குடும்ப, குல, ஊர்,கிராம தெய்வங்கள் - ஓர் அறிமுகம் - 1
குல, குடும்ப, ஊர் கிராம
தெய்வங்கள்
தமிழர் மரபைக் காக்கும் மண்மணக்கும் கிராம தெய்வங்களை
மூன்று வகையாகப் பிரிக்கின்றனர், நம்
கிராமத்துப் பெரியவர்கள். குடும்ப தெய்வம், குலதெய்வம் , ஊர்த்
தெய்வம்.
குலதெய்வம்:
சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர், மூதாதையரில் ஒருவர், தன் வழித்தோன்றல்கள் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக
பலிகொடுக்கப்பட்டிருப்பார்; தன் உயிரை
மாய்த்துக்கொண்டிருப்பார்; சண்டையிட்டு
வீர மரணமடைந்திருப்பார்.
இவ்வாறு மரித்தவர்களை நினைவுகூர்வதற்காகவும், தங்களின் சந்ததியினரைக் காத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்
வகையிலும் உருவான தெய்வ வழிபாடுதான் `குலதெய்வ
வழிபாட்டு முறை'.
இதில், அந்த
மூதாதையரைக் கடவுளாக எண்ணி வணங்கும் அவரின் நெருங்கிய உறவுகள், ரத்தக்கலப்பு உள்ளவர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் எனத்
தலைமுறை தாண்டிய சொந்தங்கள் பல குடும்பங்களாகப் பல்கிப் பெருகியிருக்கும். இந்தக்
குழுவில் இருப்பவர்களே, ஒரு வீட்டுப்
பங்காளிகள் அல்லது பங்காளிகள் என அழைக்கப்படுகின்றனர்.
இவர்கள், தங்கள் சக
பங்காளிகள் வீட்டில் பெண்ணெடுக்கவோ, பெண்
கொடுக்கவோ மாட்டார்கள். ஆண்டுக்கு ஒருமுறை, மஹா சிவராத்திரியின்போது இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, குலதெய்வத்துக்கு சிறப்பு வழிபாடு செய்யும் பழக்கம்
தென்மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகிறது. உதாரணத்துக்கு, இதனை ஒரு பிரிவினர் 'மாசிப்பச்சை கும்பிடு' என்பர். இது தவிர மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, சித்திரை மாதங்களில் குலதெய்வக் கோயிலில் 'பெரியகும்பிடு விழா' நடத்தி, பங்காளிகளை
சந்தித்து உறவாடி,
குலதெய்வத்துக்கு விழா எடுப்பார்கள்.
குடும்ப தெய்வம்:
பங்காளிகளாக இருந்து, ஒரே குலதெய்வத்தை வழிபடுபவராக இருந்தாலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு குடும்ப
தெய்வமும்,
அந்தக் குடும்பத்துக்கு ஒரு பெயரும் இருக்கும்.
கிராமங்களில் இருக்கும் குடும்ப தெய்வங்கள் பெரும்பாலும், தன் சொந்த வீட்டுக்கு நற்பெயர் கிடைப்பதற்காக மரித்தபோன
உறவுகளாகத்தான் இருப்பார்கள். ஒரு குடும்பத்தின் நற்பெயருக்காக மரித்துபோன, குடும்பத்தின் உறுப்பினரோ அல்லது திருமணம் ஆகாமல்
மரித்துபோன கன்னியையோ தெய்வமாகப் பாவித்து வழிபடுவதும் உண்டு. இதன்படி, ஒவ்வொரு பொங்கலின்போதும், 'குடும்ப தெய்வத்துக்கு' படையல் இடுகின்றனர். மேலும், ஏதேனும் ஓர் இக்கட்டான சூழலில் தீர்க்கமான முடிவு
எடுப்பதற்கு ,சீட்டில் பிரச்னைகளை எழுதி, 'குலுக்குச் சீட்டு' போட்டு எடுக்கும் முறையும் குடும்ப தெய்வ வழிபாட்டில்
முக்கிய அங்கம் வகிக்கிறது. அதேபோல், ஒவ்வோர்
ஊரிலும் குடும்ப தெய்வத்துக்குச் செய்யும் சடங்குகள், அக்குடும்பத்தின் தலைவர் முன்னிலையில் நடக்கும்.
ஊர்த் தெய்வம்:
ஊரில் பெரும்பான்மையான மக்களுக்குண்டான பொதுவான தெய்வமே ' ஊர்த் தெய்வம்' என்கின்றனர்.
பெரும்பாலும் ஊர்த் தெய்வங்கள் வடக்கு திசையினைப் பார்த்த உக்கிர தேவதைகளாகவோ
அல்லது ஆயுதங்களுடனோ காணப்படுகின்றன.
ஊர்த் தெய்வங்கள் பெரும்பாலும், ஊரின் மையப்பகுதியில் அருள்பாலிக்கின்றன. அப்பகுதி, 'மந்தை' என
அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் முக்கியமான ஊர்க் கூட்டங்கள், திருவிழாவின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஊர்த்
தெய்வங்களுக்கு பெரும்பாலும் விவசாயம் முடிந்து, அறுவடை முடிந்த காலங்களில் திருவிழாக்கள்
கொண்டாடப்படுகின்றன.
இந்த ஊர்த் தெய்வங்களின் முக்கியமான பரிவார தெய்வங்களாக
இருக்கும் தெய்வங்கள் ஊரின் எல்லைப்பகுதியில் நிலைநிறுத்தப்படுகின்றன. இவற்றுக்கு 'எல்லைத் தெய்வங்கள்' என்று பெயர். நம் ஆதித்தமிழர்களின் முக்கியத் தொழிலாக, வேட்டையாடுதல் இருந்திப்பதால், இத்தெய்வங்களுக்கு வேல், அரிவாள் எனும் கூர்தீட்டிய ஆயுதங்கள் கொண்டு சிலைகள்
உருவாக்கப்படுகின்றன.
மேற்கூறிய மூன்று தெய்வங்களுக்குரிய பொதுவான இலக்கணங்களும், தமிழகத்தின் வெவ்வேறு கிராமங்களிலும் நிச்சயம்
இருந்திருக்கும்,
இருக்கும். ஆனால், அத்தெய்வங்களுக்குரிய உண்மையான கதைகள் யாருக்கும் தெரியாமல்
மறைந்து,
ஒரு சம்பிரதாய வழிபாட்டுமுறையே தற்போது நிகழ்கிறது.
அவை களையப்படவேண்டும். மண்ணின் தெய்வங்கள் பற்றிய புரிதல்
ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும். அதன் கதைகள் இனியாவது ஆவணப்படுத்தப்
பட்டிருக்கவேண்டும். அப்படியிருந்தால், மட்டும்தான், தமிழகத்தின்
நல்மரபுகளை கலாசார கூறுகளை வரும் தலைமுறைக்கு பரிசளிக்கமுடியும் என்பது மட்டும்
நிச்சயம். ஏனெனில், மண்ணின்
தெய்வங்கள் மட்டுமே...அடுத்தடுத்தவீட்டில் பக்கத்துவீட்டுக்காரர்களாக பேசாமல்
இயங்குபவர்களைக்கூட, உறவு பெயர்
சொல்லி இணைக்கும் பாலங்கள்.
உறவுகளை பிணைக்கும் குலதெய்வ வழிபாடு
இன்றைக்கு வாழ்க்கையில் எதிர்படும் பிரச்னைகளுக்கு காரணம்
கேட்டு ஜோதிடர்களிடம் சென்றால், 'குலதெய்வத்தை வழிபட மறந்ததுதான் பிரச்னைகளுக்கு காரணம்.' என்று சொல்கிறார்கள். ஆனால், நம்முடைய குலதெய்வம் எது என்று அவரால் குறிப்பிட்டு சொல்ல
முடியாது.
நமக்கும் நம்முடைய குலதெய்வம் எது என்று தெரியாது. காரணம்
கூட்டுக்குடும்பம் என்கிற தங்கச் சங்கிலி பிணைப்பில் இருந்து பிரிந்து விட்டோம்.
கூட்டுக்குடும்பமாக இருந்த வரையில் நம் வீட்டுப் பெரியவர்கள், அடுத்தடுத்த
தலைமுறையினருக்கு தங்கள் குலதெய்வம் பற்றியும், எப்படி வழிபடுவது என்பதை பற்றியும் எடுத்துச் சொன்னார்கள்.
இன்றைக்கு அந்த நிலை இல்லை.
சத்திரப்பட்டி, அத்திப்பட்டி
என்ற நம் சொந்த கிராமத்து பெயரைச் சொல்ல நம் பிள்ளைகளுக்குத் தெரியவில்லை.
கிராமத்தில் இருந்து வரும் பெரியவர், "டேய் ராசா, நாந்தான்டா
உன் பெரிய பாட்டன்" என்றபடி நம் பிள்ளைகளை இழுத்துவைத்து கொஞ்ச, 'ஹூ இஸ் பெக்கர்மேன்' என்றபடியே கான்வென்ட் குழந்தைகள் அவரின் கையை தட்டி விட்டு
வெளியே ஓட,
'சின்னப்புள்ளதானே' என அவர் சிரித்துக்கொள்கிறார். நல்லவேளை அவருக்கு ஆங்கிலம்
தெரியவில்லை என்பதால் நாம் தப்பித்தோம்.
பெரிய தாத்தன், சின்ன
தாத்தன்,
சித்தப்பா, பெரியப்பா என
விரிந்துகிடக்கும் நம் பங்காளிகளையும், அண்ணன் தம்பிகளையும் அடையாளம் தெரியாமல் பெருநகர
அடுக்குமாடிக் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறோம். இப்படியெல்லாம் கலிகாலத்தில்
நடக்கும் என கணித்துத்தான் பெரியவர்கள் பலதலைமுறைக்கு முன்னரே உறவுகளை
பிணைத்துவைக்கும் தந்திரத்தை இறைவழிபாட்டுக்குள் அடக்கியிருக்கிறார்கள்.
மக்களின் கலாச்சார வாழ்க்கை முறைகளை வழிவழியாக
கற்றுக்கொடுத்து,
ஒரு ஒழுங்குமுறை நகர்வை இயல்பாகவே நடத்தி
வந்திருக்கிறார்கள் நம் பாட்டனுக்கு பாட்டன்மார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்திய வழிதான் குலதெய்வ
வழிபாடு. உறவுகள் அற்றுப்போகாமல் பிணைத்து வைக்கவும், மனிதன் தனிமைப்பட்டு மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் காக்கவும்
குலதய்வ வழிபாடு உதவியது. ஆண்டுக்கு ஒருமுறை விழா எடுக்கும் நேரத்திலாவது
ஒட்டுமொத்த பங்காளிகளும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும். ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்து பேசி மகிழ வேண்டும் என நினைத்தார்கள். பொங்கல் வைத்து, விருந்து படைத்து ஆடி பாடி குலசாமியை கொண்டாடி
மகிழ்ந்தார்கள்.
ஆனால், தற்காலத்தில்
குலதெய்வ வழிபாடு குறைந்துபோய்விட்டது. பலர் தங்களின் செல்வ செழிப்பில்
குலதெய்வத்தையே மறந்துவிட்டார்கள். "குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான
ஒன்று. குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் தங்களின் முன்னோர்கள் எந்த நாளில் வழிபாடு
செய்தார்களோ அதே நாளில் வழிபாடு செய்வதே நல்லது'' என வலியுறுத்தினார்கள். ஆள் ஆளுக்கு ஒரு நாளை
வைத்துக்கொண்டால் உறவுகள் ஒன்றுகூடுதல் இல்லாமல் போய்விடும் என்பதால்தான் சில
வரைமுறைகளை கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்.
'யாரும் இல்லாமல் நிர்கதியாக நிற்கிறேன்' என புலம்புபவர்கள் இன்று அதிகரித்து வருகிறார்கள். இவர்கள்
அத்தனைபேருமே குல தெய்வ வழிபாட்டுக்கு போகாதவர்கள்; அல்லது போய் பல வருடங்கள் ஆனவர்கள். இவர்கள் இழந்தது
வழிபாட்டை அல்ல;
வம்சத்தை...வம்ச உறவுகளை! ஆயிரம் கோயில்களுக்கு போய் மொட்டை
போட்டாலும்,
முதல்முடி எடுத்து, காதுகுத்தும் சடங்கை குலதெய்வம் கோயிலில் உறவுகளைக் கூட்டி
நடத்தினார்கள். குலதெய்வத்தை வணங்கியே மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும் என குலதெய்வ
வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். குலதெய்வம் அருள் கிடைத்தால்தான், மற்ற தெய்வங்கள் வரம் தருவார்கள் என நம்பிக்கையை மேலும்
வலுவாக்கினார்கள். குலத்தை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்காதீர்கள் என
வலியுறுத்தினார்கள்.
கூட்டு பிரார்த்தனை, கூட்டு வழிபாட்டுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு எனக் கற்பித்தார்கள்.
இன்றைக்கு பல விஷயங்கள் ஃபேஷனாக மாறிவிட்டன. அதில் ஆன்மிகமும் இறைவழிபாடுகளும்கூட
விதிவிலக்கல்ல.
ஒரு நண்பர் பெருமையாகச் சொன்னார். ''நான் 18 முறை திருப்பதி போய் வந்திருக்கிறேன். 12 முறை
திருவண்ணாமலை கிரிவலம் போய் வந்திருக்கிறேன்.''
''அது சரி, உங்க
குலதெய்வம் கோயிலுக்கு கடைசியாக எப்போது போனீர்கள்'' என்றால், "தாத்தா காலத்துலேயே சென்னைக்கு வந்துட்டோம். அப்பா காலத்துல
அவரு எங்ககிட்ட எதுவும் சொல்லலை. எங்கயோ நெல்லை மாவட்டத்துல காட்டுக்குள்ள
போகணும்னு அம்மா சொல்லி கேட்டிருக்கேன். எங்களை அழைத்துப் போனதில்லை. பேருகூட
தெரியாது" என்றார்.
No comments