Header Ads

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 14 - தத்தாத்திரேயரும் பரசுராமரும் - 3

Lord Parasurama

தத்தாத்திரேயரிடம் சென்று நடந்தவற்றைக் கூறி விளக்கம் கேட்க தத்தர் கூறினார் ' பரசுராமா, கவலைப் படாதே. எந்த ஒரு செயலுக்கும் மாற்று மார்க்கம் உண்டு. அவர்கள் உன்னை செய்யச் சொன்ன யாகத்தின் பெயர் ரேணுகா யாகம். அதை நீ செய்து முடிக்கும்வரை உனக்கு நானே துணையாக இருந்து உனக்கு வழி காட்டுவேன்' எனக் கூறினார். அந்த யாகம் செய்ய வேண்டுமானால் பக்கத்தில் மனைவி அமர்ந்து கொண்டு இருக்க வேண்டும். பரசுராமரோ மனம் ஆகாதவர் . ஆகவே மனைவிக்கு பதில்  மனைவி ஸ்தானத்துக்கு இணையாக ஒரு  தங்கத்திலான ஒரு பெண் பொம்மையை பரசுராமர் பக்கத்தில் வைத்துக் கொண்டு யாகத்தை வேறு சிறப்பாக செய்து முடிக்க வைத்தார். யாகத்தில் தத்தாத்திரேயரே ஒரு ருத்வியாக வந்து அமர்ந்து கொண்டு பங்கேற்க  காஷ்யப முனிவர் முன்னிலையில் அனைத்தும் நன்றாக நடந்து முடிந்தது. அதில் பங்கேற்ற ரிஷி முனிவர்களுக்கு ஒரே குழப்பம். தத்தர் ஏன் அடிக்கடி ரேணுகா...ரேணுகா என முணுமுணுக்கின்றார்?...அவருக்கும் ரேணுகாவிற்கும் என்ன சம்மந்தம்? அதற்கு மேல் யாகத்தில் பரசுராமரிடம் அதை செய்...........இதை செய் எனக் கூறி வழி காட்டியவண்ணம்  உள்ளாரே...பரசுராமர் மீது இவருக்கு  என்ன அக்கறை? கேள்விகள் அவர்களை குடைந்து எடுத்தன. ஆனால் பதில்தான் தெரியவில்லை. யாகத்தில் வந்த ருத்விகளுக்கும் நிறைய தானங்கள் கிடைத்தன. ஆகவே அனைவரின் சார்பாகவும் தத்தாத்திரேயரிடம் பரசுராமரே அவர்களது சந்தேகத்திற்கான விடையைக் கேட்டார். பரசுராமர் தத்தரிடம் கேட்டார் ' ஸ்வாமி, என் பெற்றோர்கள் சொர்கத்துக்குப் போகும் முன் என்னை வழியிலே சந்தித்து தத்தாத்திரேயரிடம் இறுதிக் காரியங்களை செய்ய அறிவுரைக் கேட்டு அவர் கூறுவது போல செய் என்றார்கள். மேலும் என்னை உங்களிடம் தீட்ஷை பெற்று உங்களுடைய சிஷ்யராகவே ஆகுமாறு கூறினார்கள். என் தாயாரின் பெயரைக் கேட்ட உடனேயே நீங்கள் உடனே எழுந்து வந்து அவளை வணங்கித் துதித்தீர்கள். அப்போதே நினைத்தேன் எத்தனை பெரிய யோகா புருஷர் நீங்கள் ஏன் அவளை வணங்க வேண்டும்? அதற்கான காரணங்களை எங்களுக்கு விளக்கினால் நாங்கள் மன அமைதி பெறுவோம் ' . அவர் கேட்டதைக் கண்ட தத்தரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அமைதியாக அவர்களுக்கு விளக்கினார்.

'பரசுராமா, உங்களுக்கும் என்னுடைய தாயாருக்கும் என்ன பந்தம் என்று கேட்டாய் அல்லவா...கூறுகிறேன் கேள். உன்னுடைய தாயாரான ரேணுகா ஸ்தூல சரீரமும் நிராகாரம் என்ற ஜேஷ்ட சரீரத்தையும் கொண்டவள். அவளுக்கு இரண்டு உருவங்கள் உள்ளன. அவளே  உலகு அனைத்தையும் ஆளும் லோகமாதா. அவளுக்கு  எல்லாமே அவளேதான்.  தாய், தந்தை, கணவன் , மனைவி, சொந்த பந்தம் என அனைத்துமே அவளுக்கு அவளேதான். அதில் ஒரு உருவமாக உன்னுடைய தாயார் இந்தப் பிறவியில் உனக்கு தாயாக பிறக்கக் காரணம் லோகத்தின் நன்மையைக் கருதி அனைவரையும் நல்வழிப்படுத்தவே. காத்தவீர்யன் முன் பிறவியில் விஷ்ணுவிடம் பெற்ற சாபம் காரணமாக இந்த ஜென்மத்தில் பிறக்க உன்னையே விஷ்ணு தனது அவதாரமாக ஜமதக்கினிக்கு பிறக்க வைத்து அவனை அழித்தார்.

உன் அன்னை ரேணுகா ஒரு ஏக மாதா ...அவளே சந்தியா தேவி எனும் காயத்ரியும் ஆவாள்...காலமற்ற காலத்தில் வாழ்பவளான  அவளை வணங்குவதற்கு காலமோ நேரமோ எதுவுமே தேவை இல்லை. அவளை மூன்று வேளைகளிலும் வணங்குபவர்கள் எண்ணற்ற ஆனந்தத்தை அடைவார்கள். எல்லா காலத்திலும் நிறைந்து இருக்கும் அவளுக்கு எந்த இடத்தில் இருந்தாலும், எப்படி இருந்தாலும் சந்தி என்பதின் மூலம் சந்தியாவந்தனம் செய்யலாம். சந்தி என்றால் காலம். ஆனால் அதற்காக அவளை மூன்று வேளை மட்டும் வணங்க வேண்டும் என்பது அல்ல சாரம். அத்தனை உயர்வானவள் அவள். அதனால்தான் மானிட உருவில் வந்துள்ள நான் கூட அவளை வணங்குகின்றேன். என்னையும் படைத்தவளே அந்த மாகா சக்தியான பராசக்தி. அவளின் ரூபமே காயத்ரியும். அவளே உன் அன்னையாக காட்சி தந்த ரேணுகா தேவியும். அதோ  தெரிகிறதே ஒரு குளம்,  அதில்தான் உன் தாயார் நீராடுவாள். அதனால்தான் அதை ரேணுகா தீர்த்தம் என்கிறோம். இதோ தெரிகின்றதே நெல்லி மரம், அதன் அடியில்தான் உன் தாயார் அமர்ந்து இருப்பாள். நீ எங்கு சென்று ஒய்வு எடுத்தாலும் கிடைக்காத மன நிம்மதி அந்த மரத்தடியில் நின்றாலே கிடைக்கும். உனக்கு நினைவு இருக்கின்றதா? உன் தாயார் உனக்குக் கூறினாளே, யாகம் முடிந்ததும் அந்த நெல்லி மரத்தடியில் சென்று அமர்ந்து கொள் என்று. அதற்குக் காரணம் இதனால்தானப்பா ' எனப் பலவாறு ரேணுகா எனும் ஆதி பராசக்தியின் பெருமைகளை கூறிக் கொண்டே இருந்தார். அப்படி அவர் கூறிக் கொண்டே இருக்கையில் அந்த நெல்லி மரத்தடியில் ரேணுகாதேவி ஜகத்ஜோதியாகத் தோன்றினார். தத்தாத்திரேயர் 'அன்னையே...பராசக்தி.....ஜகன்மாதா.........எனக் கூறியவாறு அவளை தோத்திரம் செய்யத் துவங்க சுற்றிலும் இருந்த ரிஷி முனிவர்கள் மெய் மறந்து நின்று அந்த அற்புதமான காட்சியைக் கண்டு களித்தார்கள். அவர்களுக்கு அப்போதுதான் புரிந்தது தத்தாத்திரேயர் யார் என்பதும் அவருக்கும் ரேணுகா தேவிக்கும் என்ன சம்மந்தம் என்பதும்.

யாகம் முடிந்து அனைவரும் மிக்க மகிழ்ச்சியுடன் தத்தாத்திரேயரை வணங்கி விட்டுச் சென்றார்கள். பரசுராமரும் அங்கேயே தங்கி இருந்தவாறு தத்தாத்திரேயைன் அறிவுரைப்படி தியானங்களை செய்து கொண்டும் அந்த நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டும் காலத்தைக் கழித்தார். ஆனாலும் அவர் முழுமையாக தத்தரிடம் அடைக்கலம் அடையவில்லை என்பது அவருக்கே தெரியவில்லை. அவர் மனதில் மீண்டும் அமைதி இன்மை தோன்றியது. காடுகளில் அலைந்து திரிந்து கொண்டு இருந்தவர் வெகு அபூர்வமாகவே மற்றவர்கள் கண்கள் முன் தோன்றும் சம்வார்த்தா என்ற முனிவரிடம் சென்று தனது மனத் துயரைக் கூறினார். அந்த முனிவர் அவரைப் பார்த்து சிரித்தபடிக் கூறினார் 'பரசுராமா...உன் நிலையைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன். கையிலே விளக்கை வைத்துக் கொண்டே வெளிச்சத்தைத் தேடி அலைகிறாயே' எனக் கூறி விட்டுச் சென்றார். அப்போதுதான் பரசுராமருக்கு யாரோ மண்டையில் சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. ஆகா...என்ன தவறு செய்துவிட்டேன். என் தாய் தந்தைக் கூறியும் தத்தரிடம் முழுமையாக நான் அடைக்கலம் ஆகவில்லையே என்பதை உணர்ந்தவர் விரைவாக தத்தரிடம் சென்று அவள் கால்களில் விழுந்தார். தனக்கு மன அமைதியே இல்லை என்றும் அவர்தான் தனக்கு மன அமைதிக்கு வழி காட்ட வேண்டும் எனவும் கூறி ஒரு குழந்தைப் போல கண்ணீர் விட்டு அழுதார். தத்தர் அவரை தேற்றி எழுப்பினார்.

'கவலைப்படாதே பரசுராமா...நீ இங்கேயே ஒரு குடிலை அமைத்துக் கொண்டு தியானத்தை செய்' எனக்  கூறி அவருக்கு சில மந்திரங்களை உபதேசித்தார். அவரும் தத்தர் கூறியபடியே அந்த மலைப் பிரதேசத்தில் பல காலம் தங்கி இருந்தவாறு  தவம் செய்யலானார். அவருக்கு தத்தாத்திரேயேர் செய்த உபதேசமே திருபுரா ரகசியம் என்பது என்று கூறுகிறார்கள். திருபுரா ரகசியம் என்பது திருபுரசுந்தரியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட விதத்தில் சக்கர, யந்திர வழிபாடு செய்வதே. அந்த திருபுர சுந்தரி யந்திரம் மிக சக்தி வாய்ந்தது. அதை செய்தவாறு பல காலம் அங்கிருந்து மன அமைதி பெற்றார் பரசுராமர்.

Our Sincere Thanks to 
Santhipriya


https://santhipriyaspages.blogspot.in/ 

No comments

Powered by Blogger.