ஸ்ரீ இராமானுஜர் - 10 பகுதி-4-A
ஸ்ரீ இராமானுஜர் – பகுதி 4
இந்நிலையில் வரதராஜப் பெருமாள் கோவிலில் யாதவ பிரகாசரின்
தாய் இராமானுஜரை தரிசித்து அவரின் திவ்ய அழகைக் கண்டு தன் மகன் யாதவ பிரகாசர்
இராமானுஜரின் சீடராக வேண்டும் என்று விரும்பி மகனிடமும் அவ்வாசையைத் தெரிவித்தார்.
கொஞ்ச காலமாகவே மன சஞ்சலத்துடன் வாழ்ந்து வந்த யாதவ பிராகசருக்கும் அவரிடம்
சேர்ந்தால் நல்லது என்று தோன்றியது. ஆனால் அவரின் அகந்தை அதற்கு முட்டுக் கட்டை
போட்டது. தன் சீடனையே எப்படி குருவாக ஏற்றுக் கொள்வது என்று தயங்கினார். இது பற்றி
திருக்கச்சி நம்பிகளிடமும் பேசினார். அவரும் அப்படி செய்வது யாதவருக்கு மிகவும்
நல்லது என்று அறிவுறுத்தினார்.
ஆனாலும் அவர் குழப்பத்துடனே இருந்தார். ஓரு நாள் இரவு அவர்
கனவில் யாரோ ஒருவர் தோன்றி நீ இராமானுஜரின் சீடனாகினால் அது உனக்கு ஏற்றத்தைத்
தரும் என்று அறிவுறுத்தக் கண்டு கண் விழித்தார்.துணிச்சலை வரவழைத்துக் கொண்டு அவரை
சந்திக்க திருமடத்துக்குச் சென்றார். இராமானுஜரின் திருமுக அழகும், ஒளியும் அவரை திக்குமுக்காடச் செய்தது. யாதவரைக் கண்டதும்
இராமானுஜர் முகம் மலர்ந்து அவருக்கு தக்க ஆசனத்தைக் கொடுத்து அமரச் செய்தார்.
இராமானுஜர் சங்கு சக்கரங்களை இரு தோள்களில் பொறித்துக் கொண்டு திருமண் காப்பு
இட்டுக்கொண்டு ஒளிமயமாக இருப்பதை பார்த்து அவைகளுக்கான சாத்திரங்கள் என்ன என்று
இராமானுஜரைக் கேட்டார்.
அதற்கு இராமானுஜரின் கட்டளைப்படி கூரத்தாழ்வாரே பதில்
உரைத்தார். வைணவ சமயத்தின் திருச்சின்னங்கள், வழிபடும் நாராயணனனின் பெருமை, அனைத்துக்கும் பல்வேறு மேற்கோள்களை வேத, புராண, இதிகாசங்களில்
இருந்து எடுத்துக் காட்டி விளக்கினார். அவர் கொடுத்த விளக்கத்தைக் கேட்டு ஓடோடிச்
சென்று இராமானுஜரின் திருவடிகளைப் பற்றி அழுது அரற்றி, உண்மையிலேயே நீங்கள் ஆதிசேஷனின் அவதாரம் தான். அஞ்ஞானத்தில்
மூழ்கி நான் செய்த தவறுகளை மன்னித்து, பிறவிப்
பெருங்கடலைத் தாண்டத் தோணியாக இருந்து தாங்களே என்னை உய்விக்க வேண்டும் என்று
கேட்டுக் கொண்டார் யாதவர்.
இராமானுஜரும் அவரை ஏற்றுக் கொண்டு அவருக்கு சந்நியாசம் வழங்கினார்.
பஞ்ச சம்ஸ்காரம் செய்விக்கப் பட்டு கோவிந்த ஜீயர் என்னும் அடியேன் நாமமும்
பெற்றார். சந்நியாசிகளின் கடமை பற்றிய நூலை அவரை எழுதுமாறு இராமானுஜர் பணித்தார்.
அவ்வாறே தனது எண்பதாவது வயதில் “எதிதர்ம
சமுச்சயம்”
எழுதி சமர்ப்பித்தார் கோவிந்த ஜீயர். குருவுக்கே குருவாக
விளங்கிய எதிராஜரின் புகழ் மேலும் பரவியது.
எதிராஜரின் திருவரங்கப் பிரவேசம்
இராமானுஜர் துறவு பூண்ட விஷயம் கேள்விப்பட்டு பெரிய
நம்பிகள் திருவரங்கத்தில் இருந்தபடி உள்ளம் பூரித்தார். அவதார புருஷர் என்று
ஆளவந்தாராலேயே மதிக்கப்பட்ட எதிராஜரை திருவரங்கத்துக்கு அழைத்து வர மடத்தில் உள்ள
அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்தனர். அந்தப் பொறுப்பும் பெரிய நம்பியிடமே
ஒப்படைக்கப் பட்டது. போன முறை மனைவிகளின் பிணக்கினால் இராமானுஜரை திருவரங்கம்
அழைத்து வர முடியாமல் போனது. அதனால் இந்த முறை தான் மேற்கொள்ளும் காரியம் வெற்றி பெற
அரங்கனின் அருளை வேண்டினார் பெரிய நம்பி. உள்ளம் உருகி வேண்டி நின்ற பெரிய
நம்பியின் செவியில் படுமாறு ஒரு யோசனையைக் கூறினார் அரங்கன். “தெய்வீக இசையில் வல்லவர் உன் மகன் திருவரங்கப் பெருமாள்
அரையர். அவரை காஞ்சிக்கு அனுப்பி வைப்பாயாக. கச்சிப் பெருமான் முன் நின்று
இச்சையுடன் அரையரைப் பாடச் சொல். அப்பாட்டுக்கு மயங்கி வரதன் அவனிடம் உனக்கு என்ன
வேண்டும் கேள் தருகிறேன் என்பார், எதிராஜரே
வேண்டும் என்று உறுதியுடன் கேட்கச் சொல். பெருமாள் அருளாணையின்றி இராமானுஜர்
திருவரங்கம் வரமாட்டார்” என்று
அருளினார்.
அவ்வாறே நிகழ்ந்தது. மனமுருகிப் பாடியதும் என்ன வேண்டும்
கேள் என வரதன் சொல்ல, எதிராஜரைப்
பரிசாகத் தரவேண்டும் என்று திருவரங்கப் பெருமாள் அரையர் பிரார்த்தித்தார். அருளிச்
செயல்களில் பித்தரான வரதரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எதிராஜரை
திருவரங்கத்துக்கு அனுப்ப உடன்பட்டார். எதிராஜரும் வரதனைப் பிரிய மனமின்றி ஆனால்
தன் பொறுப்புகளை நிறைவேற்றும் பொருட்டுத் திருவரங்கம் கிளம்பினார்.
முதலியாண்டானும் கூரத்தாழ்வாரும் பின் தொடர எதிராஜர்
திருவரங்கம் வந்தடைந்தார். திருவரங்கமே இவரை வரவேற்க விழாக் கோலம் பூண்டிருந்தது.
பெரிய நம்பிகளின் தலைமையில் எதிராஜருக்கு பெரிய வரவேற்பு அளிக்கப் பட்டது.
எதிராஜர் திருவரங்கப் பெருமாள் சன்னதிக்குள் சென்று அரங்கனை கண் குளிரக் கண்டு
வணங்கினார். “வாரீர் எம் உடையவரே” என்று வாழ்த்தி வரவேற்றார் திருவரங்கப் பெருமான். அன்று
முதல் இராமானுஜருக்கு உடையவர் என்ற திருநாமமும் வழங்கலாயிற்று.
பெரிய நம்பிகள் இவரைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.
இராமானுஜரும் அவரின் தொடர்பினால் தான் தனக்கு அரங்கனுக்கு சேவை செய்யும் பேறு
கிடைத்தது என்று நன்றி நவின்றார்.
அன்று முதல், ”தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே!” என்னும் வாழ்த்துரை உறுதியாகும் வண்ணம் உடையவர் தாம் ஆற்ற
வேண்டிய திருப்பணிகளை ஆராய்ந்தார். தின விழா, பருவ விழா, மாத விழா, ஆண்டு விழா முதலான அனைத்து விழாக்களும் குறையின்றி நடைபெற, வேண்டிய பாதுகாப்புக்களை எல்லாம் சரிவர செய்யலானார்.
திருவரங்கர் கோவில் திறவுகோலும் கூரத்தாழ்வார் முயற்சியால் ஆறு மாத காலத்திற்குள்
இராமானுஜர் பொறுப்புக்கு வந்தது. அப்பொழுதிலிருந்து திருவரங்கர் சந்நிதியின்
கைங்கர்யங்களையும் அவர் முழுதுமாக ஏற்று நடத்தலானார். அது வரை திருவரங்க அமுதனார் என்பவர் பொறுப்பில்
அக்கோவில் திறவுகோல் இருந்தது. அமுதனார் அந்தாதி பாடுவதில் வல்லவர். இராமானுச
நூற்றந்தாதி பாடி இராமானுஜர் புகழை உச்சத்தில் வைத்தார் திருவரங்க அமுதனார்.
அவ்வந்தாதி இன்றளவும் புகழ் மங்காமல் ஒலித்து வருகிறது.
இவ்வாறு திருவரங்கத்தில் இருந்து கொண்டு திருக்கோயில்
திருப்பணிகளை திருத்தமாக செய்து கொண்டும் பெரிய நம்பியிடம் மறை பொருளுக்கு
விளக்கங்கள் கேட்டுக் கற்றுக் கொண்டும் இருந்தார் இராமானுஜர். ஒரு நாள் பெரிய
நம்பி திருகோட்டியூர் நம்பி என்பவரைப் பற்றி அவரிடம் கூறினார். ஆளவந்தாரின்
அருளுக்குப் பாத்திரமான அவரிடம் ஆளவந்தார் சில இரகசியமான உபதேசங்களை அருளிச்
செய்துள்ளார். அதனால் அவரைப் போய் சந்தித்து அவரிடம் பொதிந்து கிடக்கும் உபதேசச்
செல்வங்களைப் பெற்று வருமாறு இராமானுஜரிடம் பெரிய நம்பி கூறினார்.
No comments