் அருள்கிறார்.

தலச்சிறப்பு : திவ்ய தேசம் 108 கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.  இவைகள்  அனைத்தையும் விட சிறப்பானது மற்றும் பழமையானது ஆதி திருவரங்கம்.  ஏன் என்றால்  ஆதி திருவரங்கம் திருமாலின் முதல் அவதாரத்தில் நிர்மாணிக்கப்படுகிறது.  ஆதி திருவரங்கம்  அடுத்து ஸ்ரீரங்கம் என்ற சொல் இங்கு அணைத்து பகுதிகளிலும் பேசப்பட்டு வருகிறது.   தமிழகத்திலேயே மிக பெரிய பெருமாளில் இவரும் ஒருவர்.  இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட  பெரியவர்.  இதனால் இந்த பெருமாள் "பெரிய பெருமாள்" என அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு : அசுரகுல வம்சத்தில் தோன்றி ஆட்சிபுரிந்து வந்த சோமுகன் என்னும் அசுரன்  மிகவும் கடுமையான தவங்களை செய்து பல வரங்களையும் அழியாத ஆயுளையும் பெற்றான்.   அசுர குலத்துக்கே உரிய ஆவணமும், அரக்கத்தனமும் அவனுக்கு இருந்தது.  பூவுலகையும்தேவலோகங்களையும் தனது ஆட்சிக்குள் கொண்டு வர வேண்டும்.   முனிவர்களும், தேவர்களும்  தனக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணினான்.  அவ்வாறே பூவுலகம், தேவலோகம்  எல்லாவற்றையும் வென்று முனிவர்களையும் தேவர்களையும் தனது அடிமைகளாக்கி தனக்கு  சேவை செய்யுமாறு பணித்தான்.

மும்மூர்த்திகளில் பிரம்மாவை சிறைபிடித்து வேத சாஸ்திரங்களை அவரிடமிருந்து கவர்ந்து  சென்று விட்டான்.  பிரம்மாவும், தேவர்களும், முனிவர்களும் திருப்பாற்கடல் சென்று ஸ்ரீமன்  நாராயணனை வணங்கி சோமுகனை வதம் செய்து தங்களை காத்தருளுமாறு வேண்டினார்.   நாராயணனும் சோமுகனை வதம் செய்ய சென்றார்.  இருவருக்கும் மிகப்பெரிய அளவில் போர்  நடந்தது.  சோமுகன் தனது எல்லா மாயாஜாலங்களையும் காட்டி போர் புரிந்து சோர்ந்து விட்டான்.   இனி இருந்தால் நாராயணன் அழித்து விடுவான் என எண்ணி கடலுக்கு அடியில் சென்று பதுங்கி  விட்டான்.

ஸ்ரீமன் நாராயணன் அழியா வரம் பெற்ற சோமுகனை மத்ஸ்ய அவதாரமெடுத்து கடலுக்கு அடியில்  சென்று வதம் செய்து வேத சாஸ்திரங்களை மீட்டு வந்தார்.  மீட்டு வந்த வேத சாஸ்திரங்களை  உத்தரங்கம் எனும் இந்த இடத்தில் மீண்டும் பிரம்மாவுக்கு உபதேசம் செய்தார்.   தேவர்களும்முனிவர்களும் மனம் மகிழ்ந்து ஸ்ரீமன் நாராயணனை வணங்கினார்கள்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் : புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் பௌர்ணமி, வைகுண்ட ஏகாதசி.

அருகிலுள்ள நகரம் : விழுப்புரம்.

கோயில் முகவரி : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் கோயில்,
ஆதி திருவரங்கம் - 605 802, விழுப்புரம் மாவட்டம்.


கடலுக்கு அடியில் உன்னதமான அந்த வேதங்களை அவன் வைத்திருந்ததால் ஆதிகேசவனான மகாவிஷ்ணு எல்லாமுமாக நிறைந்தவன் இம்முறை கடலுக்குள் மீனாக மச்சாவதாரம் எடுத்தார். ஏதோ மீன் என வீணாக அலட்சியம் காட்டிய சோமுகனை உந்தித் தள்ளியது. இது மச்சமல்ல நம்மை மாய்க்க வந்த மாலோலன் என எதிர்த்தான். அவனுக்கு பக்க பலமாக தாக்க வந்த மற்ற அசுரர்களை கொன்று குவித்தார் மகாவிஷ்ணு. இறுதியாக சோமுகன் எனும் அரக்கனை வதம் செய்து அசுரனே ஆனாலும், அவனை தம் திருவடியில் சேர்த்துக் கொண்டார். வேதங்களை மீட்டெடுத்தார். இக்காட்சியை கண்ட தேவர்கள் கைதொழுது நின்றனர். பூவுலகில் வேதம் அதிர்ந்து முழங்கியது. யாகத்தீ உயர்ந்து எழுந்தது. தேவர்கள் மக்களை ஆசி கூறி வாழ்வைப் பெருக்கினர். தர்மச் சக்கரம் மீண்டும் சீராகச் சுழன்றது. சோமுகனை வதம் செய்த அதே வேகத்தோடு எம்பெருமான் தென்பெண்ணை ஆற்றங்கரையில் பிரம்மாவைச் சந்தித்தார்.

வேதங்களை மீண்டும் ஒரு முறை உபதேசித்தார். அப்படி பிரம்மாவிற்கு மச்சாவதாரமாக, மகாவிஷ்ணுவாக, பாற்கடல் பரந்தாமனாக அருட்கோலம் காட்டிய தலமே இந்த ஆதி திருவரங்கமாகும். இன்றும் தென்பெண்ணை தென்றலில் அருவமான வேத ஒலிகள் நம்மையறியாது உரசியபடி இருக்கின்றன. பிரம்மனும் கண்டேன்... கண்டேன்... என தான் திருமாலைக் கண்ட திருக்கோலத்திலேயே இங்கு ஆலயம் அமைத்துத் தாருங்கள் என வேண்டி நின்றார். எம்பெருமான் வைகுண்டம் ஏகும் முன்பு தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்தார். திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட தம்முடைய திருமேனியைப்போல, அனந்த சயனமூர்த்தியை நிர்மாணிக்க திருவாய் மலர்ந்தார். நவபாஷாணத்தாலும், மூலிகைகளாலும் உருவான விஸ்வகர்மாவின் கைவண்ணம்தான் திருமாலின் திருவடிவம். முதல் அவதாரத் திருத்தலமாக அமைந்துள்ள திருவரங்க கருவறையில் சாந்நித்தியமாகி ஆண்டாண்டு காலமாக ரங்கநாதர் சேவை சாதித்து வருகிறார்.

விண்ணுயர்ந்த மதில்களுடன், கிழக்கு நோக்கிய திசையில் திருக்கோயில். மூன்று பிராகாரங்களுடன் காட்சி தரும் ஆதி திருவரங்கத்தின் ஆலயத்தினுள் நுழைவோமா? ஆழ்வார்கள் பார்த்துப் பார்த்து அகம் மகிழ்ந்த ரங்கநாதரை தரிசிக்கப் போகிறோம் என்ற ஆனந்தமே நம்மை நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்து கொண்டிருக்கிறது. முதல் பிராகாரத்தின் உள்ளே, கருவறையில் பாம்பணையில் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் அனந்த சயன பெருமாள். இதுவரை நாம் எங்குமே தரிசித்திராத முப்பது அடி நீளத்தில் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார். அந்த பிரமாண்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது அந்த திருமாலின் திருவடியின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் ஆளுயர கண்ணாடி. அதன் வழியே தரிசித்தால் 30 அடி நீள திருமால் அறுபது அடியாக விஸ்வரூப தரிசனம் தருவது சிலிர்ப்பூட்டுகிறது. குட திசையில் தலை வைத்து, குண திசையில் கால்நீட்டி நெடிதான நீண்ட கோலத்தை காணும் போதே உடல் விதிர்த்துப் போடுகிறது. ஒரு கேவல் நம்மை மீறி கண்ணீராக வெளிப்படுகிறது.

நமக்குள் வேறெதுவும் நிரப்பப்படாத வெறுமையும், உள்ளுக்குள் பள்ளி கொண்டு விட்டானோ என ஆனந்த அதிர்வு பிரமிக்க வைக்கிறது. பிரார்த்தனைகள் மறந்து விடுகின்றன. காலவெளியே அறுந்து விட்டதுபோன்றதொரு உணர்வு. தலைமுதல் பாதம் வரை புறக்கண்கள் ரசிக்க, அகக் கண்கள் அவனின் ஆனந்த ஊற்றாக பொங்கும் அருளில் மூழ்கிவிட்டிருக்கிறது. வெள்ளி கிரீடம், மார்பு கவசம், திருவடி கவசங்களுடன் ரங்கநாதர் அருள்கிறார். வேதங்களை மீட்ட ஆதி அரங்கத்து அண்ணல், வலக்கையை தலையணையாக கொண்டு, இடக்கையால் நாபிக்கமலத்தில் தோன்றிய நான்முகனுக்கு நான்கு வேதங்களையும் அருள்கிறார். திருமகளின் மடி மீது ரங்கநாதர் சயனித்திருக்கிறார். வடதிசை நோக்கியிருக்கும் திருவடியை நிலமகள் வருடியபடி அமர்ந்துள்ளார். மற்றொரு திருவடி ஆதிசேஷனின் வால் மீது உள்ளது.

பெருமாளின் வலது கையை தாங்கி மண்டியிட்டபடி, கருடாழ்வார் அமர்ந்துள்ளார். வேலைக்காக அல்லாடுபவரா, திருமணம் தடைபடுகிறதா, என வாழ்வின் ஒவ்வொரு நிலையில் உற்ற துணையாக நிற்கிறான். பார்த்தால் போதும் எண்ணியதை ஈடேற்றுவான். என்ன தனக்கு வேண்டும் என்ற சிந்தனைத் தெளிவை அருள்வான். சிந்தையில் தெளிவு வர வாழ்வுத் தேரை வழுக்காது செலுத்தும் பார்த்தசாரதி இவன் எனில் அது மிகையில்லை. 



No comments

Powered by Blogger.