ஸ்ரீ இராமானுஜர் - 16 பகுதி-5-C
கோவிந்த பட்டர் எம்பார் ஆனார்
காஞ்சியில் இருந்து அனைவரும் திருவரங்கம் சென்றடைந்தனர்.
அங்கே யார் கோவிந்தரைப் புகழ்ந்தாலும் அது குருவுக்கே சொல்லப்படும் புகழ்ச்சியாக
அவர் எடுத்துக் கொண்டார். ஒரு முறை வேசி வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார்
என்று அவர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. இராமானுஜர் அவரை விசாரித்தார், “ஆச்சாரியரே, தங்கள் இனிய
நற்குணங்களை அந்த வேசி அமுத கானமாகப் பாடிக் கொண்டிருந்தாள். முடியும் வரை கேட்டு
மகிழவே அந்தத் திண்ணையில் அமர்ந்திருந்தேன்” என்றார்.
திருமணம் புரிந்திருந்தும் இல்லற வாழ்வில் நாட்டம் இல்லாமல்
இருந்தார் கோவிந்தர். குருவின் கட்டளையின் பேரில் ஓர் இரவு மனைவியுடன் கழித்தார், ஆனால் அந்த இரவில் அவருக்கு காமம் அறவே ஒழிந்து, உள்ளத்தே பகவானின் அருட் பேரொளி நிறைந்திருந்தது. இதை
உடையவரிடம் அவர் கூறினார். இதைக் கேட்ட இராமானுஜர் இந்திரியங்களை வெல்லும் ஆற்றல்
உனக்கிருந்தால் நீ சந்நியாசம் வாங்கிக் கொள் என்று அறிவுருத்தினார். இதைக்
கேட்டுப் பேரானந்தம் அடைந்தார் கோவிந்தர். தன் தாயாரின் அனுமதியோடு சந்நியாசம்
பெற்றுக்கொண்டார். இராமானுஜரும் தமக்களித்த எம்பெருமானார் என்னும் பட்டத்தை
கோவிந்தருக்குச் சூட்டினார்.
தாஸ்ய பக்தியின் வடிவமாக விளங்கிய கோவிந்தர் தன் ஆச்சாரியனின்
திருப்பெயரை ஏற்க அஞ்சி, எம்பெருமானார்
என்ற திருநாமத்தைச் சற்று மாற்றி எம்பார் என்றே அழைக்கப்படலானார்.
No comments