Header Ads

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சிறப்புகள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சிறப்புகள்

கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில்  அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.

ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி  ரங்கநாதருக்கு ஜேஷ் டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய  தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று பவனி வருபவர்) அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப் படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். இந்த  அபிஷேகத்தை காவிரியே செய்வதாக ஐதீகம்.

ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் "ஆடிப் பெருக்கு' உற்சவம் கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும். இவ்வாண்டு ஆடி 28ல் ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள்.

சித்திரை, தை, பங்குனி ஆகிய மாதங்களில் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது.சத்தியலோகத்தில் ரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது. இதை, "ஆதி பிரம்மோற்ஸவம்என்கின்றனர். இவ்விழாவின் இடையே வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமிரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். ரங்கநாதருக்கு, அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா, தை மாதம் நடக்கிறது. பூமாதேவியின் பதி ராமர் நடத்திய விழா என்பதால் இவ்விழா, "பூபதி திருநாள்' என்றே அழைக்கப் படுகிறது. இதை ராமனே நடத்துவதாக ஐதீகம்.

அமுத கலச கருடாழ்வார் : கோயில் பிரகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. அசுரர்களிடம் இருந்து  வேதங்களை மீட்ட பெருமாள், அதனை கருடாழ் வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இவர் கையில், வேதங்களை வைத்திருக்கிறார். இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது. கருடாழ்வாருக்கு பருப்பு, வெல்லம், கொழுக்கட்டை படைத்து, மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கருட பஞ்சமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.


அன்னப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர்இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர  கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள்.  பிரம்மோற்ஸவத்தின்போது பெருமாள், இவளது  சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார். அன்னத்திற்கு அதிபதியான அன்னப்பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும் நம்பிக்கை. பெருமாளே அன்னப் பெருமாளாக அருள்பாலிப்பது சிறப்பு.

ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30  மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.

மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர். தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும்  சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர். சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால்  (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது.

ஒரே சன்னதியில் மூன்று தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள்  இயகப்படுகின்றன.

இந்தக் கோயில் எப்பொழுது தோன்றியது என்று எவராலும் சொல்ல முடியவில்லை. சோழர்கள், பாண்டியர்கள், நாயக்க மன்னர்கள், சரபோஜிகள் என்று பலபேர் திருப்பணி செய்த அற்புதமான இடம் இந்த ஸ்ரீரங்கம்.

இந்த கோயிலில் மஹாவிஷ்ணு ரங்கநாதர் என்று பெயர்தரித்து பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கிறார். அவர் மட்டுமே தனியாக சாய்ந்தபடி படுத்து ஆதிசேஷன் மீது உறங்கி கொண்டிருக்கிறார்.

அது என்ன பாம்பின் மீது படுக்கை? ஏன் கடவுள் பாம்பின் மீது படுக்க வேண்டும்?

சேஷம் என்றால் எஞ்சியது என்று பொருள். எல்லாவற்றையும் ஒதுக்கி கடைசியில் என்ன மிஞ்சுகிறது என்று பார்த்தால் அந்த இடத்திலே இருப்பவர்தான் இறைவன் என்பதே இதன் பொருள்.

 நீங்கள் உங்கள் குணம், உங்கள் தொழில், உங்கள் பெயர், உங்கள் குடும்பம், உங்கள் உடம்பு என்பதெல்லம் தள்ளி தான் யார் என்று மனதுக்குள் தேடி, இனி தேட ஒன்றுமில்லை. தேட எதுவுமில்லை என்று சுருண்டு கிடக்கிற மனோபாவம் வந்து, அந்த சுருண்டு கிடக்கிற சக்தியிலே மனம் லயிக்கும்போது அந்த சுருண்டு கிடக்கும் சக்தியின் நடுவே இருக்கின்ற ஒரு சக்தியின் பெயர்தான் இறைவன். இதைக் குறிப்பால் உணர்த்தும்படியாக உவமையாய் சொல்லும்படியாக இந்த திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொன்வேய்ந்த அழகிய விமானத்தின் கீழ் காயத்ரி மண்டபத்துக்கு முன்பு கருவறையில் நெய் தீபங்களுக்கு நடுவே அரங்கன் பள்ளி கொண்டிருக்கிறான். அங்கே இறைவன் உறங்குவது போல காட்சி தருகிறான்.

ஆனால் அது தூக்கமல்ல. அது ஒரு யோக நிலை. அரங்கன் அமைதியாக இருக்கிறான். உங்கள் எல்லோரையும் ஆழ்ந்து கவனித்துக் கொண்டு இருக்கிறான். என்ன நடக்கிறது என்று புன்னகை தவழும் முகத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ஸ்ரீரங்கம் சாதாரண மடமல்ல. அது கோவிலும், கோவில் சார்ந்த பகுதிகளும் கொண்ட கட்டுமஸ்தான மிகப்பெரிய ஒரு நகரம். கோட்டை சுவர்களுக்கு நடுவேயும், உள்ளேயும் சித்திர வீதி, உத்தர வீதி என்று சதுரம் சதுரமாக நகரம் அமைந்திருக்க, இந்த நகருக்கு நடுவே கோயில் இருக்கிறது. சுற்றிலும் வீதிகள், நகரம், நடுவே கோயில் என்று ஸ்ரீரங்கம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.

கோயிலுக்குள் நுழைய, மண்டபத்தின் இடப்பக்கம் அழகிய கிருஷ்ணர் கோயில் இருக்கிறது. இது சமீபத்தியது. ஆனால் அதிலுள்ள சிற்பங்கள் மிக மிக அற்புதமானவை. அந்த கிருஷ்ணர் கோயிலுக்கு அருகே ஒரு மாடிப்படி இருக்கிறது. அந்த மாடிப்படியில் ஏறிப் போனால் நீங்கள் ஒரு சமதளத்திற்கு வருவீர்கள். அந்த சமதளத்திலிருந்து பார்த்தால், நாலுபக்க கோபுரங்களும், மிகப்பெரிய கோயிலின் மேற்பரப்பும், பொன்வேய்ந்த விமானமும் சூரியவெளிச்சத்தில் தகதகத்து காட்சிதரும்.

மாடியிலிருந்து கீழே இறங்கினால் இடதுபக்கம் சக்கரத்தாழ்வார் சந்நிதி. வலது பக்கம் ராமானுஜருடைய சந்நிதி. சக்கரத்தாழ்வார் இறைவனின் ஆயுதம். தீய சக்திகள் இங்கு உள்ளே நுழைய முடியாது. சக்கரத்தாழ்வாரை வணங்கி நிற்க, நமக்கு தீவினை செய்தவர்கள் அழிந்து போவார்கள். ஏவல், பில்லி சூனியங்கள் விலகிப்போய்விடும் என்று இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.

வலதுபக்கம் உள்ள ராமானுஜர் சந்நிதி மிக அற்புதமானது. இங்கே ஒரு சுதை உருவம் நகங்களோடும், கண் புருவங்களோடும், இமைகளோடும், நாசித்துவாரங்களோடும், வடிந்த உதடுகளோடும் அமர்ந்திருக்கிறது. ராமானுஜர் உள்ளே உலோகச் சிலையாய் தன் உடம்பை மாற்றிக்; கொண்டு அமர்ந்துவிட அதன் மீது குங்குமப்பூவால் சாந்து எழுப்பி அவரை பந்தனம் செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும், அதை இல்லையென்று மறுக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

சிலை எப்படி இருப்பினும் ஸ்ரீராமானுஜர் மிகப்பெரிய மரியதைக்குரியவர். இந்து மதத்தின் புரட்சிக்காரர். ஈரமான மனம் உடையவர். இந்துக்களில் எல்லா ஜாதியினரும் வைணவரே என்று ஜாதி, மதபேதமற்று. தான் அறிந்த ஙநமோ நாராயணாங என்ற மந்திரத்தை கோபுரத்தில் ஏறி சகலருக்கும் சொன்ன வள்ளல். ஸ்ரீரங்கம் கோயில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று எழுதிவைத்த அற்புதமான ஒரு மகான்.

இவருடைய சரித்திரம் மிக சுவாரஸ்யமானது. இவருடைய சீடர்களின் சரித்திரம் மிக அற்புதமானது. குருபக்திக்கு ஸ்ரீராமானுஜருடைய சீடர்களின் சரித்திரம் நல்ல உதாரணம்.

இந்த இரண்டு சந்நிதிகளையும் தரிசித்து உள்ளே போனால் அற்புதமான கருடமண்டபம் இருக்கிறது. மிக உயரமான கருடர் சிலை இருக்கிறது. அந்த சிலை சுதையால் ஆனது. பெரிய விழிகளும், கூர்மையான மூக்கும், கூப்பிய கைகளும், படபடக்கும் இறக்கையும் கொண்டது. இந்தச் சிலையை உற்றுப் பார்க்க லேசாய் ஒரு பயம் வருவது இயல்பு. இந்த இடத்தில் தத்தை முனி என்பவர் சமாதி கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுவதும் உண்டு. அந்த மண்டபம் முழுவதும் அரசர்களின் சிலைகளும், சேனாதிபதிகளின் சிலைகளும் நிறைந்திருக்கும். அங்கிருக்கும் அரசர்களுடைய உருவங்களையும், உடைகளையும், தொப்பிகளையும் வியப்போடு பார்த்தவண்ணம் நீங்கள் இன்னும் உள்ளே நுழையலாம்.

உள்ளே நுழைய வலது பக்கம் பத்து படிக்கட்டுகளுக்கு மேல் ஒரு சிறிய ஆஞ்சநேயர் சிலை அமர்ந்து கைகூப்பிய நிலையில் இருக்கிறது. அந்த ஆஞ்சநேயர் மிகப்பெரிய வரம். எது கேட்டாலும் தருகின்ற சக்தி உடையவர். படிகள் ஏறி அந்த ஆஞ்சநேயரை வலம் வந்து, நமஸ்கரித்து, உங்களுடைய வேண்டுதல்களை அவரிடம் நீங்கள் தெரிவித்துவிட்டு வரலாம்.

கொடிமரம் தாண்டி இடது பக்கம் திரும்பினால் அங்கே கருப்புசாமி சிலை இருக்கும். கருப்புசாமி சிலை மரத்தாலானது. நான்கு மனைவியரோடு பீச்சாங்குழல் கையில் தாங்கி, அவர்களோடு நீர் அடித்து விளையாடுகின்ற இந்தச் சிலை சற்று பின்னப்பட்டிருந்தாலும் அந்த இடத்தின் அதிர்வுகள் மிக அற்புதமானது. அங்கே ஒரு கணம் நின்று கருப்புசாமியை தரிசித்துவிட்டு திரும்ப கோவிலுக்குள் புகுந்து, மண்டபத்தைச் சுற்றிக்கொண்டு வரிசைவழியே நகர்ந்து ரங்கநாதரை தரிசிக்க உள்ளே போனால் காயத்ரி மண்டபம்.

காயத்ரி மண்டபம் தாண்டி ரங்கநாதர் இருக்கின்ற அழகிய கருவறை. ரங்கநாதர் பாதம் முதல் உச்சந்தலை வரை அமைதியாய் தரிசித்துவிட்டு ரங்கா, ரங்கா, ரங்கா, என்று இடையறாது சொல்லி விட்டு பிரகாரத்தை வலம் வந்து கிளி மண்டபத்தில் சற்று நேரம் உட்கார்ந்துவிட்டு, அந்த கிளிமண்டபத்திலிருந்து தெரிகின்ற விமான ரங்கநாதரையும் பார்த்துவிட்டு வெளியே வந்து வெளிச்சுற்று பிரகாரம் வழியாக தாயார் சந்நிதிக்கு நடந்துபோக வேண்டும்.

தாயார் சந்நிதிக்கு நடந்து போகிற வழியில்தான் மிகப்பெரிய யுத்தங்கள் நடந்திருக்கின்றன. அந்நியர்கள் உள்ளே புகுந்து, எவர் எதிர்பட்டாலும் வெட்டிக் கொன்று ரத்தக்களரியான இடம் அது. அந்த இடத்தைத் தாண்டி போகும்போது வழியில் தன்வந்திரியின் சந்நிதி இருக்கிறது.

தன்வந்திரி இந்துமதத்தின் வைத்தியசாஸ்திர நிபுணர். தேவ வைத்தியர். அவரை நமஸ்கரிக்கும்போது உங்கள் உடற்குறை அறவே தீருகிறது. அவரை நமஸ்கரித்து உங்கள் உடல்பிணியை அவருக்கு எதிரே சொல்லி நோய் தீர்க்க வேண்டிக் கொள்ளலாம் அந்த தன்வந்திரியின் வலதுகையில் ஒரு அட்டைப்பூச்சியின் உருவம் இருக்கும். அந்தக் காலத்தில் ரத்தத்தைச் சுத்தம் செய்ய அட்டையை உடம்பில்விட்டு கடிக்கச்செய்து ரத்தத்தை வெளியேற்றுவார்கள். அப்படி கெட்ட ரத்தம் வெளியேற்றுகிறபோது உள்ளே புது இரத்தம் ஊறி உங்கள் உடம்பு சௌக்கியமாவது நிதர்சனம். ஆகவேதான் தன்வந்திரி கையில் மருந்தோடு அட்டையும் வைத்திருக்கிறார்.

தன்வந்திரியின் சந்நிதி தாண்டி உள்ளே போனால் மிக அழகான பெரிய மண்டபம். அங்கே நிறைய பேர் பூ விற்றுக் கொண்டிருப்பார்கள். உள்ளே நுழைந்தால் தாயாரின் சந்நிதி எதிர்ப்படும்.

தாயார் ரங்கநாயகி பொலிவும் அழகும் மிக்கவள். சுடற்தெரிக்கும் ஆபரணங்கள் கொண்டவள். பின்னப்பட்ட பழைய சிலை பின்னால் இருக்க, முன்னே ஒரு சிலை இருக்கும். அதைத் தாண்டி உற்சவருக்குத்தான் கற்பூர ஆரத்தி காண்பிப்பார்கள். உற்சவரை வணங்கி செல்வம் நிறைய வேண்டுமென்று வணங்கிக் கொண்டு வெளியேவந்தால், சிறிய மண்டபம் ஒன்று இருக்கும். உலகத்தினுடைய அற்புதமான காப்பியமான கம்பராமாயணம் அங்குதான் அரங்கேற்றப்பட்டது. கம்ப நாட்டாழ்வார் அங்கு நின்று, தன் பாட்டை உரக்கச் சொல்லி விளக்கியிருப்பார் என்று நினைக்கிற போது அந்த இடத்தை விழுந்து வணங்க உங்களுக்குத் தோன்றும்.

அங்கிருந்து வலமாகச் சுற்றி சந்தன புஷ்கரணி தாண்டிப் போனால் ஈசான்ய மூலையில் ராமருடைய சந்நிதி இருக்கிறது. மிக அழகிய வர்ணங்களால் அந்த சந்நிதியை அலங்கரித்திருக்கிறார்கள். அங்கே எப்பொழுதும் இடையறாது வேதபாராயணம் நடந்து கொண்டிருக்கிறது. சந்நிதியின் உள்ளுக்குள்ளே வரிசையாக பத்து அவதாரங்களையும் சிலைகளாக வைத்திருக்கிறார்கள். எல்லா அவதாரங்களிலும் ஆதிசேஷன் குடைபிடித்துக் கொண்டு இருக்கிறான். மூர்த்திகள் மிக ரம்மியமாக, பார்ப்பதற்கு பரவசத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும்.

இந்த ராமர் சந்நிதி மிக முக்கியமான இடம். கோவிலில் வேறு எங்கு தியானம் செய்ய முடியுமோ, முடியாதோ இந்த இடத்திலே நீங்கள் அமைதியாக உட்கார்ந்து நிச்சயம் தியானம் செய்ய முடியும். அருகில் ஒரு தனி அறையும் இருக்கிறது. நீங்கள் கூடுதலாக ஆழ்ந்து தியானம் செய்ய வேண்டுமென்றால் அந்த அறையைத் திறந்து விடுகிறார்கள். இல்லையெனில் வேத பாராயணம் செய்யும் இடத்தில்கூட நீங்கள் அமர்ந்து தியானம் செய்யலாம். அடிக்கடி வேள்விகள் நடக்கும் இடமென்றபடியால், தினமும் வேத பாராயணம் செய்கின்ற இடமென்றபடியால் அந்த இடத்தில் கூடுதலாக ஆழ்ந்து தியானம் செய்து உங்களால் ஒரு நல்லநிலைக்குப் போகமுடியும்.

ஒரு காலத்தில் கொள்ளிடத்தில் பெருவெள்ளம் வந்து அங்கிருந்த திருக்கோயிலை மூழ்கடித்து விட்டது. வெள்ளம் வடிந்த பின் திருக்கோயில் மணலால் மூடப் பட்டது என்றும் பிறகு வெகுகாலம் கழித்துச் சோழ அரசன் ஒருவன் அந்த இடத்துக்குப் போன போது ஒரு கிளி இந்த இட

்தில் பரம்பொருள் பள்ளி கொண்டிருக்கிறது என்னும் பொருள் படும்படியான சுலோகம் ஒன்றைச் சொல்லியதாகவும் பிறகு திருக்கோயில் கண்டெடுக்கப் பட்டதாகவும் சொல்லப் படுகிறது,.  “இந்த இடத்தில் தத்தை முனி என்பவர் சமாதி கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுவதும் உண்டு.

தத்தை என்பது கிளிக்கு உள்ள மற்றொரு பெயர். கோயிலைக் கண்ட சோழமன்னன் துறவறம் பூண்டு அங்கேயே திருப்பள்ளி கொண்டானோ என்பது தான் அது.

மோட்சம் தரும் தலம் இது என்பதால் இத்தலத்து பெருமாளை வணங்குவது பிறவிப் பயனாகும். திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வி, ஞானம், வியாபார  விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்க, விவசாயம் செழிக்க இத்தலத்து பெருமாளிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

ஸ்ரீர‌ங்க‌த்தை வா‌ழ்‌வி‌ல் ஒரு முறை சு‌ற்‌றி வ‌ந்தா‌ல் போது‌ம், ‌நா‌ம் இ‌ந்துவாக‌ப் ‌பிற‌ந்தத‌ன் அ‌ர்‌த்த‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம். கொ‌ள்‌ளிடமு‌ம், கா‌வி‌ரியு‌ம் இர‌ண்டாக‌ப் ‌பி‌ரி‌ந்த இட‌த்‌தி‌ல் அமை‌ந்த ஒரு ‌சி‌றிய ‌தீ‌‌வினை ஒ‌த்த இடமாக அமை‌ந்து‌ள்ளது இ‌ந்த தல‌ம்.

இ‌ந்த கோ‌யிலு‌க்கு செ‌ல்வதெ‌ன்றா‌ல், அவசர அவசரமாக போ‌ய்‌ப் பா‌ர்‌க்காம‌ல், ஒ‌வ்வொரு இட‌த்தையு‌ம் ர‌சி‌த்து‌ம், அத‌ன் ‌சிற‌ப்பு ப‌ற்‌றி அ‌றி‌ந்து கொ‌ண்டு‌ம் ‌நிதானமாக செ‌ன்றா‌ல், ஒரு தெ‌ய்‌வீக அ‌ம்ச‌ம் பொரு‌ந்‌திய ர‌ங்கநாத‌‌ர் ஆலய‌த்தை வா‌ழ்நா‌ள் முழுவது‌ம் மற‌க்காம‌ல் இரு‌ப்‌பீ‌ர்க‌ள்.

ஸ்ரீரங்கம் கோயிலில் மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை.அதற்கு பதில் கோவில் பணியாளர்களை கொண்டு ஆண்டுக்கு இருமுறை கோவில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம்பூசப்பட்டு(தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகு ஊட்டப்படுகிறது.

இத்தலத்தில் ஆண்டாள், திருப்பாணழ்வார், துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.


மூலவர் பெரிய பெருமாள் ஏழு திருச்சுற்றுகளுக்குள் கருவறையில் தென்திசை நோக்கி பள்ளி கொண்டு உள்ளார். முதல் சுற்று திருவுண்ணாழி திருச்சுற்று, 2வது சுற்று ராஜமகேந்தின் சுற்று, 3வது சுற்று குலசேகரன் திருச்சுற்று, 4வது சுற்று ஆலிநாடான் திருச்சுற்று, 5வது சுற்று அகளங்கன் திருச்சுற்று, 6வது சுற்று திருவிக்ரமன் திருச்சுற்று (உத்திர வீதி), 7வது சுற்று கலியுகராமன் திருச்சுற்று(சித்திரை வீதிகளில் குடியிருப்புகளும்,வணிக வளாகங்களும் கொண்ட பகுதிகளாக விளங்குகிறது). இந்த ஏழு திருச்சுற்றுக்களையும் உள்ளடக்கி 156 ஏக்கர் பரப்பளவில் அடையவளஞ்சான் திருச்சுற்று எனப்படும் 8வது சுற்று மதில்சுவர் அமைந்து உள்ளது.

நான்காவது திருச்சுற்றில் தன்வந்திரி சன்னதிக்கு வடபுர கோபுர வாசலின் பாறையில் 5 குழிகள் உண்டு. இவ்விடத்திற்கு மூன்று வாசல்கள் வழி வரமுடியுமாதலால் இதற்கு ஐந்து குழி மூன்று வாசல் என்பது பெயர். இங்கு தாயார் அரங்கன் வருகிறாராவென்று இந்த ஐந்து குழிகளிலும் தன்கை விரல்களை வைத்து மூன்று வாசல்கள் வழியாகவும் பார்ப்பாராம்.

கோயிலின் கருவறையின் மேலே தங்கத்தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. விமானத்தின் அமைப்பு தாமரையின் இதழ்களில் இருந்து வெளிவரும் நிலையிலுள்ள நான்கு தங்கக்கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் மகரவடிவில் உள்ள பகுதியில் தெற்கில் பரவாசுதேவர், மேற்கில் அச்சுதர், வடக்கில் அனந்தர், கிழக்கில் வேணு கோபாலர் அல்லது கிருஷ்ணகோவிந்தர் ஆகிய திருமாலின் திருஉருவங்கள் அமைக்கப்பெற்றுள்ளன.


ஆண்டுதோறும் துலாமாதத்தில் (ஐப்பசி) பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தப்படுகிறது. துலாமாதம் 30நாட்களும் மூலவருக்கும், உற்சவருக்கும் சாளக்கிராம மாலை அணிவிக்கப்படும்.


No comments

Powered by Blogger.