ஸ்ரீ தத்தாத்ரேயர் - 12 - தத்தாத்திரேயரும் பரசுராமரும் - 1
பரசுராமரைப் பற்றிய
கதையைப் படிக்கும் முன் அவருடைய தந்தையின் பிறப்பையும் அறிந்து கொள்வது அவசியம்.
அம்வசு வம்சத்தினரான குசும்பா என்ற நாட்டை சேர்ந்தவர் புருவன் என்ற மன்னன். அவருக்கு
காதி என்ற மகன் இருந்தார். குசும்பா மன்னனுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு.
அவர்களின் வம்சத்தில் சிலர் ரிஷி முனிவர்களாக இருந்தார்கள். காத்தியும் ஒரு முனிவர்
என்பதினால் ஒரு காட்டில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர்
சத்யாவதி என்பது. அவள் நல்ல அழகும் நற்பண்புகளும் பெற்றவளாக இருந்தாள். அதே காட்டில்
பிருகு முனிவரும் இருந்தார். அவருக்கு ரீக்கா என்ற மகன் இருந்தார். ரீக்கா என்ற அந்த
மகன் சத்யாவதி மீது ஆசைக் கொண்டு அவளை மணக்க விரும்பினார். சாதாரணமாக திருமணம் நடந்தால்
பெண் வீட்டினர்தான் மாப்பிள்ளை வீட்டினருக்கு நிறைய சீதனம் தருவார்கள். ஆனால் அதற்கு
மாறாக பிருகு முனிவரின் மகனான ரீக்காவோ ஒரு பக்கம் காது கருப்பாக இருந்த ஆயிரம் குதிரைகளை
சீதனமாக தந்து சத்யாவதியை மணந்து கொண்டார். திருமணம் நடந்து முடிந்து சில காலம் ஆகியது.
சத்யவதி கர்பமுற்றாள். அதைக் கண்ட சத்யாவதியின் தாயாருக்கு தானும் கர்பவதி ஆகி ஒரு
குழந்தையை பெற்று எடுக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அவளும் கர்ப்பம் அடைந்தாள். தனது
ஆசையை சத்யாவதிக்கும் கூறி இருந்தாள்.
சத்யாவதிக்கு திருமணம் ஆகி சில காலம் பொறுத்து அங்கு வந்த
பிருகு முனிவரிடம் தனது தாயாரின் ஆசையும் கூறி இருவருக்கும் நல்ல குழந்தைப் பிறக்க
அவருடைய அருள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள் . அதைக் கேட்டு மகிழ்ந்த மாமனாரும்
இரண்டு பாத்திரங்களில் சிறிது பாயசத்தை ஊற்றி அதை அவளிடம் தந்து விட்டுக் கூறினார்
'இதில் 1 என எழுதி உள்ள பாத்திரம் உனக்கு. 2 என எழுதி உள்ள பாத்திரம் உன் தாயாருக்கு.
உங்கள் இருவருக்கும் நல்லபடியாக நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அதற்கேற்ற
மந்திரத்தை ஓதி வைத்து உள்ளேன். இதை நாளை குளித்து விட்டு நீயும் உன் தாயாரும் சாப்பிட
வேண்டும். ஆனால் ஒன்றை கவனமாகக் கேட்டுக் கொள். பாத்திரத்தை மாற்றி விடாதே. அதில் கவனமாக
இரு'.
சத்யாவதியும் தன்
தாயாரிடம் சென்று அதைக் கூறினாள் . மறு நாள் காலை சத்யாவதி எழுந்திருக்கும்
முன்பே அவளுடைய தாயார் எழுந்து விட்டாள். பாயசத்தைக் குடிக்க பாத்திரத்தை எடுத்தவளின்
மனதில் சிறு சலனம். பிருகு முனிவர் தனது மருமகளுக்கு தனக்கு பிறக்க உள்ள குழந்தையை
விட அதிக அழகான, அறிவுள்ள பிள்ளை பிறக்க வைக்க மந்திரம் ஓதி இருப்பாரோ என நினைத்தாள்
. ஆகவே சற்றும் யோசனை செய்யாமல் தனது மகளுக்கு வைத்து இருந்த பாத்திரத்தில் இருந்த
பாயசத்தை எடுத்துக் குடித்து விட்டாள். அதன்பின் குளித்துவிட்டு வந்த சத்யாவாதி தன்னுடைய
தாயார் தனக்கு வைத்திருந்த பாத்திரத்தில் இருந்த பாயசத்தைக் குடித்து விட்டாளே எனப் பதறியவாறு அவளிடம் அது பற்றிக் கேட்டதற்கு
தான் தவறுதலாக அதை மாற்றிக் குடித்து விட்டேன் என அவளுடைய தாயார் கூறி விட்டாள். ஆகவே வேறு வழி இன்றி இன்னொரு பாத்திரத்தில் இருந்த
பாயசத்தை சத்யாவதி குடித்தாள். மறுநாள் அங்கு வந்த பிருகு முனிவரிடம் சத்யாவதி நடந்ததைக் கூறி அழுதாள். அவரும் அதைக் கேட்டு வருந்தினார்.
நடக்கக் கூடாதது நடந்து விட்டது. ஆனால் என்ன செய்ய முடியும், சரி நடப்பது நடக்கட்டும்
என கூறி விட்டு சத்யாவதிக்கு பிறக்க இருந்த குழந்தையின் குணங்கள் அவளது பேரனுக்கு போகட்டும்
என்று ஆசிர்வதித்து விட்டு சென்று விட்டார். சில நாட்களில் மகளும் தாயாரும் இரண்டு
குழந்தைகளை பெற்று எடுத்தார்கள். சத்யாவதிக்கு
ஜமதக்னி முனிவரும் அவளுடைய தாயாருக்கு விஸ்வாமித்திரரும் பிறந்தார்கள். அதனால்தான்
சாத்வீக குணம் கொண்ட சத்யாவதிக்கு அவளுடைய சாந்த குணத்தைக் கொண்ட ஜமதக்னி பிறந்ததினால்
அவரால் காத்தவீர்யனை எதிர்த்து போராட முடியவில்லை.
காலம் ஓடியது. ஜமதக்னி முனிவர் வளர்ந்து பெரியவர் ஆனார்.
காலாகாலத்தில் அவருக்கும் ரேணுகா தேவிக்கும் திருமணம் நடந்தது. ரேணுகா தேவி ஒரு முனிவரின்
பெண்ணாக காட்சி தந்தார். அவர்களுக்கு சில குழந்தைகள் பிறந்தன. அதில் பரசுராமரும் ஒருவர்.
பிறந்த குழந்தைகளில் முதல்வர் பரசுராமர். பிருகு
முனிவர் சத்யாவதிக்கு முன்னர் ஆசிர்வதித்ததைப் போல அவளுடைய பேரன் (சத்யாவதியின் மகனான
ஜமதக்னிக்கு பிறந்தக் குழந்தை என்பதினால்) பரசுராமர் அதி பராக்கிரமசாலியும், புத்தி
கூர்மையும் கொண்டவராக விளங்கினார். அவர்கள் அனைவரும் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டு
இருந்தார்கள். ஆனாலும் விதி சில சம்பவங்களை நிறைவேற்றியது.
ஒரு நாள் ரேணுகா தேவி குளிப்பதற்காக நதிக்கரைக்கு சென்று
இருந்தாள். அப்போது எதேற்சையாக சற்று தொலைவில் அதே நதியில் மற்றொரு நாட்டின் மன்னன் தனது மனைவியுடன்
நீந்தி விளையாடிக் கொண்டு இருந்தான். அவர்கள்
ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி காமத்துடன் சல்லாபம் செய்வதைக் கண்டவளின் மனம் ஒரு கணம்
காம உணர்வால் தகித்தது. அடுத்த கணமே தனது கணவன் நினைவுக்கு வர அவசரம் அவசரமாக அங்கிருந்துக்
கிளம்பிச் சென்றாள். வீடு வந்தவளின் முகத்தை நோக்கினார் முனிவர். அவள் முகத்தில் கற்பு
களங்கப்பட்டு இருந்தது தெரிந்தது. தனது ஞான திருஷ்டியினால் நடந்ததை அறிந்து கொண்டார்.
உடனே சற்றும் காத்திருக்காமல் தனது அனைத்து பிள்ளைகளையும் அழைத்தார். ' கற்பை இழந்துவிட்ட
இவள தலையை வெட்டி எறியுங்கள்' என ஆணையிட்டார். பரசுராமரைத் தவிர மற்றவர்கள் தமது தாயின்
தலையை வெட்ட தயங்கினார்கள் என்பதினால் தந்தையிடம் இருந்து சாபத்தைப் பெற்றார்கள். ரேணுகா
தேவி தலையை குனிந்தபடி நின்று இருந்தாள். பரசுராமர் வந்தார். அவரிடமும் தந்தை அதே செயலை
செய்யுமாறு கூற சற்றும் தயங்காமல் தாயாரின் தலையை துண்டித்து எறிந்தார் பரசுராமர்.
அதைக் கண்டு மனம் மகிழ்ந்த ஜமதக்னி 'அன்பு மகனே....என்
சொல்லை தட்டாமல் நான் கூறிய காரியத்தை உடனேயே செய்தவனே...உனக்கு என்ன வேண்டும்...கேள்
தருகிறேன்' என்றார். அதுவே தருணம் என்று காத்திருந்த பரசுராமர் தனது தாயாரை மீண்டும்
உயிர் பிழைக்க வைக்க வேண்டும், மற்றும் சகோதரர்களின் சாபத்தையும் விலக்க வேண்டுமென
வேண்டுகோள் விட்டார். முனிவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது. 'எத்தனை உன்னதமான பிள்ளை
இவன். என் சொல்லையும் தட்டவில்லை. தாயார் மீதும் குடும்பத்தின் மீதும் எத்தனை பாசம்
வைத்து உள்ளான்' என நினைத்தவர் 'ததாஸ்து' எனக் கூறி ரேணுகாவை பிழைக்க வைத்தார். பரசுராமரின்
சகோதரர்களின் சாபத்தையும் விலக்கினார். உயிர் பிழைத்து எழுந்த ரேணுகா கணவனின் கால்களில்
விழுந்து மன்னிப்புக் கேட்டாள். ஆமாம் அந்த நாடகம் எதற்காக நடந்தது. ரேணுகா அப்படிப்பட்டவளா?
இல்லை...இல்லை... ரேணுகா அப்படி ஒரு நாடகத்தை நடத்திக் காட்டி இருக்காவிடில் பரசுராமரின் நல்ல குணம் வெளியில் தெரிந்து இருக்காது.
மேலும் ரேணுகா தேவி முன்னோர் காலத்தில் தனக்கு
இரண்டாவது பிறவி வேண்டும் எனவும் அதில்தான் தான் யார் என்பதை பரசுராமர் மூலம்
உலகிற்கு உணர்த்த வேண்டும் எனவும் முடிவு செய்து இருந்தாள். அதை நடத்திக் காட்ட இதைவிட வேறு என்ன சந்தர்ப்பம் கிடைக்கும்?
இவர்கள் இப்படியாக வாழ்ந்து கொண்டு இருந்தபோதுதான் காத்தவீர்யன்
கதையில் கூறியது போல காத்தவீர்யன் வந்து ஜமதக்னியின் பசுவை கவர்ந்து கொண்டு போனதும்
பரசுராமர் அவனைக் கொன்றதுமா காட்சிகள் நடந்தேறின. காத்தவீர்யன் அழிக்கப்பட்டப் பின்
அவனுடைய ஆட்கள் ஆத்திரத்துடன் இருந்தார்கள். தம்மால் பரசுராமருடன் நேரிடையாக மோத முடியாது
என்பது அவர்களூக்குத் தெரியும். ஆகவே அவர் இல்லாத தருணத்தை எதிர்பார்த்துக் காத்து
இருந்தார்கள். பேடித்தனமாகவே அவரை பழி வாங்க வேண்டும் என காத்திருந்தார்கள் . காலம்
ஓடியது. ஒரு நாள் பரசுராமர் வீட்டில் இல்லை. அவர் வருவதற்கு நேரம் ஆகும் என்பதை தெரிந்து
கொண்ட காத்தவீர்யனின் சேனையினர் ஜமதக்னியின்
ஆசிரமத்தில் நுழைந்தார்கள். அனைத்துப் பொருட்களையும் நாசப்படுத்தினார்கள். அவரை இழுத்துப்
போட்டு சித்திரவதை செய்து கொன்றார்கள். ரேணுகா தேவி அலறினாள். அவரை விட்டு விடுமாறு
எத்தனைக் கெஞ்சியும் கிராதகர்கள் அவரை விடவில்லை. கெஞ்சிய அவளையும் அவமானப்படுத்திவிட்டு
ஓடினார்கள்.
Our Sincere Thanks to
Santhipriya
https://santhipriyaspages.blogspot.in/
No comments