Header Ads

ஸ்ரீ இராமானுஜர் - 7 பகுதி-3-A

ஸ்ரீ இராமானுஜர் பகுதி -3


ஆளவந்தார்

காஞ்சியில் இருந்து திரும்பித் திருவரங்கம் சென்ற ஆளவந்தார் இராமானுஜர் நினைவாகவே இருந்தார். தனக்குப் பிறகு வைணவ தத்துவங்களை நிலை நிறுத்த யாருமில்லையே என்ற கவலை அவரை வாட்டியது. இராமானுஜரே அதற்குத் தகுதியானவர் என்று ஒரு நாள் மனத்தில் பொறி தட்டியது. ஆனால் இராமானுஜரோ யாதவ பிரகாசருடன் இருக்கிறாரே என்று இவர் நினைக்கும் நேரத்தில் அவர்கள் இருவரும் பிரியும் தருணமும் வந்தது.

மறுபடியும் ஒரு முறை யாதவர் சொன்ன வேதாந்த விளக்கத்தை இராமானுஜர் திருத்த, கோபம் கொண்ட யாதவர் இனி அவரின் சீடராக இருக்க வேண்டாம் என்று அவரை அனுப்பி விட்டார். இதனால் மனம் வருந்தினாலும் வீட்டில் இருந்தபடி வேதங்களையும் மற்ற சாஸ்திரங்களையும் பயின்று வந்தார் இராமானுஜர்.

பின் திருக்கச்சி நம்பிகளிடம் மாணாக்கராகச் சேர விருப்பம் தெரிவித்தார் இராமானுஜர். திருக்கச்சி நம்பிகளோ, “நீயோ பிராமணன், கல்வியில் சிறந்த மாமேதை, நானோ படிப்பறிவு இல்லாததால் தான் பெருமாளுக்குத் தொண்டு மட்டும் செய்து வருகிறேன், வைசியக் குலத்தில் பிறந்தவன், நான் எப்படி உனக்கு குருவாக முடியும்என்று கேட்டார்.

ஆனால் இராமானுஜரோ, “தாங்களே உண்மையானக் கல்விமான். ஆண்டவன் ஒருவனே மெய்பொருள். படிப்பின் பயன் இறைவனை அறிவதே ஆகும். அந்த நிலையை நீங்கள் அடைந்து விட்டீர்கள், அதனால் நீங்களே எனக்குக் குருவாகத் தகுந்தவர், என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்என்று பணிவுடன் கூறி அவரை விழுந்து வணங்கினார்.

திருக்கச்சி நம்பிகள் இராமானுஜரின் மொழிகளைக் கேட்டு மெய் சிலிர்த்துப் போனார். இதே சமயத்தில் திருவரங்கத்தில் ஆளவந்தாரின் உடல் நலம் குன்ற ஆரம்பித்தது. அவர் உடனே இராமானுஜரை அழைத்து வரச் சொல்லிக் காஞ்சிக்கு பெரிய நம்பியை அனுப்பினார்.

பெரிய நம்பி காஞ்சி வந்து சேர நான்கு நாட்கள் ஆயின, பின் இராமானுஜரிடம் வந்த விவரம் சொல்லி அவரை அழைத்துச் செல்ல இன்னுமொரு நான்கு நாட்கள் ஆயின. திருமடத்திற்குப் போய் சேர்ந்த போது ஆளவந்தார் தன் பூத உடலை விட்டிருந்தார். இராமானுஜரும் பெரிய நம்பியும் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். பூத உடலை வணங்க அருகில் சென்றபோது ஆளவந்தாரின் மூன்று விரல்கள் மடங்கியிருப்பதை இராமானுஜர் கவனித்தார்.

இராமானுஜர், “இப்பெருமானின் மூன்று விரல்கள் எப்பொழுதுமே மடங்கி இருக்குமாஎன்று கேட்டார். அதற்கு அவரின் சீடர்கள் இது புதிதாக உள்ளது, இதற்கு முன் அவர் விரல்கள் மடங்கி இருக்கவில்லைஎன்றனர்.

இப்பதிலைக் கேட்டு இராமானுஜர் பாடத் தொடங்கினார், அதன் சாராம்சம்:

நான் வைணவ சமயத்தில் நிலைத்து நிற்பேன். அஞ்ஞான இருளில் மயங்கிக் கிடப்போருக்கு தமிழ் வேதத்தைக் கற்பித்து ஸ்ரீமன் நாராயணனின் திருவடிக் கமலங்களில் அடைக்கலம் புகுமாறும் செய்து அவர்களை உய்விப்பேன்

இப்பாடலை பாடியதும் ஆளவந்தாரின் ஒரு விரல் நிமிர்ந்தது.

உலக நன்மைக்காக எல்லா பொருள்களையும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்து, அனைத்து நன்மைகளையும் உண்மைகளையும் வெளிப்படுத்தும் தத்துவார்த்ததை விளக்கவல்ல தெளிவுரையை செய்யக் கடவேன்என்று பொருள் பட இன்னொரு பாடல் பாடினர்.

இப்பாடலைப் பாடியதும் அவரின் இரண்டாவது விரலும் நிமிர்ந்தது.

உயிர், இறைவன், உலகம் ஆகிய இம்மூன்றின் தன்மை பற்றி உலகம் உய்யும் வகையில் முனிவர்களில் சிறந்தவரான பராசரர் ஸ்ரீ விஷ்ணு புராணம் இயற்றியுள்ளார். அவர் செய்த அரிய செயலுக்கு நன்றி கூறும் வகையில் ஒரு வைணவப் பெரியவருக்கு அம்முனிவரின் திருநாமத்தை வைப்பேன்என்று பொருள் படப் பாட,

ஆளவந்தாரின் மூன்றாம் விரலும் நிமிர்ந்தது.


ஆளவந்தாரின் திருக்கை விரல்கள் மூன்றும் நிமிர்ந்ததால் அவர் இடத்துக்கு வரத் தகுதியானவர் இராமானுஜரே என்று அங்கு கூடியிருந்தவர்கள் முடிவு செயதனர். ஆனால் இராமானுஜருக்கு அங்கு தங்க விருப்பம் இல்லை. ஆளவந்தாரின் திரு உரையை கேட்க இனி முடியாததால் அங்கு இருந்து என்ன பயன் என்று எண்ணி காஞ்சிக்கேத் திரும்பி விட்டார்.

No comments

Powered by Blogger.