ஸ்ரீ தத்தாத்ரேயர் - 13 - தத்தாத்திரேயரும் பரசுராமரும் - 2
Lord Parasurama |
ரேணுகா ;பரசுராமா...பரசுராமா; என இருபத்தி ஒரு முறை தனது
மார்பில் அடித்துக் கொண்டு அலறினாள். அவள் அலறல் தூரத்தில் இருந்த பரசுராமரின் காதுகளில்
ஈட்டிப் போல வந்து துளைத்தன. ஓடோடி வந்தார் பரசுராமர். நடந்து முடிந்திருந்த அலங்கோலங்களைக்
கண்டார். பிரமை பிடித்துப் போய் அமர்ந்து இருந்த
தாயாரைக் கண்டார். மடிந்துக் கிடந்த தந்தையைப் பார்த்துக் கதறினார் ' தந்தையே என்னால்தானே
உங்களுக்கு இப்படி நடந்தது. இனி அவர்கள் ஒருவரையும் உயிருடன் விட்டு வைக்க மாட்டேன்'
என வெறி பிடித்துக் கத்தியவர் வீட்டில் கிடந்த அனைத்து ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டார்.
தனது கோடாலியை தோளிலே வைத்துக் கொண்டு 'அந்த ஷத்ரியர்களை வேட்டை ஆடிவிட்டு வருகிறேன்....அதுவரை
இவை இப்படியே இருக்கட்டும்' என வெறியோடு கிளம்பிச் சென்றார்.
வெற்றி மிதப்பிலே சென்று கொண்டு இருந்த ஷத்ரிய சேனயினரை
கண்டு பிடித்தார். அவர்களை துரத்தலானார். ஒருவரைக் கூட விட்டு வைக்காமல் அனைவரையும்
தேடித் தேடி பிடித்துக் கொன்றார். ஷத்ரிய வேட்டை தொடர்ந்தது. அப்படியும் அவர் வெறி
அடங்கவில்லை. கண்களில் தெரிந்த ஒரு ஷத்ரியனையும் விட்டு வைக்கவில்லை. வெறி பிடித்த
வேங்கைப் போல அனைவரையும் வெட்டி சாய்த்தப்
பின் வீடு திரும்பினார். தந்தையின்
உடலை மடி மீது கிடத்திக் கொண்டு புலம்பினார்
' தந்தையே எத்தனை பராக்கிரமசாலியாக இருந்தும் உங்களைக் காக்க முடியவில்லையே... என்
வாழ்கையில் இனி எனக்கு என்ன இருக்கின்றது?...' என அழுது புலம்பிய மகனை துக்கத்தில்
மிதந்து கொண்டு இருந்த தாயார் ரேணுகா சாந்தப்படுத்தினாள் . ' ஆனது ஆகி விட்டது மகனே...இனி
அடுத்ததாக இறுதிக் காரியத்தை நடத்தி முடி' என்றாள்.
சரி என எழுந்தவனிடம் தீர்மானமாக ரேணுகா கூறினாள் ' பரசுராமா...உன் தந்தையின் இறுதி காரியத்தை இங்கு
செய்யக் கூடாது. போ...போய் ஒரு காவடியை தயார் செய்து கொண்டு வா... ஒரு புறம் உன் தந்தையையும்,
மறுபுறம் என்னையும் வைத்துக் கொண்டு நடந்து செல். எந்த இடத்தில் ஆசரி 'நில்' என்று
கூறுகின்றதோ அங்கு உன் தந்தைக்கு வேண்டிய இறுதிக் கடன்களை செய்து முடி. நானும் அவர்
சிதையிலே வீழ்ந்து மடிந்துபோக உள்ளேன். ஆகவே
இருவருக்கும் சேர்த்து அங்கேயே ஈமக் கடன்களை முடித்து விடு இதுவே என் ஆணை' என்றவளின் கட்டளையை ஏற்று ஒரு காவடியை
தயார் செய்து கொண்டு வந்தார் பரசுராமர்.
தனது தாயாரின் கட்டளைப்படி அவர்கள் இருவரையும் அதில் வைத்துக்
கொண்டு காடுகளில் பல பகுதிகளிலும் நடந்து சென்று கொண்டே இருந்தார். அவர் பல மைல் தொலைவு
தூரம் சென்றும் நில் என்றக் கட்டளை வரவில்லை. ஆனால் பரசுராமரும் சோர்வு அடையவில்லை.
பயணத்தை தொடர்ந்து கொண்டு இருந்தார். அந்த நிலையில் அவர் மலைப் பகுதியில் சென்றபோது தத்தாத்திரேயர் இருந்த பகுதியை அடைந்தார். அப்போது 'நில் மேலும் போகாதே' என்றக் குரல் ஒலித்தது. யார்
குரல் கொடுத்தார்கள் என்று திரும்பிப் பார்த்தார். யாரும் தென்படவில்லை. அவர் யாராக
இருக்கும் என யோசனை செய்தவர் தாயாரையே கேட்கலாம் என எண்ணி தாயாரின் முகத்தை நோக்கினார்.
அவள் வாயில் இருந்து மெல்லிய சப்தம் மட்டும் வந்து கொண்டு இருந்தது. காவடியை கீழே
வைத்து விட்டு அவள் அருகில் சென்று பார்த்தார். அவள் வாயில் இருந்து வார்த்தைகள் வெளி
வந்து கொண்டு இருந்தன. 'மகனே...உனக்கு அடிக்கடி உன் தந்தை போதிப்பாரே தத்தரைப் போய்
பார்....தத்தரைப் போய் பார் என்று...அவருடைய ஆசிரமம்தான் அருகில் உள்ளது....போ..உள்ளே
போய் அவரை தரிசித்து எங்களுக்கு எப்படி இறுதிக் கடன்களை செய்ய வேண்டும் எனக் கேட்டு
அவர் கூறுமாறு கிரியைகளை செய். அவர் கிடைக்கவில்லை
என்றாள் அங்குள்ள நெல்லி மரத்தின் அடியில் சென்று அமர்ந்து கொண்டு அவரை தியானம் செய்.
அவர் எங்கு இருந்தாலும் உடனே ஓடி வருவார் ' என்றாள்.
தாயாரின் சொல்லை ஏற்று பரசுராமர் ஆசிரமத்திற்குள் சென்று
தத்தாத்திரேயரை தேடினார். ஆனால் அதற்கு மாறாக அலங்கோலமான நிலையில், பெண்களுடன் சல்லாபம்
செய்து கொண்டு ஒருவர் அமர்ந்து இருந்தார். உள்ளே சுருட்டு வாசனை....சாராய நெடி மூக்கை
துளைத்தது'. ஆனால் பரசுராமரா சளைத்தவர். அவருக்கு
தத்தரைப் பற்றி ஏற்கனவே பலரும் கூறி இருந்ததினால் தனது எதிரில் அந்த நிலையில்
காட்சி தருபவர் தத்தாத்திரேயராகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தீர்மானமாக இருந்தது.
அவர் அருகில் சென்று அவரை சேவித்தப் பின்னர் தனது தந்தையின் இறுதிக் கடனை எப்படி செய்வது
என அவரிடம் அறிவுரைக் கேட்கவே தான் அங்கு வந்துள்ளதாக பரசுராமர் கூற அந்த அலங்கோல மனிதர்
கூறினார் 'இறுதிக் கடனைப் பற்றி எனக்கு என்னடா தெரியும்...வேண்டுமானால் நீயும் இரண்டு மொந்தைக் கள்ளைக் குடித்துவிட்டு என்னுடன் இங்கு அமர்ந்து கொள் .
அதை விடுத்து இறுதிக் கடன்...காரியம் என என்னிடம் வந்தால் நான் என்னடா செய்வது' என
ஏளனமாக பேசினார். பரசுராமருக்கு வைராக்கியம் அதிகம். அசைந்து கொடுக்கவில்லை. அவர் கூறினார்
'ஸ்வாமி தயவு செய்து நாடகத்தை தொடராதீர்கள்...உங்களை கேட்டு நீங்கள் கூறியபடித்தான்
என் தந்தையின் இறுதிக் காரியத்தை செய்ய வேண்டும் என என்னுடைய தாயார் கூறி உள்ளார்.
அதனால் அவளையும் இங்கே அழைத்து வந்துள்ளேன்' என்றார்.
அதைக் கேட்ட தத்தாத்திரேயர் கேட்டார் 'என்ன கூறினாய்...என்னைக்
கேட்டு இறுதிக் கடனை செய்யுமாறு உன் தாயார் கூறினாளா...அவளும் இங்கு வந்து இருக்கிறாளா ...யாரடா உன் தாயார்.. அவளை நானும் பார்க்கிறேன்'
என ஆச்சர்யத்துடன் கூறியபடி தனது உண்மை உருவிலே எழுந்தார் தத்தர் . அவரை சுற்றி பெரிய
ஒளி வெள்ளம். அனைத்து நாடகக் காட்சிகளும் மறைந்து
இருந்தன. ஜ்யோதிஸ்வரூபமாக பரசுராமர் எதிரில் தத்தர் நின்று கொண்டு இருந்தார். 'வா...சென்று
உன் தாயாரைப் பார்க்கலாம்' என பரசுராமரை அழைத்துக் கொண்டு சென்றவர் ரேணுகா மாதாவைக்
கண்டார். அவ்வளவுதான் ' ஹே ஜகன்மாதா' எனக் கூறியவாறு தத்தாத்திரேயர் அவளை சென்று வணங்கினார்...தாயே
ஜகன்மாதா...என் அன்னையே...எனப் பலவாறாகக் கூறி அவளை தோத்திரம் செய்யலானார். அவர் முன்னால்
அமைதியாக சலனம் இன்றி கண்களை மூடியபடி ரேணுகா அமர்ந்து இருந்தாள். நடந்து கொண்டு இருந்ததைக்
கண்ட பரசுராமர் அதிர்ந்துபோய், வாயடைத்து நின்றார்.
பரசுராமரை அழைத்த தத்தாத்திரேயர் அவரை அனைத்து தீர்த்தங்களிலும்
குளித்துவிட்டு வருமாறு கூறினார். அதன் பின் அவருக்கு அவர் தந்தைக்கு இறுதிக் கடன்களை
எப்படி செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் கூறிவிட்டு சிதைக்கு தீ மூட்டச் சொன்னார்.
காவடியில் இருந்து இறங்கிய ரேணுகா தேவி தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டாள். சிதையில்
தீ எரிந்து கொண்டு இருந்தபோதே அவள் அதில் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டாள். மறைந்து
விட்டாள். தத்தாத்திரேயர் அமைதியாக நடந்த அனைத்தையும் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார்.
ரேணுகா தேவி தான் இன்னொரு பிறவி எடுத்து இந்த இடத்தில் முடித்துக் கொண்டது ஏன்? காரணம் என்ன?
தத்தாத்திரேயர் வரம் பெற்ற காத்தவீர்யனை அழிக்க வேண்டுமானால்
அவரே வணங்கும் பராசக்தி மூலமே அது நடக்க இயலும் என்பதினால் மாயையாக அவள் தன்னை ஜமதக்னியின்
மனைவியாக காட்டியவாறு இருக்க வேண்டும்.
ஜமதக்னியின் உண்மையான மனைவியாக இருந்தது அவள் அனுப்பிய
ஒரு பூத கணமே. அப்போதுதான் காத்தவீர்யனைக் கொல்ல வேண்டிய நாடகத்தை நடத்தி முடிக்க முடியும்.
ஜமதக்னி யார்? பிறப்பால் மனித உடலை எடுத்து இருந்தாலும்
அவரும் சிவபெருமானின் ஒரு பூதகணமே.
மும்மூர்த்திகள் வணங்கும் அவள் பராசக்தி என்பதை உலகம்
அறிந்து கொள்ள வேண்டும். அதை மும்மூர்த்திகளின் அவதாரமான தத்தாத்திரேயர் மூலமே அதையும்
தெரியப்படுத்த வேண்டும்.
அவளது தலையை ஏன்
ஜமதக்னி முனிவர் வெட்டுமாறு கூறினார்? அதற்குக் காரணம் அப்போதுதானே அந்த உடலில் உள்ள
பூதகணம் மடியும், தானும் ஒரு மனித உருவில் அங்கு இருந்து நாடகத்தை நடத்த முடியும்.
நாடகம் நடந்து முடிந்தது. தத்தாத்திரேயர் அறிவுரைப்படி
அனைத்து காரியங்களையும் செய்து முடித்தப் பின் பரசுராமர் காத்தவீர்யனின் ஆட்கள் ஜமதக்னியைக்
கொன்றபோது இருபத்தி ஒருமுறை மார்பில் அடித்துக் கொண்டு தன்னை அழைத்த தாயாரின் நினைவாக
பூமியின் இருபத்தி ஒரு பகுதிகளிலும் சென்று ஷத்ரியர்களை வதம் செய்தார். இருபத்தி ஒரு
முறை முடிந்ததும் அவர் மனதில் துயரம் தோன்றியது. இது என்ன வாழ்கை. எத்தனை மனிதர்களைத்தான்
அடுக்கடுக்காய் கொன்று தீர்ப்பது என மனதில் வெறுப்பு ஏற்பட மீண்டும் தத்தாத்திரேயரிடம்
வந்து சரணடைந்தார். வழியில் ரேணுகா தேவியும் ஜமதக்னி முனிவரும் அவர் முன் தோன்றி அவர்
செய்த கொலைகளின் பாவத்தை அழிக்க தத்தாத்திரேயரிடம் சென்று அவருடைய அறிவுரை பெற்று ஒரு
யாகத்தை செய்யுமாறு கூறி விட்டு மறைந்தார்கள். அந்த யாகம் என்ன, எப்படி செய்வது எனப்
புரியாமல் தத்தரிடம் சென்றார்.
Our Sincere Thanks to
Santhipriya
https://santhipriyaspages.blogspot.in/
No comments