ஸ்ரீ இராமானுஜர் - 17 பகுதி-5-D
ஸ்ரீ பாஷ்யம் அருளல்
இராமானுஜருக்குத் திருவரங்கத்தில் ஆயிரமாயிரம் சீடர்கள்
சேரலாயினர். அதில் எழுபத்தி நான்கு பேர்கள் சிம்மாசனாதிபதிகள் என்று அழைக்கப்
படலாயினர். ஆளவந்தாரின் குறையைப் போக்க தான் கொடுத்த வாக்கை இன்னும்
நிறைவேற்றவில்லை என்பதை நினைவு கூர்ந்தார் உடையவர். பிரம்ம சூத்திரத்துக்கு
பாஷ்யம் (விளக்கவுரை) எழுதுவதாக அவர் வாக்களித்திருந்தார்.
ஸ்ரீ போதாயன மகரிஷி எழுதிய கிரந்தம் கிடைத்தாலன்றி அவரால்
பிரம்ம சூத்திரத்துக்கு விளக்கம் எழுத முடியாது. அது காஷ்மீரத்தில் உள்ள சாரதா
பீடத்தில் இருக்கிறது என்று தெரிய வந்து தன் சீடர்களுடன் அங்கு யாத்திரையாகப்
புறப்பட்டார். மூன்று மாதங்களில் அங்கு சென்று அந்த மடத்து
மக்களுடன் நன்முறையில் பழகி தான் வந்த காரியத்தைச்
சொன்னார். போதாயன மகரிஷிக்கு நிகரான புலமையை உடையவர் இவர் என்று அவர்கள் புரிந்து
கொண்டு எங்கே இந்நூல் இவர் கைக்குக் கிடைத்தால் அத்வைத மதத்துக்கே விரோதி
ஆகிவிடுவாரோ என்று அஞ்சி புத்தகம் செல்லரித்து விட்டது என்று பொய் சொல்லிவிட்டனர்.
மிகவும் மன வருத்தத்துடன் இரவு உறங்கச்சென்ற எம்பெருமானார்
கனவில் சரஸ்வதி தேவியே வந்து அந்தப் புத்தகத்தைக் கொடுத்து, உடனே இவ்விடத்தை விட்டு விரைவில் போய் விடுங்கள் அல்லது
துன்பம் நேரும் என்று அருளினார்.
அதனால் இராமானுஜரும் உடனே தன் குழுவுடன் தென் திசை நோக்கிக்
கிளம்பினர். ஆனால் சில நாட்களிலேயே சாரதா தேவி மடத்தினர் நூல் நிலையத்தில் உள்ள
நூல்களை சரி பார்க்கையில் இந்தக் கிரந்தம் இல்லாதது கண்டு வந்தவர்கள் தான்
எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று ஊகித்துப் புத்தகத்தைத் திரும்ப வாங்க
காஷ்மீரப் பண்டிதர்கள் சிலர் புறப்பட்டனர். ஒரு மாத காலத்திலேயே உடையவர் குழுவைக்
கண்டுபிடித்து புத்தகத்தை மீட்டுச் சென்றனர்.
இந்த ஒரு மாத காலத்தில் சிறு பகுதியை மட்டுமே இராமானுஜர்
கற்றிருந்தார். மீதியைக் கற்பதற்குள் புத்தகம் பறிபோனதால் மிகுந்த வருத்தமுற்றார்.
கூரத்தாழ்வார் அவரை சமாதானப் படுத்தி முந்தின இரவே முழு கிரந்தத்தையும் தான்
மனப்பாடம் செய்து விட்டதாகக் கூறினார். இதைக் கேட்டு வியப்பும் மகிழ்ச்சியும்
அடைந்த இராமானுஜர் அவர் மூலம் முழு கிரந்தத்தையும் எழுதி வாங்கி அதற்கு
விளக்கவுரையும் உடனே எழுதினார்.
திருவரங்கம் வந்த பின்னர் பிரம்ம சூத்திரத்திற்கு விருத்தி
உரை எழுதும் பணியில் தன்னை முழுதுமாக ஈடுபடுத்தி விளக்கவுரையை இராமானுஜர் சொல்ல
கூரேசர் எழுதினர். தியானம், உபாசனை, பக்தி, ஆகியவற்றின்
மூலமே முக்தி அடைய முடியும் என்பதே வேத வேதாந்தத்தின் சாரம் என்று கூறி அவருடைய
சித்தாந்தத்தை ஸ்ரீ பாஷ்யத்தில் உறுதி படுத்தினார்.
ஆளவந்தாரின் திருவுள்ளக் குறையாக இருந்தவற்றுள் முதலாவதான
குறையை,
திவ்யப் பிரபந்தத்தைத் “திராவிட வேதம்” என்னும்
பெயரால் உலகறியச் செய்து, அதனை வடமொழி
வேதத்துக்கு ஒப்பானது என்று நிறுவியதன் மூலம் போக்கியருளினார். பிரம்ம
சூத்திரத்துக்கு ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்ததன் மூலம் இரண்டாவது விருப்பத்தையும்
பூர்த்தி செய்தார்.
No comments