Header Ads

இராமானுச நூற்றந்தாதி - 11 - 20

11. சீரிய நான்மறைச் செம்பொருள் * செந்தமிழால் அளித்த
பார் இயலும் புகழ்ப் பாண்பெருமாள் * சரணாம் பதுமத்தார்
இயல் சென்னி இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்தம்
காரிய வண்மை * என்னால் சொல்லொணாது இக்கடலிடத்தே.

விளக்கவுரை – எம்பெருமானின் ஸ்வரூபம் மற்றும் திருக்கல்யாண குணங்களை, உள்ளது உள்ளபடி எடுத்து உரைப்பதால் நான்காக வகைப்பட்ட வேதங்களுக்கு மிகுந்த மேன்மை உள்ளது. ஆழ்ந்த பொருளை உள்ளடக்கிய அவற்றின் ஆழ்பொருளை, அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக இனிய தமிழ் மொழியில் அளித்து, நமக்கு உபகாரம் செய்தவர் திருப்பாணாழ்வார் ஆவார். அகண்ட இந்தப் பூமியில், அதனை விட அகன்ற புகழ் மற்றும் கல்யாண குணங்களைக் கொண்டவரும், பெரியபெருமாள் மகிழும்படியாக இனிதாகப் பாடவல்லவரும் ஆகிய திருப்பாணாழ்வாரின் திருவடிகள் என்ற தாமரை மலர்களைத் தனது திருமுடியில் அலங்காரமாக வைத்துள்ளவர் எம்பெருமானார் ஆவார். இப்படிப்பட்ட எம்பெருமானாரைச் சார்ந்தவர்களின் செயல் மேன்மைகள் எப்படிப்பட்டது என்று கடல் சூழ்ந்த இந்தப் பூமியில் உள்ள என் போன்றவர்களால் கூற இயலாது.
காரியவண்மை என்பதைக் கார் + இயல் + வண்மை என்றும் கொள்ளலாம். இதன் பொருள் என்ன? கார் என்றால் கார் காலமேகம், இயல் – அந்த மேகத்தின் தன்மையானது பலன் பாராமல் மழை அளிப்பது, வண்மை – அந்த மேகம் போன்று எம்பெருமானாரின் திருக்குணங்களைப் பொழிகின்ற தன்மை – என்பதாகும்.
இராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம் காரியவண்மை என்றால் என்ன? க்ர்மிகண்டன் என்னும் துர்அரசனின் சபையில் இருந்த குத்ருஷ்டிகளை வாதம் கொண்டு வென்ற கூரத்தாழ்வான்; எம்பெருமானாரின் கட்டளைக்கு இணங்க, மாயாவாதி வித்வான்களைத் தன்னுடைய திருவடிகளின் தீர்த்தம் (ஸ்ரீபாததீர்த்தம்) கொண்டே திருத்திய முதலியாண்டான்; எம்பெருமானாரின் ஆணைக்கு இணங்க திருமலை சென்று, அங்கு திருவேங்கடமுடையானே இவருக்காக மண் சுமந்த மேன்மையுடைய அனந்தாழ்வான் – முதலானவர்களின் மேன்மையை பாசுரங்களால் கூற இயலுமோ?

12. இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் * இணை அடிப்போது
அடங்கும் இதயத்து இராமானுசன் * அம்பொற்பாதம் என்றும்
கடம் கொண்டு இறைஞ்சும் திருமுனிவர்க்கன்றி காதல் செய்யாத்
திடம் கொண்ட ஞானியர்க்கே * அடியேன் அன்பு செய்வதுவே.

விளக்கவுரை – இந்தப் பூமி எங்கும் தனது புகழ் பரவி, உயர்ந்த குணங்களுடன் உள்ளவர் திருமழிசை ஆழ்வார் ஆவார். அவருடைய இணைந்த தாமரை போன்ற அழகான திருவடிகள் என்றும் எம்பெருமானாரின் நெஞ்சத்தில் உள்ளன. இப்படிப்பட்ட உடையவரின் அழகான, அழகிற்கே இருப்பிடமான திருவடிகளை அனைத்துக் காலங்களிலும், தாங்கள் இந்த மனிதப்பிறவி எடுத்தது இந்தத் திருவடிகளை அடைவதற்கே என்றபடி சிந்தித்து சிலர் உள்ளனர். இப்படிப்பட்ட உயர்ந்த திருவடிகளின் தொடர்பை மட்டுமே உயர்வாகக் கொண்டு, அதனையே தங்கள் மனதில் வைத்தபடி உள்ள ஞானிகள் உள்ளனர். அந்த ஞானிகள் மற்ற விஷயங்கள் மீது ஈடுபாடு இல்லாமல், எம்பெருமானார் விஷயத்தில் மட்டுமே ஈடுபாட்டுடன் உள்ளனர். அவர்களுக்கு அல்லவோ நான் அன்புடன் தொண்டு செய்வேன்?

இவ்வாறு எம்பெருமானார் விஷயத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் எம்பெருமானைக் கூட இரண்டாவது பக்ஷமாகக் கருதுவதும் உண்டு. இதற்கு இரண்டு செயல்கள் காண்போம். ஒரு முறை ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானார் மடத்தின் அருகே நம்பெருமாள் திருவீதி உலா வந்தான். அப்போது அனைவரும் அவனை வணங்கியபடி நிற்க, இராமாநுசரின் சீடரான வடுகநம்பி என்பவர் மட்டும் வரவில்லை. ஏன் என்று காரணம் வினவ அவர், “நான் அங்கு வந்தால் இங்கு உமக்காக (இராமாநுசர்) அடுப்பில் காய்ச்சிக் கொண்டிருந்த பால பொங்கி விடுமே”, என்றார்.
இது போன்று , கிருமிகண்டன் என்ற அரசனின் நிபந்தனையால் ஸ்ரீரங்கத்தை விட்டு எம்பெருமானார் மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரம் சென்று விடுகிறார். அப்போது அவருடன் இருந்த கூரத்தாழ்வானுக்கு பெரியபெருமாளை க் காணவேண்டும் என்ற ஆசை மேலிட, ஸ்ரீரங்கம் வந்தார். நகரக்காப்பாளர்கள் அவரிடம், “இராமானுசருடன் தொடர்புடையவர்கள் உள்ளே புக அனுமதியில்லை”, என்றனர். உடனே அங்கிருந்தவர்கள், “இவர் ஞானம் உடையவர், இவரை உள்ளே விடுங்கள்”, என்று கூறினார்கள். இதனைக் கேட்ட கூரத்தாழ்வான், “எம்பெருமானார் தொடர்புக்கு மீறி உள்ள ஞானமும், அதனால் ஏற்படும் பெரியபெருமாள் தரிசனமும் எனக்குத் தேவை அற்றது”, என்று கூறி பெரியபெருமாளைத் தரிசிக்காமலேயே புறப்பட்டுவிட்டார்.


13. செய்யும் பசும்துளவத் தொழில் மாலையும் * செந்தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் * பேராத சீர் அரங்கத்து
ஐயன் கழற்கணியும் பரன் தாளன்றி ஆதரியா
மெய்யன் * இராமானுசன் சரணே கதி வேறெனக்கே.

விளக்கவுரை – தனது சீரீய தன்மையால் கட்டப்பட்டதும், தன்னுடைய கரம் பட்டதால் புதுப்பொலிவுடன் விளங்கியதும் ஆகிய திருத்துழாய் மாலைகள்; வேதங்கள் போன்று மூன்று வர்ணத்தினர் மட்டுமே கற்க முடியும் என்ற கட்டுப்பாடு இன்றி, வேதம் ஓத அதிகாரம் இல்லாத பெண்களும்-அறியாமையால் மூழ்கியவர்களும் கற்கலாம்படி தமிழ் மொழியில் உண்டாக்கப்பட்ட வேதம் என்று போற்றப்படும் திருமாலை என்ற திவ்யப் பிரபந்தம் அருளிச் செய்தவர்; ஈறில வண் புகழ் நாரணன் என்று கூறுவதற்கு ஏற்ப , என்றும் உள்ள திருக்கல்யாண குணங்கள் உடையவனாக, தாய் தந்தை இவனே என்று கூறும்படியாக, அனைத்துப் பந்துக்களும் இவனே என்று தோன்றும்படியாக திருவரங்கத்தில் கண்வளர்கின்ற பெரியபெருமாளை, “ஐயனே அரங்கா!”, என்று கூறி அழைத்து நின்றவர்; அந்தத் திருவடிகளைக் காட்டிலும் மேற்பட்ட பொருள் வேறு ஏதும் இல்லை என இருந்தவர் – இப்படிப்பட்டவர் தொண்டரடிப்பொடியாழ்வார் ஆவார். அத்தகைய தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருவடிகளைக் காட்டிலும் வேறு ஒரு பொருளை விரும்பாத உத்தமரான எம்பெருமானாரின் திருவடிகள் மட்டுமே எனக்குச் சரணாகும், வேறு ஏதும் இல்லை.

மெய்யன் என்று கூறுவதன் பொருள் என்ன? ஸர்வேச்வரனின் திருக்கல்யாண குணங்களை எம்பெருமானார் ஆதிசேஷனாக எப்போதும் அவனுடன் இருந்தபடி அறிந்தவர்; அதனைத் தனது ஸ்ரீபாஷ்யத்தில் உள்ளது உள்ளபடி அருளிச் செய்தார்.

14. கதிக்குப் பதறி* வெங்கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்கத் தவம் செய்யும் கொள்கையற்றேன் * கொல்லிகாவலன் சொல்
பதிக்கும் கலைக் கவிபாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் * இராமானுசன் என்னைச் சோர்விலனே.

விளக்கவுரை – கொல்லிநகர் என்று கூறப்படும் திருவஞ்சிக்களம் (கேரளம்) என்ற நகரின் அரசரான குலசேகரப்பெருமாள் செய்தது என்னவெனில் – சாஸ்திரச் சொற்களுக்கு விஷயமாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் விபூதிகள், குணங்கள் ஆகியவற்றை – முத்துக்கள், இரத்தினக் கற்கள் போன்றவற்றைக் கோர்ப்பவர் போன்ற செயல் செய்து, “இருளிரிய சுடர் மணிகள்”, என்று தொடங்கி, “நலந்திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவார்”, என்று முடித்து, இந்தக் கவிதைகளில் அந்தச் சாஸ்திரச் சொற்களைப் பதித்தார். இப்படிப்பட்ட குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியை எப்போதும் அநுஸந்திக்கும் நாதமுனிகள், ஆளவந்தார், பெரிய நம்பி, திருமலைநம்பி, திருக்கோட்டீயூர்நம்பி, திருவரங்கப்பெருமாளரையர், திருமாலையாண்டான் போன்றவர்களின் திருவடிகளை மட்டுமே ஆராதித்து வருபவரும், பகவத் விஷயத்தில் இவரை விட உயர்ந்தவர் யாரும் இல்லாமல் உள்ளவரும் ஆகிய எம்பெருமானார் என்னை விட்டு நீங்காமல் எப்போதும் என்னுடன் உள்ளார். இதனால் என்ன நிகழ்ந்தது? மிகவும் உயர்ந்த புருஷார்த்தங்களைப் பெறுவதற்காக – தீயுடன் கூடிய காடுகள், கால்களை வருத்தும் கற்கள் நிறைந்த இடங்கள், அதிக குளிர் உணடாக்கி வாட்டும் நீர் நிலைகள் ஆகியவற்றில் இருந்தபடி, அனைத்து உடல் உறுப்புகளும் வருந்தும்படி தவம் செய்யும் ஸ்வபாவம் நீங்கப் பெற்றேன். (இதன் கருத்து – உடையவரின் திருவடித் தொடர்பு கிட்டிய பின்னர் வேறு பயன் கருதி எந்தச் செயல்களிலும் ஈடுபட வேண்டியதில்லை என்பதாகும்).

15. சோராத காதல் பெருஞ்சுழிப்பால் * தொல்லை மாலை ஒன்றும்
பாராது அவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத உள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் * எனக்கு என்ன தாழ்வினியே.

விளக்கவுரை – என்றும் வாடாத பக்தி பூண்டு (பரிபூர்ணமான பக்தி) , அத்தகைய பக்தி என்ற வெள்ளத்தில் ஏற்பட்ட பெருஞ்சுழி ஒனறில் அகப்பட்டவராக நின்றவர் பெரியாழ்வார் ஆவார். இவர் செய்தது என்ன? இந்த உலகம் என்ற ஸம்ஸாரக் கடலில் விழுந்து அவதிப்படும் ஜீவன்கள் படும் துன்பம் கண்டு இரக்கப்பட்டபடி உள்ளவனை; என்றும் உள்ளவனை; உயர்வற உயர்நலம் உடையவன், நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தான் என்று பலவாறு போற்றப்படுபவனை; “அவன் ஸர்வேச்வரன், அனைத்தும் பொருந்தியவன்”, என்ற ஏற்றத் தாழ்வு பாராமல், சாதாரண மனிதர்களை “தீர்க்காயுஷ்மாந் பவேத்” என்று ஆசி அளிப்பது போன்று, எம்பெருமாளுக்குப் பல்லாண்டு கூறினார். இவ்விதமாக அரங்கனுக்கே, “உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு”, என்று மங்களாசாஸனம் செய்த பெரியாழ்வாரின் திருவடிகளை எம்பெருமானார் தனது மனதில் நீங்காமல் வைத்துள்ளார். இப்படிப்பட்டவர்கள் – கிட்டுவதற்கு மிகவும் அரியதான மனிதப் பிறவி எடுத்த போதிலும், நஷ்டத்துடன் கூடியவர்களே ஆவார்கள். இப்படியாக எம்பெருமானாரின் கருணைக்கு இலக்கான எனக்கு, இனி தாழ்வு எவ்விதம் ஏற்படும்? ஒரு குறையும் இன்றி, அனைத்தும் கூடும்.

16. தாழ்வு ஒன்றில்லா மறை தாழ்ந்து * தலமுழுதும் கலியே
ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் * அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையைச் சூட்டிக் கொடுத்தவள் தொல்லருளால்
வாழ்கின்ற வள்ளல் * இராமனுசன் என்றும் மாமுனியே

பொருள் – திருவரங்கத்தில் கண்வளர்கின்ற பெரியபெருமாளின் உத்தமமான திருமேனிக்கு, அலங்கரிக்கத் தகுதி கொண்ட மலர் மாலையை, “இந்த மாலை அவனுக்கு உறுத்துமோ, மணம் சேர்க்குமோ”, என்று சோதிக்கும் விதமாகத் தனது தலையில் சூட்டி, அதனைக் களைந்து அவனுக்கு அளித்தாள் (ஆண்டாள்). இப்படிப்பட்ட ஆண்டாளின் கருணையாலேயே தனது வாழ்வு கொண்டவர் எம்பெருமானார் ஆவார். திருவரங்கத்தில் பங்குனி உத்திர நன்னாளில், அழகிய மணவாளன் ஸ்ரீரங்கநாயகியுடன் சேர்ந்து நின்றபோது அல்லவோ – பகவன் நாராயண – என்று சரணாகதி செய்தார்? இவ்விதமாக, தான் அழகிய மணவாளன் திருவடிகளில் சரணாகதி அடைந்து பெற்ற பலன்கள் அனைத்தையும் இந்த உலகம் முழுமைக்கும் அளித்த வள்ளல் ஆவார். அப்படிப்பட்ட மாமுனிவராக உள்ளவர் எம்பெருமானார் ஆவார். இராமாநுஜர் செய்தது என்ன? வேதங்கள் அனைத்தும் எந்தவிதமான தாழ்வுகளும் இன்றி இருந்து வந்தன. அப்படிப்படட உயர்ந்த வேதங்கள் மதிக்கப்படாமல், வேதமார்க்கம் என்பது முலையில் சென்றபடி இருந்து. எப்பொது இவ்விதம் ஆனது என்றால் – இருள்தருமாஞாலம் என்ற இந்தப் பூமியைக் கலியுகமானது ஆள்கின்ற காலத்தில் (கலியுகத்தில்) ஆகும். இந்தக் காலத்தில் வேதங்களை மீட்க, பரமபதத்தில் இருந்து வந்து ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்து, இந்த உலகங்களைக் காத்தவர் எம்பெருமானார் ஆவார் என்று உணர்வீர்களாக.

17. முனியார் துயரங்கள் முந்திலும் * இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ணமங்கை நின்றானை * கலை பரவும்
தனி ஆனையைத் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை * எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே.

விளக்கவுரை – அனைத்து ச்ருதி, இதிஹாஸம் மற்றும் புராணங்கள் ஆகியவற்றால் துதிக்கப்படுபவன்; இதனைப் போன்றே ஒத்த வேறு யானை ஒன்று இல்லை என்றுள்ள கம்பீரமான யானை போன்று செருக்குடன் உள்ளவன் – இவன் யார் என்றால், தனது அழகு முழுவதையும் அனைவரும் அனுபவிக்கும்படி, திருக்கண்ணமங்கை என்னும் திவ்யதேசத்தில் எழுந்தருளி உள்ள பத்தராவிப்பெருமாள் ஆவான். இப்படிப்பட்ட பத்தராவிப்பெருமாளின் ஸ்வரூபம், ரூபம், குணங்கள் ஆகியவற்றைப் பற்றி, அவனை அண்டியவர்களின் தாபங்கள் அனைத்தும் தீரும்விதமாக, இனிய தமிழ் மொழியில் பிரபந்தம் இயற்றியவர் திருமங்கையாழ்வார் ஆவார். இந்த ஆழ்வாருக்கு, இந்த உலகில் உள்ள அனைத்துப் பாகவதர்களையும் விட, பிரியமானவராக உள்ளவர் நமது எம்பெருமானார் ஆவார். என்னைப் போன்றே அனைவரும் உய்ய வேண்டும் என்னும் நோக்கத்துடன் அவதரித்தவர் எம்பெருமானார் ஆவார். எம்பெருமானாரின் ப்ரபாவம் பற்றி அறிந்து, அவரை அண்டிய அனைவரும் பாக்கியம் பெற்றவர் ஆவர், ஏன்? இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு மலை போன்று, அடுக்கடுக்காய்த் துன்பங்கள் ஏற்பட்டாலும், “இந்தத் துன்பங்கள் வந்துவிட்டதே”, என்று புலம்பமாட்டனர்; இதே போன்று அளவிட இயலாத இன்பம் வந்தாலும், “இந்த அதிசயம் நமக்கு உண்டானதே”, என்று துள்ளவும் மாட்டனர்.

18. எய்தற்கரிய மறைகளை * ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனை * சிந்தையுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் * இராமானுசன் எம் உறுதுணையே.

விளக்கவுரை – சிறந்த ஞானம் உள்ளவர்களுக்கும் அறிவதற்குக் கடினமான ஆழ்பொருள் அடக்கிய வேதங்கள் அனைத்தையும், பெண்கள் – சிறுவர்கள் என்னும் பேதம் இன்றி அனைவரும் கற்கும் விதமாக, ஆயிரம் இனிய பாசுரங்களில் செய்தருளினார். இவர் யார் என்றால் – இவ்விதமாக இந்த வேதங்களை எளிமைப்படுத்தவே இந்த உலகில் அவதாரம் செய்தவரும், மற்ற மதங்கள் என்னும் சடம் (ஒருவிதமான வாயு) நீங்க, சடகோபன் என்ற திருநாமம் கொண்டவரும் ஆகிய நம்மாழ்வார் ஆவார். இப்படிப்பட்ட நம்மாழ்வாரை எப்போதும் தனது உள்ளத்தில், “தேவு மற்று அறியேன்”, என்று வைத்துக் கொள்ளும் தகுதி கொண்டவர் மதுரகவியாழ்வார் ஆவார். இத்தகைய மதுரகவிகளின் உயர்ந்த திருக்கல்யாண குணங்கள் அனைத்தையும், இந்த உலகில் உள்ளவர்களை உய்விக்கும் விதமாக அருளியவர் எம்பெருமானார் ஆவார். இப்படிப்பட்ட உடையவரே எனக்குத் திடமான துணை ஆவார் (வேறு யாரும் அல்லர்).

19. உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் * உயர் குருவும்
     வெறிதரு பூமகள் நாதனும் * மாறன் விளங்கிய சீர்
    நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந்நீணிலத்தோர்
    அறி தர நின்ற * இராமானுசன் எனக்கு ஆரமுதே.

விளக்கவுரை – நமக்கு நாம் இன்னார் என்று அறியும் அறிவை அளிக்கவல்லது; நம்மிடம் ப்ரியமாக உள்ளது; அஜ்ஞானத்தை நீக்கவல்லது; ஞானம் ஏற்பட உபாயமாக உள்ளது; அள்ள அள்ள குறைவில்லாத செல்வமாக உள்ளது; “வீடுமின் முற்றவும்” என்று தொடங்கி, “கண்ணன் கழலிணை”, என்பதுவரை நமது நன்மைகளை மட்டுமே கருத்தில் கொண்டு உபதேசித்த காரணத்தினால், நமது தாய்தந்தையைப் போன்றது; அனைத்து வகையிலும் நமக்கு ஏற்ற ஆசார்யனாக உள்ளது; மிகுந்த நறுமணம் வீசும் தாமரை மலரைத் தனது பிறப்பிடமாகக் கொண்ட பெரியபிராட்டிக்கு நாதனான ஸர்வேச்வரன் போன்றும் உள்ளது – இது எது? ஸர்வேச்வரன் தனது கருணை மூலம் நம்மாழ்வாருக்கு “மயர்வற மதிநலம் அருளி”, அத்தகைய நம்மாழ்வார் அவனது ஸ்வரூப-ரூபங்களை நாம் அறியும் வண்ணம் விளக்கிய, தமிழ் வேதமாகிய திருவாய்மொழியே ஆகும். இத்தகைய திருவாய்மொழி மட்டுமே புருஷார்த்தம் என்று இந்தப் பெரிய உலகில் உள்ள அனைவருக்கும் அறிவிக்கும்படியாக எம்பெருமானார் உள்ளார். இப்படிப்பட்ட எம்பெருமானாரே எனக்கு அமிர்தம் போன்று உள்ளார்.

20. ஆரப்பொழில் தென்குருகைப் பிரான் * அமுதத் திருவாய்
       ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு * இனியவர்தம்
       சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
        வாரிப் பருகும் * இராமானுசன் எந்தன் மாநிதியே.

விளக்கவுரை – தாமிரபரணியின் நீர்வளத்தால் உயர்ந்து நிற்கும் சந்தன மரங்கள் சூழ்ந்த சோலையினால் சூழப்பட்டது திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரி ஆகும். இத்தகைய திருக்குருகையில் அவதாரம் செய்து, அனைவருக்கும் திருவாய்மொழி அருளி, நாதமுனிகளுக்கு அனைத்தையும் உபதேசம் செய்து, நமது ஸம்ப்ரதாயத்தை வழி நடத்தியவர் நம்மாழ்வார் ஆவார். அத்தகைய நம்மாழ்வாரின் அழகான திருவாயில் பிறந்ததும், னமது ஸம்ஸார தாபம் நீக்கும் ஈரம் உள்ளதும், தமிழ்மொழியில் உள்ள வேதம் போன்றுள்ளதும் திருவாய்மொழியாகும். இப்படிப்பட்ட உயர்ந்த திருவாய்மொழியின் இசையை, அதன் ராகம் போன்றவற்றுடன் அறிந்தவர்களின் குணங்களில் நின்று, அவர்களுடைய திருக்கல்யாண குணங்களை எப்போதும் கூறியபடி உள்ளவர் நாதமுனிகள் ஆவார். இப்படிப்பட்ட நாதமுனிகளை, அவரது குணங்களுடன் அனுபவித்தபடி உள்ளவர் எம்பெருமானார் ஆவார். அப்படிப்பட்ட உடையவர், இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஏற்ற செல்வமாக உள்ளபோதிலும், எனக்குக் கிட்டிய பெரியநிதி ஆவார். நவநிதி போன்று ப்ரளயத்தில் அழியக்கூடியது அல்லாமல், எப்போதும் உள்ள மாநிதி ஆவார்.

No comments

Powered by Blogger.