ஸ்ரீ தத்தாத்ரேயர் - 1 - ஓர் அறிமுகம்
Lord Datta |
ஸ்ரீ தத்தாத்ரேயர்
கலியில் மக்கள் உய்ய வேண்டும் என்பதற்க்காகவே
மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக வந்ததே ஸ்ரீ தத்தாத்ரேய ரூபம். பல
தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம ஸ்வரூபமே. சிருஷ்டி, ஸ்திதி,
சம்ஹாரம் என்ற முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரபிரம்மத்தின் மூன்று முகங்களே.
இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதான் ஸ்ரீ தத்தாத்ரேய அவதாரம். மற்ற எல்லா அவதாரங்களுக்கும்
ஆரம்பம், முடிவு உண்டு, ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. மார்க்கண்டேயனைப்
போல, ஹனுமனைப் போல தத்தாத்ரேயரும் சிரஞ்சீவி.
அத்ரி மஹரிஷி - அனுசுயா தேவி இவர்கள் தமக்கு
புத்திர பாக்கியம் வேண்டி தவமிருந்தனர். அப்போது மும்மூர்த்திகளும் அவர்கள் முன்பு
தோன்றி, தாங்கள் மூவரும் அத்ரி - அனுசூயைக்கு மகனாகப் பிறப்பதாக வரமளிக்கின்றனர்.
ஒரு சமயம் பதிவிரதையான அனுசுயா தேவியை சோதிக்க
பிரம்மா, விஷ்ணு, சிவனை மும்மூர்த்திகளும் அனுசுயையிடம் சென்று யாசகம் வேண்டினார்கள்
உடலில் உடை ஏதும் இல்லாமல் யாசகம் அளிக்க வேண்டும் என்றனர். இக்கட்டான இந்த சூழ்நிலையில்
அனுசுயை தனது கணவனான அத்ரிமகரிஷியை மனதால் தியானித்து அவரது கமண்டல நீரை மும்மூர்த்திகளின்
மீது தெளித்தாள், உடனே மூவரும் பச்சிளம் குழந்தையாக மாறினார்கள்.
அதன்பின் உடையற்ற தன்மடி மீது அந்த குழந்தைகளை
கிடத்தி பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்ரிமகரிஷி வீடு திரும்பியதும் மூன்று குழந்தைகளையும்
அவர் பாதத்தில் கிடத்தினாள். மகரிஷியும் குழுந்தைகளை வாரி அணைத்தார். அணைத்த உடனே அந்த
3 குழந்தைகளும் இரண்டு கால்கள், ஒரு உடல்,
மூன்று தலைகள் மற்றும் 6 கைகளுடன் கூடிய உருவமாக மாறின. இந்த உருவமே தத்தாத்ரேயர் எனப்பட்டது.
நமது விருப்பத்தை பூர்த்தி செய்யவே மும்மூர்த்திகளும் இவ்வாறு வந்தனர் எனக் கூறி மகரிஷி
அனுசுயையை ஆசிர்வதித்தார்.
அவ்வாறு தோன்றியவரே தத்தாத்ரேயர். மும்மூர்த்திகளும்
தானே வந்து அத்ரி-அனுசூயைக்கு மகனாக பிறந்தமையால் “த(3)த்த” என்ற பெயர் வந்ததாகச் சொல்வர்.
இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்ரியின்
புதல்வர். ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்துக் வழங்கப் பெறுகிறார். இவர் பிறந்தது
மார்கழி மாதத்து பெளர்ணமி, மிருகசீர்ஷ நக்ஷத்திரம். இந்த அவதாரம் நடந்த ஸ்தலம் சுசீந்திரம்
என்றும் கூறப்படுகிறது. ஸ்தானுமாலையனாக இறைவன் இங்கே இருக்கிறார்.
யாயாதி ராஜ வம்சத்தில் வந்த கர்த்தவீர்யார்ஜுனன்
தத்தரது சிஷ்யர்களுள் ஒருவன். இவனது குல-குரு கர்க்க மஹரிஷியின் மூலம் தத்தாத்ரேயரைப்
பற்றி அறிந்து அவரை நோக்கித் தவமிருந்து வரங்களைப் பெறுகிறான். வரங்களை அளித்து அவனுக்கு
தர்மோபதேசமும் செய்விக்கிறார் தத்தாத்ரேயர். இந்த கர்த்தவீர்யார்ஜுனனே பின்னாளில் பரசுராமனால்
அழிக்கப்படுபவர். இன்றும் களவு போன பொருட்கள் கிடைக்க கர்த்த வீர்யார்ஜுன மந்திரம்
என்ற மந்திரத்தை ஜபம் செய்வர். இந்த மந்திரத்தின் ரிஷி தத்தாத்ரேயரே. தத்தாத்ரேயருக்கு
ஆத்ம ஞானமாக விளங்குபவள் அன்னை திரிபுரசுந்தரியே. அவளே தத்தாத்ரேயரின் மூன்று முகங்களாக
விளங்குகிறாள். தத்தாத்ரேயர் தான் குருவாக இருந்து பரசுராமருக்கு ஸ்ரீவித்யா உபாசனையை
அளித்தவர்.
பரபிரம்ம வஸ்துவே மும்மூர்த்திகளாக அருள் புரிகிறது
என்பது வேதாந்த சித்தாந்தம். மூன்றாகத் தோன்றிய ஒன்றே ஞான வைராக்கிய சம்பன்னரான ஸ்ரீ
தத்தாத்ரேயர். அவதூதரான இவருக்கு தண்டம், கமண்டலம், காஷாய வஸ்த்ரம் போன்றவை கிடையாது.
பாரத்தின் பல இடங்களிலும் பாதுகைகளில் இவரை தியானித்து வணங்கக் கோவில்கள் இருக்கிறது.
உத்ரப்பிரதேசத்தில் "குரு மூர்த்தி"
என்றாலேயே அது தத்தரைக் குறிப்பதாக இருக்கிறதாம். பிரயாகையில் இவரது கோவில் இருப்பதாக
தெரிகிறது. அதேபோல இமாலயத்தில், ஆத்ரேய மலைப்பகுதியில் ஒரு குகையில் பலகாலம் தத்தர்
தவம் செய்ததாகவும், அந்த குகையின் பெயரே தத்த குகை என்றும் படித்திருக்கிறேன். இதேபோல
ஸஹ்யமலையில் காவிரி உற்பத்தி ஸ்தானத்திற்கு அருகிலும், சித்ரதூர்க்கா மலையிலும், குல்பர்கா
அருகில் கங்காப்பூர் என்னும் இடத்திலும் இவர் தவம் செய்த குகைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் சேந்தமங்கலத்தில் சுயம்பிரகாச
அவதூத ஸ்வாமிகள் ஸ்ரீ தத்தரைப் பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டிருக்கிறார், இன்று அந்த
இடமே, தத்தகிரி குகாலயம் என்று வழங்கப்படுகிறது. இங்கே விமர்சையாக தத்த வழிபாடு நடக்கிறது.
புதுக்கோட்டையில் சாந்தானந்த ஸ்வாமிகள் புவனேஸ்வரி அதிஷ்ட்டானத்திலும், ஸ்கந்தகிரி
(சேலம் அருகே) தத்தருக்கு சன்னதி அமைத்திருக்கிறார். இதேபோல செங்காலிபுரத்தில் ராமானந்த
பிரம்மேந்திரர் என்னும் யதி, ஸ்ரீ தத்தருக்கு ஆலயம் அமைத்திருப்பதாகத் தெரிகிறது.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில்,
தெய்வத்திற்கு அடுத்த நிலையில் குருவை வைத்துப் போற்றுகின்றோம். படைத்தல், காத்தல்,
அழித்தல் ஆகிய முத்தொழில்களைப் புரியும் மும்மூர்த்திகளின் ஒருங்கிணைந்த வடிவமாகப்
போற்றப்படுபவர் ஸ்ரீதத்தாத்ரேயர். இவர் பரம்பொருளின் ஆசார்ய ஸ்வரூபமாக வழிபடப்படுகின்றார்.
இச்சா, கிரியா, ஞான சக்தியாகிய மூன்று சக்தி
நிலைகளுக்கும் அப்பாற்பட்ட முழுமையான நிர்க்குணப் பரம்பொருளைக் குறிப்பதே அத்ரி என்ற
திருநாமம்(அ-திரி).
அனுசூயா தேவி மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக்கித்
தாலாட்டிய புராணம் நம் எல்லோருக்கும் தெரியும். முப்பெருந்தேவியரின் வேண்டுகோளுக்கிணங்கி,
அனுசூயா தேவி, மும்மூர்த்திகளையும் குழந்தைகள் உருவிலிருந்து சுய உருவம் அடையச் செய்தார்.
அச்சமயம், மும்மூர்த்திகளும், தமது ஒருங்கிணைந்த அம்சமாக, அனுசூயா தேவிக்கு ஒரு புத்திரன்
தோன்றுவான் என்று அருளிச் செய்தனர். அவ்வாறே அவதரித்தார் தத்தாத்ரேயர். இவர் ஸ்ரீவிஷ்ணுவின்
அம்சம் மட்டுமே என்ற கூற்றும் உண்டு. ஆனால் அதர்வ வேதத்தின் ஒரு பகுதியாகிய தத்தாத்ரேய
உபநிஷதம், ஸ்ரீதத்தரை சிவஸ்வரூபம் என்றே குறிக்கிறது.
பொதுவாக, ஸ்ரீதத்தர், மும்மூர்த்திகளின் சொரூபமாதலால்,
மூன்று திருமுகங்களும் ஆறு திருக்கரங்களும்
உடையவராக வழிபடப்படுகிறார். ஆறு திருக்கரங்களில்,
பிரம்ம தேவரை குறிக்கும் கமண்டலம், ஜபமாலை, சிவபெருமானைக் குறிக்கும் திரிசூலம், உடுக்கை,
ஸ்ரீவிஷ்ணுவைக் குறிக்கும் சங்கு, சக்கரம் முதலியவற்றைத் தாங்கி அருளுகிறார். அவர் திருப்பாதங்களின் அருகில் இருக்கும் நான்கு
நாய்களும் நான்கு வேதங்களைக் குறிக்கும். வேதங்களால் அறியப்படும் பரமபுருஷன் ஒருவரே
என்பதை, இந்த நான்கு நாய்களும் அவரது திருவடிகளின் அருகில் இருப்பது குறிக்கிறது. ஸ்ரீதத்தரின்
பின்புறம் இருக்கும் பசு, பூமியையும், படைப்புத் தொழிலையும் குறிக்கும்.
ஸ்ரீதத்தாத்ரேயர், மிகச் சிறு வயதிலேயே தம்
இல்லம் விட்டு வெளியேறி, பிரம்ம ஞானத்தை அடைவதற்காக, பல்வேறு இடங்களுக்குச் சென்றார்.
கர்நாடகாவில் உள்ள கங்காபுரம்(Gangapur) என்னும் ஊரில் பிரம்ம ஞானத்தை அடைந்ததாகவும்
கூறப்படுகிறது. இவரது பத்தினி அனகா தேவி.
ஆந்திர மாநிலத்தில், அனகாதேவி. விரதம் மிகப்
பிரபலமானது. இதைக் கடைபிடிக்கும் தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
ஸ்ரீதத்தர், நிர்க்குண உபாசகர்களின் மஹாகுரு.
யோகிகள், யோகசாதனையில் வெற்றியடைவதற்கு உதவும் பரமதயாளர். கார்த்த வீர்யார்ஜூனன், பரசுராமர்
போன்றோரின் குரு இவரே. குறிப்பாக, பரசுராமருக்கு ஸ்ரீவித்யோபாசனையை அளித்த ஸ்ரீகுரு
இவரே. 'திரிபுர ரஹஸ்யா' என்னும் நூல் ஸ்ரீதத்தரால் அருளிச்செய்யப்பட்டது.
வடஇந்தியாவில் ஸ்ரீதத்தாத்ரேயரின் வழிபாடு
மிகப் பிரபலமானது. இவர், சிரஞ்சீவிகளுள் ஒருவர்.
அவதூதர். ஸ்ரீ இராமகிருஷ்ணபரமஹம்சர், 'அவதூதர்
என்பவர் இறைநிலை எட்டிய பின் அதனை மக்களுக்கு உணர்த்த இறங்கி வருபவர்'. என்று கூறுகிறார்.
ஸ்ரீகிருஷ்ணர், உத்தவகீதையில் இவர் பெயரைக்
குறிப்பிடாமல் அவதூதர் என்றே குறிப்பிடுகிறார்.
சந்திர வம்சத்து அரசனான யாயாதியின் மகன் யது என்பவர், ஸ்ரீதத்தாத்ரேயரைச் சந்தித்து,
அவர் ஞானம் பெற்ற வரலாறு குறித்துக் கேட்கும் போது, ஸ்ரீதத்தர், தமது 16 குருமார்களை
குறித்து, விளக்கமாக அவரிடம் எடுத்துரைக்கிறார். இந்த சரிதத்தை ஸ்ரீ கிருஷ்ணர், 'உத்தவ
கீதையில்' அருளியிருக்கிறார்.
ஸ்ரீ தத்தரின் பாதை, சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டதாகவே
அறியப்படுகிறது. உண்மையின் பாதையே ஸ்ரீதத்தரின் பாதை. இவ்வுலகில் குருவாக அறியப்படுகிறவர்களுக்கெல்லாம்
குருவான மஹாகுரு, ஸ்ரீதத்தரே.
ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி
மகராஜ், அக்கல்கோட் சுவாமிஜி என்றழைக்கப்படும், ஸ்ரீசுவாமி சமர்த்த மகாராஜ், ஸ்ரீஷீரடி
சாயிபாபா ஆகியோர் ஸ்ரீதத்தரின் மறு அவதாரங்களாகவே போற்றப்படுகின்றனர். ஸ்ரீசாயிநாதரின்
வழிபாட்டில், ''ஸ்ரீதத்த பாவனி' எனப்படும், ஸ்ரீதத்தரின் மகிமைகளைப் போற்றும் துதிக்கு
மிக முக்கியமான இடம் உண்டு.
ஸ்ரீதத்தாத்ரேயர் மந்திரம் ஞாபக
சக்தி தரும். ஞானம், மோக்ஷம், நற்குணங்கள் தரும் (க்ஷிப்ர பிரசாதனர்) விரைந்து
அருள் செய்பவர். இழந்த சொத்துக்களைத் திரும்பப்பெற, கடன் தீர, அடமானம் வைத்த
பொருள், நகைகளை மீட்க, காணாமல் போன பொருள்களை கண்டறியவும் அருள் செய்பவர்.
ஸ்ரீ வித்யா உபாஸனை மந்திர சாஸ்திரத்தில் உயர்வான
வித்தை இதைப் பற்றி இயற்றப்பட்ட கிரந்தங்களில் பெரியதும் சிறந்ததும் இவரால்
இயற்றப்பட்டதே. அதை பின்பற்றி இவரது சீடரான ஸ்ரீ பரசுராமரால் சுருக்கமாக ஒரு
கிரந்தம் இயற்றப்பட்டது.இன்றளவும் அந்த கிரந்தமே ஸ்ரீ வித்யா உபாசகர்களால்
பயன்படுத்தப்படுகிறது.
அவதூதர்களுக்கு ஸ்ரீ தத்தாத்ரேயரே சத்குரு. சகுன உபாசகர்களுக்கு கற்பக மரம் போல் நல்வாழ்வு தருபவரும், நிர்குண உபாசகர்களுக்கு சத்குருவாய் விளங்கி ஆன்ம உயர்வு தந்து ஜீவசமாதி ஆகும் நிலை வரை அருள் செய்பவர்.
No comments