Header Ads

உருத்திரான்கோவில் - கோடி மடங்கு பலன் தரும் ருத்ரகோடீஸ்வரர் தரிசனம் - திருக்கழுகுன்றம்

உருத்திரான்கோவில் - கோடி மடங்கு பலன் தரும் ருத்ரகோடீஸ்வரர் தரிசனம் - திருக்கழுகுன்றம் 


காஞ்சி மாநகருக்கு தென் கிழக்கில் செங்கல்பட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் திருக்கழுக்குன்றம் நகரில் உள்ளது ருத்ரகோடீஸ்வரர் ஆலயம். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இவ்வாலயம், ஆகம சாஸ்திர முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. அருள்மிகு ஸ்ரீ அபிராமிநாயகி உடனுறை ஸ்ரீ ருத்ரகோடீஸ்வரர் ஆலயம், மன்னர்களால் கட்டப்பட்டு சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக போற்றி பாதுகாக்கப்படும் கலைப் பொக்கிஷமாக திகழ்கிறது.

ராஜகோபுரத்தை அடுத்து அமைந்துள்ள மஹா மண்டபம் மிகவும் பெரிய மண்டபமாக விளங்குகிறது. சூரியன், சந்திரன் இருவரும் அருள்பாலிக்கின்றனர். அர்த்த மண்டபம் அந்தராளம் கருவறை அமைப்புடன் மூலவர் சுயம்பு மூர்த்தியாய் ஸ்ரீ ருத்ரகோடீஸ்வரர் என்ற திருநாமத்துடன் திருவருள் கூட்டுகிறார். அம்பிகை தெற்கு நோக்கி அபிராமிநாயகி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ருத்ரகோடீஸ்வரர் மஹா மண்டபத்தில் அமைந்துள்ள பலகணி (ஜன்னல்) வழியாக வரும் காற்றே காளி தேவியாக வழிபடப்படுகின்றது. அந்த ஜன்னலுக்கு வெளியே 12 கிலோ மீட்டர் தூரத்தில் காளிகோயில் உள்ளது. அம்பாள் சந்நிதியில் எதிர்புறம் உள்ள பலகணி வழியாக தீபம் காளி கோயிலைப் பார்த்து காட்டப்படுகிறது.

வெளியே நந்தி மண்டபம், ஆலய வெளிச்சுவரில் புடைப்பு சிற்பமாக நந்திதேவர் சுயம்பிரபை தேவியுடன் அருளுகிறார். நால்வர் பெருமக்களில் திருநாவுக்கரசர், வைப்புத் தலமாக வைத்து போற்றிப்பாடியிருக்கிறார்.

தலவரலாற்றுப்படி பூலோகத்தில் அசுரர்களை அழிப்பதற்காக சர்வேஸ்வரன் திருமேனியிலிருந்து பலம் பொருந்திய கோடி உருத்திரர்கள் தோன்றினர். அவர்கள் மிகுந்த தவபலம் பெற்றவர்கள். 32 ஆயுதங்களை ஏந்தியவர்கள். கோடி உருத்திரர்கள் சிவபெருமானை வணங்க இவ்வுலகத்தை காத்து நிற்க எம்பெருமான் ஆணையிட்டார். சிவபெருமானின் கட்டளையை ஏற்று அசுரர்களை கோடி உருத்திரர்கள் அடியோடு அழிக்கின்றனர்.


சிவபெருமானிடம் கோடி உருத்திரர்களும் அசுரர்களை கொன்ற பாவம் நீங்க வழி கேட்டனர். சிவபெருமானும் அதற்கு உருத்திரர்கள் ஒவ்வொருவரும் என்னை நித்தமும் தவமியற்றி அர்ச்சனை செய்து பூஜித்தால் எத்தகைய கொடிய பாவங்களும் நீங்கிவிடும் என்றார். வேதகிரிமலையை அதற்கு தகுந்த தலம் என்று சிவபெருமான் கூற, கோடி உருத்திரர்களும் வேதமலையில் தவமியற்றி அர்ச்சனை செய்து பூஜித்ததன் பயனாக அவர்கள் அனைவரின் பாவங்களும் நீங்கப் பெற்றனர். உருத்திரர்கள் மஹாதேவனிடம் தங்கள் பெயரிலேயே தீர்த்தமும் தலமும் விளங்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அதன்படியே ருத்ரகோடி தலம் என்றும் ஈசனுக்கு ருத்ரகோடீஸ்வரர் என்றும் உமையவளுக்கு ருத்ரகோடீஸ்வரி என்றும் தீர்த்தத்திற்கு ருத்ரகோடி தீர்த்தம் எனவும் பெயர் பெற்று விளங்கலாயிற்று.

மற்றொரு வரலாற்றின்படி கருடனின் அகந்தையைப் போக்கி நந்திதேவன் சிவ அபராதத்தையும் போக்கி கருணைபுரிந்துள்ளார் இந்த தல நாயகன். ருத்ரகோடி ஆலயத்தில் வாயிலில் உள்ள பெரிய நந்திதேவரின் முன்புறம் நுழைவு வாயிலின் ஓரம் சுமார் ஒன்றரை அடி உயரம் பூமியில் புதையுண்ட கருடாழ்வார் சிலையைக் காணலாம்.

இச்சிவாலயத்தின் தலவிருட்சம் வாழைமரம். ஆலயத்தில் பத்ராட்ச மரம் உள்ளது. இந்த மரம் காய்ப்பதில்லை; பூ மட்டும் பூக்கிறது. இந்த மரம் உருத்திராட்ச மரத்தின் வகையைச் சார்ந்ததாகும். திருக்கழுக்குன்றத்தில் மலைமீது வேதபுரீஸ்வரர் ஆலயமும் கீழே பக்தவச்சலேஸ்வரர் ஆலயமும் 2 கி.மீ. தூரத்தில் ருத்ரகோடீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன. இந்த மூன்று ஆலயங்களின் தலவிருட்சம் வாழைமரமாகும்.


நாம் ஒருமுறை செய்த தானத்தையும் ஜெபத்தையும் கோடிமுறை செய்த பலனாக நமக்குத் தருபவர் ருத்ரகோடீஸ்வரர்.

ஒருவர் கோடிமுறை பாவங்கள் செய்திருந்தாலும் ருத்ர கோடீஸ்வரரிடம் தனது தவறுகளை உணர்ந்து வேண்டிக் கொள்வதன் மூலம் அனைத்து பாவங்களையும் கணத்தில் போக்கிவிடுவார்.

திருக்கழுகுன்றம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் ருத்ர கோடீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.  தொடர்புக்கு: 97912 52419 / 98941 09686.

No comments

Powered by Blogger.