ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சிறப்புகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சிறப்புகள்
ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமைக்குரியது
ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். உயரம் 236 அடி. 13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது.
1987ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தெற்கு ராய கோபுரமே பிரதான
நுழைவாயில். கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாதிருந்த
தெற்குராயகோபுரம் முன்பு மொட்டை கோபுரமாக இருந்தது. ராயர் கோபுரத்தில்
திருஷ்டிபரிகாரத்திற்காக முனிக்கு அப்பனான ஸ்ரீனிவாசனை எழுந்தருள செய்தனர். நித்ய
வழிபாடுகள் இன்று நடந்து வருகிறது. இந்த ராஜகோபுர வாசலை முனியப்பன் கோட்டை வாசல்
எனவும் அழைக்கின்றனர்.
ஆண்டுக்கு ஒருமுறை தான் பெருமாளும், தாயாரும் பங்குனி உத்திரதினத்தன்று தாயார் சன்னதியில் உள்ள
சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி
அளிக்கின்றனர். 2ம் பிரகாரத்தின் நடுவில் பரமபதவாசல் கோபுரம் உள்ளது.
இக்கோபுர வாயில்கள் ஆண்டு முழுவதும் மூடப்பெற்றே இருக்கின்றன.
வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் இதன் கதவு
திறக்கப்படுகின்றது. ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவை தான். ராமரால் தொழப்பட்ட
ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள். கோயில் பெரிதென்பதால் பெரிய கோயில் ஆயிற்று. 7மதில்களும், எண்ணற்ற
மண்டபங்களும் பெரிது.
கோபுரம் ஆசியாவிலேயே பெரிது.இங்கிருந்த ஜீயரும் பெரிய
ஜீயர். திருமதில்கள் பெரிது. தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர். இங்கு
செய்யப்படும் தளிகைக்கு பெரிய அவசரம், வாத்தியத்திற்கு
பெரிய மேளம்,
பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர்.
ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து
மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ
பெரிய மங்களாசாசனங்கள். 108 திவ்யதேசங்களில் 11 ஆழ்வார்களால் 247 பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள்.
இதனாலேயே இந்த கோயில் பல பெருமைகளை பெருகின்றது.
மூலவரின் விமானம் தங்கக் கோபுரம் ஆகும். மூலவரது விமானத்தை
முதலில் 23 கிலோ தங்கம் கொண்டு தங்க கோபுரமாக மாற்றியமைத்தனர்.
பின்னர் சில முறை தங்கம் கூடுதலாக சேர்க்கப்பட்டதும், மெருகேற்றப்பட்டதும் உண்டு. கோபுரத்தின் பாதுகாப்பிற்காக
கோபுரத்தைச் சுற்றி மின் வேலி அமைக்கப்பட்டு உள்ளது.
ரங்கநாதர், பாற்கடலில்
பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை. ஆனால், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை, அவர் பூஜிப்பதாக ஐதீகம். கோயிலுக்குள் பாவம் தீர்க்கும்
சந்திர தீர்த்தம் உள்ளது. வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி, முத்தங்கி சேவை சாதிக்கிறார். இந்த வைபவம் இங்கு பிரசித்தி
பெற்றது.
திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.
மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே
திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் மற்றும் பெரிய கோயில் என்றும்
அழைக்கப்படும் திருச்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ரங்கநாதர்
ஆலயம் ஒன்றல்ல,
இரண்டல்ல பல்வேறு சிறப்புகளைப் பெற்றத் தலமாகும்.
இந்த கோயில் இந்த ஆண்டுதான், இவரால் கட்டப்பட்டது
என்பது கூட அறியப்படாத அளவிற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது.
அதன் பின் வந்த பல மன்னர்கள் இந்த கோயிலின் புனரமைப்புப் பணிகளில்
ஈடுபட்டுள்ள தகவல்கள் மட்டுமே கிட்டியுள்ளது.
கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றிய மண்டபம் இத்தலத்தில்
உள்ளது. ராமானுஜர் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கோயிலுக்கு வந்து பூஜை முறைகளை ஒழுங்குபடுத்தி
அமைத்து,
இங்கேயே இருந்துள்ளார். கோயில் வளாகத்தில் தான்
அவர் சமாதி அடைந்துள்ளார். அவர் உட்கார்ந்த நிலையில் பெருமாளின் வசந்த
மண்டபத்தில் சமாதி ஆகியுள்ளார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பன், தன் உன்னதப் படைப்பான ‘ராமாவதாரம்’ என்ற
ராமாயணக் காப்பியத்தை அரங்கேற்றம் செய்ய ஸ்ரீரங்கத்தையே தேர்ந்தெடுத்தான்.
ஸ்ரீரங்கம் தாயார் சன்னிதி அருகே கோயில் கொண்ட நரசிம்மர் சன்னிதியில்தான் கம்பன்
தன் காவியத்தை அரங்கேற்றினான்.
கம்பன் தன் காவியத்தின் புதிய படைப்பான ‘இரணியன் வதைப் படல’த்தைப் பாடியபோது, ‘மேட்டு அழகிய சிங்கர்’ என்ற திருநாமம் கொண்ட நரசிம்ம மூர்த்தி, தன் தலையை அசைத்து கம்பன் காவியம் அரங்கேற அங்கீகாரம்
அளித்ததாகச் சொல்லப்படுகிறது.
கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய
அறிஞர்கள்,
ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர்.
கம்பர்,
"அதை நரசிம்மரே சொல்லட்டும்!' எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார். அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன்
தூணிலிருந்து வெளிப்பட்டு, "கம்பரின் கூற்று உண்மை!' என ஆமோதித்து
தலையாட்டினார். மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சன்னதி அருகில் தனிசன்னதியில் இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது, கரம் கிடையாது. சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.

ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில்
இருந்து 48வது நாளில் "ஆடிப் பெருக்கு' உற்சவம் கொண்டாடப் படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில
ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும். ஆடிப்பெருக்கு விழா
ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தரு
ளுகிறார். அங்கு காவிரித்தாய்க்கு
அவர் சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த பொருட்களை
ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள்
சென்று மிதக்க விடுவார்கள்.
சுவாமிக்கு வெண்ணெய் பூசுதல், குங்குமப்பொடி சாத்துதல், சுவாமிக்கு மார்பிலும் பாதங்களிலும் சந்தன குழம்பு
அணிவிக்கலாம். சுவாமிக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுபத்தி, வெண்ணெய், சிறுவிளக்குகள், துளசி தளங்கள், பூக்கள், பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து இறைவனுக்கு
பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு
அன்னதானம் செய்யலாம்.
டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள்.
இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது.
இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த
ராமானுஜர்,
இங்கேயே மோட்சம்அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர்.
சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு
மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு
திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.
No comments