ஸ்ரீ தத்தாத்ரேயர் - 11 - காத்தவீர்யன் கதை - 4
Kartha Veera - Lord Datta |
மீண்டும் ஒரு முறை தத்தாத்திரேயரிடம் சென்று தனது பல சந்தேகங்களுக்கும்
விடை கேட்டு வந்தான். ஆனால் அவர் நதிகளில் மஹாஸ்நானம் செய்வதின் அவசியத்தையும் மகிமையையும்
அவற்றின் பலன்களைக் கூறியும் அதை அவனால் ஏற்க முடியவில்லை. ஆனால் ஸ்வாமிகள் கூறி விட்டதினால்
பேசாமல் வந்தான். வீடு திரும்பியவன் சுயமாக சிந்தித்தால் தக்க விடை கிடைத்து விடுகிறதே
என்று எண்ணினான். அதனால் அந்தணர்கள் செய்யும் காரியங்கள் அனைத்துமே விரயங்கள்,அவை அனைத்தும்
மாயைகளே என நினைத்தான். அப்படிப்பட்ட எண்ணத்தில் மிதந்து கொண்டு இருந்தவன் ஒரு நாள்
அரச சபை தர்கத்தில் அந்தணர்கள் கூறிய கூற்றை ஏற்க மறுத்து விதண்டாவாதம் செய்தான். தன்
நிலை மறந்து அந்தணர்கள் தலைக் குனிந்து கொள்ளும்
வகையில் அவர்களை அவமானப்படுத்தினான். அதுவே நல்ல தருணம் என எதிர்பார்த்து காத்திருந்த
அக்னி பகவான் அவன் முன் தோன்றிக் கூறினார் ' ஒன்றும் அற்ற நடைப் பிண்டமான உனக்கு அனைத்தையும்
கொடுத்து உன்னை இந்த உயர் நிலைக்கு ஆளாக்கியவர் தத்தாத்திரேயர் அல்லவா? அவருக்கு பிடித்த
இந்த அந்தணர்களை அவமானப்படுத்தியது குறித்து நீ மகிழ வேண்டாம். இப்படி அந்தணர்களை அவவானப்
படுத்தியதன் மூலம் அவருக்கு அல்லவா நீ தலை
குனிவை ஏற்றி வைத்து விட்டாய்' என ஏளனம் செய்ய நடந்த தவறை எண்ணி வருந்தினான் அந்த மன்னன்
. தத்தாத்திரேயர் பெயரை அவர் கூறியதுமே அவனை யாரோ சாட்டையால் அடிப்பது போல இருந்தது.
அவர்களிடம் தான் அகந்தையுடன் பேசியதற்கு பகிரங்கமாக சபையில் மன்னிப்புக் கேட்டான்.
ஆனால் விடுவாரா அக்னி பகவான். அவனை அழிக்க தருமணம் பார்த்துக் கொண்டு அல்லவா இருந்தார்.
போகும் முன் அவனிடம் பசிக்கு பிட்சைக் கேட்டார். அவனும் தாராளமாக எத்தனை அளவு உணவு
தந்தாலும் அவற்றை உண்டுவிட்டு அவை போதவில்லை என்றார். சரி இந்த ராஜ்யத்தில் உங்களுக்கு
எத்தனை வேண்டுமோ அத்தனையையும் எடுத்து சாப்பிட்டு
விட்டுப் செல்லுங்கள் எனக் கூறி விட்டான்.
ஆனால் பாவம் மன்னனுக்கு தெரியவில்லை. பிறந்த எதற்கும்
மரணம் உண்டு. மரணத்தை தள்ளிப் போடலாமே தவிர தவிர்க்க முடியாது. தத்தாத்திரேயரின் கருணையினால்
சில விதி விலக்கோடு காலத்தை ஓட்டி வரும் அவனுக்கு முடிவு காலம் துவங்கவே அந்த நாடகம்
அரங்கேற்றப்படுகின்றது என்பது எப்படி அவனுக்கு தெரியும்? மன்னனின்
சம்மதம் கிடைத்ததும் அக்னி பகவான் உடனே சென்று மலைகள், நகரம், காடுகள் என அனைத்து
இடங்களிலும் இருந்த செடி கொடிகளை அழித்தவண்ணம் சென்றார். அதனால் அதிக பாதிப்பிற்கு
உள்ளானது காடுகளில் தவம் செய்து கொண்டு இருந்த ரிஷி முனிவர்களே. அந்தத் தீயினால் ஊர்த்துவ
முனிவரின் ஆசிரமும் எரிந்து போயிற்று. அனைவரின்
அலறல் குரலும் வசிஷ்ட முனிவரின் காதுகளில் கேட்டது. நடந்தது என்ன என்பதை அவர் எண்ணிப்
பார்க்கவில்லை. மன்னன் தந்த சம்மதத்தினால்தானே அத்தனை நாசமும் ஏற்பட்டது எனக் கருதியவர்
ஆத்திரம் தீர காத்தவீர்யனுக்கு சாபமிட்டார் 'காட்டில் தவம் செய்து கொண்டு இருந்த பிராமணர்கள்
அனைவரும் வீடு வாசல்களை இழக்கக் காரணமான நீ ஒரு பிராமணன் கையினாலேயே விரைவில் மடிவாய்' .
காலம் ஓடியது. காத்தவீர்யனின் மனநிலை மாறத் துவங்கியது.
மனம் போனபடி ஆட்சி செய்ய ஆரம்பித்தான். யாரையும் மதிப்பதும் இல்லை. காரணமே இல்லாமல் தத்தாத்திரேயர் கொடுத்த ரத்தத்தில் ஏறி நினைத்த
இடங்களுக்கெல்லாம் செல்லத் துவங்கினான். ஒரு முறை இந்திரன் தனது மனைவியுடன் உல்லாசமாக
இருந்தபோது அங்கும் நுழைந்து விட்டான். அவன் செயல்களை எல்லாம் பார்த்து பயமடைந்த தேவர்கள் அனைவரும் விஷ்ணுவிடம் சென்று
காத்தவீர்யனின் முறைகேடுகளைப் பற்றிக் கூறி அவருடைய பாதுகாப்பை கேட்டார்கள். அவர்களை சமாதானப்படுத்திய விஷ்ணு கூறினார்' அவன்
அழிவு காலம் நெருங்கிவிட்டது. கவலைப்பட வேண்டாம்'.
இன்னும் சிறிது காலம் ஓடியது. வேறு ஒரு நாட்டின் மீது
படைஎடுத்துவிட்டு தனது நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்த காத்தவீர்யன் வரும் வழியில்
இருந்த ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தை அடைந்து அவரை தரிசித்து ஆசி பெறச் சென்றான். அப்போது
அவனுக்கு ஆசி கூறிய முனிவரும் வந்த விருந்தாளி சாப்பிடாமல் போகக் கூடாது என்று கூறி
விட்டு உணவு அருந்தி விட்டுச் செல்லுமாறு கூற அவனோ தன்னுடன் பல ஆயிரம் சேனையினர் உள்ளனர்
என்பதினால் அவர்களை விட்டுவிட்டு உணவு அருந்துவது தவறு என்பதினால் பிறகு வருவதாக கூறினான். ஆனால் ஜமதக்னி முனிவரோ
எத்தனைபேர் வந்தாலும் அவகளுக்கு உணவு தருவேன் கவலைப் பட வேண்டாம் எனக் கூறிவிட்டு வந்தவர்கள்
அனைவருக்கும் காமதேனுப் பசுவை அழைத்து உணவு தருமாறு கூற காமதேனுப் பசு கொடுத்த உணவினால் அனைவரும் மூச்சு முட்டும் அளவில்
உணவு அருந்தினார்கள். மன்னன் ஆச்சர்யப்பட்டான்.
இத்தனை பெரிய ராஜ்யத்தில் உள்ள என்னால் கூட இப்படி விருந்து படைக்க முடியாது.
நொடிப் பொழுதில் இத்தனை சைனியத்திற்கும் உணவு
தந்துவிட்ட அந்தப் பசு என்னிடம் வந்துவிட்டால் என் ராஜ்யத்தில் யாருமே பட்டினியால்
இறக்க மாட்டார்களே என எண்ணினான். ஆஹா என்ன
அதிசயமான பசு இது...எத்தனைபேர் வந்தாலும் குறையாமல் உணவு தருகின்றதே என்பதைக் கண்டவன்
அந்த பசுவை தனக்கு தருமாறு அவரிடம் கேட்டான்.
அந்தப் பசு தன்னிடம் இருந்தால் தன் நாட்டில்
யாருமே பசியால் வாடாமல் இருக்க அதை பயன்படுத்துவேனே என்று ஆதாங்கத்தில் அவரைக் கேட்டான்.
ஆனால் அவர் அது தன்னுடைய தாயாருக்கு சமமானது என்பதினால் அதை தர முடியாது என்றார். எத்தனையோ
பொன்னும் பொருளும் தருவதாகக் கூறியும் அவர் அந்த பசுவை தர மறுத்ததினால் வேறு வழி இன்றி அவரை அடித்துத் தள்ளிவிட்டு அந்த பசுவை தரதரவென
எழுத்துச் சென்றான். ஜமதக்னி மூனிவர் கதறிக்கொண்டு அவர்கள் இழுத்த இழுப்பில் சென்று கொண்டு இருந்த பசுவைக் காப்பாற்ற
முடியாமல் பிரமை பிடித்து அமைந்து விட்டார். காட்டில் வேட்டை ஆடி விட்டு வந்தார் பரசுராமர்.
பரசுராமரும் விஷ்ணுவின் ஒரு அவதாரம்தான். சுதர்சன சக்கரம் பூர்வ ஜென்மத்தில் விஷ்ணுவின்
சாபத்தைப் பெற்று இந்த ஜென்மத்தில் காத்தவீர்யனாக பிறந்து இருக்க அந்த காத்தவீர்யனைக்
கொல்ல வேண்டிய கட்டாயத்தினால் பரசுராம ரூபத்தில் அவதரித்தவர். தனது தந்தையின் நிலைமையைக்
கேட்டறிந்தார் பரசுராமர் . கோபம் கொந்தளித்தது. கோடாலியை எடுத்து தோளிலே போட்டுக் கொண்டார். காடே கலங்கும் வண்ணம் அந்த காட்டில்
சைனியத்துடன் சென்று கொண்டு இருந்த காத்தவீர்யனைப் பார்த்து கர்ஜனை செய்தார் ' ஹே...அற்பப்
பதரே...நில்...என் தந்தையிடம் இருந்து பிடுங்கிச் சென்ற பசுவை விடுவிக்கப் போகின்றாயா
இல்லையா ?'
காத்தவீர்யன் நினைத்தான்' நான் ஷத்ரியன் ...இந்த பிராமணனுக்கு
பயந்து பசுவை விட்டு விட்டால் இந்த நாட்டை எப்படி ஆளுவது? அகவே தனியாக வந்தவனை சேனை மூலம் அடக்குவது கோழைத்தனம்.
நானே அவனுடன் சண்டையிட்டு அவனைக் கொல்வேன்'. சுற்றி இருந்த வீரர்கள் ஆஹா...ஓஹு...என
ஆர்பரிக்க, பரசுராமர் கூறினார் ' அற்பப் பதர்களே
, அனைவருமே வந்து மோதிப் பாருங்கள் ....உங்களை த்வம்சம் செய்கிறேன்' எனக் கர்ஜித்து அவர்கள் முன் சென்று நின்ற பரசுராமருக்கும்
காத்தவீர்யனுக்கும் யுத்தம் துவங்கியது. நொடிபொழுதில்
பரசுராமர் அத்தனை சைனியத்தினரையும் அழித்துவிட்டார். அழிந்த சேனையைக் கண்டு திடுக்கிட்டான்
காத்தவீர்யன். 'எனக்கு நிகரானவன் இதுவரை பிறக்கவில்லையே என நான் நினைத்து இருக்க இவன் எங்கிருந்து வந்தான்?' . இப்படி நினைத்தபடியே ஆக்ரோஷமாக பரசுராமருடம் மோதினான். பெரும் சண்டை நடந்தது. இருவரின் கைகளில் இருந்தும்
அம்பு மழை பொழிந்தது. கைகளை வெட்ட வெட்ட காத்தவீர்யன் கைகளில் புதியதாக கைகள் முளைத்துக்
கொண்டே இருந்ததைக் கண்டு வியந்தார் பரசுராமர். அது தத்தர் தந்த வரமல்லவா. ஆனால் அதே
நேரத்தில் வசிஷ்டரின் சாபமும் மேல் எழுந்தது. பரசுராமர் சிவபெருமானை நினைத்தபடி சிவபெருமான்
அவருக்கு கொடுத்து இருந்த பிரும்மாஸ்திரத்தை ஏவினார். தத்தாத்திரேயர் சிவனின் அவதாரமும்
ஆனவர் அல்லவா. காத்தவீர்யனின் ஆயுளும் முடியும் தருணம் வந்து விட்டது. மாமுனி வசிஷ்டரின்
சாபமும் நிறைவேற வேண்டும். பூர்வ ஜென்ம சாபமும்
அவனுக்கு நிறைவேற வேண்டும் என்பதினால் பரசுராமர் ஏவிய பிரும்மாஸ்திரத்தை காத்தவீர்யனின்
ஆயுளை முடிக்க தத்தாத்திரேயரே வழி செய்தார். இப்படியாக முன் ஜென்மத்தில் சுதர்சன சக்கரம்
பெற்று இருந்த சாபமும் விலகியது. அவர் மீண்டும்
விஷ்ணுவை சென்று சரணடைந்தார். காத்தவீர்யனின் பிறப்பும் ஒரு முடிவுக்கு வந்தது. தத்தாத்திரேயரின்
ஆசிகளைப் பெற்று இருந்ததினாலும், பல நற்குணங்களை கொண்டிருந்தான் என்பதினாலும் அவன்
உயிர் சொர்கத்தை அடைந்தது. ஓடி வந்த பசுவும்
அவரது ஆசானான ஜமதக்கினி முனிவருடன் சேர்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டது.
Our Sincere Thanks to
Santhipriya
https://santhipriyaspages.blogspot.in/
No comments