குரு ஸ்ரீ ராகவேந்திர் - ஓர் அறிமுகம்
குரு ஸ்ரீ ராகவேந்திர்
SRI RAGHAVENDRAR |
மகான்களின் திவ்ய சரித்திரங்களைப் படித்தாலே மறுமைக்கு
வழிகாட்ட வல்லது. அதைப் படித்தும், சகஸ்ரநாமாவளியால்
சுவாமிகளை அர்ச்சித்தும் ஸ்தோத்திரங்களைப் படித்தும் எல்லோரும் இஷ்டசித்திகளைப்
பெறவேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறோம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
ஸ்ரீ ராகவேந்த்ர திவ்ய சரித்திரம்
|| ஸ்ரீ ||
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய ஜ்ஞாநரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே ||
ஆழ்கடலில் சஞ்சரிக்கும் முத்துச் சிப்பிகள் அனைத்திலும்
முத்துக்கள் தோன்றுவதில்லை. அவைகள் மேலே மிதக்கும் போது கார்மேகத்தின்
மழைத்துளிகள் அச்சிப்பிகளின் உள்ளே புகுந்ததால் அத்துளிகளே முத்துக்கள் ஆகின்றன.
அம்மழைத்துளிகளிலும் சுவாதி நட்சத்திரத்தில் சிப்பியின் உட்புகும் துளிகளே
நன்முத்துக்கள் ஆகின்றன, இது
இயற்கையின் அற்புத செயல்.
அதுபோலவே பரந்த காலத்தில் ஏதோ ஒரு கால விஷேசத்தில் மகான்கள்
இப்பூவுலகின் கண் தோன்றுகின்றனர். அம்மகான்களில் பலர் இவ்வுலக நிலையில்லாமையை
மக்களுக்கு உபதேசித்து அவர்கள் பிறவா நிலையடைவதற்காக உதவுகின்றனர்.
ஆனால் நிலையில்லா இவ்வுலக வாழ்கையிலும் மக்களின் அன்றாட
இன்னல்களுக்கு அருமருந்தளித்து, இம்மையையும்
பயனுடையதாகச் செய்து, மறுமைக்கும்
வழிகாட்டத் தோன்றிய மகாபுருஷர்கள் மிக மிகச் சிலரே. இத்தகைய சில மகான்களில், இன்று மந்த்ராலயத்தில் ப்ருந்தாவன வாசியாய், தம்மை வணங்கும் மக்களுக்கு இகபர சுகங்களை அளித்து வருபவர்
ஸ்ரீ ராகவேந்த்ர சுவாமிகள். ஸ்ரீமந் மத்வமதத்தைச் சார்ந்த மக்களுக்கு மட்டுமின்றி
எல்லோர்க்கும் இம்மகான் பிருந்தாவன ரூபத்தில் எழுந்தருளியுள்ள மந்த்ராலயம் ஒரு
யாத்ராஸ்தலமாக இன்று விளங்குகிறதென்றால் மிகையாகாது.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (1595-1671), 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார். இவர் வைணவ
நெறியையும் மத்வர் நிலைநாட்டிய துவைத மதத்தையும் போதித்தவர் ஆவார். இவர் விஷ்ணு
பக்தரான பிரஹலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் தனது ஆயுள் காலத்தில் பற்பல
அற்புதங்களை நிகழ்த்தியதாகவும், இன்றும் தனது
பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்து கொண்டிருக்கின்றார் என்றும் அவரைப்
பின்பற்றுவோர் நம்புகின்றனர். ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மந்திராலயம் என்ற
இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இவர் உயிருடன் சமாதி (ஜீவ சமாதி) நிலையை
அடைந்தார்.
குரு ராகவேந்திரர் முன் அவதாரம்
சங்கு கர்ணன் என்ற தேவன் ஒரு
சாபத்தின் காரணமாக பூவுலகில் அரக்கர் வேந்தன் இரண்ய கசிபுவின் மகன் பிரகலாதனாய்
பிறந்தார். மஹா விஷ்ணுவின் மேல் இருந்த தீவிர பக்தியினால் பிரகலாதன் அரக்கன் இரண்ய
கசிபுவை வதம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்தார். தனது அடுத்த பிறவியில் பாஹ்லிகனாக
பிறந்தார். பாஹ்லிகர் மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டாலும் ஒரு
நல்ல ஹரி பக்தராக விளங்கினார். இவர் போரில் பீமனின் கையில் உயிர் துறந்தார் . தன்
அடுத்த பிறவியில் வியாசராயராய் பிறந்து மத்வரின் தத்துவத்தை வழிபட்டார்.
அப்பிறவியில் தாம் செய்த தொண்டினால் திருப்தி அடையாமல் மீண்டும் குருராகவேந்திரராக
அவதரித்தார்.
No comments