ஸ்ரீ இராமானுஜர் - 18 பகுதி-5-E
திவ்ய தேச யாத்திரையும் வைணவ சமயத்தைப் பரப்புதலும்
பின்னர் அவர் தன் எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகளுடனும், எண்ணற்ற சீடர்களுடன் யாத்திரையாகப் பல ஊர்களுக்குப் போனார்.
போகிற இடங்களில் எல்லாம் வைணவக் கொள்கைகளைத் தம் வாதத் திறமையால் பல இடங்களிலும்
பரப்பினார்.
கும்பகோணத்தில் ஆரம்பித்து, திருவனந்தபுரம் வரை தெற்கே சென்று பலக் கோவில்களில் வழிபாடு
செய்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் சேர்ந்ததும் சூடிக் கொடுத்தச் சுடர்கொடியின்
நிறைவேறா ஆசை ஒன்றை நினைவு கூர்ந்தார். தனது திருமணத்தின் போது நூறு அண்டாக்களில்
அக்கார அடிசில் செய்து சீதரனக்கு அர்ப்பணிக்க அவள் ஆசை கொண்டிருந்தது கை கூடாமல்
போயிருந்தது. அந்த சன்னதியில் அது அவருக்கு நினைவுக்கு வந்தது. தங்கைக்கு ஒரு
தமையன் தருகிற திருமணச் சீராக நூறு அண்டாக்களில் நெய் ஒழுக அக்கார அடிசில் ஆக்கி
வடபத்திர சாயிக்கு வழங்கினார். அந்த நொடியே ஆண்டாள் அவர் அகக்கண் முன் தோன்றி “எம் அண்ணாவே” என்று
வாஞ்சையோடு கூப்பிட்டாள். அதனால் தான் இன்றும் வில்லிப்புத்தூர் ஆண்டாள் “பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே” என்று போற்றப்படுகிறாள்.
பின் வடக்கு நோக்கிப் பயணமானார். துவாரகை, மதுரா, பிருந்தாவனம், சாலிக்கிராமம், சாகேதம், பத்ரிநாத், நைமிசாரிண்யம், புஷ்கரம் ஆகிய திவ்ய தேசங்களை தரிசித்துப் பின் காஷ்மீரம்
சென்றார். அங்கே சாரதா தேவியை வணங்கி “கப்யாசம் புண்டரீகாக்ஷம்” என்பதன் பொருள் சிறப்பை இராமானுஜர் விளக்கக் கேட்டு ஸ்ரீ
பாஷ்யம் அருளியமைக்கு சரஸ்வதியே மகிழ்ந்து அவருக்கு “ஸ்ரீ பாஷ்யகாரர்” என்னும் பட்டத்தை அளித்தார்.
காஷ்மீர மன்னர்களும் பண்டிதர்களும் இராமானுஜரின்
புலமைக்குத் தலை வணங்கி அவருக்குச் சீடராயினர். பின் காசி சென்று, ஜகன்னாதத்தில் ஒரு மடமும் நிறுவினார் இராமானுஜர்.
இந்த சமயத்தில் திருமலையில் இருப்பது திருமாலா இல்லை சிவனா
என்று வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் பெரும் சண்டை நடந்து கொண்டிருந்தது. அதற்கு
ஒரு முடிவு காண இராமானுஜர் முயற்சி செய்தார். திருவேங்கடவன் முன் சங்கு சக்கரமும், சிவனுக்குரிய சூலம் ஆகியவைகளை வைத்து இரவு திருக்கதவு
மூடப்பட வேண்டும். விடிகாலை எதனை இறைவன் தரித்து இருக்கிறார் என்று பார்த்து
முடிவு செய்யலாம் என்று ஆலோசனை கூறினார். அவ்வாறே செய்யப் பட்டது. அடுத்த நாள்
விசுவரூப தரிசனத்துக்குக் கதவு திறந்தபோது சங்கு சக்கரங்களைத் தரித்தவராய்
திருவேங்கடவன் காட்சி அளித்தார்.
இவ்வாறு வடக்கே காஷ்மீரம் முதல் தெற்கே திருவேங்கடம் வரை
அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்திப் பின் திருவரங்கம் வந்தடைந்தார்.
No comments