ஸ்ரீ இராமானுஜர் - 11 பகுதி-4-B
திருக்கோட்டியூர் நம்பி
இதைக் கேட்ட உடையவர் பெரிய நம்பியிடம் விடைபெற்றுக் கொண்டு
திருக்கோட்டியூருக்குப் பயணமானார். நம்பியின் திருமாளிகை சென்று கூப்பிய
கரங்களுடன் காலில் விழுந்து வணங்கி தான் வந்த காரியத்தை எடுத்துச் சொன்னார். ஆனால்
திருக்கோட்டியூர் நம்பிகளோ அவரை அலட்சியமாக நாளை வா என்று அனுப்பிவிட்டார். இது
போல பதினெட்டு முறை திருப்பி அனுப்பபட்டார், எந்தவித உபதேசமும் கொடுக்கவில்லை.
அதனால் உடையவரும் கோவில் திருப்பணிகளில் கவனம் செலுத்தி சோழ
சிற்றரசன் அகளங்கனின் உதவியோடு மண்டபங்கள், நந்தவனம் மட்டும் அல்லாமல் மருத்துவ சாலைகளையும் நூல்
நிலையங்களையும் நிறுவி பராமரித்தார். சில காலம் பொறுத்துத் திருக்கோட்டியூர்
நம்பிகள் இவரின் புலமையையும், பக்தியையும், திருப்பணிகளையும் கேட்டறிந்து தண்டும் பவித்திரமாக அவர்
ஒருவர் மட்டும் வருமாறு தகவல் அனுப்பினார்.
உடனே உடையவரும், கூரத்தாழ்வாரையும் முதலியாண்டானையும் அழைத்துக் கொண்டு
அவரைப் பார்க்கச் சென்றார். தனித்துத் தானே வரச் சொன்னோம், இவர்களையும் அழைத்து வந்திருக்கிறாயே என்று
திருக்கோட்டியூர் நம்பிகள் வினவ உடையவர் ஆண்டானைத் தண்டாகவும், ஆழ்வாரை பவித்திரமாகவும் காட்டி உங்கள் ஆணைப்படியே
வந்துள்ளேன் என்று கூறினார். அவரின் சாதுர்யமான பதிலினால் மனமகிழ்ந்த
திருக்கோட்டியூர் நம்பி அம்மூவருக்கும் திரு மந்திர ரகசியங்களை உபதேசித்தார், ஆனால் இதை வெளியில் யாருக்கும் சொல்லக் கூடாது என்று
சத்தியத்தினுடன்.
மந்திரத்தின் உட்பொருளை அறிந்து கொண்ட உடையவரின் முகம்
ஞானத்தால் பல மடங்கு ஒளி வீசியது. உபதேசம் பெற்ற அடுத்த நாளே விலை உயர்ந்த ஒரு
இரத்தினத்தைத் தரப் போவதாகச் சொல்லி ஊரில் உள்ளோரை கோவிலுக்கு வருமாறு அழைத்தார்
உடையவர். அனைவரும் தங்கள் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு திருக்கோட்டியூர் கோவில்
முன் திரண்டனர். இராமானுஜர் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேல் ஏறி, நீங்கள் அனைவரும் பிறவிப் பெருங்கடலைத் தாண்டுவதற்குரிய மகா
மந்திரத்தை அறிவிக்கப் போகிறேன் என்று சொல்லி, “ஓம் நமோ நாராயணாய” என்ற எட்டெழுத்து மந்திரத்தை உரக்கக் கூவி அங்கிருந்தவர்களை
மும்முறை திரும்பத் திரும்பச் சொல்ல வைத்தார்.
கூடியிருந்த மக்களும் நன்றியில் அவரை விழுந்து வணங்கி
தங்கள் இல்லம் திரும்பினர். நன்றி தெரிவிக்க திருக்கோட்டியூர் நம்பியின் திரு
மாளிகைக்குத் உடையவர் சென்றார். அங்கு அவரோ இவர் செய்த செயலால் இவரைப் பார்த்ததும்
மிகுந்த சீற்றம் கொண்டு, உம் போன்ற
குருத் துரோகிகளுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது என்று கடும் சொற்களை
உதிர்த்தார். ஆனால் உடையவரோ அவரிடம் சாந்தமாக, குருவின் ஆணையை மீறினால் நரகமே கிட்டும் என்று தெரியும், ஆனால் நீங்கள் உபதேசித்தத் திருமந்திரத்தால் பல்லாயிரக்
கணக்கானோர் பிறவிப் பயன் அடைவர். அதற்கு பதில் நானொருவன் நரகம் செல்லுதல் நன்றே
என்று கூறினார். இந்த பதிலைக் கேட்டவுடன் நம்பிகளின் கோபம் தணிந்தது. தன்னுடைய
குறுகிய மனப்பான்மையையும் தன் சீடரின் உயரிய உதார குணத்தையும் நினைத்து உருகிப்
போனார். பரம கருணாமூர்த்தியான இராமானுஜர் இனி “எம்பெருமானார்” எனப் போற்றப்
படுவார் என்று நம்பிகள் அவருக்கு விருதினைக் கொடுத்து கௌரவித்தார்.
பின் திருக்கோட்டியூர் நம்பிகள் சரம ஸ்லோகப் பொருளையும்
இராமானுஜருக்கு உபதேசித்தார். சரம ஸ்லோகம் என்பது பகவத் கீதையின் பதினெட்டாம்
அத்தியாயத்தில் உள்ள 66வது ஸ்லோகம்.
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாப்பேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுசா
(எல்லா தர்மங்களையும் அறவே விட்டு, என்னை மட்டும் சரணடை. நான் உன்னை எல்லா பாவங்களில்
இருந்தும் விடுவிப்பேன் வருந்தாதே – கண்ணன்) என்பதாகும்.
No comments