குரு ஸ்ரீ ராகவேந்திர் - அற்புத மகிமை - 2 - மிருத்திகை மகிமை
குரு ஸ்ரீ ராகவேந்திர்
மகான்களின் திவ்ய சரித்திரங்களைப் படித்தாலே மறுமைக்கு வழிகாட்ட வல்லது. அதைப் படித்தும், சகஸ்ரநாமாவளியால் சுவாமிகளை அர்ச்சித்தும் ஸ்தோத்திரங்களைப் படித்தும் எல்லோரும் இஷ்டசித்திகளைப் பெற வேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறோம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
ஸ்ரீ ராகவேந்த்ர திவ்ய சரித்திரம்
|| ஸ்ரீ ||
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய ஜ்ஞாநரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே ||
ஸ்ரீ ராகவேந்த்ரரின் அற்புத மகிமைகள் :
2. மிருத்திகை மகிமை : மந்திராலய பிருந்தாவனத்தில் உள்ள
மிருத்திகை (மண்) யின் மகிமை அபாரமானது. அம்மண்னைக் கொண்டு காசி, உடுப்பி, பெங்களூரு, சென்னை, திருப்பதி
முதலிய இடங்களில் ஸ்ரீ ராகவேந்த்ரரின் அற்புத பிருந்தாவனத்தை அமைத்து பூஜைகள்
நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீ ராகவேந்த்திர சுவாமிகள் மடத்தில் சேவை
செய்துகொண்டிருந்தான் ஒரு ஏழை பிரம்மச்சாரி. அவனுக்கு விவாகம் செய்துகொள்ளவேண்டும்
என ஆசை. ஒரு நாள் சுவாமிகள் கை கால் சுத்தம் செய்துகொள்வதற்காக மண்ணையும், நீரையும் வைத்துக் கொண்டு காத்திருந்தான். சுவாமிகள்
வந்தவுடன் ஏதோ பேச முற்பட்டு பேச ஆனால் முடியாமல் தவித்து நின்றான். சுவாமிகளோ நீ
விவாகம் செய்துகொள்ள விரும்புகிறாய், இதோ இந்த
மண்ணை கொண்டு செல், விவாகம்
அமோகமாக நடக்கும் என்று ஆசி கூறி அனுப்பினார்.
அவன் பக்தியோடு அம்மண்ணை மேல்த்துணியில் சுமந்தவாறு, கால் நடையாகப் புறப்பட்டான். கதிரவன் அஸ்தமிக்கும்
நேரத்தில் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தான். நடந்து வந்த களைப்பால் சுவாமிகளின்
மிருத்திகையை ஒரு வீட்டின் கூரை உத்தரத்தில் வைத்துவிட்டுத் திண்ணையில் தூங்கி விட்டான்.
இரவில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. நள்ளிரவில் அயர்ந்து
தூங்கிக் கொண்டிருந்த இப்பிரம்மச்சாரியை ஒரு பிரம்ம ராக்ஷ்சன் எழுப்பி, ஐயா, நீ
உத்தரத்தில் வைத்திருக்கும் மண் மூட்டையை எடுத்துவிடு, அது காலாக்னிபோல் ஜொலிக்கிறது, என்னால் இந்த வீட்டினுள் நுழைய இயலவில்லை, என்றது. குரு தந்த மண்ணிற்கு இவ்வளவு மகிமையா என்று
வியப்புற்ற பிரம்மச்சாரி, நீ ஏன் இந்த
வீட்டினுள் நுழைய வேண்டும்? எனக்
கேட்டான். அதற்கு அந்த பிரம்ம ராக்ஷ்சன், " ஐயா, போன
ஜென்மத்தில் இவ்வீட்டுக்காரன் என் எல்லாக் குழந்தைகளையும் கொன்றுவிட்டான், அதற்குப் பழி தீர்க்கவே நான் இந்த ஜென்மத்தில் அவனுக்குப்
பிறந்த குழந்தைகள் ஏழை இதுவரை
கொன்றுவிட்டேன்,
இது எட்டாவது பிரசவம், இதையும் கொல்லவே வந்துள்ளேன் ஆனால் நீ உத்தரத்தில்
வைத்துள்ள அந்த மண் மூட்டை என்னை உள்ளே போக விடாமல் தடுக்கிறது, நீ அதை அங்கிருந்து தூர நீக்கி விட்டால் உனக்கு நிறையப்
பொன் நாணயங்கள் தருகிறேன் " என்றது. இதுகேட்டு அதிர்ச்சியுற்ற பிரம்மச்சாரி, இனிமேலும் தாமதித்தால் ஆகாது எனக்கருதி, மூட்டையிலிருந்து சுவாமிகளின் மிருத்திகை சிறிது எடுத்து
அந்த ராக்ஷ்சன் மீது வீச அது அந்த மூர்க்க ராக்ஷ்சனை தணலென எரித்தது, அந்த ராக்ஷ்சன் " ஐயோ " என்ற ஓசையுடன் எரிந்து
சாம்பலாகினான்.
இந்தச் சங்கதியெல்லாம் அறிந்த அவ்வீட்டுக்காரன் அப்பொழுது
தன் வீட்டில் தங்கியிருந்த தன் தமையன் மகளையே அந்த பிரம்மச்சாரிக்கு திருமணம்
செய்து வைத்தான். மண் திருமணம் செய்துவைத்த மகிமையைக் கேட்டு எல்லோரும் வியந்தனர்.
இப்படி எத்தனையே அதிசய நிகழ்ச்சிகள் சுவாமிகளின் அருளால்
நடந்து வருகின்றன. இவையெல்லாம் ஆயிரம் நாவு படைத்த ஆதிசேசனாலும் வருணிக்க
முடியாது. அவரவரே பிருந்தாவனம் சென்று மகான் ஸ்ரீ ராகவேந்த்ர சுவாமிகளை தரிசித்து, பிரதக்ஷின நமஸ்க்காரம் செய்து, பிரார்த்தனை செய்துகொண்டால் அனுபவ பூர்வமாக ஸ்ரீ ராகவேந்த்ர
சுவாமிகளின் மகிமையை அறியலாம்.
No comments