ஸ்ரீ இராமானுஜர் - 12 பகுதி-4-C
ஸ்ரீ இராமானுஜர் சீடராக, குருவாக ….
1.பெரிய நம்பிகள். 2.திருக்கோட்டியூர் நம்பிகள். 3.திருமலையாண்டான். 4.ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர். 5.திருமலை நம்பிகள்.
இவ்வாறு ஐந்து பெரியவர்களிடம் இவர் பாடங்கள் கற்றுக்
கொண்டதால் மற்றொரு ஆளவந்தாராகவே எம்பெருமானார் காட்சி அளித்தார். எம்பெருமானார்
கற்றலலிலும் கற்பிப்பதிலும் நிகரற்று விளங்கி உலகினரை முக்தி நெறிக்கு அழைத்துச்
சென்றார்.
எதிரி உள்ளேயே
திருவரங்கர் கோவிலை மிகவும் செம்மையாக நிர்வாகம் செய்து
வந்ததினால் அதை முன்பு நிர்வாகம் செய்த ஸ்தானிகர் என்னும் பதவியில் இருந்தவரின்
பெருமையும் தலைமையும் நாளடைவில் குறைந்து போயிற்று. இராமானுஜர் உயிரோடு இருக்கும்
வரை தன் புகழ் ஒங்காது என்று தீர்மானித்து எம்பெருமானாரை விஷம் வைத்துக் கொல்ல
தீர்மானித்தார்.
உடையவர் தினம் பிக்ஷை எடுத்தே உண்பவர். அவர் தினம் ஏழு
வீடுகளுக்குச் சென்று அன்னப் பிச்சை எடுப்பார். ஸ்தானிகர் அதில் ஒரு வீட்டு சொந்தக்காரனை
பொருளாசையில் மயக்கி அவன் மனைவியை விஷம் கலந்த உணவை பாத்திரத்தில் போடச்சொன்னார்.
மனைவிக்கு இந்த மகா பாவச் செயலை செய்ய விருப்பம் இல்லை. அதனால் தந்திரமாக விஷம்
கலந்த உணவை அவர் வந்து பிச்சைக் கேட்கும்போது அவர் பாத்திரத்தில் இடாமல் அருகில்
திண்ணையில் வைத்து அவர் காலில் விழுந்து வணங்கினாள். இச்செயலின் உட்பொருளை உடனே
புரிந்து கொண்ட உடையவர் அந்த உணவில் விஷம் கலந்திருப்பதை உணர்ந்து, அவ்வுணவை தன் பாத்திரத்தில் போட்டுக் காவிரிக் கரைக்குச்
சென்று காவிரி ஆற்றில் கலந்து விட்டு அன்று முழுவதும் பட்டினியாக இருந்தார்.
இந்த விஷயம் கேள்விப்பட்ட திருக்கோட்டியூர் நம்பிகள் உடனே
கிளம்பி திருவரங்கம் வந்தார். அவர் வருவது தெரிந்தவுடன் உடையவர் அவரை எதிர்கொண்டு
அழைக்கக் காவிரி கரைக்குச் சென்றார். அங்கு அவரைப் பார்த்தவுடன் கொதிக்கும்
மணலிலேயே சாஷ்டாங்கமாக விழுந்து தன் குருவை வணங்கினார். அவரை எழுந்திரு என்று
சொல்லாமல் சிறிது நேரம் திருக்கோட்டியூர் நம்பிகள் பேசாமல் இருந்தார். இதைக் கண்டு
மனம் பதைபதைத்து கிடாம்பியாச்சான் என்பவர் இப்படித்தான் அவரை மணலில் போட்டு
வருத்துவதா என்று திருக்கோட்டியூர் நம்பிகளையே கடிந்து கொண்டு, தானே கொதிக்கும் மணலில் விழுந்து தன் மேல் உடையவரை சாற்றிக்
கொண்டார்.
உடனே நம்பிகள், உன்னை மாதிரி
ஒருவருக்காகத் தான் இங்கே வந்தேன். இனி நீரே இவருக்கு தினம் உணவு சமைத்துத் தர
வேண்டும்,
உடையவர் பிக்ஷை எடுக்கப் போக வேண்டாம் என்று கட்டளை
இட்டார். ஆனாலும் ஸ்தானிகர் வேறு எப்படியாவது அவரை விஷம் வைத்துக் கொல்ல வேண்டும்
என்று திட்டமிட்டு அவர் தினம் அருந்தும் பெருமாள் தீர்த்தத்தில் விஷம் கலந்து
விட்டார். ஆயினும் அதை அருந்தி அவருக்கு ஒன்றும் ஆகாதது கண்டு தன் தவறை உணர்ந்து
தன் கொடிய செயலுக்கு மன்னிப்புக் கோரி எம்பெருமானார் திருவடிகளில் விழுந்து
வணங்கினான் அந்தக் கோவில் ஸ்தானிகன். நஞ்சிட்டவனுக்கும் தனது நல்ல உள்ளத்தைப்
புலப் படுத்திக் கருணை புரிந்தார் உடையவர்.
No comments