Header Ads

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சிறப்புகள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சிறப்புகள்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’, ‘கோபுர தரிசனம் பாப விமோசனம்என்று சொல்வார் நந்தனார் சரித்திரக்கீர்த்தனை பாடிய கோபாலகிருஷ்ண பாரதியார்.

ஆசியாவிலேயே மிக உயர்ந்த பிரமாண்ட ராஜகோபுரம் கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். 13 நிலைகளையும் 14 மங்கலக் கலசங்களையும் கொண்டு 236 அடி உயரத்தில் காட்சி தருகிறது ஸ்ரீர‌ங்க‌ம்

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது.

இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.


இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா  நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு  நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். ராவணன் சீதையை கடத்தி சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். ராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ரங்கநாதரை அளித்தார் ராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை. அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். ரங்கநாதரும் காவிரிக்கரையிலேயேதங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில். பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை. இத்தலத்து விமானம் பிரணாவாக்ருதி எனப்படுகிறது. வட இந்தியாவிலிருந்து பெருமளவில் பக்தர்கள் வருகை தரும் சிறப்பு வாய்ந்த வைணவ தலம். இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 1 வது திவ்ய தேசம்.மூல மூர்த்தியாகிய ஸ்ரீரங்கநாதப் பெருமாள் 21 அடி நீளத்தில் பள்ளிகொண்ட கோலத்தில் கருவறையில் அருள்பாலிக்கிறார். கருவறைக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் கருவறை மேல் தங்க விமானம் ஜொலிக்கிறது. தங்க விமானத்தின் தெற்குப் பக்கம் பரவாசுதேவரின் தங்க சிலையும் பளபளப்புடனும் நேர்த்தியுடனும் விளங்குகிறது.

பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று வணங்களினால், வறுமை அகன்று செல்வத்திற்கு அதிபதியான சுக்ரனே நேரில் வந்து நமக்கு அருள் கொடுப்பதாக ஐதீகம். இதனால் தான் இந்த ஸ்தலத்தை சுக்ர ஸ்தலம் என பெயர் பெற்றது.


பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது. 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம்.

108 வைணவ திருத்தலங்களில் இரண்டு, இந்நிலவுலகில் இல்லை. ஒன்று பரமபதம். மற்றொன்று திருப்பாற்கடல்.

ஸ்ரீரங்கம் பெருமாள், பிரம்மலோகத்தில் பிரம்மதேவனால் தினமும் பூஜிக்கப்பட்டு வந்த திருவாராதன விக்ரமான பெருமாள். பூலோகத்தில் சூரிய வம்சத்தில் வந்த இட்சுவாகு என்ற மன்னன் பிரம்மன் குறித்து கடும்தவம் இருந்தான். தவத்தை மெச்சிய பிரம்மன், இட்சுவாகு வேண்டுகோள்படி தான் தினமும் பூஜித்த வந்த திருவாராதன விக்ரமான பெருமாளை வழங்கினார்.

இந்த பெருமாள் இட்சுவாகு மன்னன் முதல் ராமபிரான் வரை சூரிய குலமன்னர்கள் வழிபட்டு வந்த குலதெய்வம். திரேதா யுகத்தில் ராமாவதாரம் எடுத்த திருமால், ராவணனை அழித்தபின் அயோத்திக்கு பட்டம் சூட்ட தன்னோடு அழைத்து வந்த விபீஷணனுக்கு விடைகொடுத்து அனுப்பும் போது முன்னோர் பூஜித்த பெருமாள் விக்ரகத்தை விபீஷணனுக்கு அன்பாக கொடுக்கிறார்.

அதை தலையில் சுமந்தவாறு இலங்கை புறப்பட்ட விபீஷணன் களைப்பால் ஸ்ரீரங்கத்தில் தரையில் வைக்கிறார். பின்னர் விக்ரகத்தை எவ்வளவு முயன்றும் அங்கிருந்து எடுக்கமுடியவில்லை. அப்பகுதியை ஆண்ட சோழமன்னன் தர்மவர்மன் பெருமாளையும் தொழுதுவிட்டு விபீஷணருக்கு ஆறுதல் கூறி இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் தர்மவர்மன் பெருமாள் விக்ரகத்தை சுற்றி சிறிய கோயில் எழுப்பி வழிபட்டார். பின்னர், காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோயில் மணலால் மூடி இருந்த இடம் தெரியாமல் போனது.

தர்மவர்மனுக்கு பின் அவரது வழியில் வந்த கிள்ளிவளவன் காடாக இருந்த ஸ்ரீரங்கத்தில் வேட்டையாட வந்தபோது ஒரு மரத்தின் நிழலில் தங்கி இருந்த போது மரத்தில் இருந்த கிளி ஒன்று கோயில் இருந்த இடம் இது தான் என்று தெரிவிக்கிறது. அந்த கிளியின் சேவையை நினைவு கூறும் வகையில் கோயிலில் கிளி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

கிள்ளிவளவன் பெருமாளை தொழுது மதில்சுவரும், கோபுரமும் கட்டினான். கிள்ளிவளவனுக்கு பின் வந்த சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள், ஆழ்வார்கள், ஆச்சார்யார்களின் தொடர்பணியால் தற்போது இருக்கும் நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் உயர்ந்தோங்கி நிற்கிறது. வைணவத்தின் மையத் தலைமைச்செயலகமாக ஸ்ரீரங்கம் திகழ்ந்தது.

ஸ்ரீராமானுஜர் பரப்பிய விசிஷ்டாத்வைதம் நெறிக்கு ஸ்ரீரங்கமே நிலைக்களம். சிலப்பதிகாரம், நாலாயிர திவ்யபிரபந்தத்தில் இக்கோயில் குறித்த வர்ணனைகள் உள்ளன. கோயில் தோன்றிய விதத்துக்கு ஆதாரத்துடன் கூடிய கல்வெட்டு எதுவும் இல்லை. இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது. கோயிலை சுற்றி 21 கோபுரங்கள் உள்ளது.

கோயிலின் நாழிக்கேட்டான் வாயிலில் வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர். உள்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி மகாவிஷ்ணுவுக்கு உரியவனாய் முறையே சங்கு, தாமரை வடிவங்களில் சங்கநிதி, பதுமநிதி உருவங்கள் இருபக்கங்களிலும் உள்ளன. மூலஸ்தானம் மேற்கே உள்ள மேடையில் விஜயரங்கசொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை அளவில் செய்து, வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளது.
 
மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய சமைப்பதற்கு மடப்பள்ளியில் மண்பாத்திரங்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.

மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை. அதற்கு பதில் கோயில் பணியாளரை கொண்டு ஆண்டுக்கு இருமுறை கோயில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம் பூசப்பட்டு (தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகூட்டப்படுகிறது.

இத்தலத்தில் ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.

கோயில் கருவறை மேலே தங்கத்தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. ஆண்டுதோறும் துலா மாதத்தில் (ஐப்பசி) பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைக்கு தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தப்படுகிறது. துலாமாதம் 30 நாட்களும் மூலவருக்கும், உற்சவருக்கும் சாளக்கிராம மாலை அணிவிக்கப்படும். கோயில் தல விருட்சம் புன்னை மரம், மூலவர் ஸ்ரீரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், தாயார் ஸ்ரீரங்கநாச்சியார்.

கோயில் தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார்.


அவரது திருமேனி 5 வது திருச்சுற்று எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சன்னதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.



No comments

Powered by Blogger.