குருபெயர்ச்சி பலன்கள் 2017 - 2018 - மகரம், கும்பம், மீனம்
மகரம்
மகர ராசிக்கு 10-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை குருபகவான் அமர்வதால், வேலைகளை திட்டமிட்டபடி முடிக்க முடியாது. உழைப்புக்கான
அங்கீகாரமோ பாராட்டோ கிடைக்காது. பல வேலைகளையும் நீங்களே பார்க்கவேண்டி வரும்.
தன்னம்பிக்கை குறையும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.
சிலர் பணியின் காரணமாக குடும்பத்தைப் பிரிந்து செல்ல நேரிடும்.
குருபகவானின் பார்வை:
குருபகவான் தனது 5-ம் பார்வையால் மகர ராசிக்கு 2-ம் இடத்தைப் பார்ப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு
களைகட்டும். வி.ஐ.பி.களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு புது வேலை
கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகும் நபர்களால் ஆதாயம் உண்டாகும்.
குருபகவான் தன் 7-ம் பார்வையால் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் ஆதரவு கிடைக்கும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வீடு, மனை வாங்கக் கடனுதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.
சிலருக்கு இடமாற்றம் உண்டாகும்.
குருபகவான் தன் 9-ம் பார்வையால் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், செயலில் வேகம் கூடும். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும்.
செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயம்
உண்டாகும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
மகர ராசிக்கு 4 மற்றும் 11 ஆகிய
இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.
6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான்
செல்வதால்,
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். திருமணம் கூடி
வரும். உத்தி யோகத்தில் விரும்பத் தகாத இடமாற்றம் வந்து செல்லும்.
மகர ராசிக்கு 3, 12-ம் இடங்களுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான
விசாகம் நட்சத்திரம்1,2,3-ம் பாதம்
துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பணப்பற்றாக்குறை
ஏற்பட்டாலும் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். இளைய சகோதர வகையில் உதவிகள்
கிடைக்கும்.
மகர ராசிக்கு 3, 12-ம் இடங்களுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான
விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், மனதில் ஒருவித அச்ச உணர்வு வந்து செல்லும். அரசாங்கத்தால்
நெருக்கடிகள் வந்து நீங்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:
14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் குருபகவான் அமர்வதால், புகழ், கௌரவம்
கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தினந்தோறும் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
கணவன் - மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச்
சென்று வரும் வாய்ப்பு உண்டாகும்.
குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:
7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில்
குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், புதிய
திட்டங்கள் தீட்டுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த
நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள்.
வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். வாடிக்கையாளர்கள்
அதிருப்தி அடைவார்கள். அறிமுகம் இல்லாத தொழில்களில் முதலீடு செய்யவேண்டாம்.
வியாபார விஷயங்களை சமாதானமாகப் பேசி முடித்துக் கொள்வது நல்லது.சிமென்ட், மரம், கடல்வாழ்
உயிரினங்கள்,
இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகஸ்தானமான 10-ம் வீட்டில் குரு அமர்வதால், உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவர்.
உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். மறைமுக
எதிர்ப்புகள்,
வீண் பழிச்சொல், திடீர் இடமாற்றங்கள் ஏற்படக்கூடும்.
மாணவ மாணவிகளே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
தினமும் நடத்தும் பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. மொழிப் பாடங்களில்
கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். விளையாட்டுத்தனத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.
கலைத்துறையினர்களே! இழந்த புகழை மீண்டும் பெற யதார்த்தமான
படைப்புகளைக் கொடுக்கவும். மூத்த கலைஞர்களின் நட்பால் முன்னேற்றம் உண்டாகும்.
இந்த குரு மாற்றம் உங்களின் முன்னேற்றப் பாதையில் சிறுசிறு
தடைகளை ஏற்படுத்தினாலும், உங்களை
கொஞ்சம் செம்மைப்படுத்துவதாக அமையும்.
பரிகாரம்:புனர்பூசம் நட்சத்திர நாளில், அரியலூர் மாவட்டம் திருமழபாடி எனும் ஊரில் அருள்பாலிக்கும்
ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் திருப்பம் உண்டாகும்.
கோயில் கும்பாபிஷேகத்திற்கு உதவுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்கு 2.9.17 முதல் 2.10.18 வரை குருபகவான் 9-ம் இடத்தில் அமர்ந்து பலன் தர இருக்கிறார். வாழ்க்கையின்
நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பேச்சில் கனிவு பிறக்கும். முடியாத
காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். தினம்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை
கைக்கு வரும். கணவன் - மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். புகழ் பெற்ற
புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மகனுக்கு நல்ல வேலை அமையும். மகளுக்கு
நல்ல வரன் அமையும்.
குருபகவானின் பார்வை:
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தோற்றப் பொலிவு
கூடும். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சிலர் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை
ஒப்படைப்பார்கள். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும்.
குரு பகவான் 7-ம்
பார்வையால் கும்ப ராசிக்கு 3-ம் வீட்டைப்
பார்ப்பதால்,தைரியம் கூடும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு
காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். அதிகாரிகளின் நட்பு
கிடைக்கும். பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.
மகனின் உயர்கல்வி,
உத்தியோகம், திருமணம்
சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு
அதிகரிக்கும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
கும்ப ராசிக்கு 3 மற்றும் 10-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் குருபகவான் பயணிப்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும்.
6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான்
செல்வதால்,
ஒருவித தயக்கம், படபடப்பு, எதிர்காலம்
குறித்த பயம்,
தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். பிற மொழி பேசுபவர்கள்
உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களால் நன்மை உண்டாகும்.
கும்ப ராசிக்கு 2 மற்றும் 11-ம் வீடுகளுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான
விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில்
நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். திருமணம் கூடி
வரும்.
குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:
14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் குருபகவான் சென்று அமர்வதால், வேலைச் சுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக
எதிர்ப்புகள் ஏற்படும். இடமாற்றங்கள் உண்டாகும். தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்.
அரசாங்கத்தால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும்.
குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:
7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில்
குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், எதிர்பார்ப்புகள்
சற்று தாமதமாகி முடியும். அடிக்கடி மனதில் குழப்பம் ஏற்படும். மற்றவர்கள் தன்னிடம்
அன்பாக நடந்துகொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.
வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். லாபத்தை அதிகரிக்கும்
சூட்சுமத்தைப் புரிந்துகொள்வீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். எதிர்பார்த்த
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலர் சில்லரை வியாபாரத்தில் இருந்து மொத்த
வியாபாரத்துக்கு மாறுவீர்கள். எலெக்ட்ரானிக்ஸ், போர்டிங், லாட்ஜிங், ஸ்டேஷனரி, அழகுச்
சாதனப் பொருள்களால் ஆதாயம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை நிம்மதி தரும். உங்களின்
நிர்வாகத் திறமை பளிச்சிடும். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். சிலருக்கு
வேறு நல்ல வாய்ப்புகள் வரும். சம்பள பாக்கி கைக்குக் கிடைக்கும். புதிய
உரிமையாளர்கள் மூலமாக உங்களுக்குக் கூடுதல் சம்பளம் கிடைக்கும்.
மாணவ மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். பொது அறிவை
வளர்த்துக்கொள்வீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். கலை, இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
கலைத்துறையினர்களே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழ் அடைவீர்கள்.
பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவீர்கள். மூத்த
கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.
இந்த குரு மாற்றம் மன நிம்மதியைத் தருவதுடன், எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையை
அதிகப்படுத்துவதாக அமையும்.
பரிகாரம்: பூசம் நட்சத்திர நாளில், சிதம்பரம் அருகிலுள்ள ஓமாம்புலியூர் எனும் ஊரில் அருளும்
ஸ்ரீபிரணவ வியாக்ரபுரீஸ்வரரையும் தட்சிணாமூர்த்தியையும் வில்வ அர்ச்சனை செய்து
வழிபடுங்கள்; சுபிட்சம்
உண்டாகும்.
விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்ற உதவிகளை
செய்யுங்கள்.
மீனம்
குருபகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். அலைச்சல்
இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.
அறிவுப்பூர்வமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கடன்களை நினைத்து அவ்வப்போது
கலக்கம் உண்டாகும். திடீர்ப் பயணங்களால் அலைச்சலும் டென்ஷனும் ஏற்படும்.
வழக்குகளில் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும்.
குருபகவானின் பார்வை:
குருபகவான் தனது 5-ம் பார்வையால் 12-ம் வீட்டைப் பார்ப்பதால், பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி
தங்கும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால்
வீடு களை கட்டும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
குருபகவான் தனது 7-ம் பார்வையால் 2-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் ஆரோக்கியம் சீராகும். அவருடனான மனத்தாங்கல்
நீங்கும். தாய்வழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்ப்புகளையும் தாண்டி
முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். புகழ் பெற்ற புண்ணிய
ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக்கேற்ப
வீடு வாங்குவீர்கள். அரசால் ஆதாயமடைவீர்கள்.
குருபகவானின் சஞ்சாரம்:
மீன ராசிக்கு 2, 9-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் பயணிப்பதால், பண வரவு திருப்திகரமாக இருக்கும். வீடு, மனை வாங்குவது விற்பது நல்லபடி முடியும். அரசாங்க
அதிகாரிகளின் உதவியுடன் தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால்
ஆதாயம் உண்டாகும். தந்தையாரின் ஆரோக்கியம் சீர்படும்.
6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான்
செல்வதால்,
திடீர் பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அடிக்கடி
சச்சரவுகள் வரக்கூடும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பிற
மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும்.
மீன ராசிக்கு 10-ம் இடத்துக்கும் உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான
விசாகம் 1,
2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், வங்கிக் கடன் கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு
வரும். சுப காரியங்கள் ஏற்பாடாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம்
சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.
குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:
14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் மீன ராசிக்கு 9-ம் வீட்டில் குருபகவான் சென்று அமர்வதால், அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பு
மரியாதை கூடும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரிய பதவிகளுக்கு
உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். இளைய சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:
7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில்
குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், பூர்வீகச்
சொத்து கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். வசதியான வீட்டுக்கு
மாறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்படும்.
வியாபாரத்தில் அவசர முதலீடுகள் வேண்டாம். பாக்கிகளை நயமாகப்
பேசி வசூலிக்கப் பாருங்கள். மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களின் குறை,நிறைகளை பக்குவமாக எடுத்துச் சொல்லி அரவணைத்துச் செல்லவும்.
புது ஒப்பந்தங்கள் தேடி வரும். மூலிகை, தேங்காய் மண்டி, எலெக்ட்ரிகல், துரித
உணவகங்கள்,
பெட்ரோகெமிக்கல் வகைகளால் லாபம் உண்டாகும்.
உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப்
பார்க்கவேண்டி இருப்பதால் பணிச் சுமை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் இடமாற்றம்
உண்டாகும். சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவேண்டி
இருக்கும். புதுப் பதவிகளும் பொறுப்புகளும் வரும். சம்பள பாக்கி கைக்கு வந்து
சேரும்.
மாணவ மாணவிகளே! முதலில் இருந்தே பாடங்களை கவனமாகப் படிப்பது
அவசியம். உங்கள் தனித் திறமையை வளர்த்துக்கொள்ளப் பாருங்கள். சக மாணவர்களிடம்
அளவோடு பழகுவது அவசியம்.
கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறு சிலர்
உரிமை கொண்டாடுவார்கள். பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரும். அரசால்
அனுகூலம் உண்டாகும்.
இந்த குரு மாற்றம் கடின உழைப்பு, குறைந்த வருமானம் என ஒரு பக்கம் அலைக்கழித்தாலும், சின்னச் சின்ன ஆசைகளையும் நிறைவேற்றுவதாக அமையும்.
பரிகாரம்: மகம் நட்சத்திர நாளில், உத்திரமேரூர் அருகிலுள்ள திருப்புலிவனம் ஸ்ரீவியாக்ர
புரீஸ்வரரையும் ஸ்ரீசிம்மகுரு தட்சிணா மூர்த்தியையும் வணங்குங்கள்; வாழ்வில் சாதிப்பீர்கள்.
அன்னதானம் செய்யுங்கள்.
No comments