ஆன்மீக பெரியோர்கள் - 2
அரைகுறையாக அறிந்ததுடன் அசுரன் திருப்தியுற்று
நின்றுவிட்டான். தேவனோ சிந்தித்தான். அவன் என்ன சிந்தித்தான் என்பதை இப்போது
பார்ப்போம்.
விரோசனனைப் போலவே இருப்பிடம் திரும்பிய இந்திரன் தேவர்களை
அடையுமுன்பே ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது. அவன் சிந்தித்தான்: ‘இந்த உடம்பே ஆன்மா என்று கருதுகிறேன்’ எனவே இந்த உடம்பை நன்றாக அலங்கரித்தால் ஆன்மாவை
அலங்கரித்ததாகிறது. உடம்பிற்கு நல்ல உடை அணிந்தால் ஆன்மாவிற்கு நல்ல உடை
அணிந்ததாகிறது. உடம்பை பகட்டாக வைத்துக்கொண்டால் ஆன்மாவையும் பகட்டாக
வைத்ததாகிறது. அப்படியானால், உடம்பு
பார்வையற்றதாகுமானால் ஆன்மாவும் பார்வையற்றதாகும். உடம்பு ஊனமுற்றால் ஆன்மாவும்
ஊனமுறும். உடம்பு காயப்பட்டால் ஆன்மாவும் காயப்படும். உடம்பு அழிந்தால் ஆன்மாவும்
அழியும். இத்தகைய கருத்தில் நான் எந்தச் சிறப்பையும் காணவில்லை.
ஆன்மாவைப்பற்றி தான் கொண்டிருந்த கருத்து திருப்தியாக இல்லை
என்று கண்ட இந்திரன் பிரஜாபதியிடம் திரும்பி வந்தான். அவனைக் கண்ட பிரஜாபதி
அவனிடம்,
‘இந்திரா, திருப்தியுற்று
மனத்தினாய் விரோசனனுடன் நீ உன் இருப்பிடத்திற்குத் திரும்பினாய். இப்போது எதை
விரும்பி மீண்டும் வந்துள்ளாய்’ என்று
கேட்டார். அதற்கு இந்திரன், இந்த உடம்பை
நன்றாக அலங்கரித்தால் ஆன்மாவை அலங்கரித்ததாகிறது. உடம்பிற்கு நல்ல உடை அணிந்தால்
ஆன்மாவிற்கு நல்ல உடை அணிந்ததாகிறது. உடம்பை பகட்டாக வைத்துக்கொண்டால் ஆன்மாவையும்
பகட்டாக வைத்ததாகிறது. அப்படியானால், உடம்பு
பார்வையற்றதாகுமானால் ஆன்மாவும் பார்வையற்றதாகும். உடம்பு ஊனமுற்றால் ஆன்மாவும்
ஊனமுறும். உடம்பு காயப்பட்டால் ஆன்மாவும் காயப்படும். உடம்பு அழிந்தால் ஆன்மாவும்
அழியும். இத்தகைய கருத்தில் நான் எந்தச் சிறப்பையும் காணவில்லை. என்று
பதிலளித்தான்.
இந்திரன் நிலைமையைப் புரிந்துகொண்ட பிரஜாபதி அவனிடம், ‘இந்திரா, நீ கூறியது
சரிதான். நீ ஆன்மாவைப் பற்றி சரியாக அறியவில்லை. எனவே மீண்டும் உனக்கு நான் அதனை
விளக்குகிறேன். ஆனால் நீ இன்னும் முப்பத்திரண்டு வருடங்கள் இங்கே தங்க வேண்டும்’ என்றார். அதனை ஏற்றுக் கொண்ட இந்திரன் மேலும் முப்பதிரண்டு
வருடங்கள் பிரஜாபதியுடன் தங்கினான்.
இங்கே முக்கியமான ஒன்று சொல்லப்படுகிறது அதாவது
பகுத்தறிதல். இந்திரன் சிந்திக்கிறான். அவன் மனதில் இந்த கேள்விகள் எழுகிறது.
இல்லை என்று சொல்வது பகுத்தறிவு கிடையாது. உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்று
இந்திரனிடம் உள்ள ஆர்வத்தையும் அதற்காக எந்தத் தியாகத்தையும் அவன் செய்ய தயாராக
இருக்கிறான். அதுபோலவே நாமும் இறைவனை அடைய வேண்டுமானால் பல தியாகங்களை செய்ய
வேண்டும். இந்த உடம்பை ஆன்மாவாகக் கொண்டால் இந்த உடம்பில் நேர்கின்ற குறைபாடுகள்
ஆன்மாவிற்கு நேர்ந்ததாகும். எனவே இது சிறப்பான கருத்து அல்ல என்று முடிவு
செய்தான். எனவே பிரஜாபதியிடம் திரும்பி வந்தான். அவன் ஆன்ம ஞானத்தின் அடுத்த
படியைப் புரிந்துகொள்ளத் தயாராக இருப்பதை உணர்ந்து கொண்ட பிரஜாபதி அவனிடம் மேலும்
விளக்க ஆரம்பித்தார்.
பிரஜாபதி கூறினார்:- ‘யார் மகிழ்ச்சியுடன் கனவில் உலவுகிறானோ அவனே ஆன்மா. அவன்
மரணமற்றவன்,
பயமற்றவன்; அவனே இறைவன்.’ இதை கேட்ட இந்திரன் திருப்தியுடன் இருப்பிடம் திரும்பினான்.
ஆனால் தேவர்களை அடையுமுன்பே அவன் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது. ‘உடம்பு பார்வையற்றதாக இருந்தால் கனவுடம்பு பார்வையுற்றதாக
இருப்பதில்லை. தூல உடம்பு ஊனமுற்றதாக இருந்தால் கனவுடம்பு ஊனமுற்றதாக
இருப்பதில்லை. தூல உடம்பின் குறைபாடுகள் கனவுடம்பில் காணப்படுவதில்லை. தூல உடம்பை
வெட்டினால் கனவுடம்பு வெட்டப்படுவதில்லை. தூல உடம்பின் கால் ஊனமானால் கனவுடம்பின்
கால் ஊனமாவிதில்லை. ஆனாலும் கனவில் அதைக் கொன்றதுபோல், யாரோ துரத்துவதுபோல், துன்பப்படுவதுபோல் காண்கிறோம். கனவில் அந்த உடம்பு அழுவதைக்
கூட காண்கிறோம். இத்தகைய கருத்தில் நான் எந்தச் சிறப்பையும் காணவில்லை’ என்று சிந்தித்தான் இந்திரன்.
ஆன்மாவைப்பற்றி தான் கொண்டிருந்த கருத்து சரியல்ல என்பதை
உணர்ந்த இந்திரன் மீண்டும் பிரஜாபதியிடம் திரும்பி வந்தான். அவனைக் கண்ட பிரஜாபதி
அவனிடம்,
‘இந்திரா, திருப்தியுற்று
மனத்தினாய் நீ உன் இருப்பிடத்திற்குத் திரும்பினாய். இப்போது எதை விரும்பி
மீண்டும் வந்துள்ளாய்’ என்று
கேட்டார்.
அதற்கு இந்திரன், ‘தூல உடம்பை வெட்டினால் கனவுடம்பு வெட்டப்படுவதில்லை. தூல
உடம்பு ஊனமானால் கனவுடம்பு ஊனமாவதில்லை. ஆனாலும் கனவில் அதைக் கொன்றதுபோல், யாரோ துரத்துவதுபோல், துன்பப்படுவதுபோல் காண்கிறோம். கனவில் அந்த உடம்பு அழுவதைக்
கூட காண்கிறோம். இத்தகைய கருத்தில் நான் எந்தச் சிறப்பையும் காணவில்லை’ என்று பதிலளித்தான். இந்திரன் நிலைமையைப் புரிந்துகொண்ட
பிரஜாபதி அவனிடம்,
‘இந்திரா, நீ கூறியது
சரிதான். நீ ஆன்மாவைப் பற்றி சரியாக அறியவில்லை. எனவே மீண்டும் உனக்கு நான் அதனை
விளக்குகிறேன். ஆனால் நீ இன்னும் முப்பத்திரண்டு வருடங்கள் இங்கே தங்க வேண்டும்’ என்றார். அதனை ஏற்றுக் கொண்ட இந்திரன் மேலும் முப்பதிரண்டு
வருடங்கள் பிரஜாபதியுடன் தங்கினான்.
விழிப்பு நிலைக்கு அடுத்ததாகக் கனவு நிலை என்ற ஒன்று
மனிதனுக்கு உண்டு. விழிப்பு நிலையை அனுபவிப்பது தூல உடம்பு, அதாவது தூல மனிதன். வேதாந்தத் தத்துவம் இவனை ‘விச்வன்’ என்று
அழைக்கிறது. இந்த உடம்பு கனவில் செயல்படுவதில்லை. கனவில் நாம் கண்பது வேறு உடம்பு.
விழிப்பு நிலையில் கால்களை இழந்திருப்பவன் கனவில் கால்களை பெற்றவனாக இருக்ககூடும்.
தூல உடம்பின் குறைபாடுகள் கனவு உடம்பைப் பாதிப்பதில்லை. எனவே கனவுடம்பைச்
செயல்படுத்துகின்ற கனவு-மனிதன் தான் ஆன்மா என்று போதித்தார் பிரஜாபதி. வேதாந்தத்
தத்துவம் கனவு- மனிதனை ‘தைஜஸன்’ என்று அழைக்கிறது.
பிரஜாபதி கூறினார்:- ‘யார் முற்றிலும் அமைதியாக கனவும் காணாமல் தூக்கத்தில்
ஆழ்ந்துள்ளானோ அவனே ஆன்மா. அவன் மரணமற்றவன், பயமற்றவன்; அவனே இறைவன்.’ இதைக் கேட்ட இந்திரன் திருப்தியுடன் இருப்பிடம்
திரும்பினான். ஆனால் அவன் தேவர்களை அடையுமுன்பே ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள
நேர்ந்தது: ‘தூக்கத்தில் ஆழ்ந்துள்ளவன் அப்போது, ‘நானே அவன்’ என்று
தன்னையோ அல்லது மற்ற உயிரினங்களையோ அறிவதில்லை. அப்போது அவன் அழிந்தே போய்விட்டதுபோல்தான்
தோன்றுகிறது. இத்தகைய கருத்தில் நான் எந்த சிறப்பையும் காணவில்லை’ என்று சிந்தித்தான் இந்திரன்.
ஆன்மாவைப்பற்றி தான் கொண்டிருந்த கருத்து சரியல்ல என்பதை
உணர்ந்த இந்திரன் மீண்டும் பிரஜாபதியிடம் திரும்பி வந்தான். அவனைக் கண்ட பிரஜாபதி
அவனிடம்,
‘இந்திரா, திருப்தியுற்று
மனத்தினாய் நீ உன் இருப்பிடத்திற்குத் திரும்பினாய். இப்போது எதை விரும்பி
மீண்டும் வந்துள்ளாய்’ என்று
கேட்டார். அதற்கு இந்திரன், ‘தூக்கத்தில் ஆழ்ந்துள்ளவன் அப்போது, “நானே அவன்” என்று
தன்னையோ அல்லது மற்ற உயிரினங்களையோ அறிவதில்லை. அப்போது அவன் அழிந்தே
போய்விட்டதுபோல்தான் தோன்றுகிறது. இத்தகைய கருத்தில் நான் எந்த சிறப்பையும்
காணவில்லை’
என்றான்.
இந்திரன் நிலைமையைப் புரிந்துகொண்ட பிரஜாபதி அவனிடம், ‘இந்திரா, நீ கூறியது
சரிதான். நீ ஆன்மாவைப் பற்றி சரியாக அறியவில்லை. எனவே மீண்டும் உனக்கு நான் அதனை
விளக்குகிறேன். ஆனால் நீ இன்னும் ஐந்து வருடங்கள் இங்கே தங்க வேண்டும் என்றார்.
அதனை ஏற்றுக்கொண்ட இந்திரன் மேலும் ஐந்து வருடங்கள் பிரஜாபதியுடன் தங்கினான். ஆம்
இந்திரன் பிரஜாபதியுடன் 101 ஆண்டுகள் பிரம்மசாரியாக வாழ்ந்தான்.
கனவில் உலவுகின்ற மனிதனும் ஆனமா அல்ல என்பதை இந்திரன்
புரிந்துகொண்டதும் பிரஜாபதி அவனை மூன்றாம் படிக்குக் கொண்டுசெல்லத் தயாரானார்.
மனிதனின் மூன்று நிலைகளில் மூன்றாவதாக வருவது ஆழ்ந்த தூக்கம். அது விழிப்பும் அல்ல, கனவும் அல்ல. ஆனால் அது ஒரு நிலை, அதை நாம் அனுபவிக்கிறோம். அனுபவிக்கும் போது அதைப்பற்றி
எதுவும் தெரியவில்லை என்றாலும் விழித்தபிறகு, “நனறாகத் தூங்கினேன், பேரானந்தமாக இருந்தது’ என்று கூறுகிறோம். நன்றாகத் தூங்கியதையும் ஆனந்தத்தையும்
அனுபவித்த ஒருவன் இருந்தேயாக வேண்டும். அவனே தூக்க நிலை மனிதன். அவனை ‘பிராஜ்ஞன்’ என்று
வேதாந்தத் தத்துவம் அழைக்கிறது. அவனே ஆன்மா என்று போதித்தார் பிரஜாபதி. அதில் கூட
இந்திரன் சிறப்பான கருத்தைக் காணவில்லை.இதை உணர்ந்த பிரஜாபதி மேலும் விளக்க
ஆரம்பித்தார்.
No comments