Header Ads

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 16 தத்தோத்பவாவும் தத்தாத்திரேயரும்

தத்தோத்பவாவும் தத்தாத்திரேயரும்

Sri Datta
தத்தோத்பவா தனது இளமைக் காலத்தில் இருந்தே தத்தாத்திரேயரின் பக்தராக இருந்தவர். அவருடைய ஆசிகளைப் பெற்றே சன்யாசவாசத்தை மேற்கொண்டவர். அவருக்கு பன்னிரண்டு வயதானபோது அவருடைய தந்தை ஒரு மன்னனிடம் கடன்பட்டு விட்டார். அதை திருப்பித் தர இயலாமல் போனபோது அந்த மன்னன் தத்தோத்பவாவை பயணக் கைதியாக வைத்துக் கொண்டு பணத்தை திருப்பித் தந்துவிட்டு அவனை அழைத்துப் போகுமாறு கூறி விட்டான். தத்தோத்பவாவின் குடும்பத்தினர் தத்தாத்திரேயரின் பக்தர்கள். தன்னுடைய மகன் அந்த மன்னனிடம் எப்படி எல்லாம் சித்திரவதைப் படுகிறானோ என எண்ணிய அவர் தந்தை தத்தரின் படத்தின் முன்னால் நின்று கதறி அழுதார். அதைக் கண்டப் பின்னும் தத்தர் சும்மா இருப்பாரா? தானே தத்தோத்பவாவின் தந்தையின் நண்பர் போல மன்னனிடம் சென்று அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தந்து விட்டு தத்தோத்பவாவை வீட்டிற்கு அழைத்து சென்று அவர் தந்தையிடம் மன்னன் அவனை அனுப்பி விட்டதாகக் கூறி அங்கு விட்டு விட்டுச் சென்றுவிட்டார். அதன் பின்னரே நடந்த உண்மையை அறிந்து கொண்ட அவர் தந்தை தத்தரின் கருணையை எண்ணி மனம் உருகினார்.

அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தத்தோத்பவா தத்தாத்திரேயரிடம் இன்னும் அதிக ஈடுபாடு கொண்டார். அவர் மனம் எப்போதும் தத்தரை நினைத்தபடியே இருந்தது. வயது பன்னிரண்டு ஆயிற்று. தத்தரைக் காண வேண்டும் என மனம் துடிதுடிக்க மலைப் பகுதிகளில் சென்று தத்தரை தேடித் திரியலானார். உணவு, உடை என அனைத்தையும் துறந்தார். தியானத்தில் அமர்ந்துகொண்டு தத்தரை வேண்டினார். மண் மீதும் முள் மீதும் வெறும் தரை மீதும் படுத்து உறங்கினார். காலம் உருண்டது. சுமார் இருபது ஆண்டுகள் இப்படியாக தத்தாத்திரேயரை காண வேண்டும் என திரிந்து கொண்டு இருந்தவரின் பக்தியைக் கண்ட தத்தாத்திரேயர் மகிழ்ச்சி அடைந்து ஒருநாள் திடீர் என அவர் முன் வந்து நின்று அவரைக் கட்டி அணைத்தார். அப்படி அவரைக் கட்டி அனைத்ததின் மூலம் அவரை தெய்வப் பிறவியாக மாற்றினார். அதன் பின் காட்டை விட்டு வெளியேறியபோதுதான் தத்தோத்பவாவை ஏகநாத் சந்தித்தார். இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொண்டு இருந்தார்கள். ஒரு முறை ஏகநாத் இருந்த இடத்தில் கிருஷ்ண ஜெயந்தி நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக தத்தோத்பவாவும் சென்று இருந்தார். அங்கு வாயிலில் காவல்காரன் உருவில் தத்தர் நின்று கொண்டு இருந்ததைக் கண்ட தத்தோத்பவா அவர் அருகில் ஓடிச் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கி அங்கு ஏன் காவல்காரன் உருவில் நின்று கொண்டு இருக்கின்றீர்கள் என தத்தரிடம் சென்று கேட்டபோது தத்தர் கூறினாராம் தான் காவல் காத்து நிற்பது ஏகநாத் என்ற தனி மனிதருக்கு அல்ல எனவும் ஏகநாத் பாண்டுரங்கனே என்பதினால் தான் பாண்டுரங்கனுக்காகவே காவலில் நிற்பதாகக் கூற அதைக் கேட்ட தத்தோத்பவாவும் மெய் சிலிர்த்து நின்றார்.

Our Sincere Thanks to 
Santhipriya

https://santhipriyaspages.blogspot.in/ 

No comments

Powered by Blogger.