குருபெயர்ச்சி - ஓர் அறிமுகம் -1
குரு பிரகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிசிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகனாவார். இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறினார். அத்துடன் திட்டையில் கோயில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவகிரகங்களில் வியாழனாக அந்தஸ்தினைப் பெற்றார். அதனால் வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது.
இவர் இடம் பெயர்வதே குரு பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது. இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன்,வேதன், வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன.
இவரின் சொந்த வீடுகள் தனுசு மற்றும் மீனம். ஒளி படைத்த ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்குபவர் இவர்.
ஒன்பது கிரகங்களில் முழுமையான சுப கிரகம் வியாழன் என்றழைக்கப்படும் குரு. மெத்தப் படித்த மேதாவிகளை உருவாக்குபவர் இவர் தான். கற்றல், கற்றுக் கொடுத்தல் இரண்டையும் சரிவர செய்பவரும் இவரே. ஆசி கூறுபவரின் நாவில் அமர்பவர் இவர். அப்பேற்பட்ட மகோன்னதமான குருவின் ஆசிர்வாதத்தைத் ;தான் குரு பலன் என்கிறோம். ஒரு ராசியில் நின்று பார்ப்பதை குரு பார்வை என்றும் வியாழ நோக்கம் என்றும் சொல்கிறோம்.
குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும். நல்ல இடத்தில் திருமணம் முடியவேண்டுமெனில் இவருடைய ஆசி தேவை. குரு பார்க்க கோடி நன்மை என்பது மகா வாக்கியம். ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் நிச்சயமாகவும், வக்கிரமாக இருந்தாலும், எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி, குரு பார்த்து விட்டால் போதும். தானாக பலம் கிடைத்து விடும். பதப்படுத்துதல், பக்குவமாக்குதல், பலப்படுத்துதல் என்று மூன்று விஷயங்களை குருவின் பார்வை செய்கிறது. குழந்தைக்கும் முதல் முடி எடுத்து மொட்டை போடுவதற்கு குல தெய்வத்துக்கு செல்கிறோம். ஒருவகையில் பார்த்தால் குல தெய்வம் தான் ஒருவருடைய குரு! குல தெய்வத்திற்கு செய் என்று உணர்த்துபவர் தான் குரு. குல தெய்வமே தெரியவில்லையா, குருவின் முழு அம்சமான திருச்செந்தூர் முருகனையே குல தெய்வமாகக் கொள்ளலாம். ஸ்ரீகுரு பகவான் முறையற்ற உறவுகளை தடுப்பவர், சம்பிரதாயப்படி திருமணத்தையும் நடத்தி வைப்பவர். இதனால் தான் ஒரு திருமணம் கை கூட குரு பலன் வேண்டுமென்று ஜோதிடர் சொல்கிறார்.
எல்லா ராசிக்காரர்களுக்குமே குரு பலன் வேண்டும். ஆனால் எல்லா ராசிக்காரர்களுக்கும் குரு நன்மையையே செய்வார் என்று சொல்ல முடியாது. சில ராசிகளுக்கு தன் எதிர்மறை கதிர்வீச்சைத் தருவார். ஒருவர் ரிஷப ராசிக்காரர் எனில் குரு எட்டாமிடம் எனும் அஷ்டமாதிபதி ஆகிறார். எட்டாமிடத்திற்குரியவரான குரு அலைச்சலைத்தான் தருவார் என்பது ஜோதிட சட்டம். அதே போல மிதுனம், கன்னி ராசிக்காரர்களுக்கு பாதகாதிபதி என்கிற கெடுபலன்களை கொடுப்பார். துலாம் ராசிக்காரர்களுக்கு கடன், எதிரிகளை உருவாக்கக்கூடியவர். இப்படி அல்லல் தரக்கூடிய ராசிகளுக்கு அதிபதியாக இருக்கும் குரு எப்படி திருமணத்திற்கு உதவுவார், ஆனால் திருமணம் என்று வரும்போது அந்த சட்டம் செல்லுபடியாகாது. ஒருவருடைய தற்போதைய நிலைப்படி ராசிக்கு 2,5,7,9,11ம் வீடுகளில் குரு அமரும் போது நல்லது செய்வார். பலனை அளித்து கெட்டி மேளம் கொட்டச் செய்வார்.
ReplyDeletesir i need சனி பகவான் தியான மந்திரம்