மயிலம் பொம்மபுர ஆதீனம் - சீடர் பரம்பரை
மயிலம் பொம்மபுர ஆதீனம் - சீடர் பரம்பரை
இவ்வாறு அருள்பெற்ற பாலசித்தர், பொம்மபுரத்தை அடுத்த பெருமுக்கல் மலையில் தங்கியிருந்து
வீரசைவ நெறிபரப்பிவந்த காலத்தில், சிதம்பரம்
பச்சைக்கந்த மரபைச் சார்ந்த அம்மவை என்பார் மகப்பேறு இன்றி வருந்தினார். இனிச்
சிவத்தொண்டே மேற்கொள்வது என்னும் திண்ணிய எண்ணத்தோடு பாலசித்தரை அணுகி, அவருக்குத் தம் கணவரும் தாமும் தொண்டு புரியலாயினர். அம்மவை
அம்மையார் சித்தருக்குத் தாமே சதுரக்கள்ளிப் பாலைக் கறந்து வந்து கொடுக்கும்
திருத்தொண்டினைச் செய்து வந்தார். அங்ஙனம் கள்ளிப்பாலைத் தந்த அளவில் சித்தர்
உண்டு எஞ்சிய கள்ளிப்பால் பிரசாத சேடத்தை அம்மவை அம்மையார் அருந்தியதால் குருவருள்
வழி ஓர் அழகிய ஆண்மகவை ஈன்றெடுத்தார். பாலசித்தருடைய அறிவுரைப்படி அவருடைய திருவருட்
பார்வையால் அக்குழந்தை வளர்ந்து, அவருக்குத்
தொண்டு செய்து வந்தது. அக்குழந்தையின் பக்குவநிலையுணர்ந்து சீடராக அமைத்துக்
கொண்டார் பாலசித்தர்.
சிவஞானபாலய தேசிகர்
முருகன் அருள்பெற்ற பாலசித்தர் பொம்மபுர மடத்தில்
அச்சீடருக்குச் சந்நியாசாசிரமம் தந்து, ஞானஉபதேசம் புரிந்து, பின்னர் ஆசாரிய அபிடேகமும் செய்து, தமது அமிசத்திலே ஓர் அமிசம் அவரிடத்தில் பதியும்படி
திருவருள் புரிந்து, அவர்தம்மை
நோக்கி “நீ பாலை உணவாகக் கொண்டு, சீடபரம்பரையோடு சிவஞானபாலய தேசிகன் என வாழ்வாயாக!” என்று அருள்புரிந்தார். மேலும், “இத்திருமடம் பாலயசுவாமிகள் திருமடம் என்றும் வழங்குவதாகுக!” என அருள்புரிந்த நிலையில் பாலசித்தரின் சீடர் பரம்பரை
மயிலம் திருமடத்தில் வீரசைவ நெறிபோற்றிச் சிவத்தொண்டை வாழையடி வாழையாக வளர்த்து
வருகிறது.
No comments