Header Ads

இராமானுச நூற்றந்தாதி - 1 - 10


இராமானுச நூற்றந்தாதி

இராமானுச நூற்றந்தாதி வைணவ சமய இலக்கியங்களுள் ஒன்று. இதைப் பாடியவர் திருவரங்கத்தமுதனார்.அந்தாதி எனும் சிற்றிலக்கிய அமைப்பில் அமைந்துள்ள இந்நூல் 108 கட்டளைக் கலித்துறைகளில் பாடப்பட்டுள்ளது.

பாட்டுடைத் தலைவன் வைணவ மகாச்சாரியன் இராமானுசர் மாமுனிகள் ஆவார்

ஆழ்வார்கள் அருளிய திவ்வியப் பிரபந்தங்களை நாதமுனிகள் தொகுத்தார். பின்னர் வந்த மணவாள மாமுனிகள் இதில் இராமானுச நூற்றந்தாதியையும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தமாய்த் தொகுத்தார்.

வைணவர்கள் தினமும் ஓதும் பாசுரங்களில் இதுவும் ஒன்று.

நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி நூலில் 100 பதிகங்கள் உள்ளன. அதன் ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு பாடல் என்ற முறையில் இந்த நூல் பாடப்பட்டுள்ளது.

வடமொழியில் இந்நூலை பிரபந்நகாயத்ரி என அழைப்பர்


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருவே தஞ்சம்
திருவரங்கனே தஞ்சம்
தஞ்சமடைந்த நம் இராமானுசன் திருவடிகளே தஞ்சம்
திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த
ப்ரபந்ந காயத்ரி என்னும் இராமானுச நூற்றந்தாதி


ஸ்ரீபெரும்பூதூர் வந்த வள்ளலாம் இராமானுசனைப் புகழ்ந்து, திருவரங்கத்தமுதனார் 108 பாசுரங்கள் கொண்ட இந்தத் தொகுப்பை அருளிச்செய்தார். இதனை அன்றாடம் ப்ரபன்னர்கள் வேதத்திற்கு நிகராகவே ஓத வேண்டும் என்பதால் இதற்கு ப்ரபன்ன காயத்ரி என்றே ஒரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த ஈடில்லாத தொகுப்பிற்கு ஸ்வாமி மணவாளமாமுனிகளும், பிள்ளைலோகம் ஜீயரும் உரை அருளிச்செய்தனர். இவர்களின் பேருரைகளை அடியொட்டி, நாயேனான அடியேன் இந்தத் தொகுப்பிற்கு விளக்கம் எழுதியுள்ளேன். இந்த முயற்சியில் ஏதேனும் குற்றம் இருந்தால் அதனை எம்பெருமானாரும், நம்பெருமாளும் பொறுத்துக் கொள்வர் என்னும் நம்பிக்கை உள்ளது.

உடையவரின் முதன்மையான சிஷ்யராக விளங்கிய ஸ்வாமி கூரத்தாழ்வானின் திருநக்ஷத்ரமான இன்று (28.01.2008) முதல் இந்தத் தொடர் தொடங்கியது என்பது எம்பெருமானாரின் திருவுள்ளமே என்று கூறுவதை விட வேறு என்ன சொல்வது? உடையவருக்காகத் தனது உயிரையும் விடத் துணிந்த கூரத்தாழ்வானுக்கு நாம் செய்யும் கைங்கர்யம் – எம்பெருமானாரை என்றும் நமது மனதில் நிறுத்தி, அவரது புகழை எப்போதும் பாடி, கோயில்களில் உள்ள அவரது திவ்யமங்கள விக்ரஹத்தைக் கொண்டாடியபடி இருப்பதே ஆகும். இதனைச் செய்தால் மட்டுமே கூரத்தாழ்வானின் மனம் குளிரும் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.

கீழே உள்ள பாசுரங்களில், (*) என்னும் குறியிட்ட இடங்களில் நிறுத்திப் படிக்கவேண்டும்.

தனியன்கள்

1. முன்னை வினை அகல மூங்கில்குடி அமுதன் *
பொன் அம் கழல் கமலப்போது இரண்டும் * – என்னுடைய
சென்னிக்கு அணியாகச் சேர்த்தினேன் * தென்புலத்தார்க்கு
என்னுக் கடவுடையேன் யான்.

பொருள் – மூங்கிற்குடி என்ற குலத்தில் உதித்தவராகிய அமுதனாரின் அழகான திருவடித் தாமரைகள் இரண்டையும் என்னுடைய தலைக்கு அலங்காரமாகச் சேர்த்துக் கொண்டேன். இதன் மூலம் எனது பாவகர்மங்கள் அனைத்தும் அகன்று போகும்படி ஆனது. இவ்விதம் பாவங்கள் நீங்கிய பின்னர், யமபுரியில் உள்ள யமதூதர்களிடம், எனது கர்ம அனுபவம் காரணமாக நான் அகப்படுவேனா? (மாட்டேன்).

2. நயம் தரு பேரின்பம் எல்லாம் பழுது என்று நண்ணினர்பால் *
சயம் தரு கீர்த்தி இராமானுசமுனி தாள் இணை மேல் *
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் * கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே.

பொருள் – உலக விஷயங்களின் மூலம் கிட்டும் இன்பம் அனைத்தும் அற்பமானவையே என்று அறிந்து கொண்டு எம்பெருமானாரின் திருவடிகளை அண்டியவர்களுக்கு, அவர்கள் அந்த விஷயங்களை வெல்லவைக்கும் புகழ் கொண்டவர் இராமானுசர் ஆவார். அப்படிப்பட்ட எம்பெருமானாரின் பொருந்திய திருவடிகள் மீது, உயர்ந்த நற்குணங்கள் நிறைந்தவரான திருவரங்கத்தமுதனார் மிகுந்த பக்தியுடன் அருளிச்செய்த கலித்துறை விருத்தத்தில் உள்ள இந்தப் பிரபந்தத்தை – எனது மனமே! நீ விரும்பி அத்யயனம் செய்வாயாக.

3.சொல்லின் தொகை கொண்டுஉனது அடிப்போதுக்குத் தொண்டுசெய்யும் *
நல் அன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் என்றன் நாவின் உள்ளே *
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறுசமயம்
வெல்லும் பரம! * இராமானுச! இது என் விண்ணப்பமே.

பொருள் – வேதங்களுக்கு முரண்பட்ட உபதேசங்களைக் கூறும் ஆறு சமயங்களையும் மிகவும் எளிதாக வென்ற யதிராஜனே! உனது திருவடித் தாமரைகளுக்கு எப்போதும் தொண்டு புரிந்தபடி உள்ளவரும், உம்மிடம் மிகுந்த அன்பு பூண்டவரும் ஆகிய திருவரங்கத்தமுதனார், தனது விரிவான சொற்கள் கொண்டு உனது பெருமைகள் மற்றும் திருநாமங்களை விரிவாக உரைத்தார். அந்தச் சொற்கள் இரவும் பகலும் எனது நாவில் நிலைத்து நிற்கும்படி நீரே அருளவேண்டும். இதுவே எனது விண்ணப்பம் ஆகும்.


இராமானுச நூற்றந்தாதி

1. பூ மன்னு மாது பொருந்திய மார்பன் * புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் * பல்கலையோர்
தாம் மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ * நெஞ்சே! சொல்லுவோம் அவன் நாமங்களே.

விளக்கவுரை – மலர்மேல் மங்கை என்றும், பத்மே ஸ்திதாம் என்றும் கூறுவதற்கு ஏற்றபடி தாமரைமலரைத் தனது இருப்பிடமாகக் கொண்டவள் பெரியபிராட்டி ஆவாள். அப்படிப்பட்ட அவள் – அகலகில்லேன் இறையும் – என்று நித்யவாசம் செய்யும் திருமார்பை உடையவன் பெரியபெருமாள் ஆவான். இந்தப் பெரியபெருமாளின் திருக்கல்யாண குணங்களின் மூலம் ஏற்பட்ட அனுபவத்தினால் திருவாய்மொழியை அருளிச்செய்வதில் மட்டுமே நிலைநின்றவர் நம்மாழ்வார் ஆவார். அத்தகைய நம்மாழ்வாரின் திருவடிகளை அண்டி நின்று, அவற்றின் மூலம் மட்டுமே வாழ்ந்து வருபவர்; பலவகையான சாஸ்த்ரங்கள் கற்றுச் சிறந்து விளங்கும் கூரத்தாழ்வான், கோவிந்தர், தாசரதி போன்றோரும் சாஸ்த்ரங்களை நன்றாகப் பயின்றும் அவற்றை விரோதித்து நின்ற யாதவப்ரகாசர், யஜ்ஞமூர்த்தி போன்றோரும் தன்னிடம் வந்து நிலையாக இருக்கும்படி உள்ளவர் – இப்படிப்பட்ட எம்பெருமானாரின் திருவடிகளை, அவை மட்டுமே நமக்கு உபாயம் என்று அறிந்த நாம், அவற்றை நிலையாகப் பற்றி வாழ வேண்டும். இதற்கு என்ன வழி என்றால் – எனது நெஞ்சமே! அந்த உடையவரின் திருநாமங்களை எப்போதும் இடைவிடாமல் கூறியபடி இருப்பதே ஆகும்.

2. கள்ளார் பொழில் தென் அரங்கன் * கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக் * குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு * ஒன்றறியேன் எனக்கு உற்ற பேரியல்வே.

விளக்கவுரை – தேன் வழியும் சோலைகளால் சூழப்பட்ட அழகான திருவரங்கத்தில், அந்த உயர்ந்த திவ்யதேசம் மூலம் மட்டுமே தனது பெருமைகள் அனைத்தும் வெளிப்படும்படியாக அழகியமணவாளன் சயனித்துள்ளான். தாமரைமலர் போன்ற அழகும் செம்மையும் கொண்ட அவனது திருவடிகளைத் தங்கள் மனதில் நிலை நிறுத்தாமல் உள்ளவர்களும் இந்த உலகில் உண்டு. கிடைத்தற்கரிய மனிதப் பிறவி கிட்டியும், அதற்கு ஏற்ற பாக்கியம் பெறாத இந்த மனிதர்களை (பெரியபெருமாளின் திருவடிகளைத் தங்கள் நெஞ்சத்தில் எண்ணாதவர்களை), நான் விலக்க வேண்டும். திருக்குறையலூர் என்னும் திவ்யதேசத்தில் அவதரித்த திருமங்கையாழ்வாரின் திருவடிகளின் கீழே, எப்போதும் அகலாதபடி பக்தியுடன் இருப்பவர் எம்பெருமானார் ஆவார். அவருடைய மிகவும் உயர்ந்த குணங்கள் தவிர வேறு எதனையும் என் மனம் சிந்திப்பதில்லை. மிகவும் தாழ்ந்தவனாகிய என் போன்றவனுக்கு இத்தகைய உயர்ந்த நிலை ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று அறியமுடியவில்லை.

3. பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னைப் * பேய்ப்பிறவி
பூரியரோடுள்ள சுற்றம் புலர்த்திப் * பொருவரும் சீர்
ஆரியன் செம்மை இராமானுச முனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் * அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே.

விளக்கவுரை – இந்த உலகில் உள்ள மனிதர்களாக இருந்தாலும் ஒரு சிலர் – அசுர வம்ஸத்தில் பிறவி எடுத்து அறிவற்றுப் போனவர்களுடன் தொடர்பு கொண்டும், அஹங்காரம் போன்றவை நிரம்பியும் உள்ளனர். அவர்களது தொடர்பை, எனது நெஞ்சமே! நீ நீக்கிக் கொண்டாய். மேலும் நீ (நெஞ்சத்தை நீ என்றார்) செய்த உபகாரம் என்ன? “இதுதான் இவரது குணம்” என்று எல்லைப்படுத்திச் சொல்ல இயலாத அளவிற்குத் திருக்கல்யாண குணங்கள் கொண்டவரும்; அனைத்துச் சாஸ்த்ரங்களையும் அறிந்தவரும்; இந்த உலகினருக்கு மட்டும் அல்லாது திருவேங்கடமுடையானுக்கே சங்கு-சக்கரம் அளித்ததால் அவனுக்கும் ஆசார்யனாக உள்ளவரும்; தன்னை அண்டியவர்களின் குற்றத்தைப் பார்த்து அவர்களைக் கைவிடாமல், அவர்கள் நிலைக்குத் தான் இறங்கிவந்து அருளும் தன்மை கொண்டவரும் ஆகிய எம்பெருமானாரிடம் மிகுந்த அன்பும் பக்தியும் வைக்கும் உயர்ந்த பேறு பெற்றவர்கள் பலர் உண்டு. அவர்களது திருவடிகளின் கீழ் என்னை நீ (நெஞ்சம்) சேர்த்து வைத்தாய். எனது நெஞ்சமே! இத்தகைய உயர்ந்த ஸ்வபாவம் உள்ள உன்னை நான் வணங்குவதே உனக்கு நான் செய்யும் கைம்மாறாகும்.

4. என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி * மருள் சுரந்த
முன்னைப் பழைவினை வேரறுத்து * ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் * எனக்கு ஏதும் சிதைவு இல்லையே.

விளக்கவுரை – “இருள் தரு மா ஞாலம்” என்று கூறப்படும் இந்த உலகத்தில் ஒரு பொருட்டாகவே கருத இயலாதபடி நான் இருந்தேன். அப்படிப்பட்ட என்னை ப்ரஹ்மவித்துக்களில் உயர்ந்தவனாகவும், சிறந்த வஸ்து என்று அனைவரும் கூறும்படியாகவும் எம்பெருமானார் மாற்றினார். எனது அறியாமை காரணமாகப் பல காலமாகவும், இந்தப் பிறவியிலும் எண்ணற்ற பாவங்கள் சேர்ந்தன. அந்தக் கர்மவினைகளை முற்றிலுமாக வேருடன் அழித்தார். அனைத்துக் காலங்களிலும் நிலையாக நிற்கும் ஸர்வேச்வரனை மட்டுமே அனைவரும் உணர்ந்து கொண்டு வணங்கும்படியும், மற்ற தேவதைகளின் தொடர்பு நீங்கும்படியும் செய்தார். அனைவரும் விரும்பி அனுபவிக்கும்படியாக ஸ்ரீபாஷ்யமும் கீதாபாஷ்யமும் அருளிச்செய்த எம்பெருமானார், தனது தாமரைமலர் போன்ற திருவடிகளை என் தலை மீது வைத்து அருளவும் செய்தார். இத்தனைக்கும் பிறகு என்னிடம் குறை என்பது என்ன இருக்கப் போகிறது?

5. எனக்குற்ற செல்வம் இராமானுசன் என்று * இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் * அவன் மன்னிய சீர்
தனக்குற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என்பா
இனக்குற்றம் காணகில்லார் * பத்தியேய்ந்த இயல்விதென்றே

விளக்கவுரை – நிலையற்ற உலகச் செல்வம் போன்று இல்லாமல் எப்போதும் என்னிடம் நிலைத்து நிற்கும் ஸம்பத்தாக, “தந்தை நல்தாய் தாரம் தனையர் பெரும் செல்வம் என் தனக்கு நீயே எதிராசா” என்னும்படியாக உள்ள எம்பெருமானாரே எனக்குக் கிட்டிய மிகப் பெரும் நிதி என்று நான் அறிந்து கொண்டேன். அவருடைய புகழ் முழுவதையும் எனது இந்தப் பாசுரங்கள் மூலம் பறை சாற்றினேன். யதிராஜரின் உயர்ந்த குணங்களை அனுபவிக்கத் தகுதி உடைய பக்தி கொண்டவர்கள் நினைப்பது, “இந்தப் பாசுரங்கள் முழுவதும் எம்பெருமானார் மீது கொண்ட பக்தி காரணமாகவே உண்டானது; வேறு எந்தவிதமான பயன் கருதியும் இவை இயற்றப்படவில்லை”, என்பதாகும். இதனால், இந்தப் பாசுரங்களில் ஏதேனும் குற்றம் இருந்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொள்வார்கள். ஆயினும், “நமது செல்வம் இராமானுசர்”, என்று கூறுவதை ஏற்காத சிலர், தங்களின் தோஷம் நிறைந்த மனத்தால், இந்தப் பாசுரங்களில் குற்றம் உள்ளது என்று நிந்திக்கக்கூடும். அவற்றையும் நாம் புகழ் என்றே எடுத்துக்கொள்வோம்.

6. இயலும் பொருளும் இசையத் தொடுத்து * ஈன்கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை * மதி இன்மையால்
பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் * அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே.

விளக்கவுரை – கூரத்தாழ்வான், பராசரபட்டர் போன்ற சிறந்த வல்லுனர்கள் எம்பெருமானார் மீது கொண்ட அன்பு மயக்கமாக மாறியது; இதனால் அவர்கள் அவரை வாழ்த்திப் பலவாறு கவிதைகள் புனைந்தனர். அவற்றில் சொல், பொருள் போன்ற அனைத்தும் மிகவும் பொருந்தி நிற்கின்றன. இவர்கள் பின்வருமாறு வாழ்த்தினர்:

வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை.

அறுசமயச் செடி அதனை அடியறுத்தான் வாழியே
அறமிகு நல்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே அழகாரும் எதிராசன் இணையடிகள் வாழியே
சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி … இனி திருப்போடெழில் ஞானமுத்திரை வாழி
வாழியரோ தக்கோர் பரவுந் தடஞ்சூழ் பெரும்பூதுர் முக்கோல் பிடித்த முனி

இது போன்ற காவியங்களில் நான் எனது மனதை வைத்து, அவற்றை அனுபவித்தபடி எனது பொழுதைப் போக்குவது அல்லவோ சிறந்தது? ஆனால் நான் செய்வது என்ன? அந்தக் காவியங்களில் பக்தி வைக்காமல், மிகவும் பாவம் செய்த நான் செய்யத் துணிந்தது என்ன? பாவம் நிறைந்த எனது சொற்கள் கொண்டு, “இதுவே இராமானுசனின் புகழ்”, என்று வரையறுத்துக் கூற இயலாத அவரது புகழை, முழுமையாகக் கூற முயன்றேனே! இது எனது அறிவுக் கேட்டால் விளைந்தது அல்லவோ?

7. மொழியைக் கடக்கும் பெரும்புகழான் * வஞ்சம் முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின் *
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ்பாடி அல்லா
வழியைக் கடத்தல் * எனக்கு இனியாது வருத்தமன்றே.

விளக்கவுரை – ஒரு சில பதங்கள் மூலம் வர்ணிக்க அரியதாகவும், பரமபதம் அளவு பெருகிநிற்கும் திருக்கல்யாண குணங்கள் நிரம்பியவராகவும் உள்ளவர்; தவறான பாதையில் ஆத்மாவை இட்டுச் செல்ல வல்லதான அஹங்காரம், வித்யாகர்வம், தனகர்வம் ஆகிய மூன்று பெறும் குழிகளை மிகவும் எளிதாகக் கடந்து நிற்பவர்; நமக்கு நாதனாக உள்ளவர் – இவர் யார் என்றால் நம்முடைய கூரத்தாழ்வான் ஆவார். அப்படிப்பட்ட கூரத்தாழ்வானின் திருவடிகளை நாம் அண்டிய பிறகு நிகழ்வது என்ன? ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுசன், தமிழ் மறைகள் ஆயிரமும் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் என்று கூறும்படியாகத் திருக்கல்யாண குணங்களை கொண்ட உடையவரின் குணங்களை சிந்தித்தபடி இருக்கும் நிலையானது எனது பாவங்கள் காரணமாக எனக்கு இதுவரை ஏற்படாமல் இருந்தது. அந்த நிலை மாறி (கூரத்தாழ்வானின் திருவடிகளை அண்டிய பின்னர்) , எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்களையே புகழ்ந்து கூறியபடி, தவறான வழிகளில் செல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. இன்று முதல் இனி வரும் காலங்களில் எந்த ஒரு விஷயமானாலும் எனக்குக் கஷ்டம் என்பதே இல்லை.

8. வருத்தும் புறவிருள் மாற்ற * எம்பொய்கைப்பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி * ஒன்றத்
திரித்து அன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ளத்தே
இருத்தும் பரமன் * இராமானுசன் எம் இறையவனே.

விளக்கவுரை – (இது வரை கூறப்பட்ட பாசுரங்கள் அனைத்தும் உபோத்காதம் எனப்படும் முன்னுரை ஆகும். இனி வரும் பாசுரம், மூலம் தனது துதியைத் தொடங்குகிறார்) உலகவிஷயங்களை அடையும் பொருட்டு, “ஆட்டை அறுத்துக் கொடு, உன் தலையை அறுத்துக் கொடு” என்னும் க்ஷூத்ர தேவதைகளையும், மற்ற தேவதைகளையும் ஆராதித்து, அதனால் ஏற்படும் அஜ்ஞானம் என்ற இருளில் முழ்கி பலரும் வருந்துகின்றனர். இத்தகைய அஜ்ஞானம் என்ற இருள் நீங்கும்படியாக, நமக்கு ஏற்ற உபகாரம் செய்தவர் பொய்கையாழ்வார் ஆவார். வேதாந்தத்தின் முழுப் பொருளும் விளங்கும் விதமாகவும், “நடை விளங்கு தமிழ்” என்று போற்றப்படும் அழகான தமிழ் மொழியையும் இணைத்து அவர் செய்த உபகாரம் என்ன? தன்னிடம் சேர்ந்து விடும்படி அவரை அணுகி, ஸர்வேச்வரன் நெருக்கியபோது (முதல் ஆழ்வார்கள் மூவரும் திருக்கோவிலூரில், ஒருவரை ஒருவர் அறியாமல் நிற்க, அவர்களை விளக்கும் விதமாக ஸர்வேச்வரன் அவர்களுக்கு இடையில் புகுந்து நெருக்கி நின்றான்), “வையம் தகளியா” என்ற பாசுரம் மூலம் உயர்ந்த திருவிளக்கை ஏற்றினார். இத்தகைய ஞானம் என்ற திருவிளக்கைத் தனது நெஞ்சத்தில் எப்போதும் ஏற்றி வைத்து, நிலைக்கும் ஆசார்யரான எம்பெருமானார் நமக்கு ஸ்வாமியாக உள்ளார்.

9 இறைவனைக் காணும் இதயத்து இருள்கெட * ஞானம் என்னும்
நிறைவிளக்கு ஏற்றிய பூதத்திருவடித்தாள்கள் * நெஞ்சத்து
உறைய வைத்தாளும் இராமானுசன் புகழ் ஓதும் நல்லோர்
மறையினைக் காத்து * இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே.

விளக்கவுரை – அனைத்திற்கும் எஜமானனாக உள்ளவனை நாம் அறிந்து, உணர்ந்து கொள்வதற்கு ஏதுவான கருவி நமது இதயமே ஆகும். இத்தகைய இதயத்தில் பூர்வகர்ம பலன்கள் காரணமாக, அஜ்ஞானம் என்ற இருள் சூழ்ந்து கிடக்கிறது. அத்தகைய இருள் நீங்கும் விதமாக, பரம்பொருள் பற்றிய ஞானம் என்ற பரிபூர்ணமான விளக்கை ஏற்றியவர் பூதத்தாழ்வார் ஆவார். இந்த விளக்கு எப்படி உள்ளது என்றால் – அன்பே தகளி, ஆர்வமே நெய், சிந்தனையே திரி என்று கொண்டு ஞானமயமாக உள்ளது. அதாவது – ஆழ்வாரின் பக்தி என்பதே விளக்கானது; ஆழ்வாரின் ஆர்வமே நெய்யானது; பகவத் அனுபவத்தில் எப்போதும் ஊறிக் கிடக்கும் ஆழ்வாரின் மனமே திரியானது; பரிபூர்ணமான ஞானம் என்பதே தீபமானது; இப்படியான ஒரு விளக்கை நாராயணனுக்கு ஏற்றினார். இத்தகைய பூதத்தாழ்வாரின் உயர்ந்த திருவடிகளைத் தனது நெஞ்சத்தில் எப்போதும் வாசம் செய்யும்படியாக வைத்து அனுபவிப்பவர் உடையவர் ஆவார். இப்படிப்பட்ட எம்பெருமானாரின் உயர்ந்த கல்யாணகுணங்கள் குறித்து முன்பே பல பெரியோர்கள் உரைத்தனர் – கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று இவரது பிறப்பை முன்பே உணர்த்தினார் நம்மாழ்வார்; இத்தகைய இவரது விக்ரஹம் இவ்விதம் இருக்கும் என்று காலம் முழுவதும் சிந்தித்தவர் நாதமுனிகள்; “ஆ முதல்வன்” என்று வியப்புற்றவர் ஆளவந்தார். மற்ற மதத்தினர் மூலம் வேதங்கள் அழியாமல் காத்து நிற்பவர்கள் இப்படிப்பட்ட உயர்ந்தவர்களே ஆவார்கள்.

10. மன்னிய பேரிருள் மாண்டபின் * கோவலுள் மாமலராள்
தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் * தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் * திருவுடையார் என்றும் சீரியரே.

விளக்கவுரை – ஆத்மாவை அஹங்காரம், அஜ்ஞானம் போன்ற இருள் பற்றியபடி உள்ளது. இத்தகைய நீண்ட இருளானது பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகிய இருவர் ஏற்றிய ஞானதீபங்களால் நீக்கப்பட்டது. இவர்களுக்குப் பின் வந்தவர் பேயாழ்வார் ஆவார். இவர் தனது “ நீயும் திருமகளும்” என்னும் பாசுரம் மூலம் திருக்கோவலூரில் மஹாலக்ஷ்மியுடன் உள்ள க்ருஷ்ணனாகிய ஸர்வேச்வரனைக் கண்டதைக் காட்டினார் (இங்கு உள்ள தன்னொடுமாயனை என்பதை தன்னோடு +ஆயன் அல்லது தன்னோடு + மாயன் என்று பிரிக்கலாம்). ஆயன் என்பது திருக்கோவிலூரில் உள்ள ஆயனார் என்ற பெருமாளைக் குறிக்கும். மாயன் என்பது பாண்டவர்களுக்குத் தூது சென்று, அர்ஜுனனுக்குத் தேர் ஓட்டி, ஆயுதம் தொடமாட்டேன் என்ற சபதத்தை பாண்டவர்களுக்காக மீறி, அர்ஜுனனுக்காகச் சூரியனைத் தனது சக்கரத்தால் மறைத்து, கோவர்த்தனம் எடுத்து, அந்தணர் ஒருவரின் குழந்தை விஷயத்தில் அர்ஜுனன் செய்த சபதத்தை எண்ணி அவனைப் பல உலகங்கள் அழைத்துச் சென்று, சரமச்லோகம் உபதேசித்து – இப்படியாகப் பல வியப்பான செயல்கள் செய்த கண்ணனைக் குறிக்கும். இவ்விதம் தான் கண்டவனைப் பற்றி இனிய தமிழில் – திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கண்ணி நிறமும் கண்டேன், செருக்கிளரும் பொன்னாழி கண்டேன், புரிசங்கைக் கண்டேன் – என்று பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதியை அருளிச் செய்தார். இவருடைய திருவடிகளை என்றும் போற்றும் ஸ்வபாவம் உடையவர் எம்பெருமானார் ஆவார். இப்படிப்பட்ட உடையவரின் மீது மாறாத அன்பும் பக்தியும் உடையவர்கள், அந்த பக்தியையே தங்கள் ஆபரணங்கள் என்று கருதி அலங்கரித்துக் கொள்ளும் உயர்ந்தவர்கள் உண்டு. இவர்களது திருவடிகளைத் தங்கள் தலையில் வைக்கப்படும் அழகான மலர்கள் போன்று ஏற்றுக் கொள்வாரும் உண்டு. இவர்கள் எந்தக் காலத்திலும் உயர்ந்து நிற்பவர்கள் ஆவர்.


No comments

Powered by Blogger.