Header Ads

ஸ்ரீ இராமானுஜர் - 6 பகுதி-2

ஸ்ரீ இராமானுஜர் பகுதி-2


உண்மை பக்தனுக்கு சாதியையும் இல்லை மதமும் இல்லை

ஒரு சமயம் இராமானுஜரின் குருவான பெரிய நம்பிகள் பிராமணர் அல்லாத ஒருவருக்கு ஈமக் கடன்களைச் செய்தார். அதனால் அவ்வூரில் இருந்த பிராமணர்களும் அவரது உறவினர்களும் அவரை வெறுத்து ஒதுக்கினர். இதைக் கேட்ட இராமானுஜர் அவர் இல்லம் சென்றார். அங்கு பெரிய நம்பிகளின் மகள் அத்துழாய் தன் மாமனார் வீட்டில் இருந்து வந்து அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். இராமானுஜரின் வருத்தத்தைக் கண்ட பெரிய நம்பி சாத்திரத்தில் கூறியபடி பிராமணன் ஒருவன், பிராமணன் அல்லாதவனுக்கு ஈமக் கடன்கள் செய்வது என்பது பொருத்தமற்ற செயல் தான். அதனை அற நூல்கள் ஏற்றுக் கொள்ளாது. ஆனால் அறம் என்பது என்ன என்று தெரியுமா? சான்றோர்கள் உலகியலில் எவ்வாறு நடை முறைக்கு ஏற்ப ஒழுகினார்களோ அதுவேதான் அறம் எனப்படும். பறவை குலத்தில் பிறந்த ஜடாயுவுக்கு இராமன் இறுதிச் சடங்கினைச் செய்தான். ஷத்ரிய குலத்தில் பிறந்த தருமர் நான்காம் வருணத்தில் பிறந்த விதுரரைப் போற்றி வழிபட்டார். உண்மை பக்தனுக்கு சாதி ஏது? மதம் ஏது? என்னால் தீயில் இடப்பட்டவன் என்னை விட பக்தியில் பல மடங்கு சிறந்தவன். அவனுக்கு இறுதிக் கடன் செய்து, நான் பெரிய பேற்றினை பெற்றுள்ளேன்என்றார். பெரிய நம்பிகளின் பதிலைக் கேட்டு இராமானுஜர் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்றார். அவர் அருளிய ஞான உரையில் மகிழ்ந்து அவரை விழுந்து விழுந்து வணங்கினார். ஒரு நாள் இவரின் இன்னொரு குருவான திருக்கோட்டியூர் நம்பி வெகு நேரம் கதவை மூடிக் கொண்டு அறைக்குள் இருந்தபடி ஜபித்துக் கொண்டிருந்தார். அவர் வெளியே வந்ததும் இராமானுஜர் அவரிடம், “நீங்கள் ஜெபிக்கும் மந்திரம் என்ன? யாரை தியானிக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர் நான் என் குருவான ஆளவந்தாரின் திருப் பாதங்களையே நினைத்துத் தியானிக்கிறேன். அவரது திருப் பெயரே நான் ஓதும் மந்திரம்என்று கூறினார். அது முதல் இவரும் தன் குருநாதரான பெரிய நம்பிகளையே தெய்வமாக வழிபடலானார். அப்படிப்பட்ட இராமானுஜர் எப்படி எங்கே அவதரித்தார் என்று இனி பார்ப்போம்.

அவதாரம்

ஆசூரி கேசவ சோமயாஜுலு என்பவருக்கும் காந்திமதி அம்மையாருக்கும் திருவல்லிக்கேணியில் புத்திரக் காமேஷ்டி யாகம் செய்து பின் இறை அருளால் பிறந்தவர் இராமானுஜர். இந்த யாகத்தைச் செய்யச் சொன்னவர் திருக்கச்சி நம்பிகள் என்னும் ஒருவர். அவர் பூவிருந்தவல்லியில் இருந்து தினம் நடந்தே காஞ்சி சென்று காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு சேவை செய்து விட்டு வருவார். வழியில் ஸ்ரீ பெரும்புதூரில் சோமயாஜுலு வீட்டில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு செல்வார். பிள்ளை இல்லாக் குறையை சோமயாஜுலு இவரிடம் ஒரு முறை வெளிப்படுத்தினார். திருக்கச்சி நம்பிகள் மிகவும் எளியவர். பண்டிதர் அல்லர். அவர் வரதராஜப் பெருமாளுக்கு விசிறி வீசி கைங்கர்யம் செய்து வந்தார். ஆனால் வரதன் அவரிடம் நேரில் பேசும் அருளைப் பெற்றவர். சோமயாஜூலுவின் குறையை பகவானிடம் இவர் கூறினார். அதற்குப் பெருமாள் அவரை அல்லிக்கேணி போய் புத்திரக் காமேஷ்டி யாகம் செய்யச் சொன்னார். தானே ஆதிசேஷன் அம்சமாகப் பிறப்பேன் என்றும் அருளினார். அவ்வாறே சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் திருவவதாரம் நிகழ்ந்தது. கி.பி.4.4.1017 உலகில் வாழும் மக்களை உய்விக்க ஸ்ரீ இராமானுஜர் அவதரித்தார். அவர் வாழ்ந்தது 1017–1137 BC என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றனர். அவர் பூமியில் வாழ்ந்த காலம் சுமார் 120 ஆண்டுகள். காந்திமதி அம்மையாரின் சகோதரர் திருமலையில் வாழ்ந்து, திருவேங்கடவனுக்குத் தொண்டு புரிந்து வந்தார். அவர் பெயர் பெரிய திருமலை நம்பி. அக்காலத்தில் திருவரங்கத்தில் சிறப்புற்று விளங்கிய வைணவப் பெரியார் ஆளவந்தாரின் அருமைச் சீடர் இந்தப் பெரிய திருமலை நம்பி. (ஆளவந்தாரின் இன்னொரு பெயர் யாமுனாச்சாரியார் ஆகும். நாதமுனிகள் என்னும் பெரும் வைணவப் பண்டிதரின் பேரன் ஆவார் இவர்.) திருமலை நம்பி தான் குழந்தைக்கு ஆதிசேஷன்/இளையாழ்வார் என்னும் பொருளில் ஸ்ரீ இராமானுஜர் என்று பெயர் வைத்தார். அவருடைய இன்னொரு சகோதரிக்கும் சிறிது காலம் கழித்து ஒரு மகன் பிறந்தான், அவனுக்கு கோவிந்தன் என்று அவரே திருநாமம் சூட்டினார். இராமானுஜர் அனைத்துக் கல்விக் கேள்விகளிலும் சிறந்து விளங்கினார். வடமொழி, தென்மொழி பாடல்கள் எதுவாயினும் ஒரு முறை கேட்டாலே அவருக்கு மனத்தில் பதிந்துவிடும். சான்றோர்களிடம் பழகுவதையே மிகவும் விரும்பினார். வயது ஏற ஏற ஞானமும் பெருகியது. அந்தந்த வயதில் நடக்க வேண்டியவை அவருக்கு நடந்தன. பூணூல் கல்யாணம், விவாகம் ஆகியவை நிகழ்ந்தன. அதன் பின் இராமானுஜரின் தந்தை நோய்வாய்ப்பட்டு இறைவனடி சேர, அவர் குடும்பத்துடன் காஞ்சிக்குக் குடிப் புகுந்தார்.

யாதவ பிரகாசர்


அங்கு அவர் யாதவ பிரகாசர் என்பவரிடம் வேதம் கற்க ஆரம்பித்தார். அவர் மிகவும் சிறந்த படிப்பாளி. திருப்புட்குழியில் வாழ்ந்து வந்தார். ராமானுஜர் காஞ்சியில் இருந்து பக்கத்து ஊரானத் திருப்புட்குழிக்குச் சென்று பாடம் பயின்று வந்தார். தன் அண்ணன், யாதவ பிரகாசரிடம் பாடம் பயில்வதைக் கேள்விப்பட்டு அவர் சித்தி மகனான கோவிந்தனும் அங்கேயே பயில வந்தார். யாதவர் அத்வைத சித்தாந்தத்தை போதித்து வந்தார். ஆனால் அவர் கூறும் கருத்துகள் விபரீதமாக இருந்தன. பொருந்தாதப் பொருளைக் கூறும் போதெல்லாம் இராமானுஜர் அதைத் திருத்திக் கூறுவார். பல முறை திருத்த முயன்ற இராமானுஜர் மேல் கோபம் கொண்ட அவர், ஒரு சூழ்ச்சி செய்தார். காசிக்கு அவர் சீடர்களுடன் யாத்திரைக் கிளம்பினார். காசியில் கங்கையில் குளிக்கும்போது இராமானுஜரை தண்ணியில் மூழ்கடித்து விடுவதே அவர் திட்டம். அது தெரியாமல் இராமானுஜரும் கோவிந்தரும் மற்ற பிள்ளைகளுடன் கிளம்பினர். விந்தய மலையை சமீபிக்கும் பொழுது கோவிந்தருக்கு இந்த சூழ்ச்சித் தெரிய வந்தது. உடனே தன் தமையனிடம் வந்து விஷயத்தைச் சொல்லி தப்பித்துப் போகும்படிக் கூறிவிட்டு அவர் அந்தக் குழுவில் போய் கலந்து விட்டார். யாதவர் இராமானுஜரைக் காணாமல் அங்கும் இங்கும் ஆளை அனுப்பித் தேடினார். எங்கே அவர் திட்டமிட்டது நடக்காமல் போய்விடுமோ என்று அவருக்கு ரொம்பக் கவலையாகி விட்டது. எங்கு தேடியும் கிடைக்காததால் வன விலங்கு ஏதாவது அவரை சாகடித்து இருக்கும் என்று நினைத்துப் பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்தார் யாதவர். திக்குத் தெரியாத காட்டில் கண் போன போக்கில் இராமானுஜர் நடந்து, களைத்து, மாலை இருட்டத் துவங்கிய நேரத்தில் மிகவும் கவலைக் கொள்ள ஆரம்பித்தார். அப்பொழுது ஒரு வேடனும் வேடுவத்தியும் அவர் முன் தோன்றி ஏதாவது உதவி தேவையா என்று கேட்டனர். அவர்கள் காஞ்சிக்குப் போவதாகச் சொல்லவும் நிம்மதி அடைந்த இராமானுஜர் அவர்களுடன் நடக்கத் தொடங்கினார். இரவு முழுதும் பயணித்தனர். நடுவில் ஒரு முறை வேடனின் மனைவி தாகத்துக்குத் தண்ணீர் கேட்டார். அனால் வேடனோ உடனே நீர் தேடிப் போகாமல் காலையில் இனிய நீர் கிடைக்கும் பொறுத்துக் கொள் என்றார். விடிகாலையில் கிணறு ஒன்றைக் கண்டனர். அங்கிருந்து நீர் இறைத்து வேடுவன் மனைவிக்குக் கொடுத்தார் இராமானுஜர். நீர் அருந்திய பின் நொடி நேரத்தில் வந்த இருவரும் மறைந்து விட்டனர். சுற்றுமுற்றும் பார்த்ததில் ஓர் இரவு பயணத்திலேயே காஞ்சி வந்தடைந்தது அவருக்குத் தெரிந்தது. உதவ வந்தவர்கள் பெருமாளும் தாயாரும் தான் என்று அவருக்குப் புரிந்தது. அந்த சாலைக் கிணற்றில் இருந்து தினம் அவர் வரதராஜப் பெருமாளின் திருமஞ்சனத்துக்குத் தண்ணீர் இறைத்து எடுத்து செல்வதையே தன் சேவையாக அன்றிலிருந்து கொண்டார். சில காலத்திற்குள் காசிக்கு யாத்திரை சென்ற யாதவ பிரகாசர் திரும்பக் காஞ்சி வந்தடைந்தார். அங்கு இராமானுஜர் உயிரோடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். ஆனால் அவரைத் திரும்ப தன் குழாமில் சேர்த்துக் கொண்டார். வைணவ உலகின் பிரதான குருவாக இருந்த ஆளவந்தார் திருவரங்கத்தில் இருந்து அச்சமயம் காஞ்சி வந்திருந்தார். அவரின் சீடரான திருக்கச்சி நம்பிகளுடன் வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்று திரும்பி வரும்போது அவர் இராமானுஜரை எதிரில் கண்டார். அவரின் திருமேனி அழகையும் ஞான ஒளி வீசும் கண்களையும் கண்டு வைணவ தர்மத்தை நிலை நிறுத்தத் தகுந்த முதல்வர் இவரே என்று அருளாசி வழங்கினார். ஆனால் அத்வைத வேதாந்தியான யாதவ பிராகசருடன் அவர் இருப்பதைக் கண்டு அவரிடம் பேச அது தகுந்த சமயம் இல்லை என்று நினைத்து திருவரங்கம் திரும்பினார். அதே நாட்களில் காஞ்சியை ஆண்ட மன்னனின் மகளை பேய் (மன நோய்) ஒன்று பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. எந்த மந்திர தந்திரத்துக்கும் அது பணியவில்லை. அரசனோ மிகுந்த மன வேதனையுடன் யாரை அழைத்து அந்தப் பேயை ஓட்டுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான். பிறர் சொல்லக் கேட்டு யாதவரை அரண்மனைக்கு அழைத்தான். ஆனால் யாதவரின் பேச்சுக்கு அடிபணியாத பேய் இராமானுஜர் சொல் பேச்சுக் கேட்டு ஓடிவிட்டது. அரசனுக்கும் அவர் மகளுக்கும் அளவில்லா மகிழ்ச்சி ஆனால் யாதவருக்கோ அதுப் பெருத்த அவமானம் ஆகிவிட்டது.

No comments

Powered by Blogger.