மதுரை ஆதீனம் வரலாறு
மதுரை ஆதீனம் வரலாறு
மதுரை ஆதீனம் என்பது தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத்
திருமடங்களில் ஒன்றாகும். சில சமயங்களில் ஊடகங்களினால் பீடாதிபதி/மடாதிபதி
பதவியும்,
மடமும் ஆதீனம் என்று வேறுபாடின்றி ஒரேபெயரால்
அழைக்கப்படுகின்றன. மதுரை நகரில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கிபி பதினான்காம் நூற்றாண்டில் சைவசமய
நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் எனும் பாண்டிய மன்னன் சமண
மதத்தைத் தழுவிய போது அவனது ஆட்சிக்குட்பட்ட பாண்டிய நாட்டின் பகுதி முழுவதும் சமண
மதம் இருந்தது. சிவாலயங்களில் பூசைகள் நடைபெறவில்லை. மக்கள் மத்தியில் சிவ வழிபாடு
வீழ்ச்சியுற்றுக் காணப்பட்டது. கூன்பாண்டியனின் மனைவி மானியும்(மங்கையர்க்கரசி)
சைவ சமயத்தில் பற்றுக் கொண்டவர். மந்திரி குலச்சிறையாரும் சிவபக்தர். அரசியும், மந்திரியும் கலந்தாலோசித்து திருஞானசம்பந்தரை மதுரைக்கு
அழைத்தனர். மதுரைக்கு விஜயம் செய்த திருஞானசம்பந்தரை மந்திரி குலச்சிறையார்
இம்மடத்தில் தங்கவைத்தார். சமணர்கள் சம்பந்தரைக் கொலை செய்யும் நோக்கத்துடன்
சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு தீ வைத்தனர். சம்பந்தர் மடத்தை விட்டு வெளியில்
வந்து ஆலவாய் அண்ணலை தேவாரப்பதிகப் பாடலால் வேண்டினார். நெருப்பு வெப்பு நோயாக
மாறிக் கூன்பாண்டியனை வாட்டியது. சமணர்கள் மன்னனின் நோயைக் குணப்படுத்த பல முயற்சி
செய்தும் பலனில்லை. திருஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடி மன்னனின் வெப்பு
நோயை குணப்படுத்தினார். சமணர்கள் மீண்டும் போட்டிக்கு அழைத்தனர். அனல்வாதம், புனல்வாதம் அனைத்திலும் ஞானசம்பந்தர் வென்று
கூன்பாண்டியனின் கூன் முதுகு நோயை நீக்கி நின்றசீர் நெடுமாறனாக மாற்றினார்.
ஞானசம்பந்தப் பெருமான் சைவத்தையும், தமிழையும் மதுரையில் மீண்டும் நிலைநாட்டினார். இச்செய்திகள்
முழுவதும் சேக்கிழார் அருளிய பெரிய புராணத்திலும், சுந்தரர் அருளிய திருத்தொண்டர் தொகையிலும், நம்பியாண்டார்நம்பிகள் அருளிய திருத்தொண்டர் அந்தாதியிலும்
காணப்படுகிறது. தமிழகத் திருக்கோயில் கல்வெட்டுகள் மற்றும் தேவாரப்பதிகப் பாடல்கள்
ஆகியவற்றில் இவ்வரலாற்றுச் செய்திகள் சிறப்பாக இடம்பெற்று உள்ளன.

No comments