Header Ads

புரட்டாசி மாத விரதங்கள், பூஜை, வழிபாடு

புரட்டாசி மாத விரதங்கள், பூஜை, வழிபாடு

தெய்வ அனுக்கிரகத்துடன், முன்னோர்களின் ஆசியையும் பெற்றுத் தரும் மிக அற்புத மான மாதம் புரட்டாசி. இம்மாதத்தின் பெயரைக் கேட்டதுமே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனுமே நினைவுக்கு வருவர். பெருமாள் மாதம் என்று குறிப்பிடும் அளவுக்கு புண்ணியம் பெற்றுவிட்டது புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை வழிபாடுகள் மட்டுமின்றி, அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள் ஆகிய விரதங்களும் திருமாலுக்கு மிக உகந்தவை.

புரட்டாசி மாதத்தில் வரும் மற்ற விரதங்கள்

1.    அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள்
2.    அம்பாளுக்கு உகந்த - சரத் ருதுவில் வரும் சாரதா நவராத்திரி
3.    மஹாலட்சுமி விரதம்
4.    லலிதா சஷ்டி விரதம்
5.    உமாமகேஸ்வர விரதம்
6.    கேதார கெளரி விரதம்
7.    அமுக்தாபரண விரதம்
8.    பிள்ளையாருக்கு உரிய தூர்வாஷ்டமி விரதம்
9.    ஜேஷ்டா விரதம்
10.  நவராத்திரி விரதம்
11.  முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மஹாளயபட்சம்

ஆகவேதான், புரட்டாசி வழிபாடுகள் இரட்டிப்பு பலன் தரும் எனச் சொல்லிவைத்தார்கள் பெரியோர்கள்.

புரட்டாசி மாதத்தில் வரும் கருடசேவையும் முன்னோர் ஆசியும் புரட்டாசியில் எண்ணற்ற கோயில்களில் பிரம்மோற்ஸவம் நிகழும். திருப்பதி பிரம்மோற்ஸவம் மிகப் பிரசித்திப் பெற்றது. வாழ்வில் ஒருமுறையேனும் அந்த வைபவத்தைத் தரிசிப்பதை பெரும் கொடுப்பினையாகச் சொல்வார்கள். அந்த வைபவத்தில் மற்ற ஸேவைகளைத் தரிசிக்காவிட்டாலும், கருடசேவையை மட்டுமாவது அவசியம் தரிசிக்கவேண்டும்.

செய்த பாவத்தின் காரணமாக நரகத்தில் உழலும் ஆத்மாக்கள், மோட்சப் பிராப்தி இருந்தும் ஊழ்வினை காரணமாக மோட்சத்தை எட்ட இயலாத ஆத்மாக்கள், கருட ஸேவையைத் தரிசிக்க திரள்வார்கள் என்கின்றன புராணங்கள். அந்த ஒருநாள் மட்டும், அவர்கள் தங்களின் துயரத் தளைகளில் இருந்து விடுபடுவதற்கான அனுமதியை பெருமாளிடம் கருட பகவானே கேட்டுப் பெற்றாராம். அதேபோல், அன்று பெருமாளைத் தரிசிக்க வரும் பூலோக மாந்தர்களுக்கும் திருவருள் புரியும்படி வரம் கேட்டு வாங்கினாராம் கருடன்.

அப்படி, கருடசேவையைத் தரிசிக்க வரும் பித்ருக்கள், தங்களின் சந்ததியினர் வந்திருக்கிறார்களா என்று தேடுவர். அவர்களை தியானிப் பதுடன், அவர்களின் விமோசனத்துக்காகவும் ஸ்வாமியிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்என்பது ஐதீகம். இன்றைக்கும், கருடஸேவையைத் தரிசித்த கையோடு சிறிது நேரம் வானத்தை உற்று நோக்கி தியானிக்கும் வழக்கம், பக்தர்கள் சிலரிடம் உண்டு. இதனால் ஸ்வாமியின் திருவருளோடு, தங்கள் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

பித்ரு தோஷம் உள்ளவர்கள் கருட சேவையைத் தரிசித்து வந்தால், அந்த தோஷம் நீங்கும்; சந்ததி செழிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். ஏழுமலையானுக்கு உகந்த புரட்டா சியில், திருப்பதிக்குச் சென்று பிரம்மோஸ்வத்தில் கலந்துகொள்வதுடன், கருடசேவையையும் தரிசித்து அருள்பெற்று வாருங்கள்.

கேதாரீஸ்வர விரதம்

பிருங்கி என்றொரு முனிவர், தீவிரமான சிவபக்தர். ஒருமுறை, திருக்கயிலையில் அம்மையும் அப்பனும் அமர்ந்திருக்க, பிருங்கி முனிவரோ வண்டாக வடிவெடுத்து, ஸ்வாமியை மட்டும் வலம் வந்து வணங்கிச் சென்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை, பிருங்கி முனிவரின் தேக ஆற்றலை நீங்கச் செய்தாள். அவருக்கு சிவனார் ஊன்றுகோல் கொடுத்து திருவருள் புரிந்தார்.

இதையடுத்து, தான் வேறு சிவன் வேறு அல்ல என்பதை உலகத்தவருக்கு உணர்த்த விரும்பிய அம்பிகை, அதன் பொருட்டு பெரும் தவம் செய்ய முடிவெடுத்து பூமிக்கு வந்தாள். வனம் ஒன்றில் கெளதம மஹரிஷியைச் சந்தித்தாள். அவரிடம் நடந்த யாவற்றையும், தனது விருப்பத்தையும் விவரித்து, விருப்பம் நிறைவேற வழிகேட்டாள். அவளுக்கு கேதாரீஸ்வர விரத மகிமையை எடுத்துக் கூறிய கெளதமர், அந்த விரதத்தைக் கடைப்பிடித்து சிவனாரை வழிபடும்படி கூறினார். அம்பிகையும் அதன்படியே விரதம் இருந்து, சிவனாரின் தேகத்தில் இடபாகத்தை பெற்றாள்.

அவள் வழியில் நாமும் கேதாரீஸ்வர விரதம் கடைப்பிடித்து உமா மகேஸ் வரரை வழிபட தாம்பத்திய ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் சுபிட்சம் மேலோங்கும். சரி! இந்த விரதத்தை எப்போது கடைப்பிடிப்பது?

இதுகுறித்து கெளதமுனிவர் உமையவளுக்குக் கூறிய விவரம்: ‘‘புரட்டாசி மாத வளர் பிறை தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாத தேய்பிறைச் சதுர்த்தசி அல்லது அமாவாசை வரை 21 நாட்கள் இந்த விரதத்தை நடத்த வேண்டும். சிவபெருமானைக் குறித்துச் செய்யப்படும் இந்த விரதத்தை பக்தியுடன் செய்தால், ரிஷப வாகனனான ஸ்வாமி காட்சி தருவார். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்!என்றார்.

வழிமுறை: பூஜை செய்ய வேண்டிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு, தலை வாழையிலையில் அட்சதையைக் கொட்டிப் பரப்பி, அதன் மேல் பூரண கும்பத்தை வைத்து அலங்கரிக்க வேண்டும். கும்பத்தில் கேதாரீஸ் வரரை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

21 இழைகள் – 31 முடிச்சுகள் கொண்ட நோன்புக் கயிறை, அந்தக் கும்பத்தின் மேல் சார்த்தி 21 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். பூ, பழம் முதலான பூஜைப் பொருட்கள் 21 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். வேத வல்லுநர்கள் 21 பேரை வரவழைத்து, அவர்களைக் கொண்டு பூஜை செய்து வழிபட வேண்டும். மனதில் உள்ள விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் விரதம் இது.

நவராத்திரி விரதம்

இறைவனின் அருள் பெற பலரும் வித விதமாக கொலு வைத்து வழிபாடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சோழர் மன்னர்கள் காலத்தில் நவராத்திரி அரச விழாவாக கொண்டாடப்பட்டிருக்கிறது. கொலு வைத்து கொண்டாடப்படும் இந்த ஒன்பது நாட்களிலும் நவராத்திரி குறித்த புராணக்கதைகள் கேட்பார்கள்.

ஒரு முறை தேவர்களுக்கு நிறைய துன்பங்களை கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை கொல்வதற்காக சக்தி வாய்ந்த சக்தியை உருவாக்க வேண்டும் என்று தேவர்கள் வேண்டினர். இதனால் சிவன், விஷ்னு மற்றும் பிரம்மா ஆகியோர் சக்தி வாய்ந்த தேவியை உருவாக்க முடிவு செய்தனர்.

மூவரின் அருளில் பத்து கைகள் மற்றும் ஆக்ரோசமான முகத்துடன் பெண் தெய்வம் தோன்றியது. அந்த தெய்வம் தான் துர்க்கை. பார்வதி தேவியின் ஒரு வடிவம் என்றும் சொல்லப்படுகிறது. பிற தெய்வங்கள் தங்களின் ஆயுதங்கள் ஒவ்வொன்றாக துர்க்கைக்கு வழங்கினர். இறுதியாக துர்க்கை மகிஷாசுரனை அழித்து வெற்றிக் கொண்டாள்.

கொலு : நவராத்திரியின் சிறப்பே ஒன்பது நாட்களும் வைக்கப்படும் கொலு தான். இந்த கொலுவிற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக, துர்க்கையிடம் தங்களின் ஆயுதங்களை சக்திகளை எல்லாம் கொடுத்துவிட்டு பொம்மைப் போல நின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைக்கப்படுகிறது. இதே போல இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் சக்தியின் வடிவம் தான் என்பதை வலியுறுத்தம் விதமாகவும் கொலு வைக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

ராமர் இருந்த விரதம் : சீதையை ராவணன் தூக்கிச் சென்ற போது ராமரை சந்தித்து, இந்த அவதாரத்தின் நோக்கம் ராவணனை வதம் செய்வதே இந்த அவதாரத்தின் நோக்கம், அதனை அடைய பகவதி தேவியின் அருள் வேண்டி நவாரத்திரி விரதம் அனுஷ்டித்தால் நல்ல பலன் உண்டு என்று சொல்கிறார். நாரதரின் வழிகாட்டுதலின் படி மிகவும் சிரத்தையுடன் விரதத்தை அனுஷ்டித்தார் ராமர். அஷ்டமி அன்று இரவில் அம்பிகை சிம்ம வாஹினியாக காட்சிதந்து அருளினார். அதோடு, ஸ்ரீ ராமரின், முந்தைய அவதாரங்களான, மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம அவதாரங்களை நினைவுபடுத்தி, ' தேவர்களின் அம்சங்களை உடைய வானரர்கள் உனக்குத் துணை செய்வார்கள். ஆதிசேஷனின் அம்சமான, உன் இளவல் லக்ஷ்மணன் இந்திரஜித்தை வதம் செய்வான். இராவணன் உன்னால் கொல்லப்படுவான் என்றுரைத்தார்.

நவரத்திரி விரதம் இருந்து பலன் பெற்றவர்கள்: இந்த விரதத்தை திரிபுரர்களைச் சம்ஹாரம் செய்யும் பொருட்டு சிவனும், விருத்திராசுரனைக் கொல்வதற்காக, இந்திரனும், மதுராவை சம்ஹாரம் செய்வதற்காக, நாராயணனும், அனுஷ்டித்தனர். சப்த ரிஷிகளும், இந்த விரதத்தை அனுஷ்டித்துப் பலன் அடைந்திருக்கின்றனர்.

நவாராத்திரி கோலம்: நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. கண்டிப்பாக அரிசி மாவைத்தான் பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதால் குடும்ப ஒற்றுமையையும் செல்வமும் பெருகும். சுண்ணாம்பு பயன்படுத்தினால் எதிர்மறையான விளைவுகளே உண்டாகும். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்தும் போடலாம்.

பிற நவராத்திரிகள்: புரட்டாசியில் வருகின்ற நவராத்திரியைத் தவிர பங்குனி மாதம் அமாவாசைக்குப்பிறகு பிரதமையில் துவங்கும் லலிதா நவராத்திரி,மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி, ஆடியில் வரும் மகாவராகொ நவராத்திரி கொண்டாடப்படுகிறது

வழிபாட்டு முறை: நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானிக்க வேண்டும். நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை உச்சரிக்க வேண்டும். நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் கூறுவது கூடுதல் பலன்களைத் தரும். விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

விஜய தசமி: நவராத்திரியின் ஒன்பதாம் நாள் விஜயதசமி எனப்படுகிறது. இந்த நாள் வெற்றித் திருநாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. மகிஷாசுரன், சண்ட முண்டர்கள், சும்ப நிசும்பர்கள் ஆகிய அரக்கர்களை பராசக்தி அழித்த நாள். ராவணனை ராமர் வென்ற நாள். பாண்டவர்கள் தர்மத்தின் வெற்றிக்காக தங்களின் ஆயுதங்களையும் துர்க்கையையும் வழிபட்ட நாள். விஜயதசமி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று அன்னை விஜயம் செய்யும் நாளே 'விஜயதசமி' என்றும் கூறப்படுகிறது.

ஒன்பது நாட்கள் ஒன்பது தேவிகள் : இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து, போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும். முதல் மூன்று நாட்கள் மகேஸ்வரி, கௌமாரீ, வராஹி என துர்கா தேவியாகவும், அடுத்த மூன்று நாட்களில் மஹாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என லட்சுமி தேவியாகவும், கடைசி மூன்று தினங்களில் சரஸ்வதி, நரசிம்மீ, சாமுண்டி என சரஸ்வதி தேவியாகவும் சித்தரித்து வணங்குகிறோம்.

புரட்டாசியில் கடைப்பிடிக்க வேண்டிய இன்னும் சில விரதங்கள்

ஸித்தி விநாயக விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதம் இது. பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந்நாளில் உடல் - உள்ள சுத்தியோடு விரதம் இருந்து, பிள்ளையாரை வழிபட, காரிய ஸித்தி உண்டாகும்.

சஷ்டி லலிதா விரதம்:

புரட்டாசி மாத வளர் பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வமங்கலங்களையும் அருளும்.

அமுக்தாபரண விரதம்:

புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா மகேஸ்வரரை பூஜை செய்து 12முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக் கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க அருள்செய்யும். பிள்ளை பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

ஜேஷ்டா விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப் படும் விரதம் இது. எங்களை நீ பீடிக்காதே!என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.

தூர்வாஷ்டமி விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.

மஹாலட்சுமி விரதம்:

புரட்டாசி மாத வளர் பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.

கபிலா சஷ்டி விரதம்:

புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. ஸித்திகளைத் தரும்.

அனந்த விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.

ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்யவேண்டும். இவற்றில் பதினான்கை, வேதியர்களுக்குத் தந்து தாம்பூலம் மற்றும் தட்சிணை அளிக்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும். பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தும் பதினான்கு என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால், தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத ஐஸ்வரியங்கள் வந்து சேரும்.

முன்னோர்கள் அருளும் மஹாளயம்

புரட்டாசி பௌர்ணமியை தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாட்களும் மாஹாளயபக்ஷம் ஆகும். இதைத் தொடர்ந்து வரும் அமாவாசை மாஹாளய அமாவாசை எனப்படும். இந்த காலத்தில் முன்னோரை ஆராதிக்க வேண்டும். அவர்கள் நினைவாக தானம் அளிப்பது சிறந்த பலனைத் தரும்.

தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, கோ தானம், தானியங்கள், எள், எள் எண்ணெய், வெல்லம், பணம், வஸ்திரம், போர்வை, சால்வை, விளக்கு, கைத்தடி, குடை, விசிறி, செருப்பு ஆகியவற்றில் எது முடியுமோ, அதை தானம் அளிக்கலாம். தானம் பெறுபவர்களுக்கு தாம்பூலமும் தட்சிணையும் கண்டிப்பாக தருதல் வேண்டும். தானம் பெறுபவர்களை மரியாதையாக நடத்துதல் மிகவும் முக்கியம்.
 
அதேபோல், வாய்ப்பு இருப்பவர்கள், கயா, தனுஷ்கோடி போன்ற பிதுர் காரியத்துக்காகவே ப்ரசித்தி பெற்ற தலங்களில், அல்லது கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலுக்கருகில் உள்ள கரைகளில் திதியும், தானமும் தருவது சிறப்பு.


No comments

Powered by Blogger.