Header Ads

விஷ்ணு வழிபாடு பூஜை விரதம் - கோகுலாஷ்டமி விரதம்

கோகுலாஷ்டமி விரதம் :

பகவான் மகா விஷ்ணு பூமி பாரம் குறைப்பதற்காகவும் நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தார். இந்தியா முழுவதும் இந்த விழாவானது கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

கோகுலாஷ்டமி தினத்தன்று கிருஷ்ண பகவானை வழிபடுபவர்களுக்கு சந்தான பாக்கியம் ஏற்படும். இந்த நாளில் குழந்தை கிருஷ்ணர் நம்மைத் தேடி வருவதன் அடையாளமாக சின்னஞ்சிறு பாதத்தை வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை கோலமாக வரைவது வழக்கம். கிருஷ்ணன் கோவில்களில் உறியடித்தல் வழுக்குமரம் ஏறுதல் போன்ற விளையாட்டுகள் நடைபெறும்.

ஸ்ரீஜெயந்தி : ஸ்ரீஜெயந்தி என அழைக்கப்படும் இந்த நாள் ஆவணி மாதத்தில் சிம்மம் ராசியில் சூரியன் இருக்கும் சமயம் அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நாளான இந்த தினம் ஸ்ரீஜெயந்தி தினமாகும் இந்த தினம் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த தினமாக கொண்டாடப் படுகிறது. 

ஸ்ரீ பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி : வைணவ ஆகமங்களில் பாஞ்சராத்ரம் வைகானசம் என்னும் இரண்டு விதமான ஆகமங்கள் உண்டு. ஆகமங்கள் என்பது ஆராதனை முறைகளாகும். பாக்ன்சராத்ர ஆகமம் என்பது பத்ரிகாஸ்ரமத்தில் பகவான் விஷ்ணு தானே நரனும் நாராயணனுமாகி நாராயணன் நரனும்மு உபதேசித்த பூஜை முறைகளாகும், இந்த பூஜை முறை ஐந்து ராத்திரிகளில் சொல்லப்பட்டதால் பாஞ்சராத்ரம் என்று பெயர் பெற்றது. 

வைகானச ஆகமம் என்பது பகவான் விஷ்ணு தானே வகானச முனிவராகி சௌனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்ததாக கூறப்படுவதால் இந்த ஆகமம் வைகானச ஆகமம் என்று கூறப்படுகிறது.

பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி என்பது ஆவணி மாதம் சிம்மத்தில் சூரியன் இருக்கும் சமயம் கிருஷ்ணபட்சம் அஷ்டமியன்று கொண்டாடப்படும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும். இன்று சூரிய உதயத்தில் சப்தமி அல்லது கிருத்திகை நட்சத்திரம் சம்பந்தம் ஒரு வினாடி இருந்தாலும் அது தோஷமுள்ள நாளாக கருதப்படுவதால் மறுநாள் தான் ஸ்ரீஜெயந்தியாக கொண்டாடப்படவேண்டும். 

மேலும் சூரிய உதயத்தில் அஷ்டமி ரோகிணி ஆகியவை இல்லாதிருந்தாலும் அன்றே பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி ஆகும். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விரதம் ஸ்ரீ வைகானச ஸ்ரீஜெயந்தி ஆவணி மாதம் சிம்மத்தில் சூரியன் இருக்கும் சமயம் நடு இரவில் ரோகிணி இருக்கும் சமயம் வைகானச ஸ்ரீஜெயந்தியாகும் அன்று தேய்பிறை அஷ்டமி அர்த்தராத்திரிக்கு முன்பு சிறிதளவு இருந்தாலும் போதுமானது. இவ்வாறு பலவகையிலும் பலவித ஆச்சாரியார்களின் வழிகாட்டுதலின்படி பலவிதமான நாட்களில் பலவித பெயர்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

எட்டு வகை கிருஷ்ணர்கள் ஸ்ரீகிருஷ்ணன் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார்.

1. சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம். 

2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம்.

3. காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.

4. கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

5. ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.

6. முரளீதரன்: கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது. 

7. மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன்.

8. பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

கிருஷ்ண ஜன்மாஷ்டமி: ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற விழாவாகும். பொதுவாக சிவராத்திரியானது சிவனுக்கு சிறப்பாகும், நவராத்திரி அம்பாளுக்கு விசேஷம், ராமநவமி ராமர் பெயரில் இருக்கிறது. கந்த ஷஷ்டி சுப்ரமண்யருடைய பெயரில் இருக்கிறது. ஆனால் கிருஷ்ணருக்கு மட்டும் அவருடைய பெயரில் இல்லாமல் அவர் பிறந்த இடமான கோகுலத்தை வைத்து, அவர் பிறந்த திதியான அஷ்டமியை வைத்து கோகுலாஷ்டமி என்று வழங்கப்படுகிறது.

ஏனெனில், கிருஷ்ண பகவான் முழுவதுமே ஈஸ்வர ஸ்வரூபமாக அவதரித்தவர். மற்றவர்களெல்லாம் அம்சாவதாரம் என்று சொல்லுவார்கள். முழுமையான அவதாரமாக கிருஷ்ண பகவானை கருதுவதால் அவர் பிறந்த இடத்தையும், திதியையும் வைத்து மரியாதையுடன் கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. 

ஸ்ரீ ஜெயந்தி வரலாறு கோகுலாஷ்டமியை ஸ்ரீ ஜெயந்தி என்றும் சொல்லுவார்கள். காரணம் லட்சுமியை பிரதானமாக வைத்துக்கொண்டு ஜயந்தி கொண்டாடும்போது ஸ்ரீஜயந்தி என்று வைஷ்ணவர்கள் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். மற்ற அனைவரும் பொதுவாக கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறார்கள். மதுராவில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து, துவாரகையிலே ராஜ்ய பரிபாலனம் செய்து பன்னிரெண்டு ஜோதிர்லிங்க ஷேத்திரங்களில் ஒன்றான சோமநாத் ஷேத்திரத்தில் பிரதாபபட்டம் என்ற இடத்தில் தன்னுடைய கடைசி காலத்தில் இருந்துகொண்டு வைகுண்டம் சென்றதாக வரலாறு சொல்லுகிறது. பகவான் நாமம் பாடுங்கள் நமக்கு பிறந்த நாளிலே நாமெல்லாம் விசேஷமாக கொண்டாடிக் கொள்கிறோம்.


மற்றவர்களின் காரியங்களை விட்டுவிடுகிறோம். அப்படி இருக்கும்போது உலகிலுள்ள லௌகீக காரியங்களை செய்யாமல் ஈஸ்வர காரியங்களை செய்ய வேண்டுமென்பதற்காகத்தான் அன்றைய தினம் மற்ற காரியங்களேதும் செய்யாமல் பகவானைப் பற்றிய பக்தி, பஜனை, கீர்த்தனம், உபவாசம் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று காலையில் இருந்து ஸ்ரீமத் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும். துவாதச மந்திரமான ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்து, மலர்களையும் பழங்களை இனிப்பு வகைகளையும் அவருக்கு படைத்து தூப தீபம் (மணமிக்க ஊதுபத்தி, கற்பூரம் ஆரத்தி) காட்ட வேண்டும். வீட்டிற்கு வரும் கண்ணன் பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். 

இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும். கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு. கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை உள்ளது.


No comments

Powered by Blogger.