Header Ads

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 10 - காத்தவீர்யன் கதை - 3

Kartha Veera - Lord Datta
ஆனால் நாளாக நாளாக அவன் மனதில் ஒரு வெறுமை ஏற்பட்டது. வாழ்கையின் தத்துவம் என்ன என்பது புரியவில்லை. அனைத்தையும் துறந்துவிட்டு தத்தரிடமே சென்று விடலாம் என எண்ணியவன் தத்தரைக் காண கிளம்பிச் சென்றான்.  தத்தர் ஆசிரமத்தை அடைந்தவன் முதன் முறையாக தத்தர் கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் இருப்பதைக் கண்டான். அவர் கண்களை திறக்கவே இல்லை. ஆகவே அவரை எப்படி எழுப்புவது என திண்டாடியவன் நாள் முழுவதும் அவரை பூஜித்தபடி அங்கேயே அமர்ந்து கொண்டான். மனதில் அவரைப் பற்றிய தோத்திரங்களை ஜெபித்தவாறு அமர்ந்து கொண்டான். மறுநாள் எங்கிருந்து எல்லாமோ ரிஷிகளும் முனிவர்களும் வந்தார்கள். வந்தவர்கள் மாபெரும் யோகிகள். இவனை அவர்கள் எவருமே கண்டு கொள்ளவில்லை. வந்தவர்கள் தத்தரை வணங்கிவிட்டுச் சென்றார்கள். ஆனாலும் காத்தவீர்யன் மனம் தளராமல் ஒரு மூலையில் அமர்ந்து இருந்தான்.  திடீர் என தத்தர் கண்களை விழித்துப் பார்த்தார். சுற்றி இருந்த ரிஷி முனிவர்களை அழைத்துக் கொண்டு நர்மதையில் குளிக்கச் சென்றார். ஆனால் அங்கு அமர்ந்து இருந்த காத்தவீர்யனை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. காத்தவீர்யனுக்கு அழுகை அழுகையாக வந்தது. தத்தரைக் காண ஆவலுடன் வந்தால் என்னை கண்கொண்டுக் கூடப் பார்க்க மறுக்கின்றாரே என அழுதபடி அங்கேயே அமர்ந்து இருந்தான். அங்கிருந்து அசையவில்லை. திரும்பி வந்த தத்தரும் மீண்டும் தன இடத்தில் சென்று அமர்ந்து கொண்டார். ரிஷி முனிவர்களின் சந்தேகங்களை தீர்த்துவைத்தபடி இருந்தார். நேரம் கடந்தது. அப்போதும் அவர் காத்தவீர்யனை கண்டு கொள்ளவில்லை.

அவனும் அங்கிருந்து நகரவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் தரை தாரையாக கீழே விழுந்து கொண்டே இருந்தது.  சில மணி நேரம் கடந்ததும் திடீர் என அவனை தத்தர் பார்த்தார். அவனை தனது அருகில் வருமாறு ஜாடை காட்டினார். தனது அருகில் வந்தவனுக்கு  ஆறுதல் கூறினார். அவர் அருகில் சென்றவன் அப்படியே அவர் பாதங்களில் விழுந்து பொல பொலவென கண்ணீர் விட்டு அழுது புலம்பினான். அவனை எழுப்பியவர் ' எதற்காக இப்படிக் கண்ணீர் விட்டு அழுகிறாய்?... உனக்கு இன்னும் என்ன வேண்டும் எனக் கேட்டார்' என்றார். சுற்றி நின்று இருந்த அனைத்து ரிஷிகளும் முனிவர்களும் அவன் மீது கருணைக் கொண்டு தத்தர் அவனை அருகில் அழைத்துப் பேசியதை வியப்புடன் பார்த்தவாறு நின்று இருந்தார்கள். இவன் யார்? இவனிடம் ஏன் தத்தர் கருணைக் காட்டுகிறார் எனப் புரியாமல் விழித்தார்கள். அழுதபடி அவன் கூறினான் ' ஸ்வாமி இந்த எளியவனுக்கு இன்னும் என்ன வேண்டும் ? நீங்கள் என்ன கொடுக்காமல் விட்டீர்கள்?.. கேட்ட அனைத்தயும்தான் கொடுத்து விட்டீர்களே... இனியும் கேட்டால் நான் மகாபாவி ஆகி விடுவேன். அனைத்தும் உள்ள எனக்கு ஒரு சந்தேகம். பிராமணர்கள் ஆசாரம் ....ஆச்சாரம் என்று கூறுகிறார்களே ஆனால் அந்த ஆச்சாரங்களை மீறி நீங்கள் காட்சி தருகிறீர்கள். பல நேரங்களில் உங்களை தியானத்தில் பார்கின்றேன் ...பரப் பிரும்மமான நீங்கள் யாரைக் குறித்து தியானத்தில் இருக்கின்றீர்கள்? உங்களையும் விட மேலானவர் இந்த உலகில் யார் இருக்க முடியும்? எனக்கு மனதில் அமைதி இல்லை. எனக்கு மோட்ஷத்தை தந்து என்னை மேலுலகிர்க்கு அனுப்பி விடுங்கள் ஸ்வாமி....அதுவே எனக்கு வேண்டும்.  ஆகவே என் மன வருத்தத்தை நீங்கள் விலக்கி விட்டால்   நான் அரசை துறந்து துறவறத்தை மேற்கொண்டு, உங்களை பிரார்த்தனை செய்தபடி இருப்பேன் ' என்றான்.

அப்போது தத்தாத்திரேயர் முகத்தில் பெரிய ஒளி வெள்ளம் தோன்றியது. அனைவரும் அவர் என்ன கூறப் போகின்றார் என ஆவலுடன் அவரை பார்த்தபடி நின்று இருந்தார்கள். தத்தர் கூறினார்' அர்ஜுனா இன்றுதான் நீ உண்மையிலேயே என் மனதில் அதிக இடத்தைப் பெற்று விட்டாய். நீ வந்தது முதல் உன்னை நான் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். அது உனக்கு தெரியாது. உன் வாயில் இருந்து வந்த அனைத்து தோத்திரங்களும் என்னை வந்தடைந்தன. நான் அவற்றை பெற்றுக் கொண்டேன். நான் யாரைக் குறித்து தியானத்தில் இருந்தேன் என்பதையோ, அல்லது எவரை நினைத்து தியானத்தில் ஆழ்ந்து இருந்தேன் என்பதையோ இப்போது கூற முடியாது. என்னை விட மேலான அவர் யார் என்பதை தகுந்த நேரத்தில் இந்த உலகிற்கு வெளிப்படுத்துவேன். அதற்கான காலம் தற்போது கனிந்து வரவில்லை. அது பெரிய தனிக் கதை.

ஆனால் நான் தியானித்துக் கொண்டு  இருந்தது என்னுள் இருந்த ஆத்மாவைத்தான்'. என்று கூறியவர் அவனுக்கு நியாயம், தர்மம், மனசாட்சி போன்ற அனைத்தையும் விளக்கும் பல கதைகளைக் கூறி விட்டு தொடர்ந்தார் ' அர்ஜுனா சந்தேகங்கள் தோன்றுவது இயற்கை. இருட்டில் அமர்ந்து கொண்டு வெளிச்சத்தை தேடி அலையக்  கூடாது. காரணம் இந்த உலகமே ஒரு மாயை. நாம் எதை நினைக்கின்றோமோ அதையே பார்க்கும் மனப் பக்குவத்திற்கு நம்மை ஆளாக்கிக் கொள்ள வேண்டும். மனதை தூய்மையான நிலையில் வைத்துக் கொண்டு பற்றற்ற நிலையில் சென்று பார். ஒரு குரு உபதேசித்ததை மனதில் முழுமையாக ஏற்றுக் கொண்டு ஆத்மாவை பார்க்கும் நிலைக்கு சென்று பார். உனக்கு அனைத்துமே கிடைக்கும்' என்றார். அதைக் கேட்டவன் 'ஸ்வாமி, இன்று நான்  அடைந்த ஆனந்ததிற்கு அளவே இல்லை. ஆனால் நீங்கள் முன்னர் எனக்குக் கூறியவை மனதிலே பதியவில்லையே. என்ன செய்வது?' எனக் கேட்க தத்தர் மீண்டும் கூறினார் ' அர்ஜுனா காதில் கேட்டவை மனதில் பதியாததின் காரணம் அலை பாயும் மனதே.... ஆகவே நாம் முதலில் அடக்க வேண்டியது நமது அலை பாயும் மனதையே... அதற்கான வழி முறையே பிராணாயம்செய்வது என்பது ஒரு வண்டியின் சக்கரத்துக்கு ஆணிபோல மனதை அடக்க பிராணாயம் செய்ய வேண்டும். அதுவே மன ஓட்டத்தை தடுக்கும் ஆணி போன்றது. அதை வெற்றிகரமாக செய்துவிட்டு குருவின் உபதேசத்தை மீண்டும் மீண்டும் மனதில் நிலையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அலைபாயும் மனதுக்கு நிம்மதி வேண்டும் என்கிறாய் அல்லவா.... அதோ எதிரில் தெரிகின்றதே மலைக் குகை, அதற்குள் சென்று தவத்தில் இரு. ஏகாந்தமாக உள்ள அந்த இடத்தில் தவம் இருந்து சமாதி நிலையை நீ அடையும்போது உனக்கு மன நிம்மதி கிடைக்கும்' என்றார்.

அவனும் தத்தர் கூறியது போல அந்த மலைக் குகைக்குள் சென்று தவம் இருந்தான். பலகாலம் கழித்து மீண்டும் வெளியில் வந்து தத்தரை சந்தித்து இன்னும் சில விளக்கங்களைப் பெற்றுச் சென்றான். இன்னும் சில காலம் தவத்தில் இருக்குமாறு கூறி அவனை அனுப்பினார் தத்தர். அவனும் தவத்தில் இருந்தான். இப்படியாக மாறி மாறி பல ஆண்டுகள் அவனை தவத்தில் இருக்கச் சொன்ன தத்தர் ஒரு கட்டத்தில் அவனை ராஜ்யத்துக்கு சென்று ராஜ்ய பரிபாலனம் செய்யுமாறு கூறி அனுப்பினார். அவனை அவர் தவம் செய்து மனோதிடத்தை அதிகப்படுத்தியத்தின் காரணம் மனோதிடத்தை தவறாக பயன்படுத்தினால் அது விபரீத விளைவை தந்து அழிவைத் தரும் என்பதற்காகவே. முன்பிறவியில் சுதர்சன சக்கரமாக இருந்து இந்த ஜென்மத்தில் காத்தவீர்யனாக உரு எடுத்து உள்ள சுதர்சன் இப்போது  விஷ்ணு கொடுத்த சாபத்தில் இருந்து சாப விமோசனம் பெற வேண்டும். அதற்காக அவர் விஷ்ணுவின் அவதாரத்தினால் அழிய வேண்டிய காலம் வந்துவிட்டதினால்தான் அதற்கு அவனை பக்குவப்படுத்தி அனுப்பினார். அவை எதுவுமே காத்தவீர்யனுக்கு தெரியாது. நாடு திரும்பியவன் மீண்டும் நல்லாட்சியை தொடர்ந்தான். ஆனால் எத்தனை சிறந்த மனிதன் என்றாலும் காலப்போக்கில் அகங்காரம் தலை தூக்கும். அதைக் கட்டுப்படுத்த முடியாவிடில் அதுவே அழிவைத் தரும். காத்தவீர்யன் மட்டும் எப்படி அதற்கு விதி விலக்காக இருக்க முடியும்? கர்வம் அவனை ஆட்கொண்டது. அரச சபையில் பண்டிதர்களின் தர்கங்களை உன்னிப்பாகக் கேட்டான். அந்தணர்களின் வாதங்களை கவனித்தான். அவற்றைக் கேட்டவனுக்கு மனதில் தோன்றத் துவங்கியது. நாள் முழுவதும் நிஷ்டை, கர்மா , மஹாஸ்நானம் ....மஹாஸ்நானம் என நதிகளில் குளித்துவிட்டு  பலவற்றையும் அனுஷ்டித்தவாறு வேதங்களை படித்துவிட்டு தர்க்கம் செய்யும் இந்த அந்தணர்கள் எந்த நியம நிஷ்டாக்களையும் செய்யாமல் உள்ள என்னிடம் அல்லவோ கைகூப்பி நின்று யாசகத்தைப் பெற்று வாழ்கையை நடத்துகிறார்கள். ஆகவே நான் எந்த விதத்தில் அவர்களைவிட தரம் தாழ்ந்துவிட்டேன்? அவர்களை ஏன் நான் குருவாக ஏற்கவேண்டும்?

Our Sincere Thanks to 
Santhipriya

https://santhipriyaspages.blogspot.in/ 


No comments

Powered by Blogger.