Header Ads

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 3 - அத்ரி முனிவரும் அனுசூயாவும்


Lord Datta
அத்ரி முனிவரும் அனுசூயாவும்

அத்ரி முனிவர் விஸ்வாமித்திரர் மற்றும் வசிஷ்டர் என்ற இரண்டு முனிவர்களுக்கும் இடையே இருந்த பகையை விலக்கியவர். இன்னொரு முறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்து கொண்டு இருந்த போரில் இருபுறமும் தொடுத்த அம்பு மற்றும் ஆயுதங்கள் மழைப் போல சந்திர சூரியனையே மறைக்க உலகம் இருளில் மூழ்கியது. தேவர்கள் அந்த இருட்டில் சண்டை போட முடியாமல் தவிக்க அத்ரி முனிவர் தனது தவ வலிமையினால் தானே சந்திர சூரியனைப் போன்ற ஒளியை ஏற்படுத்திக் கொடுக்க தேவர்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றார்கள்.

அத்ரி முனிவரின் சக்தி அப்படிப்பட்டது என்றால் அனுசூயா சளைத்தவளா என்ன? முன் ஒரு காலத்தில் ஷீலாவதி என்ற கற்புக்கரசி வாழ்ந்து வந்தாள். அவளும் அனுசூயாவுக்கு இணையான கர்புக்கரசியே. அவளுடைய கணவன் ஒரு விலை மாதுடன் தொடர்புக் கொண்டு தனது சொத்து அனைத்தையும் இழந்தது மட்டும் அல்லாமல் உடலும் நலிவுற்றான். ஆனாலும் ஷீலாவதி தன் கணவனின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என எண்ணியவளாக அவனைக் கை விடாமல் அவனுக்கு பணிவிடை செய்து வந்தாள். வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நோயுற்ற கணவன் ஒரு நாள் தனது ஆசை நாயகியை காண விருப்பம் தெரிவித்தான்.  ஆகவே அவன் மனைவி தன்னுடைய கணவனை தன் முதுகின் மீது ஏற்றிக் கொண்டு அந்த விலை மாதுவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். போகும் வழியில் மாண்டவ முனிவர் தவம் செய்த வழியாக அவள் சென்று கொண்டு இருந்தபோது இருட்டில் தெரியாமல் அவளது கணவனின் கால்கள் மாண்டவ முனிவரின் தலை மீது பட்டு விட அவர் நடந்ததை கேட்காமல் அவன் விடிந்ததும் மரணம் அடைய வேண்டும் என சாபம் தந்தார். முனிவர்களின் சாபம் பலிக்காமல் போகாது. ஆகவே பயந்து போன ஷீலாவதி மறுநாள் காலை சூரியனே உதிக்கக் கூடாது என சாபமிட அந்த கற்புக்கரசியின் சாபமும் வீண் போகவில்லை. உலகில் அனைத்து ஜீவன்களும் சூரிய ஒளி இல்லாமல் அவதிப்பட ஒரு கற்புக்கரசியின் சாபத்தை இன்னொரு கற்புக்கரசியே போக்க முடியும் எனக் கருதிய அனைத்து தேவர்களும் அனுசூயாவிடம் சென்று அவளை வேண்டிக் கேட்க அவளும் ஷீலாவதியிடம் பேசி அவள் சாபத்தை விலக்கிக் கொள்ள வைத்தாள். சூரியன் உதித்ததும் இறந்து போன அவள் கணவனை தனது தப வலிமையினால் மீண்டும் உயிர் பிழைக்க வைத்தாள்.

மும்மூர்த்திகளின் திருவிளையாடல்

இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த அனுசூயா மீது மும்மூர்த்திகளின் மனைவிகளும் பொறாமை கொண்டார்கள். அவர் கற்பை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்பதற்காக தமது கணவன்மார்களை கட்டாயப்படுத்தி மாறு வேடத்தில் முனிவர்கள் உருவில் சென்று அவளிடம் பசிக்கு உணவு போடுமாறு கேட்க வைத்தார்கள். அவளும் வந்துள்ள முனிவர்களுக்கு உணவு சமைத்தாள். உணவை பரிமாற்ற வந்தவளிடம் அவர்கள் அவளிடம் ஒரு வினோத கோரிக்கையை வைத்தார்கள். அவள் உடலில் துளிக் கூட ஆடை இல்லாமல் உணவு பறிமாறினால் மட்டுமே சாப்பிடுவோம் எனக் கூறினார்கள். வந்துள்ளவர்களோ முனிவர்கள்.  அவர்களை பசியோடு அனுப்புவது பாவம்.  பசியோடு சென்றால்,  அதனால்  அவர்கள் சாபம் தந்துவிட்டால் என்ன செய்வது? ஆனால் அனுசூயா கவலையேபடவில்லை. தனது கற்பை நம்பினாள். தான் தனது கணவனுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை. ஆகவே அவர்தான் இதற்கு ஒரு வழிகாட்ட வேண்டும் என நினைத்தாள். தனது கணவனை மனதில் நினைத்து வேண்டினாள். அடுத்த நிமிடமே முமூர்த்திகளும் பிறந்த குழந்தைகளாகி விட்டார்கள்.  அந்தக் குழந்தைகளை வாரி எடுத்து தனது மார்பில் இருந்து பாலூட்டினாள். அவள் கணவர் திரும்பி வந்தார். நடந்ததைக் கேட்டு அறிந்தார். தனது ஞான திருஷ்டியினால் நடக்கபோவதை அறிந்து கொண்டார். குழந்தைகள் அவளிடம் கொஞ்சி  விளையாடின.

அனுசூயாவை சோதிக்கச் சென்ற தமது கணவன்மார்கள் திரும்பி வராததைக் கண்டு பயந்து போன மும்மூர்த்திகளின் மனைவிகள் நாரதர் மூலம் நடந்ததை அறிந்து கொண்டு அனுசூயாவிடம் சென்று மன்னிப்புக் கோரி தமது கணவர்களை திருப்பித் தருமாறு கேட்டார்கள். அவளும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு  அவள் கணவர்களை மீண்டும் பழைய நிலைக்கு ஆளாக்க தன் கணவனை வேண்டினாள். குழந்தைகள் மறைந்தன. மும்மூர்த்திகளும்  தமது உண்மையான ரூபத்தை அனுசூயா- அத்ரி முனிவர் தம்பதிகளுக்குக் காட்டி இன்னும் சில நாட்களிலேயே விஷ்ணுவானவர் அவர்களுக்கு மகனாகப் பிறப்பார் எனவும், பிறக்க உள்ள குழந்தை மும்மூர்த்திகளின் அவதாரமாக, அவர்கள் சக்தியை உள்ளடக்கி தத்தாத்திரேயர் என்ற அவதூதராக பிறந்து பூமியில் உள்ள அவல நிலையை ஒழிப்பார் என உறுதி தந்துவிட்டு அவர்களை ஆசிர்வத்தப் பின்னர் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கூறியபடியே அனுசூயா சில காலத்தில் கர்பமுற்று ஒரு குழந்தைக்கு தாயானாள். அவளுக்குப் பிறந்தக் குழந்தையே மனித உருவில் மும்மூர்த்திகளின் அவதாரமாக பூமிக்கு தத்தாத்திரேயராக வந்த விஷ்ணு பகவான் ஆவார்.

விஷ்ணு ஏன் தத்தாத்திரேயராக  அவதரித்தார்?

விஷ்ணு பகவான் அப்படி பிறந்ததற்கும் ஒரு காரணம் உண்டு. அது என்ன? கால  காலத்துக்கு முன்னர் கஷ்யபு என்ற அசுரர்களின் மன்னன் ஒருவன் இருந்தான். அவன் மரணம் அடைந்ததும் அவனுடைய மகன் அரசன் ஆனான். அப்போது அந்த அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடந்தது. பல ஆண்டுகள் நடந்த அந்தப் போரில் கஷ்யபுவின் மகன் இறந்து விட்டான். அந்தப் போரில் இந்திரனும் தேவர்கள் சார்பில் கலந்து கொண்டு இருந்தார். அதே நேரத்தில் சுக்ரா எனும் முனிவர் அசுரர்களுக்கு உதவி வந்தார். அசுரர்கள் தோற்று ஓடிக் கொண்டு இருந்ததைக் கண்ட சுக்ரா முனிவர்  அசுரர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இமயமலைக்குச் சென்று சிவபெருமானை துதித்து வேண்டியவாறு தவம் இருந்தார். ஆகவே சுக்ரா முனிவரின் தவத்தைக் கலைக்க முடியாமல் போன தேவர்களின் சார்பில் மகாவிஷ்ணு சுக்ரா முனிவரின் தவத்தைக் கலைக்க வேறு வழி இன்றி அவருடைய தாயாரைக் கொன்று விட்டார். அவள் போட்ட கதறலில் இன்னொரு இடத்தில் தவத்தில் இருந்த பிருகு முனிவர் கண் விழித்தார். கண் விழித்த முனிவரினால் ஒரு வலிமையற்ற பெண்ணை விஷ்ணுவானவர்  கொன்றதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்ன இருந்தாலும் மற்றொரு முனிவரின் தாயாரை கொள்வதை அவரால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். ஆகவே ஒரு முனிவரின் தவத்தைக் கலைக்க அவர் தாயாரைக் கொன்ற பாவத்திற்காக விஷ்ணு பல ஜென்மங்களில் தமது தெய்வீகத்தை இழந்து பூமியில் ஒரு ஆண்  மகனாகப் பிறந்து தனது தோஷத்தைக் களைந்து கொள்ள வேண்டும் என சாபமிட்டார். அதனால்தான் இந்த ஜென்மத்தில் அவர் தத்தாத்திரேயராக பிறக்க வேண்டி இருந்தது.  மும்மூர்த்திகளின் அவதாரமே தத்தாத்திரேயேர் என்றாலும் அவதூதப் பிறவியான மானிட ரூபத்தில்தான் அவர் வரவேண்டி இருந்தது.

Sincere Thanks to 
Santhipriya

https://santhipriyaspages.blogspot.in/ 

No comments

Powered by Blogger.