Header Ads

ஆன்மீக பெரியோர்கள் - 3


பிரஜாபதி கூறுகிறார்:- இந்திரா இந்த உடம்பு அழியக்கூடியது; மரணத்தின் பிடியில் உள்ளது. ஆனால் மரணமற்ற, உடம்பற்ற ஆன்மாவின் இருப்பிடம் இது. உடம்பில் கட்டுண்டவன் நிச்சியமாக இன்ப துன்பகளின் பிடியில் உள்ளான். உடம்பில் கட்டுண்டவனின் இன்ப துன்பங்களுக்கு முடிவே கிடையாது. ஆனால் உடம்பில் கட்டுப்பட்டாதவனை இன்ப துன்பங்கள் தொடுவதே இல்லை.

ஒரு பக்கம் உடல்-மனச்சேர்க்கை, மறுபக்கம் கடவுள். இந்த இரண்டிற்கும் இடையில் நிற்கிறான் மனிதன். அவன் உண்மையில் கடவுளைச் சேர்ந்தவன்; அமுதமயமான ஆண்டவனின் குழந்தை. அழியாத அமரத்துவத்தின் குழந்தைஎன்றே உபநிஷதம் அவனை அழைக்கிறது. ஆனால் அவனோ காலங்காலமாக வருகின்ற அறியாமை காரணமாகத் தன்னை உடம்புடன் ஒன்றுபடுத்திக்கொள்கிறான்; உடம்பில் கட்டுண்டவனாகத் தன்னைக் காண்கிறான்; உடம்பின் இன்பதுன்பங்களைத் தனது இன்பதுன்பங்களாகக் கருதி ஒரு கணம் இன்பத்தில் திளைப்பதும், மறுகணம் துன்பத்தில் துவள்வதுமாக வாழ்கிறான். ஆன்மீக சாதனைகள் செய்து, தான் உடம்பில் கட்டுப்படாதவன், உடல்-மனச்சேர்க்கை தனது கருவி மட்டுமே, தான் உண்மையில் இறைவனின் குழந்தை என்பதை உணர்பவன் இன்ப துன்பங்களின் பிடியிலிருந்து விடுபட்டு நிலைத்த பேரானந்தத்தில் திளைக்கிறான்.

காற்று உருவமற்றது. அதுபோலவே, மேகம், மின்னல், இடி ஆகியவையும் உருவமற்றவையே. இவை ஆகாசத்திலிருந்து எழுந்து, சூரியனை அடைந்து தத்தம் உருவங்களைப் பெறுகின்றன’.

மழைக்காலத்தில் காற்று சுழன்றடிக்கிறது, மேகங்கள் திரள்கின்றன, மின்னல் வெட்டுகிறது, இடி இடிக்கிறது. மழைக்காலம் ஓய்ந்து கோடைக்காலம் நெருங்கும்போது இவை அனைத்தும் படிப்படியாக மறையத் தொடங்குகின்றன. ஏன்? எவ்வாறு? சூரியனின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க இவை தங்கள் உருவங்களை இழந்து ஆகாசத்தில் ஒடுங்குகின்றன. மீண்டும் இவை உருவம் பெறுகின்றன. சூரியனை அடைந்துஎன்றால் சூரியனின் வெப்பத்தால்என்று பொருள்.

அதுபோல் ஜீவாத்மாவும் உடம்பின் பற்றிலிருந்து விடுபட்டு, பேரொளிப்பொருளை அடைந்து, தனது சொந்த இயல்பில் நிலை பெறுகிறான். பேரொளிப்பொருளாகிய அந்தப் பரம்பொருள் புருஷோத்தமர். தான் உடம்பல்ல, ஆன்மா என்பதை உணர்கின்ற அந்த ஜீவாத்மா உண்டு, விளையாடி, பெண்களுடனும் வாகனங்களுடனும் உறவினர்களுடனும் களித்து, தன்னுடனேயே பிறந்ததாகிய இந்த உடம்பையும் மறந்து திரிகிறான். தேரில் பூட்டப்பட்ட குதிரை எப்படி கட்டுண்டிருக்கிறதோ அப்படியே அவனும் இந்த உடம்பில் கட்டுப்பட்டிருக்கிறான்’.

முந்தின மந்திரத்தில் சூரிய-உதாரணத்தில் கண்டதுபோல் பேரொளிப்பொருளை அடைந்துஎன்றால் பேரொளிப்பொருளின் காரணமாகஎன்று பொருள். அதாவது, ‘இறையருளால்என்று அர்த்தம். இந்தப் பகுதியின் முதல் மந்திரத்தில் கண்டதுபோல், உடல்-மனச்சேர்க்கை மற்றும் கடவுள் ஆகிய இரண்டிற்கும் இடையில் இருப்பவன் போல் உள்ளான் ஜீவாத்மா. அவன் உடல்-மனச் சேர்க்கையின் பிடியிலிருந்து அல்லது பற்றிலிருந்து விடுபட்டு இறைவனை நாட வேண்டுமானால் அதற்கு அவருடைய அருள் தேவை. ஆன்மீக சாதனைகளின் வாயிலாக அவரது அருளைப் பெறுகின்ற ஜீவாத்மா தன்னை ஆன்மாவாக, இறையமசம் பொருந்தியவனாக உணர்கிறான். கூட்டில் அடைப்பட்டுக் கிடந்த சிங்கத்தைக் காட்டில் விட்டால் எப்படி மகிழ்ச்சியுடன் களித்துத் திரியுமோ அப்படி அந்த ஜீவாத்மாவும் களித்து மகிழ்கிறான். தான் பற்றிப்பிடித்திருந்த உடம்பைக்கூட மறக்கின்ற நிலையை அவன் அடைகிறான். ஆன்ம அனுபூதி பெறுகின்ற ஒருவனின் மகிழ்ச்சியைச் சாதாரண மனங்களுக்குப் புரியவைப்பதற்காக உணவு, வாகனங்கள், பெண்கள் என்றெல்லாம் உவமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர ஆன்ம நிலையை அடைந்த ஒருவன், உடம்பையே மறந்த ஒருவன் இவற்றையெல்லாம் மறந்தும் நாட மாட்டான். மேலும் புலன்களை பற்றி விளக்க ஆரம்பித்தார் பிரஜாபதி.

கண்களின் உள்ளேயுள்ள ஆகாசத்தில் கண்புலன் உள்ளது. கண்ணின் தேவதை அங்கே உள்ளார். காண்பதற்கான கருவியின் வழியாகக் காண்பது ஆன்மாவே. அடுத்து, ‘நான் இதை முகர்கிறேன்என்று அறிவது ஆன்மாவே. முகர்வதற்கான கருவியின் வழியாக முகர்வது ஆன்மாவே. அடுத்து, ‘நான் இதைப் பேசுகிறேன்என்று அறிவது ஆன்மாவே. பேசுவதற்கான கருவியின் வழியாகப் பேசுவது ஆன்மாவே. அடுத்து, ‘நான் இதைக் கேட்கிறேன்என்று அறிவது ஆன்மாவே. கேட்பதற்கான கருவியின் வழியாகக் கேட்பது ஆன்மாவே’.

நாம் புறத்தில் கண், காது என்று காண்பவை பொறிகள். இவை வேதாந்த தத்துவ நூல்களில் கோளகம்என்று அழைக்கப்படுகின்றன. இவை தூல உடம்பைச் சேர்ந்தவை; இந்த உடம்புடன் அழியக் கூடியவை. உண்மையில் செயல்படுபவை புலன்கள்-இந்திரியங்கள். இவை சூட்சம சரீரம் அல்லது நுண்ணுடம்பைச் சேர்ந்தவை. இவை பிறவிகள்தோறும் ஜீவாத்மாவுடன் சஞ்சரிப்பவை. இந்தப் புலன்கள் செயல்படுவதற்கான தளங்களே கோளகங்கள். ஒருவன் பார்வையற்றவன் என்றால் அது தூல உடம்பின் குறைபாடு மட்டுமே. அடுத்த பிறவியில் அந்தக் குறைபாடு தொடர வேண்டும் என்ற நியதி கிடையாது. ஒவ்வொரு புலனுக்கு அதிபதியான தேவதை உள்ளார். இவர் அதிஷ்டான தேவதை மற்றும் அதிதேவதை என்று அழைக்கப்படுகிறார். உதாரணமாக கண்புலனின் தேவதை சூரியன், கைப்புலனின் தேவதை இந்திரன். இவர்களுக்கு பின்னால் நின்று இவர்களை இயக்குபவர் இறைவன். அதாவது ஆன்மா.

அடுத்து. நான் இதைச் சிந்திக்கிறேன்என்று அறிவது ஆன்மாவே. மனமே ஆன்மாவின் தெய்வீகக் கண். இறையுலகை அடைந்த ஆன்மா, தான் விரும்பியவற்றையெல்லாம் தனது தெய்வீகக் கண்ணாகிய மனத்தால் கண்டுகளிக்கிறான்’.

இறைனுபூதி பெற்றவனின் நிலையை அன்னை ஸ்ரீசாரதாதேவி தமக்கே உரிய எளிமையான மொழியில் பின்வருமாறு கூறுகிறார்:-

இறையனுபூதி பெற்றவனுக்கு என்ன இரண்டு கொம்புகளா முளைக்கின்றன? இல்லை. அவனுக்கு உண்மை-உண்மையற்றது பற்றிய விவேகம் வருகிறது, விழிப்புணர்வு ஏற்படுகிறது. அவன் பிறப்பு-இறப்பைக் கடந்து செல்கிறான். கடவுளை உணர்வில் உணர்கிறோம்…. உணர்வில்தான் காட்சி, உணர்வில்தான் பேச்சு வார்த்தை. எல்லாம் உணர்வில்தான் நடக்கின்றன.

இறையனுபூதி என்பது உணர்வில் வருகின்ற மாற்றமே தவிர வேறல்ல. நாம் புறவுலகைத் தொடர்பு கொள்வதற்காக அமைந்த கருவிகளே மனமும் புலன்களும். எனவே அவை உலகை உலகாக மட்டுமே காண்கின்றன. ஆன்ம அனுபூதி பெற்றவனுக்கு மனமும் புலன்களும் தெய்வீகமாகிவிடுகின்றன. எனவே அவற்றின் பார்வையின் பரிமாணம் மாறிவிடுகிறது. வெறும் உலகை மட்டும் கண்ட மனமும் புலன்களும் அந்த உலகின் பின்னால் ததும்பி நிற்கின்ற இறையுணர்வைக் காண்கின்றன. இந்த உலகமே அவனைப் பொறுத்தவரை இறையுலகமாக மாறிவிடுகிறது. சாதனைக் காலத்தில் இந்த உலகம் மாய மாளிகை”. ஞானம் பெற்ற பிறகு, இறைக் காட்சிக்குப் பிறகு அதுவே ஆனந்த மாளிகைஆகிவிடுகிறதுஎன்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.


பிரஜாபதி இத்துடன் தனது விளக்கத்தை நிறைவு செய்தார். அதாவது அவர் கூறினார்: இந்த ஆன்மாவையே தேவர்கள் தியானம் செய்கிறார்கள். அதனால்தான் எல்லா உலகங்களும் அவர்களின் வசத்தில் உள்ளன. அவர்களுடைய எல்லா விருப்பங்களும் நிறைவேறுகின்றன. யார் இந்த ஆன்மாவை அறிந்து, அனுபூதியில் உணர்கிறானோ அவனுக்கும் எல்லா உலகங்களும் வசப்படுகின்றன. அவனுடைய எல்லா விருப்பங்களும் நிறைவேறுகின்றன. இவ்வாறு பிரஜாபதி கூறினார்.





No comments

Powered by Blogger.