ஆன்மீக பெரியோர்கள் -1
ஆன்மாவை உணர்தலே ஆன்மீகம். ஆன்மீகம் என்றாலே பலருக்கு
ஒருவித ஒவ்வாமை உணர்வு ஏற்பட்டு விடுகிறது. வேறு பலருக்கோ ஆன்மீகம் என்றால் கோவில், பூஜை, வழிபாடு என்ற
அளவோடு நின்றுவிடத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ஆன்மிகம் என்பது நம்மைப் பற்றிய
விஷயம். நம் உள்ளே இருக்கும் ஆன்மாவைப் பற்றிய அறிவு. ஆம்! நம்மை பற்றிய உண்மைகளை
நாம் சரியாகவும்,
தெளிவாகவும் தெரிந்துகொள்ள உதவுவதுதான் ஆன்மீகம்.
ஆன்மிக வழிகள் எல்லாமே நல்லசெயல்களை புண்ணியமாகவும், தீயசெயல்களை பாவமாகவும் எடுத்து காட்டியது. ஆன்மீக வழியை
பின்பற்றியவர்கள் பழி, பாவங்களுக்கு
அஞ்சி நற்செயல்கள் செய்வதையே வாழ்க்கையின் நோக்கமாககொண்டனர். நாளடைவில் அந்த
ஆன்மிக வழிகள் இனம், மதம் என்ற
வேறுபாட்டை பெரிதாக்கி ஒவ்வொருவரும்தன் வழிகள்தான் சிறந்தது என்று ஆன்மீகத்தின்
நோக்கத்தையே திசை திருப்பியதால் மத வழிபாடுகளாக மாறிவிட்டது. இந்த வழிபாடுகளில்
சிலர் எளிமையாக ஆன்மாவை உணர்ந்துகொண்டிருக்கின்றனர்..சிலர் வெறும் ஆரவாரங்களுடன்
தன்னை போலியாக காட்டி கொண்டிருக்கின்றனர்.
நிலையற்ற பொருட்களில் தன்னை தொலைக்காமல் ஆன்மாவை உணர்வதே
ஆன்மீகம்.
ஆன்மிகம்னா எல்லாவற்றையும் துறந்துடறது இல்ல. நாம் போற
பாதையில் ஒரு முள் இருந்தால் அதை எடுத்து யார் காலிலும் படாமல் எடுத்து ஓரமாக
போடுவது கூட ஆன்மீகம்தான்! மற்றவர் துன்பம் அடையகூடாது என்று நினைக்கும் அந்த
கருணை இறை நிலைதானே! இந்த இறை நிலையை ஒருமனிதன் தானாக உணர்ந்து செய்யும்போது
அவனுக்கு ஆன்மீகம் தேவைப்படவில்லை. ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி பூசிக்
கொண்டு,
எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல.
மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு
நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல்
செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.
அடுத்ததாக, பல மணி நேரம்
வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு
நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக
இருக்கிறாய்,
இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக
செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
ஆன்மா என்பது கண்களால் காண இயலாத அகப்பொருள் போன்றது.உடல்
என்பது புறப்பொருள் போன்றது.நாம் இறந்தல் அழிவது புறப்பொருளான உடல் மட்டுமே,அகப்பொருளான ஆன்மாவிற்கு அழிவே இல்லை.
நமது சனாதன தர்மத்தின் லட்சியம் இறைநிலையை அடைய வேண்டும்.
அதற்கான வழியையும் நமது ரிஷிகளும், முனிவர்களும்
ஏனைய பெரியோர்களும் வழிவகுத்துள்ளனர். முதலில் இறைலட்சியம் என்றால் என்ன? என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதில் முதலாவது நான் வேறு
இந்த உடம்பு வேறு என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதில் உடம்பு அனைவருக்கும்
தெரியும் நாம் அனுதினமும் அதை பார்த்து பேணிகாக்கிறோம். ’நான்’ எனபது ஆன்மா.
ஆன்மா எது அது எங்க இருக்கிறது எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.
இப்பதிவு சாந்தோகிய உபநிஷதில் வருகிறது.
படைப்பு கடவுளாகிய பிரஜாபதி தேவர் தலைவனாகிய இந்திரனுக்கும்
அசுரர் தலைவனான் விரோசனனுக்கும் உபதேசித்த வித்தை இது. ஆன்மா எது என்பதை இந்த
வித்தை படிப்படியாக விளக்குகிறது. சாதாரண மனிதர்களுக்கு உடம்பே எல்லாம். உடம்பைத்
தவிர எதுவும் இருப்பதை அவர்கள் அறிவதும் இல்லை, ஏற்றுக்கொள்வதும் இல்லை. எனவே உடம்பை பேணுவதிலும் அலங்கரிப்பதிலும்
தங்கள் வாழ்நாளைச் செலவழிக்கின்றனர். இவர்களின் பிரதிநிதியாக உள்ளான் விரோசனன்.
ஆனால் சிலர் சிந்திக்கிறார்கள். இந்த உடம்புதான் எல்லாமா? இதைத் தவிர வேறு எதுவும் இல்லையா? உடம்பின் அழிவுடன் நாமும் அழிந்துவிடுகிறோமா? இத்தகைய கேள்விகளுக்கு விடைகாண முயற்சிக்கிறார்கள்.
அவர்களின் பிரதிநிதியாக உள்ளான் இந்திரன்.
ஒருமுறை பிரஜாபதி கூறுகிறார்:
ஆன்மா பாவமற்றது, மூப்பற்றது, மரணமற்றது, கவலையற்றது, பசி இல்லாதது, தாகம் இல்லாதது, ஆசைகள் நிறைவேறப் பெற்றது, சங்கல்பம் தடைபடாதது. அதனையே தேட வேண்டும், அதனையே அறிய வேண்டும், அந்த ஆன்மாவைத் தேடி அறிந்தவன் எல்லா உலகங்களையும்
அடைகிறான்;
எல்லா ஆசைகளும் நிறைவேறப் பெறுகிறான்.
ஒர் உண்மையைக் கூறுவதுடன் நின்றுவிடுகிறார் பிரஜாபதி. ஆன்மா
என்ற ஒன்று உள்ளது; அதை
அடைந்தவனுக்கு இவ்வளவு பேறுகள் வாய்க்கின்றன. இதை சொல்வதுடன் நின்றுவிடுகிறார்.
இந்த ஆன்மா எது என்றோ, யார் என்றோ, எங்கே உள்ளது என்றோ எதுவும் கூறவில்லை. கேட்பவர்களின்
ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அவரது வார்த்தைகள் அமைந்துள்ளன. இதை கேட்டு, ஆர்வம் கொண்டு தம்மை நாடுபவனுக்கு மேலும் உபதேசத்தைத்
தொடரலாம் என்பது அவரது எண்ணம். பிரஜாபதியின் உபதேசத்தை தேவர்களும் அசுரர்களும்
கேட்டனர்.
நல்லது’. ஆன்மாவைத் தேடினால் எல்லா உலகங்களையும் அடையலாம், எல்லா ஆசைகளும் நிறைவேறும். எனவே ஆன்மாவைத் தேடுவோம் என்று
அவர்கள் பேசிக்கொண்டனர். பின்னர் தேவர்களில் இந்திரனும், அசுரர்களில் விரோசனனும் புறப்பட்டனர். ஒருவருக்கொருவர்
கலந்து பேசாமலேயே இருவரும் கைகளில் ஸமித்தை ஏந்திக்கொண்டு பிரஜாபதியை அனுகினர்”.
”இந்திரனும் விரோசனனும் முப்பத்திரண்டு வருடங்கள்
பிரம்மச்சரியம் காத்தபடி பிரஜாபதியுடன் வாழ்ந்தார்கள். அதன் பிறகு ஒருநாள்
பிரஜாபதி அவர்களிடம், நீங்கள்
எதற்காக இங்கே தங்குகிறீர்கள்? என்று
கேட்டார். அதற்கு அவர்கள், “ஆன்மா பாவமற்றது, மூப்பற்றது, மரணமற்றது, கவலையற்றது, பசி இல்லாதது, தாகம் இல்லாதது, ஆசைகள் நிறைவேறப் பெற்றது, சங்கல்பம் தடைபடாதது. அதனையே தேட வேண்டும், அதனையே அறிய வேண்டும், அந்த ஆன்மாவைத் தேடி அறிந்தவன் எல்லா உலகங்களையும்
அடைகிறான்;
எல்லா ஆசைகளும் நிறைவேறப் பெறுகிறான்”. —இந்த வார்த்தைகள் தங்களுடையதாகத்தான் அறியப்படுகின்றன. அந்த
ஆன்மாவை அறிவதற்காகத்தான் நாங்கள் இங்கே தங்கியுள்ளோம் என்று பதிலளித்தனர்”.
இதில் பிரஜாபதி இந்திரனையும் விரோசனனையும் பிரம்மசரியம்
இருக்கும் படி கூறுகிறார். அதாவது ஆன்மீக வாழ்க்கைக்கு பிரம்மசரியம் இன்றிமையாதது.
அதனால்தான் நமது வாழ்க்கைமுறையை கூட நான்கு விதமாக பிரித்தார்கள். பிரம்மசரியம், கிரஹஸ்தம், வானபிரஸ்தம், சன்யாசம். எப்படியானலும் ஒருவன் பிரம்மசரியம் இருந்தே
தீரவேண்டும். ஏன் பிரம்மசரியம் இருக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறுவதை
கேட்போம். சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். பிரம்மசரியத்தை உறுதியாக அனுஷ்டிக்கிற
ஒரே ஒரு காரணத்தாலேயே எல்லா விதமான கல்வியறிவையும் மிகக் குறுகிய காலத்தில்
கற்றுத் தேர்ச்சி பெற்று விட முடியும். அத்தகையவன் ஒரே ஒரு முறை தான் கேட்டதையும்
அறிவதையும் மறவாமல் நினைவில் வைத்துகொள்கிறான். பிரம்மசரியம் பற்றி இன்னும்
சொல்லிகொண்டே போகலாம். இப்படிப்பட்ட பிரம்மசரியம் நம் நாட்டில் இல்லாமற்
போனதால்தான் நாடு இந்நிலையில் இருப்பதற்க்கு காரணம். பிரம்மசரியம் பற்றி பின்வரும்
நாட்களில் பார்ப்போம். மேலும் பிரஜாபதி தொடர்ந்தார்.
”கண்களில் எது தெரிகிறதோ அதுவே ஆன்மா. அது மரணமற்றது, பயமற்றது. அதுவே இறைவன் என்றார் பிரஜாபதி. அதைக் கேட்ட
இந்திரனும் விரோசனனும், ‘ஐயா!
தண்ணீரில் தெரிபவர் கண்ணாடியில் தெரிபவர் ஆகிய இருவரில் யார் ஆன்மா?’ என்று கேட்டனர். ‘இந்த அனைத்திலும் தெரிவது ஆன்மாவே’ என்று பதிலளித்தார் பிரஜாபதி”.
பிரஜாபதி வித்தையின் முன்னுரையாக அமைகின்ற இந்தக் கதையின்
ஆரம்பித்தில்,
ஆன்மீக வாழ்க்கை அல்லது தெய்வீக வாழ்க்கையின் என்னென்ன
மனமயக்கங்கள் சம்பவிக்கலாம் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.
முதலில் ஆன்மாவை அல்லது இறைவனை அறிவதால் வரும் பலன்கள்.
வெவ்வேறு உலகங்களை அடையலாம், எல்லா
ஆசைகளும் நிறைவேறப் பெறும் போன்றவற்றை வார்த்தைக்கு வார்த்தை பொருள்கொள்ளக்
கூடாது. ஆரம்ப மனங்களுக்கு அது சரி. ஆனால் உண்மையைத் தேடுபவர்கள் அதன்
அடிப்படையைப் புரிந்துகொள்ள வேண்டும். வெறும் உலகியல் வாழ்க்கை வாழ்பவர்களை ஆன்மீகத்தை
நோக்கித் திருப்புவதற்கு இத்தகைய கவர்ச்சிகரமான சில பலன்கள் கூறப்படுகின்றன.
சைதன்ய தேவர் இத்தகைய உத்தியைப் பயன்படுத்தி உலகியல் மக்களையும் இறைநாமம் சொல்ல
வைத்ததாக பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்:
‘உலகியல் மனிதர்களிடம், எல்லாவற்றையும் துறந்து விட்டு, இறைவனின் தாமரைத் திருவடிகளை நாடுங்கள் என்று சொன்னால்
ஒருபோதும் காதில் வாங்கிக்கொள்ளமாட்டார்கள். அதனால்தான் சைதன்யர், நித்தியானந்தர் ஆகிய இரண்டு சகோதரர்களும் ஆலோசித்து, அத்தகையோரை இழுக்க ஒரு தந்திரம் செய்தார்கள். ‘மாகூர் மீன் குழம்பு சாப்பிடுங்கள், இளம் பெண்களைத் தழுவுங்கள், ஹரி நாமத்தைச் சொல்லுங்கள்’ என்று அவர்கள் கூவினார்கள். முதல் இரண்டின் ஆசையினால் பலர்
ஹரினாம சங்கீர்த்தனத்தில் பங்கு கொண்டனர். ஹரி நாம அமுதத்தில் சிறிது ஆனந்தம்
பெற்றதும்,
’மாகூர் மீன் குழம்பு’ என்பது ஹரிப்பிரேமையினால் ஏற்படக் கூடிய ஆனந்தக் கண்ணீர்
என்றும்,
‘இளம்பெண்களைத் தழுவுதல்’ என்பது ஹரிப் பிரேமையால் பூமியில் புரள்வது என்றும்
தெரிந்து கொண்டனர்.
இந்திரன், விரோசனன்
இருவருமே பிரஜாபதியின் இத்தகைய கவர்ச்சிகரமான மொழிகளால் கவரப்பட்டே அவரை அணுகினர்.
கண்ணில் தெரிபவரே ஆன்மா என்றார் பிரஜாபதி. கண்ணாடியில் பார்த்தாலோ அதிலும் உருவம்
தெரிகிறது,
அதில் தெரிகின்ற கண்ணிலும் உருவம் தெரிகிறது. இந்த இரண்டில்
யார் ஆன்மா?
என்பது சந்தேகம். ஆன்மா என்றதுமே உடம்பைத்தான் இருவரும்
புரிந்துகொண்டனர். இது அரைகுறையான அறிவு. உடம்பும் ஆன்மாதான் ஆனால் உடம்பு மட்டுமே
ஆன்மா அல்ல. இதைத்தான் பிரஜாபதி அவர்களிடம் தெரிவித்தார். கண்ணிலும், கண்ணாடியிலும் அனைத்திலும் தெரிவது ஆன்மாவே, என்று அவர் கூறினார்.
நீங்கள் அறிந்தது தவறு என்று ஆரம்பத்திலேயே கூறினால்
அவர்களின் ஆர்வமும் முயற்சியும் வேகமும் தடைப்படும். எனவே அவர்களை ஊக்குவிக்கும்
விதமாக பதில் அளித்தார் பிரஜாபதி. மற்றொரு முக்கியமான கருத்து இங்கே
கூறப்படுகிறது. இந்திரன், விரோசனன்
இருவருமே மன்னர்கள் சுகபோகங்களில் வாழ்பவர்கள். ஆனால் உண்மையை அறிவதற்காக
ஆன்மீகத்தை நாடும்போது இருவருமே தங்கள் நாட்டையும் சுகபோகங்களையும் துறந்தனர்.
பணிவுடன் யாகத்திற்கான விறகை ஏந்தி வந்தனர். அனைத்திற்கும் மேலாக முப்பதிரண்டு
வருடங்கள் பிரம்மசரிய வாழ்வை வாழ்ந்தனர். இவை அனைத்தும் ஆன்மீக வாழ்வின்
அடிப்படைகளாக இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றன. இந்திரன் , விரோசனன் இருவருமே இந்த உடம்புதான் ஆன்மா என்று நினைத்தனர்.
இதை புரிந்துகொண்ட பிரஜாபதி அவர்களுக்கு இன்னும் சிறிது விளக்கினார்.
‘இந்திரன், விரோசனன்
ஆகிய இருவரையும் பார்த்து பிரஜாபதி, இதோ இந்தப்
பாத்திரத்திலுள்ள தண்ணீரில் உங்களைப் பாருங்கள். அதன்பிறகு ஆன்மாவைப்பற்றி எது
உங்களுக்குப் புரியவில்லையோ அதை என்னிடம் கேளுங்கள், என்று கூறினார். அவர்கள் இருவரும் சென்று பாத்திரத்திலுள்ள
நீரில் தங்களைப் பார்த்தனர். ‘என்ன
காண்கிறீர்கள்?’
என்று அவர்களிடம் பிரஜாபதி கேட்டார். ‘ஐயா! தண்ணீரில் தெரிகின்ற பிரதிபிம்பத்தில் முடியிலிருந்து
நகம் வரை எங்களை முழுமையாகக் காண்கிறோம்’ என்று இருவரும் பதிலளித்தனர்.
’பின்னர் பிரஜாபதி அவ்ர்களிடம், நீங்கள் நன்றாக அலங்கரித்துக் கொண்டு, நல்ல ஆடைகள் அணிந்து, பகட்டாகச் சென்று அந்த பாத்திரத்திலுள்ள தண்ணீரில்
பாருங்கள்’
என்றார். அவர்களும் தங்களை நன்றாக அலங்கரித்துக்கொண்டு, நல்ல ஆடைகள் அணிந்து பகட்டாகச் சென்று அந்தப்
பாத்திரத்திலுள்ள தண்ணீரில் பார்த்தனர். அப்போது பிரஜாபதி, ‘நீங்கள் என்ன காண்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
‘போற்றுதற்குரியவரே, நன்றாக அலங்கரித்துக்கொண்டு, நல்ல ஆடைகள் அணிந்து நாங்கள் எப்படி பகட்டாக இருக்கிறோமோ
அப்படியே இந்தப் பாத்திரத்திலுள்ள தண்ணீரிலும் நன்றாக அலங்கரித்துக்கொண்டு, நல்ல ஆடைகள் அணிந்து பகட்டாக இரண்டு பிரதிபிம்பங்கள்
தெரிகின்றன’.
‘அதுவே ஆன்மா. அது மரணமற்றது, பயமற்றது. அதுவே இறைவன்’ என்றார் பிரஜாபதி. அதைக் கேட்ட இந்திரனும் விரோசனனும்
திருப்தியுற்றவர்களாகத் தங்கள் இருப்பிடம் திரும்பினர்.
தாம் கூறியதைக் கேட்டு, தங்கள் இருப்பிடம் திரும்புகின்ற இந்திரனையும், விரோசனனையும் பார்த்த பிரஜாபதி தமக்குள், ‘ஆன்மாவை அடையாமல், ஆன்மாவை அறியாமல் இவர்கள் போகிறார்கள். இத்தகைய கருத்துக்
கொண்டிருப்பவர்கள் தேவர்களோ அசுரர்களோ யாராலும் அவர்களுக்கு அது இழப்பே’ என்று கூறிக்கொண்டார்.
விரோசனன் திருப்தியுற்றவனாக அசுரர்களிடம் சென்று, தான் அறிந்ததை அவர்களுக்கு கூறினான்: ‘இதோ, இந்த
ஆன்மாவையே (உடம்பையே) வழிபட வேண்டும். இந்த ஆன்மாவிற்கே (உடம்பிற்கே) சேவை செய்ய
வேண்டும். இதன்மூலம் நாம் இந்த உலகம், மறுவுலகம்
ஆகிய இரண்டு உலகங்களையும் அடைவோம்.’அதனால்தான்
தானம் கொடுக்காதவனையும் பிறரை மதிக்காதவையும் வழிபாடுகள் செய்யாதவனையும் இன்றும்
மக்கள்,
‘ஓ, இவன் அசுரனே’ என்று கூறுகிறார்கள். ஏனெனில் இப்படி வாழ்வது அசுரர்களின்
கொள்கை. அவர்கள்தான் இறந்தவனின் உடம்பை அழகான பொருட்களாலும் துணிகளாலும்
ஆபரண்ங்களாலும் அணிவிக்கிறார்கள். இதனால் மறுவுலகை அடையலாம் என்று அவர்கள்
கருதுகிறார்கள்.
இறந்தபிறகு உடம்பை அலங்கரித்து, பல்வேறு பொருட்களையும் உடன் வைத்து புதைத்துவிட்டால்
அவர்கள் மேலுலகம் சென்றுவிடுவார்கள் என்ற கருத்து பண்டைய எகிப்து, சுமேரியா போன்ற நாடுகளில் நிலவிவந்தது. அதுபோன்ற ஒரு
கருத்து இங்கே கூறப்படுகிறது. இத்தகைய முயற்சிகள் பயனற்றவை. சரி அசுரர்களின்
சிந்தனை இப்படி இருக்க, தேவனின்
சிந்தனை அதாவது இந்திரனும் இதே போன்று தான் புரிந்துகொண்டானா? அல்லது அவன் எப்படி புரிந்துகொண்டான் என்பதை இப்போது பார்ப்போம்.
No comments