Header Ads

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 23 - ஸ்ரீ தத்தாத்ரேய வழிபாடு.

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 23 - ஸ்ரீ தத்தாத்ரேய வழிபாடு.

சண்டை, சச்சரவு நீங்கி , கருத்து ஒருமித்த தம்பதிகளை உருவாக்கும் - அற்புத வழிபாடு !

குடும்பத்தில் சண்டை, சச்சரவு இல்லை என்றால், வாழ்க்கையே "சப்" என்று போவதுபோல் தோன்றும், என்று ஒரு சிலர் கூறுவதை கேள்விப் பட்டு இருப்பீர்கள். இதெல்லாம் ரொம்ப தெனாவட்டு என்று, இன்னொரு சாரர் மனதுக்குள்ளேயே பொறுமுவர். எதை எடுத்தாலும் சண்டை என்று அவர்கள் வாழ்க்கை சென்று கொண்டு இருக்கும். நின்னாலும் குற்றம், உக்கார்ந்தாலும் குற்றம் னு சொன்னா, என்ன தான் செய்யறது?

ஏன், எற்கு, என்றே தெரியாமல்... சின்ன சண்டையா ஆரம்பிக்கிற விஷயம், பூதாகரமா ஆகி, திரும்ப ஒன்னு சேரவே முடியாமல், விவாகரத்து வரைக்கும் சில பிரச்னைகள் நடப்பதும் உண்டு. 

அந்த மாதிரி, எந்த காலத்திலும் உங்கள் குடும்பத்தில் நிகழ்வுகள் நடக்காமல் இருக்க, கணவன் - மனைவி இடையே, அற்புதமான புரிதல் ஏற்பட்டு, ஒற்றுமை மேலோங்க, தம்பதிகள் மட்டும் இல்லை - குடும்பம் முழுவதும் மகிழ்ச்சி நிலவ, பிரிந்த தம்பதிகளை மீண்டும் ஒன்று சேர்க்க, உங்கள் வாழ்வில் ஏதாவது விலை உயர்ந்த பொருட்கள் தொலைந்து போகாமல் இருக்க, தொலைந்த பொருட்கள் மீண்டும் விரைவில் கிடைக்க - என, அற்புத பலன்களை அளிக்கும், ஒரு ஒப்பற்ற வழிபாட்டைப் பற்றியும், விரத முறைகளை பற்றியும், இப்போது பார்க்க விருக்கிறோம். அந்த வழிபாடு தான் - ஸ்ரீ தத்தாத்ரேய வழிபாடு.

அத்திரி, ப்ருகு, குப்தர், வசிஷ்டர், கௌதமர், காச்யபர், ஆங்கீரசர் ஆகிய ஏழு முனிவர்களையும் சப்த ரிஷிகள் என்று இந்து மதம் போற்றி வழிபடுகிறது. இவர்கள் சப்தரிஷி மண்டலம் எனப்படும் நட்சத்திரக் கூட்டமாக விளங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம். சப்த ரிஷிகளில் முதன்மையானவரான அத்திரி மாமுனிவரின் மனைவி அனசூயா தேவி ஆவார். கர்த்தம பிரஜாபதி- தேஹூதி தம்பதிக்குப் பிறந்தவர் அனசூயா தேவி. "மற்றவர்கள்மீது கொஞ்சமும் பொறாமை இல்லாதவள்' என்ற பொருள் தரும் அனசூயா என்ற பெயர் கொண்ட இந்த ரிஷிபத்தினி கற்பிற் சிறந்த பதிவிரதையாகப் போற்றி வணங்கப்படுகிறாள். ஸ்ரீ இராமபிரான் சீதாதேவியோடு வனவாசம் சென்றபோது அத்திரி- அனசூயா ஆசிரமத் திற்குச் சென்று இருவரையும் வணங்கினராம். மேலும் அனசூயா தேவி சீதாதேவிக்கு பெண்களின் பல்வேறு கடமைகளைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறியதாக இராமாயணம் குறிப்பிடுகிறது.

நக்ஷத்திரமாலிகா என்ற ஸ்லோகங்களில் இவர் பதினாரு இடங்களில் இருந்தக் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி, கோதாவரிக்கு வடக்கே சிம்ம பர்வதத்தில் ஜனித்து, மாயாபுரியில் நித்திரை செய்து, கங்கையில் ஸ்னானமும், கந்தர்வ பட்டணத்தில் தியானமும், குரு-க்ஷேத்திரத்தில் ஆசமனமும், கர்நாடகத்தில் காலை-சந்தியும், கோலாபுரத்தில் பிக்ஷையும், பாஞ்சாலத்தில் உணவும், தூங்காதீரத்தில் பானமும், பத்ரியில் புராண சிரவணமும், ரைவத பர்வதத்தில் இளைப்பாறுதலும், மேற்குக் கடற்கரையில் சாயரக்ஷை சந்தியும் செய்வதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ தத்தர் நிர்குண உபாசகர்களுக்கு ஸத்குருவாகவும், யோகிகளுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார். இவரை நினைப்பதாலேயே பக்தர்களின் சங்கடங்கள் விலகியோடும் என்று சொல்லப்படுகிறது. இவரை உபாஸித்தால் ஞான மார்க்கத்தில் ஈடுபாடும், தீவிர வைராக்யமும் சித்திக்கும் என்று கூறப்படுகிறது.

கோரக்ஷாத்யை: முய ஸுசிஷ்யை: பரிவீதம்
கோ-விப்ராணாம் போஷணஸக்தம் கருணாப்திம்
கோ-லக்ஷ்மீ சாம்புஜப கிரிஜா ஸகரூபம்
தத்தாத்ரேய ஸ்ரீபாத பத்மம் ப்ரணதோஸ்மி.

ஆந்திர மாநிலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட தத்தாத்ரேயர் ஆலயங்கள் உள்ளன. இவர் அனகதத்தர், அனகசுவாமி என்ற பெயர்களில், அனகா தேவி என்ற தேவியோடு காட்சியளிப்பதையும் காண முடியும். அனகா என்ற சொல் "பாவமற்ற' என்ற பொருளைத் தரும். அனகசுவாமியும் மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் அவரது தேவியான அனகாதேவியும் நம் பாவங் களை முழுதாகக் களையும் கண்கண்ட தெய்வங் களாகப் போற்றி வணங்கப்படுகின்றனர். இருவரும் இணைபிரியாத தம்பதிகள் ஆவர். 

இந்த அனகாதேவியைக் குறித்த அனகதத்தா விரதத்தினை அனுஷ்டிப்பதன் மூலம் தம்பதிகளிடையே ஒற்றுமை ஏற்படும். ஆண்டில் ஒருமுறை மட்டும் இதைச் செய்யலாம்.

அனகலட்சுமி என்ற லட்சுமி தேவியின் அம்சமாகவும்; சிவபெருமானின் அம்சமாக நெற்றியில் மூன்றாவது கண், ஜடை, ருத்திராட்சங்கள் அணிந் தும் அனகாதேவி காணப் படுகிறாள். இரு புறங் களிலும் சங்கு, சக்கரம் உள்ளன. மேலும் சிரசில் சந்திரன், கங்கையைச் சூடியுள்ளாள். வலக்கை அபயம் காட்ட, இடக்கரம் திரிசூலம் ஏந்தியுள் ளது. வலது கால் மடக்கி இடக்காலை தொங்க விட்டு ஆதிசேஷன்மீது அமர்ந்துள்ளாள். பூவின்மீது வைத்துள்ள அவளது இடது பாதத்தின்கீழ் சிறிய நந்தி விக்ரகம் காட்டப் பட்டுள்ளது. இந்த அனகாதேவி மகாலட்சுமி மற்றும் மும்மூர்த்திகளின் அம்சமாகவும் வழி படப்படுகிறாள். ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரத்தில் கீழ்க்கண்ட 32-ஆவது நாமம் ஸ்ரீ அனகா தேவியைக் குறிக்கிறது.

"அனுக்ரஹ ப்ரதாம் புத்திம், அனகாம் ஹரிவல்லபாம்,
அசோகாம் அம்ருதாம், தீப்தாம், லோகசோக விநாசினீம்.'

மேலும்,

""யோனி முத்ரா, த்ரிகண்டேசி
த்ரிகுணாம்பா, த்ரிகோணகா' அனகா,
அத்புதசாரித்ரா, வாஞ்சிதார்த்த ப்ரதாயினி'

என்ற 180-ஆவது லலிதா ஸஹஸ்ரநாம சுலோகத் திலும் ஸ்ரீ அனகாதேவியைப்  பற்றிய குறிப்பு உள்ளது. 987-ஆவது நாமமான அனகா என்ற சொல்லுக்கு பாபம், துக்கம் யாதொன்றும் அணுகாதவள்' என்பதே பொருள்.

அனகாதேவியைக் குறித்த விரதம் தத்த அனகலட்சுமி விரதம் என்றும்; அனகாஷ்டமி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. இதைத் துவக்கி வைத்தவர் ஸ்ரீபாத வல்லப சுவாமிகள் ஆவார். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை (கிருஷ்ண பட்ச) அஷ்டமி நாட்களில் இந்த விரதத்தை அனுஷ்டித்து ஸ்ரீ அனகா தேவி பூஜை செய்வது சிறப் பானது. அல்லது ஓராண்டில் மாக (மாசி) மாதம் தேய் பிறை அஷ்டமி நாளன்று செய்யலாம். தம்பதியராக இந்தப் பூஜை செய்வது சிறந்தது. இந்த பூஜையைச் செய்வதன் மூலம் மணப் பேறு, மகப்பேறு, செல்வம், குடும்ப அமைதி, மனநலம், உடல்நலம் கிட்டும் என்று கூறப்படுகிறது. விரத நாள் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது.

இந்த விரத பூஜை செய்ய நான்கு கால்கள் கொண்ட ஒரு சிறிய பீடத்தின்மீது கிழக்கு நோக்கி பச்சரிசி நிரப்பப்பட்ட கலசம் வைத்து அலங்கரித்து, பூஜைக்குரிய பொருட்களை சேகரித்துக் கொண்டு பூஜையைத் துவக்க வேண்டும். கலசத்தின்மீது தரையில் சிறிது பச்சரிசி பரப்பி, விநாயகர், தத்தர், மகாலட்சுமி சிலைகள் அல்லது படங்களை வைத்து ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும். விநாயகர் பூஜை, கலச பூஜை, ஆவாஹனம் (ஸ்ரீ அனக லட்சுமி சகித ஸ்ரீ அனக தத்தாய நமஹ- ப்ரம்ம விஷ்ணு மஹேஸ்வர  சும்பன் த்ரிகுணாத்மக நமோஸ்துதே), குங்கும அர்ச்சனை செய்து தத்தாத்ரேயர், அனகா தேவி கதையைப் படிக்க வேண்டும்.

தத்த அனகலட்சுமி தேவி பூஜை செய்ய இயலாதவர்கள் தேவியைக் குறித்து கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி மனதார வழிபடலாம்.

"காளீ தாரா சின்னமஸ்தா ஷோடசீ
மஹேஸ்வரி த்ரிபுரா பைரவீ தூம்ரவதீ பகலாமுகீ மாதங்கீ
கமலாலயா தசமஹாவித்யா ஸ்வரூபிணி

அனகாதேவீ நமோஸ்துதே.'   


1 comment:

  1. 23-10-2017
    Sir
    My pen name is Santhipriya. I have sent a mail to you regarding non inclusion of my name as author in the article published by you under Daththathreyar. I shall feel happy if my name 'Santhipriya' and blogger-'Santhipriyas pages' is indicated in all the 16 serials published by you from 29th August, 2017 till 8th October 2017
    I sent several messages, but there is no response from your side? I once again request you to add my name -Santhipriya- as author of the articles under Lord Dathathreyar part-2 to 16 as published by you in Tamil. They have been scripted and published by me in my blogger ‘Santhipriyas pages’( https://santhipriyaspages.blogspot.in/2011/10/blog-post_05.html ) w.e.f Wednesday, October 5, 2011. In case you wish not to publish the name of the author , then I request that the articles penned by me may be removed from your blogger.
    Thanking you
    Santhipriya
    (N.R. Jayaraman)

    ReplyDelete

Powered by Blogger.