Header Ads

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 17 - ருதுத்வஜனும் தத்தாத்திரேயரும் - 3

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 17 - ருதுத்வஜனும் தத்தாத்திரேயரும் - 3


அவன் அவளிடம் கூறினான்,' மங்கைகளே நான் ஒரு காட்டுப் பன்றியின் உருவில் வந்த அரக்கனை துரத்திக் கொண்டு வந்ததில் இங்கு நுழைந்து விட்டேன். என் மீது நம்பிக்கை இருந்தால் உங்கள் துயரம் என்ன என்பதை என்னிடம் கூறினால் என்னால் ஆன உதவியை செய்வேன்' என்றான். அதைக் கேட்ட அந்தப் பெண் கூறினாள் ' இளவரசரே, இந்த மஞ்சத்தில் அமர்ந்து இருக்கின்றாளே, அவள் பெயர் மதாலசை. அவள் மீது காதல் கொண்ட பாதாள மன்னனின் பிள்ளை ஒருவன் அவளை மணக்க விரும்பி அவளை தூக்கிக் கொண்டு வந்து இங்கு அடைத்து வைத்துள்ளான். பூலோகத்தில் உள்ளவர்களால் பாதாளத்தில் உள்ளவர்களை எப்படி மணந்து கொள்ள முடியும்?. ஆனால் அவன் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இன்னும் இரண்டு நாளில் அவளை மணக்கப்   போவதாகக் கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறான். ஆனால் இவளோ அவனை மணக்க விரும்பவில்லை என்பதினால் தற்கொலை செய்து கொள்ள முயன்றாள்.

அதைக்  கண்டு விட்ட காமதேனுப் பசு அந்த முயற்சியை தடுத்து விட்டு அவளிடம் மனதை தளர விடாமல் இருக்குமாறும், அவளை விரைவில் ஒருவன் வந்து காப்பாற்றுவான் எனவும் கூறியது. அதற்கேற்ப இன்று பூலோகம் சென்ற அந்த அரக்கன் உடல் முழுவதும் யாரோ எய்த அம்புகளினால் துளைக்கப்பட்டு ஓடி வந்துள்ளான். அவன் அப்படி ஓடி வந்தபோது நீங்கள் அவனை துரத்திக் கொண்டு வந்ததைக் கண்டோம். அதைக் கண்ட நாங்கள் அது நல்ல சகுனம் என்றே நினைத்தோம். உங்களால் முடிந்தால் இவளை பாதாள உலகில் இருந்து காப்பாற்றி பூலோகத்துக்கு அழைத்துச் செல்ல முடியுமா? ' என்று கேட்டாள். இளவரசனுக்கு அந்த மங்கையை பிடித்து விட்டது. ஆகவே அவளை தானே மணக்க விரும்பினான். ஆனால் தன்னுடைய குல வழக்கப்படி தன்னுடைய குருவின் ஆசி இன்றி ஹோமம் வளர்க்காமல் அவளை மணந்து கொள்ள விரும்பவில்லை. ஆகவே அவன் அங்கேயே தனது குருவை வேண்டிக் கொண்டதும் சிறிது நேரத்தில் அவர் அங்கேயே பிரசன்னம் ஆனார். அவரிடம் தனது ஆசையை அவன் கூற அவர் தனது சக்தியினால் அங்கேயே ஒரு ஹோம குண்டத்தை எழுப்பி அக்னி சாட்சியாக அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். அதன் பின் அந்தப் பெண்ணை பூலோகத்துக்கு அழைத்துச் செல்லக் கிளம்பியவனை வழி மறைத்தான் பாதாள கேது.  இருவரும் பயங்கரமாகப் போர் புரிய பாதாளகேதுவின்  படையும் அதில் கலந்து கொண்டது. ஆனாலும் ருதுத்வாஜன் அவர்கள் அனைவரையும் அந்த பராக்கிரமக் குதிரையின் உதவியுடன் எளிதில் துவம்சம் செய்து விட்டு அவளை தேவலோக குதிரை மீது அமர்த்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான். போகும் முன்னரேயே அவன் ராஜதானியில் தனது பெற்றோர்களுக்கு நடந்தவற்றைக் கூறி அனுப்பி இருந்ததினால் அவர்கள் அவனை பெரும் பெருமையுடன் வரவேற்றனர். அவனுக்கு அந்த ராஜ்யத்தின் மன்னனாக பட்டம் சூட்டினார்கள்.

திரும்பி வந்த இளவரசனிடம் பெரும் மாறுதல்கள் தோன்றி இருந்தன. முன்பு போல இன்றி நண்பர்களுடன் சுற்றித் திரிவதைக் குறைத்த  பின் ராஜ்ய பரிபாலனயத்தில் அதிக கவனம் செலுத்தினார்.அதே நேரம் மனைவியுடனும் மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழித்தார்.ரிஷி முனிவர்களை அடிக்கடி சென்று பார்த்தபடியும் அவர்களது அறிவுரைகளை பெற்று நடப்பதிலும் நேரத்திக் கழித்தான்.

இப்படியாக  எளிமையான வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருந்தபோது போரிலே மடிந்து போன  பாதாள கேதுவின் சகோதரனான தாளகேது  என்பவன் ருதுத்வஜனை பழி வாங்கத் நேரத்தை எதிர்ப்பார்த்து துடித்துக் கொண்டு இருந்தான். அப்படி அவன் நேரம் பார்த்துக் கொண்டு இருந்த போது அவனுக்கு ஒரு பரிசு கிடைத்தது போல ஒரு நிகழ்ச்சி நடந்தது. இளவரசன் ருதுத்வாஜன் ஒரு நாள் காட்டிற்கு ரிஷி முனிவர்களைக் காணச் சென்றான்.அவன் படையினரை விட்டு பிரிந்து வெகு தூரம் காட்டிற்குள் சென்று விட்டான். திரும்பி வர வழி தெரியவில்லை. வழி தெரியாமல் அப்படி காட்டில் சுற்றி அலைந்தவன் கண்களில் ஒரு அழகான ஆசிரமம் தென்பட்டது. அற்புதமான இடமாக அது அமைந்து இருந்தது. அழகிய சோலைகள், பூங்காக்கள், செடி  கொடிகள் என இருக்க அதில் நுழைந்து அங்குள்ளவர்களை வழி கேட்கலாம் என எண்ணியவன் அதற்குள் நுழைந்தான். அந்த ஆசிரமம் வேறு யாருடையதும் அல்ல. அவனை பழிவாங்க துடித்துக் கொண்டு இருந்த தாளகேதுவினால்  செயற்கையாக உருவாக்கப்பட்ட இடமேதான். அங்கு தாளகேது ஒரு முனிவரின் உருவில் கண்களை மூடியபடி அமர்ந்து இருந்தான். தளகேதுவினால் அவனை நேரடியாக கொள்ள முடியாது என்பதினால் அவனை வஞ்சகமாக இங்கு வரவழைத்து இருந்தான். அங்கு ஒரு யாகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன போன்ற தோற்றத்தை தந்து கொண்டு இருந்தது அந்த இடம் . இளவரசன் நுழைந்த சப்தத்தைக் கேட்டு கண் விழித்தவன்   யாகத்தில் தான் மும்முரமாக இருப்பதைப்போலவும் பாவலா காட்டிக் கொண்டு இருந்தவாறு இளவரசனிடமும் இனிமையாகப் பேசினான். தான் வழிதவறி வந்துவிட்ட விவரத்தை இளவரசன் கூற அந்த வஞ்சகன் .  'கவலைப்படாதே உன் இடத்துக்கு பத்திரமாக உன்னை அனுப்பி வைக்கின்றேன்' என்று கூறி விட்டு தான் அங்கு நடத்த உள்ள யாகத்தில் பங்கேற்கும் வகையில் இளவரசன் கழுத்தில் இருந்த மாலையை தருமாறு கேட்டான். கேட்டது முனிவர்தானே என எண்ணிய இளவரசன் அந்த யாகத்துக்கான பங்காக தனது மாலையைக் கயற்றிக் கொடுத்தான். அந்த மாலை திருமணத்தின்போது மதாலசை தனது அன்புப் பரிசாக தன் கழுத்தில் இருந்து கயற்றிக் கொடுத்து இருந்தாள். அதை பெற்றுக் கொண்ட முனிவர் உருவில் இருந்த தாளகேது இளவரசனை அங்கு இரவு தங்கி ஒய்வு எடுத்துக் கொண்டு மறுநாள் காலை கிளம்பிப் போகுமாறு கூறி அவனுக்கு வழியையும் காட்டினான். இரவு இளவரசன் நன்கு தூங்கிவிட்டான். 

Our Sincere Thanks to 
Santhipriya


https://santhipriyaspages.blogspot.in/ 

No comments

Powered by Blogger.