திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி அந்தாதி வகையைச் சேர்ந்த ஒரு நூலாகும்.
அமைப்பு
இந்நூல் அதிவீரராம பாண்டியரால் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் வைப்பாற்றின் தென்கரையில் கரிவலம்வந்தநல்லூர் என்றும் திருக்கருவை என்றும் அழைக்கப்படும் ஊரில் அமைந்துள்ள சிவபெருமானைப் போற்றிப் பாடப்பெற்றதாகும். இதனைக் குட்டித் திருவாசகம் என்பர். இவ்வந்தாதியையும் இதை ஒத்த இரண்டு அந்தாதிகளையும் இவருடைய தமையனார் வரதுங்கராம பாண்டியர் இயற்றியதாகக் கூறுவோரும் உளர். ஆனால் இவற்றை அதிவீரராம பாண்டியரே இயற்றினார் என்பது பெரும்பாலானோர் கருத்தாகும்.
பிற இரு அந்தாதிகள்
இவரே கலித்துறை அந்தாதி, வெண்பா அந்தாதி என இரு வேறு அந்தாதிகள் பாடியுள்ளதால் வேறுபடுத்திக் காட்டுவதற்காகப் பதிற்றுப்பத்தந்தாதி என்று பெயரிட்டுள்ளார் என அறியலாம். இவை மூன்றும் கருவை அந்தாதிகள் என அழைக்கப்படுகின்றன.
பிற நூல்கள்
இவர் மேற்கண்ட பதிற்றுப்பந்தாதியுடன், திருக்கருவை கலித்துறை அந்தாதி, திருக்கருவை வெண்பா அந்தாதி, நறுந்தொகை என்ற சிறுநூல்களையும் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய பிற நூல்கள் நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம் ஆகியவையாகும். வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துத் தமிழில் நூல்கள் எழுதியுள்ள நிலையில் இவருக்கு வடமொழிப்புலமையும் உள்ளது என்பதை நன்கறிய முடியும்.
ஆசிரியர்கள்
இவருக்குக் கல்வி கற்பித்தவர் சுவாமிநாத தேவர், தீக்கை செய்தவர் அகோர சிவாச்சாரியார்.
முகவுரை
திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதி என்னும் இச் சிறு நூல் கருவைமா நகரில் கோயில்கொண் டெழுந்தருளி யிருக்கும் சிவபெருமானைக் குறித்து அதிவீர ராமபாண்டியர் பாடியது.

ஒரே வகைச் செய்யுளால் நூறு பாடல்கள் அந்தாதியாகத் தொடரப் பாடுவதே பெரும்பாலும் அந்தாதி எனப்படும். நூற்றந்தாதி எனலுமுண்டு. மற்றிந் நூலோ, சந்தவேறுபாட்டால் பத்துவகையான செய்யுளால் நூறு பாடல்கள் அந்தாதியாகத் தொடர அமைந்தது. ஆதலின் ‘பதிற்றுப்பத் தந்தாதி’ எனப்பட்டது. பதிற்றுப்பத்து என்பது ‘பத்து+இற்று+பத்து’ எனப் பிரியும்; ‘இற்று’சாரியை. பத்தாகிய பத்து என விரிதலால் பண்புத்தொகை நிலைத்தொடராகிப் பத்தினாற் பெருக்கிய பத்து எனப் பொருள்படும். திருக்கருவைச் சிவபெருமானைக் குறித்தே இந்நூலாசிரியர் கலித்துறை யந்தாதி வெண்பாவந்தாதி என வேறிரண்டு அந்தாதிகள் பாடியுள்ளமையின், அவற்றினின்றும் இதனை வேறுபடுத்தப் பதிற்றுப்பத்தந்தாதி என்றார் எனலுமாம்.
கருவை என்பது பாண்டிய நாட்டில், ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் செல்லும் சாலையிடையே, சங்கரநயினார் கோயிலுக்கு வடக்கே சற்றேறக்குறைய காத தூரத்திலும் திருநெல்வேலிக்கு வடமேற்கே சற்றேறக்குறைய நாற்காத தூரத்திலும் உள்ள ஒரு சிவஸ்தலம். கரிவலம் வந்த நல்லூர் எனப்படும். குலசேகர பாண்டியன் வேட்டையாடச் சென்றபோது எதிர்ப்பட்ட ஒர் யானையைத் துரத்த, அது சிவாலயத்தை நாடி ஓடி, ஆண்டு எம்பெருமான் இருந்த புதரை வலம் வந்து சிவகணமாகப் பெற்றமையால் இப்பெயர் பெற்றதென்பர். தஞ்சாவூர் தஞ்சை என மருவினாற்போலக் கரிவலம் வந்த நல்லூர் என்பது
கருவை என மரூஉவாகி மேன்மை யுணர்த்தும் திரு என்னும் அடைபெற்றுத் திருக்கருவை என்றாயது. இவ்வூரில் கோயில்கொண்டெழுந்தருளியுள்ள சிவபெருமானது திருநாமம், பால்வண்ணநாதர், திருக்களாவீசர், முகலிங்கர்.

ஒப்பனை யம்மையுடன் வியக்தா வியக்த லிங்கவடிவமாகத் திருக்கருவைப் பதியில் கோயில் கொண்ட சிவபெருமானைக் குறித்துப் பதிற்றுப்பத் தந்தாதி என்னும் இந் நூலைப் பாடிய அதிவீர ராம பாண்டியர் பாண்டிய வமிசத்து அரசர்களில் ஒருவர். இற்றைக்குச் சற்றேறக் குறைய ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னே இருந்தவர். சரித ஆராய்ச்சியால் தெரியக் கிடக்கும் பாண்டிய வமிசாவளியில் இவரே கடைசியிற் காணப்படுகிறார். பன்னூறாண்டுகளுக்கு முன்னே செந்தமிழ் வளர்த்துச் சீருஞ் சிறப்பு முற்றிருந்த பாண்டியர் ஆட்சி, இவருடைய காலத்
துக்குப் பல்லாண்டுகளுக்கு முன்னமே நிலைகுலைந்து விட்டபடியால், இவரும் இவரது முன்னோர் சிலரும் தமது தொல்லைத் தலை நகராயிருந்த மதுரையைவிட்டு, அடுத்துள்ள கொற்கை என்னும் ஊரிலிருந்து குறுநில மன்னராய் ஆட்சி செலுத்தி வந்தனர். இது, இந் நூலாசிரியர் இயற்றிய வெற்றிவேற்கை அல்லது நறுந்தொகை என்னும் நூலின் தற்சிறப்புப் பாயிரமாகிய
‘வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கை யாளி குலசே கரன்சொல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றங் களைந்தோர் குறைவிலர் தாமே’
என்பதாலும் அறியக் கிடக்கிறது. இவரது தமையனார் வரதுங்க ராம பாண்டியர். உடன்பிறந்தார் இருவரும் தமிழ் மொழியிற் சிறந்த புலமை யுடையவர்கள். இவ் வந்தாதியும் இதனோ டொத்த வேறிரண்டு அந்தாதிகளும் வரதுங்க ராம பாண்டியர் இயற்றியவாகக் கூறுவாரும் உளர். அதிவீர ராம பாண்டியர் இயற்றியவை இவை என்பதே பெரும்பாலோர் கூற்று. திருக் கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருக் கருவைக் கலித்துறை யந்தாதி, திருக் கருவை வெண்பா வந்தாதி, நறுந்தொகை என்னும் இந் நான்கு சிறுநூல்களை யல்லாமல் நைடதம், கூர்மபுராணம், இலிங்க புராணம், காசிகாண்டம் என்னும் நான்கு பெருநூல்களை இவர் வடமொழியிலிருந்து மொழி பெயர்த்துப் பாடியுள்ளார். இதனால் இவருக்கு வடமொழிப் புலமையும் உண்டென்பது புலனாம்.
இவர் இயற்றிய நூல்களால் இவர் நுண்ணறிவும் நிறைந்த கல்வித் தேர்ச்சியும் உடையரென்பது நன்கு விளங்குகின்றதோடு, இவருக்கு எய்திய கவித்திறம் இயற்கையின் எய்திய தொன்றென்பதும் விளங்கிக் கிடக்கிறது. ஆதலின் இவர் நுண்ணுணர்வு சிறக்க வாய்ந்தவராவர். இவர் முதன் முதல் இயற்றிய நூல் நைடதம் எனவும் இறுதியில் இயற்றிய நூல் இத் திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி எனவும் கொள்ள அகச்சான்றுகள் உள்ளன. பெருக்கமஞ்சி அவற்றை விளங்க எடுத்துரைப்பதற்கில்லை. கூர்ந்து நோக்குவார்க்கு அவை நன்கு விளங்கும். கர்ண பரம்பரையாக வழங்கிவரும் அவரது வரலாறும் இக் கொள்கைக்கு இடந் தருகின்றது.
இளம்பருவத்தில் இவர் சிற்றின்ப வேட்கை மிக்கு உழன்றதாகவும், அவ்வொழுக்க மிகுதியால் தொழுநோயுற்று அது பொறுக்கலாற்றாது வருந்தித் திருக்கருவைச் சிவபிரான்மீது மேற்குறித்த அந்தாதிகள் மூன்றையும் பாடித் துதிக்க, அவ்வளவில் அந் நோய் நீங்கப் பெற்றதாகவும் கூறுவர். ‘ஆறாக் காமக் கொடிய கனல் ஐவர் மூட்ட அவல மனம் நீறாய் வெந்து கிடப்பேனை’ என வரும் இந்நூல் இரண்டாவது செய்யுளும் இன்னோரன்ன பிற செய்யுட்கள் பலவும் மேற்கூறிய வரலாற்றை வலியுறுத்தும்.
இவருக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர் சுவாமி நாததேவர் என்பதும், தீக்கை செய்த ஆசிரியர் அகோர சிவாசாரியார் என்பதும், தாம் இயற்றிய வேறு நூல்கள் சிலவற்றில் இவர் பாடிய குருவணக்கச் செய்யுள்களால் விளங்குகின்றன. காசிகண்டத்தில்,
திருக்கிளர்வெண் பிறைக்கொழுந்தும் செஞ்சடையும்
மறிமானும் திண்டோ ளெட்டும்
உருக்கிளர்வெம் புலியதளும் கரந்துமா
னிடவடிவின் உலகிற் போந்து
மருட்கிடனாம் எனைப்பிணித்த வல்வினையின்
தொடரனைத்தும் மாய நூறி
அருட்கடைக்க ணளித்தாண்ட சுவாமிதே
வன்திருத்தாள் அகத்துள் வைப்பாம்.
என இவர் பாடிய குருவணக்கத்தால் இவரது குருபத்தி இனைத்தென்பது புலனாம்.
இவர் இயற்றிய நூல்கள் ஒவ்வொன்றும் சொல்வளமும் பொருள்வளமும் நிரம்பித் துளும்புவனவாயினும், உருக்கத்திலும் பத்தியிலும் இப்பதிற்றுப்பத்தந்தாதியே தலைசிறந்து நிற்கிறது. உள்ளத்தை உருக்கி உணர்வைக் கவர்வதில் ஒப்புயர்வற்ற திப்பிய நூலென ஆன்றோர் அனைவரும். உவந்து கொண்டாடும் திருவாசகம் என்னும் அரிய பெரிய அருள் நூலோடு இச் சிறு நூலை ஒப்பிட்டு, இதனைக் குட்டித் திருவாசகம் என வழங்கும் வழக்கொன்றே இதன் அருமையைப் புலப்படுத்தும்.
No comments