ஸ்ரீ இராமானுஜர் - 14 பகுதி-5-A
ஸ்ரீ இராமானுஜர் பகுதி – 5
பெரிய திருமலை நம்பி
பிறகு பயணத்தைத் தொடர்ந்து திருமலை அடிவாரத்துக்குச் சென்று
அங்கு தங்குமிடம் ஏற்படுத்திக் கொண்டார் இராமானுஜர். வேங்கடவனையும் இலட்சுமியையும்
ஆழ்வாரக்ளையும் தியானித்து உள்ளத்தைத் தூய்மைப் படுத்திக் கொண்டார். பூலோக
வைகுந்தமாகத் திகழும் திருமலையில் பெருமாளும் தாயாரும் வசிப்பதால் மலை மேல் நடந்து
செல்ல அவர் மனம் ஒப்பவில்லை.
அவர் வருகையைத் தெரிந்து கொண்டு, யாதவராஜன் என்னும் அரசன் அவரை தரிசிக்க வந்தான். அவரை
வணங்கி அவரின் சீடனாக வேண்டும் என்னும் விருப்பத்தைத் தெரிவித்தான். இராமானுஜரும்
அவனை சீடனாக ஏற்றுக் கொண்டார். குரு தட்சணையாக அம்மன்னன் அவருக்கு அளித்தக்
கிராமங்களை அங்கிருந்த ஏழை எளியவர்களுக்கேப் பிரித்துக் கொடுத்தார். திருமலை
திருப்பதியில் வசிக்கின்ற துறவிகளும் அவரை தரிசிக்க வந்தனர். அவர்கள் அவரை திருமலை
மேல் பாதங்கள் படக்கூடாது என்னும் எண்ணத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்
மலை ஏறவில்லை என்றால் சாதாரண மக்களும் ஏறத் தயங்குவார்கள் என உணர்த்தியதும், அடியவர்களின் வேண்டுகோளை ஆணையாக எடுத்துக் கொண்டு
அவர்களுடன் மலை ஏறினார்.
பாதி தூரத்தில் இவர் களைத்திருக்கும் சமயத்தில் மலையில்
இருந்து இறங்கி வந்து கொண்டிருந்த ஒரு முதியவர் இவருக்குப் பெருமாள் தீர்த்தமும்
பிரசாதமும் அருளினார். அவர் வேறு யாரும் இல்லை, இவருக்குப் பெயர் சூட்டிய இவரின் தாய் மாமன் பெரிய திருமலை
நம்பிகளே ஆவார். பின்பு திருவேங்கடவன் திருச்சன்னிதியை அடைந்தார். அங்கு பெருமாளை
தரிசித்துவிட்டுத் தன் சீடனான அனந்தாழ்வானைக் (ஆனந்தாச்சாரியார்) கண்டு அவன்
சேவையின் மேன்மையைப் பார்த்துப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்.
திருமலையில் மூன்று நாட்கள் இருந்து பின் திருப்பதி
வந்தடைந்து தன் மாமா திருமலை நம்பியின் திருமாளிகையில் தங்கினார். அங்கேயே ஒரு
வருட காலம் இருந்து இராமாயணத்தை திருமலை நம்பியிடம் பயின்றார்.
No comments