Header Ads

ஸ்ரீ ராமானுஜர் - 5 - பகுதி 1

ஸ்ரீ இராமானுஜர் பகுதி 1

பூமன்னுமாது பொருந்தியமார்பன் புகழ்மலிந்த
பாமன்னுமாற னடிபணிந்துய்ந்தவன் பல்கலையோர்
தாம்மன்னவந்த விராமானுசன் சரணாரவிந்தம்
நாம்மன்னிவாழ நெஞ்சே! சொல்லுவோம் அவன் நாமங்களே” – இராமானுச நூற்றந்தாதி 1

ஆச்சாரியனின் ஒரு கண் நம் மேல் பட்டாலே அது மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மாவின் பார்வைகளை விட வலிமை மிக்கது.

ஸ்ரீ இராமானுஜர் அப்படிப்பட்ட ஒரு குரு. அவர் இறைவனை விடக் கருணை மிக்கவர். ஏனென்றால் இறைவன் தான் நம்மை இந்த சம்சார சாகரத்தில் தள்ளியவர். ஆனால் இவரோ அதிலிருந்து மீட்டு நம்மைத் திரும்பத் தாய் வீட்டுக்கு அனுப்பும் விண்கலமாக இருக்கிறவர். இறைவனை விட நம்மை இந்த சம்சார பந்தத்தில் இருந்து விடுவித்துத் திரும்பப் பிறவா வரத்தை நமக்கு நல்கும் வள்ளல் ஆவார்!

துவைதம், அத்துவைதம் ஆகிய இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து நமக்கு அவர் அளித்த பொக்கிஷம் தான் விசிட்டாத்துவைதம். உயிர்க்கும், உயிரற்றவைகளுக்கும், உலகுக்கும் உள்ளுரைப் பொருளாக உள்ளவன் நாராயணனே என்னும் தத்துவமே விசிட்டாத்துவைதம். ஆன்மா பரமாத்மா ஒன்றென அறிவிக்கும் அத்துவைதம். ஆன்மா பரமாத்மா வேறென அறிவிக்கும் துவைதம்.

இவ்விரு தத்துவங்களையும் ஒரு சேரக் கட்டி, உயிர், உடல், இறை இந்த மூன்றும் ஒன்றென முழங்கும் நெறி தான் விசிட்டாத்வைதம். விசித்தல் என்றால் கட்டுதல். இவ்வரிய பணியின் மூலம் அசித்திலும் இறைவன் உறைகிறான் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொன்னவர் எதிராஜர். ஏற்கனவே நாதமுனிகள், ஆளவந்தார் போன்ற வைணவ பெரியவர்கள் வித்திட்டு வளர்த்த விசிட்டாத்வைதத்தை விளக்குப் போல் உலகத்துக்குப் பிரகாசப் படுத்தினார் இராமானுஜர்.

மேலும் இவர் அன்று செய்த சமய/சமுதாயப் புரட்சி ஒரு இமாலய சாதனை. ஆயிரம் ஆண்டுகட்கு முன்னேயே மதப் புரட்சி செய்தவர் அவர். இன்றைக்கும் அவர் வரலாறு நமக்குப் படிப்பினையாக உள்ளது.

நலம் தருவது நற்பண்பே

ஒரு முறை திருவரங்கத்தில் வசந்தோத்சவத்தில் மேல தாளத்துடனும் சர்வ அலங்காரத்துடனும் பெருமாள் வீதி உலா வரும்போது காமத்தால் உந்தப்பட்டு ஒரு பெண்ணும் ஆணும் தெரு என்பதும் உணராமல் கட்டுண்டு கிடந்தனர். அப்பொழுது காவிரியில் நீராடிவிட்டு இராமானுஜர் ஸ்ரீ முதலியாண்டானுடன் வரும் போது இதைக் கண்டு, அவர்களை அழைத்து வருமாறு ஆள் அனுப்பினார். வந்தவர்கள் அழைத்தப் பின் தான் அவன் தன்னிலை உணர்ந்தான். தன் மனைவியை அழைத்துக் கொண்டு அவர்களுடன் இராமானுஜரை தரிசிக்கச் சென்றான். அவரைக் கண்டதும் விழுந்து வணங்கி ஒரு ஓரமாகப் பணிவுடன் நின்றான்.

இராமானுஜர் அவனிடம், “அவளுக்கு தான் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இல்லாமல் போகலாம். நீ இவ்வாறு பொது இடத்தில் நடந்து கொள்ளலாமா? அவளிடம் என்ன அமுதத்தையா பருகிக் கொண்டிருந்தாய்என்று கேட்டார்.

அவனோ கொஞ்சமும் சலனமில்லாமல், “ஆம் அவள் கண்களை விட அழகியது வேறு எதுவும் இல்லை. அதைக் கண்டால் என் சித்தம் கலங்கி விடுகிறதுஎன்றான். அவனைப் பற்றிய விவரங்களைக் கேட்டார் உடையவர். அவன் பெயர் தனுர்த்தாசன் என்றும், மற்போர் வீரன் அவன் எனத் தெரிந்து கொண்டார். அவனிடம், “உன் மனைவியின் கண்களை விட அழகானக் கண்களை நான் உனக்குக் காட்டுகிறேன்என்று கூறி திருவரங்கர் சந்நிதிக்கு அழைத்துச் சென்று கற்பூர ஆரத்தியின் போது அரங்கனைக் காண வைத்தார். அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றை காணாவே என்று அவருக்குத் தெரியுமே! அழகிய தீப ஒளியில் கரிய மாணிக்கமாகக் காட்சி தந்த அரங்கனின் செந்தாமரைக் கண்களை கண்ட தனுர்த்தாசன் வைத்தக் கண் வாங்காமல் அரங்கனை தரிசித்தான். அவன் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் உருண்டோடியது. சுய நினைவுக்கு வந்த பிறகு இராமானுஜரின் பொற்பாதங்களில் தன் மனைவி ஹேமாம்பாளுடன் விழுந்து வணங்கினான்.

இராமானுஜர் அருளால் ஞான ஒளி பெற்ற தனுர்த்தாசன் பிள்ளையுறங்காவில்லி என்று சிறப்புடன் அழைக்கப் பெற்றார். பின் கணவனும் மனைவியும் திருவரங்கத்திலேயே தங்கி விட்டனர். தினமும் நீராடப் போகும்போது முதலியாண்டான் கையைப் பிடித்துச் சென்ற இராமானுஜர் நீராடியபின் தனுர்த்தாசரின் கையைப் பற்றிய வண்ணம் திரும்பி வருவார். தனுர்த்தாசன் பிராமணர் இல்லையாகிலும் இராமானுஜர் அவனுடன் அன்னியோன்னியமாக இருக்கிறாரே என்று பலருக்கும் பொறாமை ஏற்பட்டது. இதை அறிந்தும் இராமானுஜர் அமைதியாக இருந்தார்.

ஒரு நாள் அனைவரும் உறங்கியபின் எல்லா சீடர்களின் கௌபீனங்களையும் (கோமணங்களையும்) இராமானுஜர் துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டுவிட்டார். பொழுது விடிந்ததும் கிழிந்த கௌபீனங்களைப் பார்த்துச் சீடர்கள் ஒருவரை ஒருவர் தரக் குறைவாகத் தாக்கிப் பேசிக் கொண்டனர்.

மறு நாள் இரவு தம் சீடர்களை இராமானுஜர் தன்னிடம் அழைத்தார். இரவு முழுவதும் தனுர்த்தாசரை இங்கேயே வைத்துக் கொள்கிறேன், நீங்கள் போய் அவர் மனைவியின் நகைகளைக் களவாடிக் கொண்டு வாருங்கள் என்று கட்டளை இட்டார். அவ்வாறே சீடர்கள் செய்தனர். தனுர்த்தாசர் மனைவி படுத்திருந்தும் உறங்காமல் கணவருக்காகக் காத்திருந்ததால் இவர்கள் வந்து தன் நகைகளை திருடுவது நன்கு தெரிந்தது. ஒரு பக்க நகைகளைக் கழட்டிய பின் மறு பக்க நகையையும் திருட வசதியாகத் திரும்பிப் படுத்தார். அதைக் கண்ட சீடர்கள் எங்கே இவர் முழித்துக் கொண்டு விட்டாரோ என்று பயந்து அது வரை திருடிய நகைகளுடன் ஓடிவிட்டனர். சீடர்கள் வந்தவுடன் தனுர்த்தாசரை வீட்டிற்கு அனுப்பினார். பின்னோடே சீடர்களையும் போகச் சொன்னார்.

தனுர்த்தாசர் தன் இல்லத்தை அடைந்ததும் அவர் மனைவி நடந்ததைக் கூறினார். அதற்கு அவரோ நீ திரும்பிப் படுத்திருக்கக் கூடாது. நகைகளை நன்கொடையாக அளிக்கிறோம் என்கிற அகம்பாவம் உன்னிடம் இருந்திருக்கிறது. ஆண்டவனை நினைத்த வண்ணம் ஏதும் அறியாமல் நீ இருந்திருப்பாயானால் வந்த வறியவர்கள் அனைத்தையும் கழட்டிச் சென்றிருப்பார்கள். நான் என்ற எண்ணம் இன்னும் உன்னை விட்டு அகலவில்லைஎன்றார்.

அதற்கு அவர் மனைவி என் மனத்தில் நான் என்ற அகம்பாவம் தோன்றாமல் இருக்க நீங்கள் தான் ஆசீர்வதிக்க வேண்டும்என்று உருகி வேண்டினாள். இதை மறைந்திருந்து கேட்ட சீடர்கள் மடத்துக்குச் சென்று இராமானுஜரிடம் நடந்ததைச் சொன்னர்.

விடிந்ததும் பிராமண சீடர்கள் அனைவரையும் அழைத்த இராமானுஜர் அரியதொரு அறிவுரையைச் சொல்லத் தொடங்கினார். குலமதம், கல்விமதம், தனமதம் ஆகிய மும்மதங்களால் மனிதன் சீரழிகிறான். கல்விமதம் மிக்க நீங்கள் நேற்றிரவு கௌபீனம் கிழிந்துவிட்டது என்று ஒருவரை ஒருவர் எவ்வளவு கீழ்த்தரமாகத் தாக்கிக் கொண்டீர்கள்! நகைகளை எல்லாம் பறி கொடுத்த பின்பும் தனுர்த்தாசரும், அவர் துணைவியாரும் எவ்வளவு மன அடக்கத்துடன் நடந்து கொண்டார்கள்! எனவே அகந்தை கொண்டவனை பிராமணன் என்பதா? அடக்கம் மிக்கவனை பிராமணன் என்பதா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார்.

அவர்களுக்குத் தங்கள் தவறு புரிந்தது. வெட்கத்துடன் தலை குனிந்து நின்றனர்.

சீடர்களே இனம் பற்றிய கருவத்தை விட்டொழியுங்கள். நல்லொழுக்கத்தை கடைபிடிக்க முயலுங்கள். பிறப்பில் அனைவரும் சமமே. பிறப்பினால் உயர்ந்தவன் என்று கூறிக் கொள்பவன் மனித குலத்துக்கே வைரியாவான். ஆன்மா என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள். ஆன்ம லாபத்துக்காக பாடுபடுங்கள். கல்வி, செல்வம், பிறப்பு ஆகிய அனைத்தையும் விடக் குணமே சிறந்தது. எனவே நலந்தரும் நற்குணத்தால் நாளும் உயரப் பாடு படுங்கள்!என்று இராமானுஜர் கூறிய அறிவுரையால் சீடர்களின் அஞ்ஞான இருள் அகன்று ஞான ஒளி பெருகிற்று.

இராமானுஜரால் அநேகர் ஆட்கொள்ளப்படக் காரணம் அவரது எளிமை, சின்னஞ்சிறியவர்களிடம் அன்பு பாராட்டும் அவர் இதயம். ஒரு நாள் அவர் திருவீதி வழியாக வருகையில் நண்டும் சிண்டுமாக நாலைந்து பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். குறுக்கும் நெடுக்குமாகப் புழுதியில் கோடுகள் போட்டு இது கோவில், இது கோபுரம், இது பிராகாரம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட இராமானுஜர் சற்றே நின்று ரசிக்க, ஓரு சிறுவன் இதோ உங்கள் பெருமாள் என்று தரையில் ஒரு கோட்டைக் காட்ட உடனே உடையவர் உள்ளத்தில் உவகைப் பொங்க, “தமர் உகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானேஎன்று சொல்லிக் கொண்டே கீழே விழுந்து சேவித்தார். குழந்தைகள் கொடுத்தக் கொட்டாங்குச்சி மண் பிராசதத்தையும் மகிழ்ச்சியுடன் தான் மடியில் வாங்கிக் கொண்டார். குழந்தைகள் குதூகலித்தனர்.


பிள்ளைகளோ பெரியவர்களோ, கற்றவரோ கல்லாதவரோ, கீழ்வகுப்போ மேல்வகுப்போ, எல்லா பிறவிகளையும் ஒரே நோக்கில் பார்த்தது அவரது ஒவ்வொரு செயலிலும் உறுதியானது.

No comments

Powered by Blogger.