குடும்ப, குல, ஊர்,கிராம தெய்வங்கள் - ஓர் அறிமுகம் - 2
சிறுதெய்வங்கள்
வீட்டுத் தெய்வம்
தங்களுக்குள் வழிகாட்டியாய் விளங்கி, வாழ்ந்து மறைந்த முன்னோர்களையோ, கன்னியாக இருந்த நிலையில் வாழ்ந்து மறைந்த பெண்களையோ, தங்களின் வீட்டுத் தெய்வமாக வழிபடும் மரபு காணப்படுகிறது.
இது பெரும்பாலும் பெண் தெய்வமாகவே இருக்கும். இதனை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், வாழ்வரசி என்று கூறுவதுண்டு.
குலதெய்வம்
ஒரு குறிப்பிட்ட மூதாதையின் மரபில் தோன்றியதன் வாயிலாக
ஒருவருக்கொருவர் உறவு கொண்டுள்ள குழுவே ‘குலம்’ (clan) ஆகும். இரத்த உறவுடைய பங்காளிகள் ஒரே குலத்தைச்
சேர்ந்தவர்களாகக் கருதப்படுவர். இவர்களுக்குள் திருமண உறவு நடைபெறாது. இவ்வாறு
அமையும் ஒவ்வொரு குலத்திற்கும் தனித்தனித் தெய்வமும் கோயிலும் இருக்கும். இதுவே
குலதெய்வம் என்றும் குலதெய்வக் கோயில் என்றும் குறிப்பிடப்படும். ‘குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு’, ‘குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்காதே’ என்ற பழமொழிகள் குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை
உணர்த்தும். பூப்புச் சடங்கு, திருமணம், காதணி விழா அழைப்பிதழ்களில் குலதெய்வத்தின் பெயர் தவறாது
இடம் பெறுவதை நீங்கள் காணலாம்.
இனத்தெய்வம்
பல குலங்கள் சேர்ந்தது ஓர் இனம், ஒரு சாதி (caste) என்று கூறப்படும். ஒரு குறிப்பிட்ட சாதிக்கென்று உள்ள
தெய்வங்கள் இனத்தெய்வங்கள், இனச்சார்புத்
தெய்வங்கள்,
சாதி்த் தெய்வங்கள் என்ற பெயர்களில் வழங்கப் படுகின்றன. ஒரு
குறிப்பிட்ட இனத்தாரின் தனித்துவத்தைக் காட்டும் வகையில் இத்தெய்வங்களின்
வழிபாடுகள் சிறப்பாக அமையும். மிகுதியும் பெண் தெய்வங்களே இனத்தெய்வங்களாக
இருக்கும். ஒரே மரபு வழிப்பட்ட குலத்தாரை ஒன்றிணைக்கும் சக்தியாக இனத்தெய்வங்கள்
விளங்குகின்றன.
ஊர்த்தெய்வம்
வீட்டைக் காப்பது வீட்டுத் தெய்வம், குலத்தைக் காப்பது குல தெய்வம், இனத்தாரைக் காப்பது இனத்தெய்வம் என்றாலும் ஓர் ஊரில் வாழும்
மக்கள் அனைவரையும் காப்பது ஊர்த்தெய்வமே ஆகும். ஊர்ச் சாமி, ஊர்த் தேவதை, கிராம தேவதை, ஊர்க்காவல் தெய்வம் என்ற பெயர்களில் இவை
குறிப்பிடப்படுகின்றன. ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து ஊர்த்தெய்வங்களுக்கு மிக
விமரிசையாகப் பெரிய கும்பிடு நடத்துவர்.
தமிழகக் கிராமம் ஒன்றை நீங்கள் வலம் வந்தால் மேற்கூறிய
தெய்வங்களை அடையாளம் காணலாம்.
வெகுசனத் தெய்வங்கள்
சாதி, மதம், மொழி என்ற வேறுபாடில்லாமல் அனைவரும் சென்று வழிபடும்
வகையில் அமைந்த சிறுதெய்வங்களே இங்கு வெகுசனத் தெய்வங்கள் என்ற பெயரில்
விளக்கப்படுகின்றன. சிறுதெய்வ மரபிற்கும் பெருந்தெய்வ மரபிற்கும் இடைப்பட்ட ஒரு
கலப்பு வழிபாட்டு மரபாக இவை வளர்ந்தும் வளர்த்தெடுக்கப் பட்டும் வருகின்றன.
சிறுதெய்வங்கள் பின்வரும் செயல்பாடுகளின் வழி வெகுசனத்
தெய்வ நிலைக்கு மாற்றப்படுகின்றன.
சிறுதெய்வமாக இருந்து வளர்ந்ததாக இருந்தாலும், ஆதி அந்தம் இல்லாததாகவும் அவதாரக் கடவுளாகவும்
பெருந்தெய்வங்களுக்கு உறவுடையதாகவும் மாற்றப்படும்.
பிரபலமான ஆற்றல் கொண்டவையாக, நோய்கள் துன்பங்கள் ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணம்
கொடுப்பவையாக நம்பப்படும், பரப்பப்படும்.
பழிவாங்கும் உணர்வு, ஆவேசம், உக்கிரம் போன்றவை குறைக்கப்பட்டுச் சாந்தம், அமைதி போன்ற பெருந்தெய்வக் குணங்கள் இத்தெய்வங்களுக்குக்
கற்பிக்கப்படும்.
கோயிலின் வருமானத்தைக் கொண்டு ஆகம விதிகளின்படி கோயிலும்
தெய்வ உருவமும் மாற்றி அமைக்கப்படும். சைவப் படையல் தெய்வத்தின் முன்பாகவும்
அசைவப் படையல் கோயிலுக்கு வெளிப்புறமும் படைக்கப்படும். திருவிழாக்கள் ஏழு நாட்கள்
அல்லது பத்து நாட்கள் வரை நடைபெறும்.
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி, சமயபுரம் மாரியம்மன், கோட்டை மாரியம்மன், வீரபாண்டி மாரியம்மன், இராஜ காளியம்மன், வெக்காளியம்மன், அய்யனார், சனீஸ்வரன்
போன்ற தெய்வங்கள் வெகுசனத் தெய்வங்களாக இன்று வழிபடப்பட்டு வருகின்றன.
இத்தெய்வங்கள் எல்லாச் சாதி, மத, மொழி
மக்களுக்கும் பொதுவானவை என்று கருதப்படுகின்றன.
சிறுதெய்வங்கள் தோற்றம் பெறும் முறை
சிறுதெய்வங்கள் பெரும்பாலும் நாட்டுப்புற மக்களின்
நம்பிக்கை அடிப்படையிலேயே தோற்றம் பெறுகின்றன. சிறுதெய்வங்கள் எல்லாம் ஒரே
முறையில் தோற்றம் பெறுவதில்லை. அவை பல்வேறு காரண காரிய அடிப்படையில் பல்வேறு
பின்புலத்தில் தோற்றம் கொள்கின்றன. சிறு தெய்வங்களின் தோற்ற முறைகளைக்
கீழ்க்காணும் நான்கு வகைகளுக்குள் அடக்கலாம். அவை :
1) குறிப்பிட்ட ஊரில், குறிப்பிட்ட வட்டாரத்தில் பிறந்து, இறந்ததன் அடிப்படையில் தோற்றம் பெறுதல்.
2) ஆற்றில் மிதந்து வந்த பெட்டிக்குள் இருந்து
கண்டெடுக்கப்பட்டுத் தோற்றம் பெற்றவை.
3) மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் புலம்
பெயர்ந்த நிலையில் பூர்வீகத் தெய்வக் கோயிலில் இருந்து பிடிமண்ணாக எடுத்து
வரப்பட்டுத் தோற்றம் பெற்றவை.
4) வேறு திசைகளிலிருந்து வந்து ஒருகுறிப்பிட்ட ஊர்மக்களை, வட்டார மக்களைப் பாதுகாத்ததன் வாயிலாகத் தோற்றம் பெற்றவை.
என்பனவாகும். இவ்வாறு தோற்றம் பெற்றவை ஆண் தெய்வங்களாகவோ
பெண் தெய்வங்களாகவோ இருக்கும். வழிபடுவோரின் பொருளாதார நிலைக்கேற்பத் தெய்வமும்
கோயிலும் சிறப்புப் பெறும். ஒவ்வொரு சிறுதெய்வத்திற்கும் ஏதேனுமொரு தோற்றக்கதை
வாய்மொழி மரபில் கதையாகவோ, பாடலாகவோ
வழங்கிவரும்.
சிறுதெய்வக் கோயில், உருவ அமைப்பு
கோயில் என்ற சொல் இறைவன் எழுந்தருளி இருக்கும் ஆலயத்தைக்
குறிப்பதாகும். கோயில் என்றவுடன் வானுயர்ந்த கோபுரங்கள், பல்வேறு வண்ணத்திலான சிற்பங்கள், நீண்ட மதில்சுவர் என்றெல்லாம் நீங்கள் கற்பனை செய்துவிடக்
கூடாது.
சிறுதெய்வக் கோயில்கள் பெரும்பாலும் மரத்தடியிலும் குளம், கண்மாய், ஏரி, ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு அருகிலுமே அமைந்திருக்கும்.
இக்கோயில்கள் கிழக்கும் வடக்கும் பார்த்து இருத்தல் வேண்டும் என்பது மரபு. நீங்கள்
வழிபடச் செல்லும் கோயிலிலும் கூட இதனைப் பார்க்க முடியும்.
சிறுதெய்வங்களுக்குக் கோயில் எழுப்பி வழிபடும் வழக்கம்
பிற்காலத்தில் தோன்றியதே ஆகும். பெரும்பாலும் திறந்த வெளியில் மரத்தின் கீழேயே
தெய்வமாகக் கருதி வழிபடத் தக்க கல், சூலாயுதம், வேல், அரிவாள், விளக்கு மாடம் போன்றவை இருக்கும். வேறு சில இடங்களில் பீடம்
அமைக்கப்பட்டு மேற்கூறிய வழிபாட்டுப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும். இதற்கு
அடுத்த நிலையில் சிலைகள் (தெய்வச் சிலைகள், குதிரை, நாய்)
உருவாக்கப்பட்டு அவை திறந்த வெளியிலோ கோயிலினுள்ளோ வைக்கப்பட்டிருக்கும்.
இக்கோயில்கள் கூடக் கூரை வேயப்பட்டதாக, சதுர வடிவிலோ வட்ட வடிவிலோ அமைந்திருக்கும். வட்ட வடிவமே
தொன்மையான கோயில் அமைப்பாகும். வழிபடுவோரின் பொருளாதார நிலைக்கேற்பக் கோயில்
அமைப்பும் தெய்வ உருவங்களும் மாறிக் கொண்டே இருக்கும். பெண் தெய்வக் கோயில்களில்
பச்சை,
மஞ்சள் வண்ணங்களும் ஆண் தெய்வக் கோயில்களில் சிவப்பு, வெள்ளை வண்ணங்களும் மிகுதியாகப் பயன்படுத்தப்படும்.
உருவ அமைப்பு
சிறுதெய்வங்கள் பலவற்றிற்கும் வழிபாட்டின் போது மட்டுமே
புதிதாக உருவ வடிவங்கள் செய்யப்படுகின்றன. வழிபாடு முடிந்த நிலையில் அவற்றைச்
சிதைத்துவிடும் வழக்கம் பல சிறுதெய்வக் கோயில்களில் காணப்படுகிறது. அம்மன்
கோயில்களில் ‘சக்திக் கரகமே’ தெய்வ உருவமாகக்
கருதி வழிபடப் படுகிறது. சிறுதெய்வங்களின் பெயரை மட்டுமே நினைவில் கொள்ள முடியுமே
தவிர,
அந்தத் தெய்வங்களுக்கான உருவங்களைக் கற்பனை கூடச் செய்து
பார்க்க முடியாது. அதையும் தாண்டி, சிறுதெய்வங்களுக்குச்
சிலையெடுக்கப் பட்டிருந்தால் அவை பிரமாண்டமான உருவங்களைக் கொண்டிருக்கும். திறந்த
வெளியில் குதிரையும் குதிரையின் மீது அமர்ந்திருக்கும் தெய்வமும் தனித்து, நின்றோ, அமர்ந்தோ
இருக்கும்.
பெரிய உருவம், பிதுங்கிய
நிலையில் உள்ள பெரிய கண்கள், கையில்
சூலாயுதம்,
வேல், சாட்டை, கதாயுதம், அரிவாள், சிறியதும் பெரியதுமான பரிவாரத் தெய்வங்கள், வேட்டை நாய்கள் என்று பார்ப்போரைப் பயத்தில் ஆழ்த்துவனவாக
அச்சம் ஊட்டுவனவாகக் காணப்படும். இரவு நேரங்களில் எளிதாகக் கோயிலின் பக்கம்
சென்றுவிட முடியாது. ஆண் தெய்வங்கள் மட்டுமின்றிப் பெண் தெய்வங்களுக்கும் இத்தகைய
பூதாகார வடிவம் ஏற்றுக் கொள்ளப் படுவதுண்டு. பாடத்தில் வரும் படங்களைப் பார்த்தால்
இக்கூற்றின் உண்மை உங்களுக்குப் புரியும்.
சிறுதெய்வ வழக்காறுகள்
நாட்டுப்புறத் தெய்வங்கள் கதைகள், பழமொழிகள், பாடல்கள், நம்பிக்கைகள் என்று ஏராளமான வழக்காறுகளைக் கொண்டு
விளங்குகின்றன. தெய்வங்கள் மனிதர்களாய்த் தோன்றி வாழ்ந்து மாண்ட கதை, பழிதீர்த்த கதை, தெய்வம் தற்போதைய இருப்பிடத்தில் வந்து அமர்ந்த கதை, அதன் அதீதச் செயல்கள் என்று தெய்வக் கதைகள்
நிறைந்திருக்கும். கதைகளில்லாத சிறு தெய்வங்களே இல்லை. இக்கதைகள் அனைத்தும்
நம்பிக்கையின் அடிப்படையில் தோற்றம் பெற்று, வழிவழியாக மக்களின் வாய்மொழியாக வழங்கப்பட்டு வருகின்றன.
பாடல்கள்
சிறுதெய்வம் குறித்த கதைகள் உடுக்கைப் பாட்டு, வில்லுப் பாட்டு, கணியான் கூத்து போன்ற நாட்டுப்புறக் கலைகளின் வழிப் பாடலாக
எடுத்துரைக்கப் படுகின்றன.
வெள்ளைக் குதிரையில அய்யனாரே
வேகமாய் வந்தருளும் அய்யனாரே
கோட்டைக் கருப்பசாமி நீங்க
குடியிருந்து காக்க வேணும்
மந்தையில மாரியாயி மலைமேல மாயவரே
மழைய எறக்கிவிடு மானுடங்க மனங்குளிர
மழைக்கு வரங்கேட்டு - நாங்க
மருகுகிறோம் சாமி
எலந்தை முள்ளால கோட்டைக்காரி எங்களை
ஏறிட்டுப் பாரம்மா சக்கதேவி
காட்டைக் காத்தது காளியாத்தா - கம்மாய்க்
கரையக் காத்தது அய்யனாரு
என்றவாறு அமையும் சிறுதெய்வங்களைப் பற்றிய பாடல்கள்
வழிபாட்டின் போது பாடப்படும்.
பழமொழிகள்
யாரு கடன் தீர்ந்தாலும் மாரி கடன் தீராது
நம்புனவங்களுக்கு மகாராசா, நம்பாதவங்களுக்கு எமராசா.
குல தெய்வத்தை வழிபட்டால் கோடி நன்மை உண்டு.
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
என்பது போன்ற பழமொழிகள் சிறுதெய்வங்கள் குறித்துக்
கூறப்படுவதுண்டு.
இவ்வழக்காறுகள் சிறுதெய்வ மரபு தலைமுறை கடந்து வருவதற்குத்
துணை செய்கின்றன.
No comments