ஸ்ரீ இராமானுஜர் - 13 பகுதி-4-D
யஜ்ஞமூர்த்தி
யஜ்ஞமூர்த்தி என்ற மாயாவாதக் கொள்கையுடையவர் எம்பெருமானால்
வைணவம் தழைத்தோங்குவது கண்டு பொறாமை கொண்டு காசியில் இருந்து வாதம் புரிய
திருவரங்கம் வந்தார். மிகவும் மேதா விலாசம் நிறைந்தவர். ஆதாலால் அவரிடம் 17 நாட்கள் இராமானுஜர் தர்க்க வாதம் செய்து கடைசியில் அரங்கன்
அருளால் எதிராளியின் கர்வத்தை ஒழித்து அவரையும் வைணவம் தழுவ வைத்தார். வித்யா
கர்வத்தால் ஆடம்பரமாக வாழ்ந்த யஜ்ஞமூர்த்தியின் நெஞ்சில் எளிமையும் அடக்கமும்
ஏற்படலாயிற்று. அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்னும் பெயர் உடையவரால்
சாற்றப்பெற்றார். அவர் புலமை வீணாகாமல் இருக்க அவரை நூல்கள் எழுதச் சொன்னார்
உடையவர். அதன் படி அவர் தீந்தமிழில் “ஞான சாரம்”, ‘பிரமேய சாரம்” ஆகிய நூல்களை
இயற்றி அருளினார். குருவுக்கும் பெருமானுக்கும் சேவை செய்து அவர் தன் காலத்தைக்
கழித்தார்.
சீடரின் சீலம்
இவருடைய மாணாக்கர்களில் ஒருவரான அனந்தாழ்வான் என்பவர்
திருமலைக்குப் புஷ்பக் கைங்கர்யம் செய்ய அனுப்பினார். அங்கு அதை அவர் மிகச்
சிறப்புடன் செய்து வருவதாகக் கேள்விப்பட்டு அதைப் பார்க்க ஆசைக் கொண்டு
திருமலைக்குத் தன் சீடர்களுடன் திருவரங்கத்தில் இருந்து பயணமானார் இராமானுஜர்.
வழிப் பயணத்தில் இரண்டாம் இரவு அஷ்டசகஸ்ரம் என்ற ஊரில்
தங்குவதாக ஏற்பாடு. முன்னமே தன் சீடர் யாகநேசர் என்னும் செல்வந்தர் வீட்டில் தங்கப்
போவதாக இராமானுஜர் இரு சீடர்கள் மூலம் தகவல் அனுப்பினார். அந்தத் தகவலைப் பெற்றுக்
கொண்டவர்கள் அச்சீடர்களை உபசரிக்கத் தவறிவிட்டனர். அதை அறிந்த உடையவர் இன்னொரு
சீடரான வரதாச்சாரியார் என்பவர் வீட்டுக்குச் சென்று தங்க முடிவு செய்தார். இவர்
போன சமயம் அவர் பிட்சைக்குப் போயிருந்தார். வீட்டில் மனைவி இலட்சுமி அம்மாள்
மட்டுமே இருந்தார். இவர்கள் உணவருந்தித் தங்க வந்திருப்பதை அறிந்து அவர்களை
வரவேற்று உபசரித்து, உணவு
சமைக்கும் வரை குளக்கரையில் தங்கி இளைப்பாறுமாறு கேட்டுக் கொண்டார்.
அவர்களோ பரம ஏழை. கணவர் பிட்சை எடுத்து வந்தால் தான்
இருவருக்குமே உணவு. இவ்வளவு பேருக்கு எப்படி அமுது படைப்பது? அவ்வூரில் வணிகர் ஒருவர் இலட்சுமி அம்மாளின் அழகில் மயங்கி
இருப்பது அவருக்குத் தெரியும். அவரிடம் போய் அவர் இச்சைக்கு இணங்குவதாகச் சொல்லி
அமுது படைக்க வேண்டிய பண்டங்களை வாங்கி வந்தார்.
அன்புடன் அமுது சமைத்து வந்தவர்களுக்குப் பரிமாறினார்.
எம்பெருமானார் இலட்சுமி அம்மாளை ஆசிர்வதிக்கும்போது பிட்சை எடுக்கப் போன
வரதாச்சாரியார் திரும்பி வந்தார். வீட்டுக்கு வந்தவர்களை மனைவி இவ்வளவு நன்றாக
உபசரித்தது இருப்பதைக் கண்டு அவருக்குப் மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் எப்படி செய்ய
முடிந்தது என்று ஆச்சரியப்பட்டார். மனைவி அவரிடம் அனைத்தையும் சொன்னார். கோபம்
கொள்ளாமல் பெரு மகிழ்ச்சியே அடைந்தார் அவர். “குரு வடிவில் வருபவர் இறைவனே. அவர் பொருட்டு அழியும்
இவ்வுடலைக் கொண்டு அழியாப் பேரின்பத்தை நீ தேடிக் கொண்டாய், உன்னை மனைவியாய் பெற்ற நான் பாக்கியவான்” என்று சொல்லி அவள் கையைப் பிடித்துக் கொண்டு இருவரும்
உடையவர் காலில் விழுந்தனர். வரதாச்சாரியார் வாயிலாக அனைத்தையும் கேள்விப்பட்டார்
எதிராஜர். சற்றே துணுக்குற்றார். அவர்களை உணவு உண்ணச் சொல்லி மீதமிருந்த உணவை
வணிகன் வீட்டுக்கு எடுத்துச் சொல்லச் சொன்னார்.
அந்தப் பிராசதத்தை உண்ட வணிகன் பசியாறியவுடன் தன் குணம்
மாறுவதை உணர்ந்தான். இலட்சுமி அம்மாளிடம், “நான் நெடுங்காலமாக மிகப் பெரியப் பாவச் செயலை செய்ய
இருந்தேன்,
விலங்காக இருந்த நான் இப்போது மனிதனாக மாறிவிட்டேன். உங்கள்
குருவை தரிசிக்க அழைத்துச் செல்வீர்கள் என்றால் என் பிறப்புக் கடைத்தேறி விடும்” என்றான்.
இலட்சுமி அம்மாள் தன் கணவனிடம் இதைக் கூற மனமகிழ்ந்த அவர்
அவ்வணிகனை உடையவரிடம் அழைத்துச் சென்றார். மூவரையும் தலையில் கை வைத்து ஆசீர்வாதம்
செய்த எம்பெருமானார் அம்மூவரின் மனக் கலக்கத்தையும் போக்கினார்.
வணிகன் தன்னையும் சீடனாக்கிக்
கொள்ள விண்ணப்பித்தான். அவ்விருப்பத்தை நிறைவேற்றினார் உடையவர். தன் சொத்து
அனைத்தையும் உடையவரின் திருவடிக்கே காணிக்கை ஆக்கினான் அவ்வணிகன். அதை இராமானுஜர்
ஏழை வரதாச்சாரியாரிடம் அளிக்க, அவரோ குருவின் பலத்தால் எளிமையான வாழ்வு இன்ப மயமாகவும், அமைதியாகவும் நடப்பதாகக் கூறி
அதை மறுத்துவிட்டார். பணப் பற்றும், மன மாசும் இல்லாத அந்த அடியவரின் சீலத்தைக் கண்டு மனம்
மகிழ்ந்தார் எதிராஜர். அனைவராலும் பின்பற்றத் தக்கது அவர் நடத்தை என்று உரைத்தார்.
No comments