Header Ads

ஸ்ரீ இராமானுஜர் - 15 பகுதி-5-B

கோவிந்த பட்டர்


அங்கே இவரின் உயிரை யாதவப் பிரகாசரின் சூழ்ச்சியில் இருந்து காப்பாற்றிய சித்தி மகன் கோவிந்தனை பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்தார். திருமலை நம்பியின் அணுக்கச் சீடராக சேவை செய்து கொண்டிருந்தார் கோவிந்தன். அவரைக் கண்டதும் ஆனந்தத்தில் அவரை அணைத்துக் கொண்டார். அங்கிருந்த பொழுது தன் தம்பி கோவிந்தனின் உயரிய ஜீவகாருண்ய சேவையையும் குருவுக்குச் செய்யும் பணிவிடைகளையும் பார்த்துப் பெருமிதம் கொண்டார். யாதவ பிரகாசருடன் கோவிந்தர் காசிக்குப் பயணம் மேற்கொண்டபோது அங்கு அவர் கங்கையில் நீராடினார். அப்பொழுது அவருக்குக் கையில் ஒரு லிங்கம் கிடைத்தது. அவர் அந்த லிங்கத்தைக் காளஹஸ்தியில் பிரதிஷ்டை செய்து சைவ மதத்தைத் தழுவி வாழ்ந்து வந்தார். இந்த விஷயம் கேள்விப்பட்ட இராமானுஜர் திருமலை நம்பியிடம், கோவிந்தரிடம் வைணவ மதத்தின் சிறப்பினை எடுத்துக் கூறி வைணவத்துக்கே மறுபடியும் அவரை அழைத்து வருமாறு கூறினார். அவ்வாறே திருமலை நம்பியும் காளஹஸ்தி சென்று கோவிந்தரிடம் தர்க்க வாதம் புரிந்து வைணவத்தின் சிறப்பை எடுத்துரைத்து கொடுத்தப் பணியை செவ்வனே செய்து முடித்தார். அது முதல் கோவிந்தர் திருமலை நம்பியின் சீடராகவே இருந்து வந்தார்.

திருப்பதியை விட்டுக் கிளம்பும் போது உடையவரிடம் திருமலை நம்பி உனக்கு என்ன வேண்டுமோ கேள் தருகிறேன் என்றார். அதற்கு அவர் தன்னுடன் கோவிந்த பட்டரை அனுப்பும்படி வேண்டி யாசித்தார். திருமலை நம்பியும் கோவிந்தரை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார். இராமானுஜர் பின் கடிகாசலம் திருப்புட்குழி ஆகிய ஊர்கள் வழியாக காஞ்சியை வந்தடைந்தார்.

இராமானுஜரும் கோவிந்தரும் காஞ்சி வந்தடைந்த பிறகு திருக்கச்சி நம்பிகளிடம் கோவிந்தனை அறிமுகம் செய்து வைத்தார். அவரின் நல்ல குணங்களை எடுத்துரைத்து கோவிந்தரின் சேவை மனப்பான்மை மேலும் வளர திருக்கச்சி நம்பிகளை ஆசீர்வதிக்கச் சொன்னார். கோவிந்த பட்டருக்குத் தன் குருவான திருமலை நம்பியைப் பிரிந்து உடல் வாட்டமடையத் துவங்கியது. இதனை கவனித்த உடையவர் அவருடன் இரு சீடர்களை துணைக்கு அனுப்பி திருப்பதியில் அவர் மாமனும் குருவுமான திருமலை நம்பியிடம் விட்டுவிட்டு வரச் சொன்னார்.


அங்கே போன கோவிந்த பட்டரை திருமலை நம்பி திரும்பிக் கூட பார்க்கவில்லை, திருமாளிகைக்குள் வரச் சொல்லவும் இல்லை. அவர் மனைவி கோவிந்த பட்டருக்காகப் பரிந்துரைக்க, அதற்கு அவர் விற்றப் பசுவுக்குப் புல் அளிப்பவருமுண்டோஎன்று கடிந்து கூறி திரும்பவும் அவனை இராமானுஜரிடமே போகச் சொல் என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்று சென்று விட்டார். கோவிந்தரும் ஏதும் அருந்தாமல் தன்னுடன் வந்தவர்களுடன் திரும்ப காஞ்சி வந்தடைந்தார். எம்பெருமானாரின் திருவடிகளில் விழுந்து அடியேனை தம்பி என்று பாராமல் சீடனாக ஏற்று அருள் புரிய வேண்டும்என்று கேட்டுக் கொண்டார். திருமலை நம்பியிடம் எத்தகைய குரு பக்தியுடன் நடந்து கொண்டாரோ அதே குரு பக்தியுடன் அதன் பின் இராமானுஜரிடமும் நடந்து கொண்டார்.

No comments

Powered by Blogger.