ஸ்ரீ இராமானுஜர் - 8 பகுதி-3-B
திருக்கச்சி நம்பியிடம் ஆறுதல் பெறுதல்
திரும்பி வந்து திருக்கச்சி நம்பிகளிடம் மட்டுமே எல்லா
விவரங்களையும் கூறினார். மனைவியுடன் சரியாகப் பேசாமல் இருக்க ஆரம்பித்தார்.
தனிமையையே விரும்பினார். ஆளவந்தார் மறைவுக்கு ஆறு மாதக் காலம் முன்பாக அவர் தன்
தாயையும் இழந்ததனால் அவர் மனைவி தஞ்சம்மாளுக்கு மாமியார் துணையும் இல்லாமல்
கணவரும் முகம் கொடுத்தும் பேசாததால் மிகுந்த மன வேதனை அடைந்தார்.
இராமானுஜரின் தனிமைப் போக்கைக் கண்டு திருக்கச்சி நம்பிகளும்
அவருக்கு அறிவுரைகள் வழங்கினார். மன வருத்தத்திற்கும் சஞ்சலத்திற்கும் இடம்
கொடுக்க வேண்டாம் என்று கூறினார். இராமானுஜருக்கு அவரை வீட்டிற்கு அழைத்து அமுது
படைத்து அவர் உண்ட எச்சிலை சாப்பிட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று எண்ணி அவரை
உணவு உண்ண அழைத்தார். மனைவியும் உணவு சமைத்து வைத்திருந்தார்.
இவரை அழைக்க அவர் மடத்துக்குப் போன சமயத்தில் வேறு வழியாக
திருக்கச்சி நம்பிகள் இராமானுஜர் இல்லம் வந்தடைந்தார். அவருக்கு வேறு சில வேலைகள்
இருந்ததினால் விரைவில் உணவு உண்டு செல்ல வேண்டும் என்று கூறினார். இராமானுஜர் மனைவி
தஞ்சம்மாள் அவர் வளர்ந்தக் குடும்ப ஆசார வழக்கப்படி அவரை வீட்டின் உள்ளே
அழைக்காமல் ரேழியிலேயே இலை போட்டு உணவு பரிமாறி, அவர் உண்ட பிறகு எச்சிலெடுத்து சாணி போட்டு மெழுகி அவரும்
குளித்து விட்டு வந்துவிட்டார்.
மடத்தில் இருந்து திரும்பிய இராமானுஜர் மனைவி செய்த
காரியத்தை அறிந்து மிகுந்த கோபமும் வருத்தமும் கொண்டார். தான் குருவாக மதித்த
ஒருவரை இவ்வாறு சாதி வித்தியாசம் பார்த்து நடத்திய தன் மனைவியின் மேல் கோபம்
கொண்டு இன்னும் தனிமையை நாட ஆரம்பித்தார்.
இன்னொரு சமயம் பிராமணர் அல்லாத ஒருவர் வந்து உண்ண உணவு
கேட்ட பொழுது வீட்டில் இன்னும் சமைக்கவில்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்
தஞ்சம்மாள். ஆனால் இராமானுஜர் சமையல் அறையில் சென்று பார்த்த பொழுது நிறைய உணவு
இருந்தது கண்டு அதை எடுத்து வந்து கேட்டவருக்கு இவரே கொடுத்தார். மனைவியின்
இச்செயல் இவருக்கு ஏற்புடையதாக இல்லை.
ஆளவந்தார் இறைவனடி சேர்ந்த பின் மடாதிபதியாக திருவரங்கர்
என்பவர் நியமிக்கப் பட்டார். அவரும் மிகவும் நல்ல முறையில் எல்லாராலும் மதிக்கப்
பட்டவர். அவர் தன் சீடர்கள் அனைவரையும் அழைத்து, ஆளவந்தார் விருப்பபடி இராமானுஜரை அழைத்து வரவேண்டும் என்ற
முடிவை எடுத்து,
மறுபடியும் பெரிய நம்பியை காஞ்சிக்கு அனுப்பினார்.
ஆனால் இராமானுஜர் திருக்கச்சி நம்பிகளுடனேயே இருப்பதை தான்
விரும்புகிறார் என்பதை உணர்ந்து திருவரங்கர், பெரிய நம்பியை, காஞ்சியிலே
இருந்து அவருக்குத் தமிழ் வேதத்தை ஓதுவித்து மேதை ஆக்குங்கள், பின்னர் அவர் திருவரங்கத்திற்கு வருவதற்கு சிறிது
காலமாகலாம். வற்புறுத்த வேண்டாம், தானே மனது
மாறி வரட்டும் என்று அறிவுறுத்தி அனுப்பினார்.
பெரிய நம்பியைத் தஞ்சம் அடைதல்
இதே நேரத்தில் இராமானுஜரும் வரதராஜப் பெருமாளிடம் இருந்து
திருக்கச்சி நம்பிகள் மூலம் சில சந்தேகங்களுக்கு விடை கிடைத்தபடியால்,
(அவை-
திருமாலே முழு முதற் கடவுள்.
ஜீவாத்மக்களில் இருந்து பரமாத்மா வேறுபட்டவன். உயிர்களிலும்
ஜடப் பொருள்களிலும் ஸ்தூல/சூட்சும சரீரமாக பரமனே விரவி நிற்கிறான்.
ஆண்டவனை அடையும் முக்தி நெறி சரணாகதியாகும்.
அந்திம காலத்தில் பரமனை சிந்தையில் நிறுத்த வேண்டும் என்பது
அவசியமில்லை
உடலில் வாழ்ந்த காலத்தில் (பரமன் திருவடிகளில்) பூரண
சரணாகதியை கடைபிடித்த ஆன்மாவானது உடலை விட்டுப் பிரிந்த பின்னர் முக்தி அடைகிறது.
பெரிய நம்பியை ஆச்சாரியனாக நினைத்து நடப்பாயாக.)
மிகவும் மகிழ்ந்து அந்நிலையில் திருவரங்கம் செல்ல முடிவு செய்து
புறப்பட்டார். திருவரங்கத்தில் இருந்து புறப்பட்டு வந்த பெரிய நம்பியும், காஞ்சியில் இருந்து புறப்பட்ட இராமானுஜரும் மதுராந்தகம் ஏரி
காத்த இராமன் கோவிலில் சந்தித்தனர். இருவர் உள்ளத்திலும் இந்த எதேச்சையான
சந்திப்பில் பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது. அங்கேயே பெரிய நம்பியின் சீடனாக இராமானுஜர்
தீட்சைப் பெற்றார். பின் அவரையும் அவர் உடன் வந்த அவர் மனைவியையும் காஞ்சிக்கு
அழைத்துச் சென்று தன் வீட்டின் மாடியிலேயே தங்க வைத்து அவர்கள் வீட்டு நிர்வாக
பொறுப்பு அனைத்தையும் அவரே ஏற்றுக் கொண்டார். இராமனுஜருக்கு பெரிய நம்பி பஞ்ச
சம்ஸ்காரம் (சங்கு சக்கர இலச்சினை ஓமத்தீயின் மூலம் இடது தோளிலும் வலது தோளிலும்
ஆச்சாரியன் பொருத்துவது) செய்வித்ததும், பெரிய திருமந்திரத்தை உபதேசித்ததும் அவரின் வாழ்க்கையில்
மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாகும்.
நாள் தோறும் தமிழ் மறையாகிய திவ்ய பிரபந்தத்தையும்
(ஆழ்வார்கள் அருளிச் செய்தல்களையும்), பிரம்ம
சூத்திரங்களையும் பெரிய நம்பியிடம் கற்றுத் தேர்ந்தார் இராமானுஜர். ஆறு மாத காலம்
இவ்வாறு ஓடியது. ஒரு நாள் தண்ணீர் பிடிக்கும் இடத்தில் குரு பத்தினியும்
தஞ்சம்மாளும் ஒரே சமயத்தில் நீர் பிடிக்கச் செல்லுகையில் குரு பத்தினியின்
குடத்தில் இருந்த நீர் தஞ்சம்மாளின் குடத்தில் சிந்தி விட்டது. அதனால் கோபம் கொண்ட
தஞ்சம்மாள்,
உன் தந்தையை விட என் தந்தை உயர்ந்த குலம். உன்னால் என்
ஆசாரம் கெட்டுவிட்டது என்று தகாத சொற்களினால் குரு பத்தினியை ஏசி விட்டார்.
இத்தனைக்கும் அவர் தஞ்சம்மாளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இதனால் இல்லம்
திரும்பிய பின் வருத்தத்தில் குரு பத்தினி அழுது கொண்டிருப்பதைக் கண்டு, பெரிய நம்பி விஷயம் என்னவென்று அறிந்து, உடனே மனைவியை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டை விட்டகன்று
திருவரங்கம் திரும்பினார்.
இவை ஒன்றும் அறியாத இராமானுஜர் இல்லம் வந்தபோது தன்
குருவும் குரு பத்தினியும் இல்லாதது கண்டு திகைத்து மனைவியின் வாய் மூலம் நடந்ததை
தெரிந்து கொள்கிறார். அதுவும் மனைவி தான் செய்தது சரி என்று பேசியது அவரின்
ஆத்திரத்தைப் பன்மடங்காக்கியது. உன் முகத்தில் விழிப்பதே பாவம் என்று கூறி அவர்
குருவுக்காக வாங்கி வந்த பழம் காய் இவைகளை எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று
வரதனிடம் சமர்ப்பித்தார். திரும்பி வரும்போது பசியால் வாடும் ஓர் ஏழை பிராமணரைப்
பார்த்தார். அவரிடம் என்னுடன் என் இல்லத்துக்கு வாருங்கள் உணவு தருகிறேன் என்று
கூறினார். அதற்கு அவரோ உங்கள் இல்லத்தில் இருந்து தான் வருகிறேன், உங்கள் மனைவி ஏதோ கோபத்தில் இருக்கிறார் போலும் உணவில்லை
என்று திட்டி அனுப்பிவிட்டார் என்றார்.
No comments