ஸ்ரீ இராமானுஜர் - 9 பகுதி-3-C
துறவு
உடனே இராமானுஜர் அவரை கடைத்தெருவுக்கு அழைத்துச் சென்று
வெற்றிலை பாக்குப் பழம் இவற்றை வாங்கிக் கொடுத்துத் தன் கைப்பட ஒரு கடிதமும்
எழுதிக் கொடுத்து இப்போ திரும்பவும் வீட்டிற்குச் சென்று மனைவியின் பிறந்த
வீட்டில் இருந்து வருவதாகச் சொல்லி கொடுங்கள் என்றார்.
அவ்வாறே அந்தப் பிராமணரும் செய்ய அவருக்குப் பெரிய
வரவேற்பும் உபசரிப்பும் தஞ்சம்மாளிடம் இருந்து கிடைத்தது. அப்போது ஒன்றும்
தெரியாதது போல இராமானுஜரும் வீட்டிற்குள் நுழைய தஞ்சம்மாள் அந்தப் பிராமணர் கொண்டு
வந்தக் கடிதத்தைக் காட்டுகிறார். அதில் தஞ்சம்மாளின் தந்தை தன் இளைய மகளுக்குத்
திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதால் மகளை உதவிக்கு அனுப்புமாறு தன் மாப்பிள்ளைக்கு
எழுதியது போல இருந்தது. தங்களால் வர முடியாவிட்டாலும் மகளை அனுப்புமாறு
அக்கடிதத்தில் எழுதியிருந்ததைப் பார்த்துத் தஞ்சம்மாள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து
உணவை உட்கொண்டு கணவனிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு தன் தாய் வீடு
புறப்பட்டாள்.
இராமானுஜர் நேராக வரதராஜன் சந்நிதிக்குச் சென்று
நெடுஞ்சாண்கிடையாக அவர் முன் விழுந்து, எனக்குத் துணையாக இருக்க வேண்டியவள் என் கருத்துக்கு
மாறாகவே இருக்கிறாள். எனவே என்னை ஆட்கொண்டு தங்கள் திருவடிக்கு ஆளாக்கிக் கொள்ள
வேண்டும் என்று இறைஞ்சினார். பின் பெருமாளைப் பிரார்த்தித்துக் கொண்டு காஷாயத்தைத்
தரித்துக் கொண்டார். திரி தண்டத்தைக் கையில் ஏந்திக் கொண்டார்.
இறைவனும் அசரீரியாக “சந்நியாசம் மேற்கொண்டு கீழண்டை கோபுர வாயில் மடத்தில்
தங்குவாயாக”
என்று அவர் காதில் ஒலித்து அருள் பாலித்தார். இளம்
சூரியனைப் போல ஒளி திகழக் காட்சி அளித்த இராமானுஜரின் திருக்கோலத்தைக் குளக்
கரையில் முதலில் கண்ட திருக்கச்சி நம்பிகள் அவரை, துறவியருள் சிறந்தவர் இவரே என்ற பொருளில் எதிராஜரே என்று
அழைத்தார். அன்று முதல் அவர் இராமானுஜ முனி அல்லது எதிராஜர் என்று அழைக்கப்
படலானார்.
இராமானுஜர் மனைவியை வஞ்சகமாகப் பிறந்தகம் அனுப்பிவிட்டு
துறவறம் மேற்கொண்ட முறை சரியென்றும் சரி அல்ல என்றும் பல கருத்துகள் உள்ளன.
அதற்குள் நாம் இப்பொழுது போகவில்லை. ஞானம் முதிர்ந்த நிலையில் அவர் துறவறம்
மேற்கொண்டது அவரின் பிறவிப் பயனே.
அவர் துறவறம் மேற்கொண்டதும் திருவரங்க மடாதிபதி பொறுப்பை
ஏற்றுக் கொண்டார். அவரின் முதல் சீடரானது
அவருக்கு மருமகன் முறையாகும் தாசரதி எனப்படும் முதலியாண்டான். அவருடைய சீடர்களில்
சிறப்பாக குறிப்பிட வேண்டியவர்கள் கூரத்தாழ்வார் ஆவார்.
காஞ்சிக்கு அருகில் கூரம் என்றொரு கிராமம். அதன் அதிபதி
கூரத்தாழ்வார். மிகப் பெரிய செல்வந்தர். அவரது மனைவி ஆண்டாளும் கூரத்தாழ்வாரும்
மிகவும் நன்கு படித்தவர்கள். மேதைகள், வள்ளல் தன்மை
மிக்கவர்கள். சிறந்த பக்திமான்கள். கூரேசன் நுண்ணிய நினைவாற்றல் கொண்டவர். அவர்கள்
காஞ்சிக்கு வரதராஜப் பெருமாளை சேவிக்க வந்தபொழுது இராமானுஜர் துறவியானது
கேள்விப்பட்டு அவரின் மடத்துக்குச் சென்று வணங்கினார்கள். அவரால் ஆட்கொள்ளப் பட்டு
தங்கள் செல்வம் அனைத்தையும் தான தர்மம் செய்து விட்டு அவரின் இரண்டாவது சீடரானார்
கூரத்தாழ்வார். இவ்விரு சீடர்களையும் தனது திரி தண்டமாகவும், பவித்திரமாகவும் இறுதிவரை பாவித்து வந்தார் ஸ்ரீ
இராமானுஜர்.
No comments