Header Ads

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 17 - ருதுத்வஜனும் தத்தாத்திரேயரும் - 8

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 17 - ருதுத்வஜனும் தத்தாத்திரேயரும் - 8

அதைக் கூறியபின் மதாலசை தன் கணவருடன் கானகத்துக்குப் போய் விட்டாள். அலர்கனும்  அது முதல் அரசு காரியங்களில் முழுமையாக மனதை செலுத்தி சீரிய முறையில் நாட்டை ஆண்டு வந்தான். அப்போது ஒரு நாள் இளம் வயதிலேயே சன்யாசத்தை ஏற்று கானகம் சென்று விட்ட அவனுடைய இரண்டாவது பெரிய சகோதரன் அந்த நாட்டிற்கு வந்தான். தனது சகோதரன் நாட்டை ஆளுவதைக் கண்டான். திடீர் என அவன் மனதில் சன்யாச ஆசை விலகி ராஜாங்க வாழ்கையில் வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளதைப் போல காட்டிக் கொண்டான் . என்ன இருந்தாலும் அவனும் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவன் அல்லவா.  தன்னிடம் தனது சகோதரன் நாட்டை ஒப்படைக்க மாட்டான் என எண்ணியவன் போல  காசி நாட்டு  மன்னனை சந்தித்தான். காசி நாட்டு  மன்னனும் அலர்கனும் ஒத்துப் போகாதவர்கள். ஆகவே காசி மன்னனிடம் சென்று ராஜ்யத்தை தான்அடைய வேண்டும் என்று கூறி அவன் உதவியை நாடினான். அவனிடம் அலர்கன்  கூறியதாக இல்லாததையும் பொல்லாததையும் கூற காசி மன்னன் கோபம் அடைந்து அலர்கனின் ராஜ்யத்தின் மீது படை எடுத்து வந்து அனைத்து நகரங்களையும் பிடித்துக் கொண்டு அரண்மனையையும் முற்றுகை இட்டான். பல நாட்கள் அரண்மனை முற்றுகை தொடர்ந்தது. அலர்கன் நிலை குலைந்து போனான். அப்போதுதான் அவனுக்கு தனது தாயார் கொடுத்த மோதிரம் நினைவுக்கு வந்தது. அதைக் கயற்றி  உற்றுப் பார்த்தான். அதில் எழுதி இருந்த வாசகங்கள் ' பற்றை நீக்க வேண்டும். முடியாவிடில் அதை அடைய சீரியோர் உதவியை நாட வேண்டும்'. அவனுக்கு தனது தாயாரின் நினைவு அதிகம் வந்தது. அவள் அடிக்கடி தனக்கு போதித்த தத்தாத்திரேயர் நினைவு வந்தது. ஒருநாள் யாரிடமும் கூறாமல் ரகசிய சுரங்கப் பாதை வழியே ரகசியமாக வெளியில் சென்று சஞ்சயாத்ரி மலை அடிவாரத்தில் இருந்த தத்தாத்திரேயரிடம் சென்று அவர் காலடியில் விழுந்து நடந்தவற்றைக் கூறிவிட்டுக் கதறினான்.

அவருக்கு வந்தவன் யார் என்பது மதாலசை பற்றியும் நன்கு தெரியும் என்பதினால் அவனை எழுப்பி ஆறுதல் கூறினார்' மகனே 'அலர்க்கா நீ ஏன் ஒன்றுமற்ற விஷயத்திற்காக அழுது புலம்புகிறாய். நீ யார்?....நீ யார் என்பது உனக்கத் தெரியுமா?....நீ, நீயே அல்ல.... உயிரற்ற ஜடமான உடலிலே உழன்று  கொண்டு இருக்கும் ஆத்மாவே நீ.... உன் உள்ளே உள்ள அந்த ஆத்மாவின் நிறம் தெரியுமா அல்லது அதன் உருவம்தான் உனக்குத் தெரியுமா?...மரமா, செடியா , காட்றா,   கொடியா? அதன் உருவத்தை நீ  பார்த்து இருக்கின்றாயா? அந்த ஆத்மாவின் உருவத்தை நீ பார்த்தது போல எண்ணுகிறாயே அவை அனைத்துமே மாயையான தோற்றங்களே...நீ உன் உள் மனதில் எதுவாக நினைகின்றாயோ அதையேதான் ஆத்மாவின் உருவமாக காண்கிறாய். உன் உடலில் உள்ள எந்த அங்கமாவது நீ எனும் அந்த ஆத்மாவைக் காட்ட முடியுமா? நான் எனும் அந்த ஆத்மாவுக்கு துயரம் இல்லை, விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை. அது சுதந்திரமானது. தனித் தன்மையானது. நீ இப்போது இங்கு இருக்கின்றாயே, துன்பப்படுகிறாயே , அது எதற்காக?   எந்த பந்த பாசங்களுக்கும் கட்டுப்படாத, தனித்தன்மை கொண்ட அந்த ஆத்மாவுக்கா அல்லது இந்த ஜடமான உடலுக்கா? அலர்கா , இந்த உலகம் எத்தனை விஜித்திரமானதோ அது போலத்தான் நம்முள் உள்ள இந்த ஆத்மாவும் விசித்திரமாக இயங்கும். இந்த இதயம் உலகின் மாயை மீது பற்று கொள்ளத் துவங்கியதுமே மமதை நம்மை ஆக்கிரமிக்கத் துவங்கிவிடும். பிறகு ஆசை தோன்றத் தோன்ற இல்லறம், சந்தானம் போன்ற அனைத்தின் மீதும் கட்டுக்கு அடங்காத மோகம் ஏற்படும். அதுவே நம் மனதை அலை பாய வைக்கத் துவங்கும் ஆரம்பத்தின் அத்தியாயம். அப்படிப்பட்ட மமதை கொண்ட மனிதர்களின் சேர்கை இன்னும் அந்த வேட்கையை அதிகரிக்கும். அது துக்கத்தைத் தரும், வேதனையை அதிகப்படுத்தி நம்மை நிம்மதி இழக்கச் செய்யும்....இதோ நீயே அதற்கு ஒரு சான்று. அந்த மாதிரியான நேரத்தில் தீய சேர்க்கைகளை ஒதுக்கி விட்டால் மட்டுமே யோகம் சித்திக்க ஆரம்பிக்கும். அலைபாயும் மனது கட்டுப்படும். மனதை ஸ்திரமாக வைத்துக் கொள்ள பழக்கிக் கொண்டால் வைராக்கியம் வரும். பார்க்கும் பொருட்களில் குறைகள் தோன்றி அதன் மீதான நாட்டம் குறையும். அவை அனைத்துமே ஜடமாக மனதுக்கு தோன்றும். அந்த நிலை தொடரும்போது முக்தி கிடைக்கும். ஒருவன் ஞானி ஆகிறான்'

அலர்கன் மனம் லேசாகிக்  கொண்டு இருப்பதை உணர்ந்தான். கண்களில் வழிந்து கொண்டு இருந்த கண்ணீர் மெல்ல மெல்ல வற்றத் துவங்கியது. தத்தாத்திரேயரின் முகத்தை அமைதியாக நோக்கிக் கொண்டு இருந்தான். அவர் கூறிக் கொண்டு இருந்தார் ' அலர்க்கா, ஞானி  என்பவனுக்கு  தான் எங்கு உள்ளானோ அதுவே அவன் வீடு. எங்கு உணவு கிடைக்குமோ அதை உண்பான்...எங்கு உள்ளானோ அதுவே உலகம் என எண்ணுவான். எந்த உலகப் பொருள் மீதும் பற்று இருக்காது. இதை எல்லாம் எளிதில் அடைய முடியாது. அந்த நிலையை அடைய ஒரு குருவின் தீட்சைப் பெற வேண்டும். முதலில் கடினமாகத் தோன்றும் அந்த பயிற்சி போகப் போக எளிதாகிவிடும். குரு தரும் தீட்சை பெற்றுக் கொண்டு மூச்சை அடக்கி  அப்பியாசம் செய்யத் துவங்க சில நாளிலேயே மனதும் கட்டுப்படத் துவங்கும். அந்த தியான மார்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு விட்டால் சமாதி நிலையை அடையலாம். அதற்கு உதாரணமாக எறும்புகளைப் பார். அவற்றுக்கு எத்தனை சிறிய வாய் உள்ளது. ஆனால் அவை வசிக்கும் இடத்தைப் பார்த்தாயா? எத்தனை பெரிய பொந்தைக் கட்டி அவை அவற்றுக்குள் வசிக்கின்றன. மரத்தைப் பார். மரத்தில் இலைகளையும் கைகளையும் பறிக்கப் பறிக்க அவை மீண்டும் மீண்டும் அவற்றை உற்பத்தி செய்து கொண்டேதான் உள்ளன. அப்படித்தான் விடா முயற்சியுடன் யோகாசனத்தை மீண்டும் மீண்டும் செய்து வந்தால் அனைத்து புலன்களும் அடங்கும். நான், எனது என்கின்ற அகங்காரம் நீங்கும். அது நீங்கினாலே மன அமைதி பெறலாம்'.

இப்படியாக பல்வேறு உதாரணங்களைக் காட்டி தத்தாத்திரேயர் உபதேசம் செய்யச் செய்ய அலர்கனின் மனம் அமைதி அடைந்தது. ' ஸ்வாமி, இன்றுதான் இருட்டில் இருந்து வெளியில் வந்து வெளிச்சத்தைக் கண்டது போல உள்ளது. என்னுள் இருந்த அறியாமை விலகியது போல உணர்கிறேன். என் மனம் அமைதி  பெற்றது...ஸ்வாமி...அமைதி பெற்றது' எனக் கூறியவாறு அவரை பல்வேறு விதமாக தோத்திரம் செய்து வழிபட்டப் பின் அவரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு சென்றான். மீண்டும் ரகசிய சுரங்கப் பாதை வழியே அரண்மனைக்குள் நுழைந்தவன் தனது படையினரிடம் கூறினான். 'இனி நான் கூறும்வரை ஆயுதங்களை எடுக்காதீர்கள். நான் யுத்தத்தை  ஒரு முடிவுக்கு கொண்டு வர உள்ளேன்' எனக் கூறிய பின் அரண்மனையை விட்டு நிராயுதபாணியாக   வெளியேறி காசி மன்னன் முன் திடீர் எனப் போய் நின்றான். 'மன்னா நீ போய் எனது ராஜ்யத்தை எடுத்துக் கொள். நான் கானகம் போகிறேன். இனி இந்த ராஜ்யம் என் சகோதரனுக்கு உரியது ' . அதை  காசி மன்னன் எதிர்பார்க்கவில்லை. அவனைப் பார்த்து காசி மன்னன் கேட்டான்' என்ன பயந்து விட்டாயா? இல்லை நாடகம் ஆடுகிறாயா?...என்னிடம் பயந்து அதனால்தான் உன் ராஜ்யத்தை எனக்கு தந்து விட்டாயா ?'

அலர்கன் கூறினான் ' பயமா...இருப்பது ஒரு உயிர், அது போவதும் ஒரே ஒரு முறை என்னும்போது இனி எனக்கு  என்ன பயம் மன்னா...நீ வெளியே முற்றுகை இட்டபோது நான் ரகசியமாக வெளியில் சென்று தத்தாத்திரேயரை சந்தித்தேன். அவர் கொடுத்த உபதேசத்தினால்தான் இந்த முடிவை நான் எடுத்தேன். அதற்கு உனக்குத்தான் நான் நன்றி  கூற வேண்டும். நீ என் மீது படையெடுத்து வந்து என் அரண்மனையை முற்றுகை இடாவிடில் எனக்கு இந்த ஞானோபதேசம் கிடைத்து இருக்குமா என்ன...'

அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருந்த அவனுடைய சகோதரர் குதிரை மீது இருந்து இறங்கி வந்து தனது சகோதரனைக் கட்டித் தழுவினார். ' தம்பி எனக்கும் இந்த ராஜ்ஜியம் தேவை இல்லை. இதை காசிராஜனே எடுத்துக் கொள்ளட்டும். நானும் உன்னுடன் கானகம் செல்கிறேன்'.அதைக் கேட்டு காசிராஜன் குழம்பினான். 'என்ன தம்பி உன்னை நம்பி நான் படையெடுத்து வந்து உனக்கு உதவினால் நீயும் ராஜ்ஜியம் வேண்டாம் என்கிறாயே. இதென்ன கூத்து?'

அதற்கு அலர்கனின் சகோதரன் விடை தந்தார் ' மன்னா  நல்ல கேள்வி இது. அதற்கான காரணத்தை இப்போது கேட்டுக் கொள். எங்களுடைய தாயார் சாதாரண பெண்ண அல்ல. அவள் யோகா மாதா...அவளே எங்களுக்கு உலக பற்றி விட்டு விட்டு பரமானந்தத்தை அனுபவிக்கும் விதத்திலான அறிவை புகட்டினாள் . ஆனால் துரதிஷ்டவசமாக எனது தம்பிக்கு ஒரு காரணத்தினால் உலக பற்றோடு கூடிய வாழ்கையில் இருக்க நேரிட்டது. அவனும் இல்லறமே சுகம் என இருந்தான். ஆகவே ஒரு யோகேஸ்வரியின் வயிற்றில் பிறந்த என் சகோதரன் இப்படி காட்டு மிருகம் போல சல்லாபத்தில் மூழ்கி விடக்கூடாது என்பதினால் அவனையும் ஆன்மீக வழிக்கு கொண்டு செல்ல இந்த காரியத்தை நடத்தினேன். அதற்கு உன் துணையை நாடினேன். நீ அவன் மீது நான் கூறியபடி படை எடுத்திருக்காவிடில் இவனால் இந்த யோக வாழ்வைப் பெற முடியுமா? தத்தாத்திரேயரின் அருள் கிட்டி இருக்குமா?. நல்ல வேளையாக நான் நினைத்தபடி அனைத்தும் நல்லபடியே நடந்து முடிந்து அலர்கனும் தத்தாத்திரேயரின்  அருளைப் பெற்று விட்டான். நாங்கள் போகின்றோம். நீ இந்த நாட்டை எடுத்துக் கொள்'.

அவற்றை எல்லாம் கேட்ட காசி ராஜனும் அந்த நாட்டை அலர்கனின் படையினரிடமே தந்துவிட்டு தனது நாட்டிற்குச் சென்று தனது ராஜ்யத்தை தனது பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு கானகம் சென்று தத்தாத்திரேயரின் அருள் கிடைக்க அங்கு தவம் செய்யலானான். இப்படியாக அலர்கனின் கதை மூலம் தத்தாத்திரேயர் மக்களை எப்படி எல்லாம்  நல் வழியில் கொண்டு சென்றார் என்பது நன்கு விளங்கும். இப்படி பல இடங்களிலும் பலருக்கும் தத்தாத்திரேயர் அருள் பாலித்த, மகிமை செய்த கதைகள் ஏராளம் உள்ளன.

Our Sincere Thanks to 
Santhipriya


https://santhipriyaspages.blogspot.in/ 

1 comment:

  1. 23-10-2017
    Sir
    My pen name is Santhipriya. I have sent a mail to you regarding non inclusion of my name as author in the article published by you under Daththathreyar. I shall feel happy if my name 'Santhipriya' and blogger-'Santhipriyas pages' is indicated in all the 17 serials of Daththathreyar published by you from 29th August, 2017 till 8th October 2017
    I sent several messages, but there is no response from your side. I once again request you to add my name -Santhipriya- as author of the articles under Lord Dathathreyar part-2 to 17 as published by you in Tamil. They have been scripted and published by me in my blogger ‘Santhipriyas pages’( https://santhipriyaspages.blogspot.in/2011/10/blog-post_05.html ) w.e.f Wednesday, October 5, 2011. In case you wish not to publish the name of the author , then I request that the articles penned by me may be removed from your blogger.
    Thanking you
    Santhipriya
    (N.R. Jayaraman)

    ReplyDelete

Powered by Blogger.