Header Ads

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 17 - ருதுத்வஜனும் தத்தாத்திரேயரும் - 4

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 17 - ருதுத்வஜனும் தத்தாத்திரேயரும் - 4


மறுநாள் விடியற்காலையில் அவன் எழுந்திருக்கும் முன்னரே தாளகேது அந்த இளவரசனின் அரண்மனைக்குச் சென்று ஒரு துயர செய்தியை தான் கொண்டு வந்துள்ளதாக அங்கிருந்தவர்களிடம் கூறினான். அடர்ந்த காட்டில் இளவரசனை அவன் எதிரிகள் சூழ்ந்து கொண்டு கொன்று விட்டு ஓடி விட்டதாகவும், ஏதேற்சையாக  தான் அந்தப் பக்கமாக சென்று கொண்டு இருந்தபோது வலியால் துடித்துக் கொண்டு இருந்த இளவரசனை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவன் தனது கழுத்தில் இருந்த மாலையைக் கயற்றி தன்னிடம் தந்துவிட்டு 'மதாலசை....மதாலசை' எனக் கதறி விட்டு இறந்துவிட்டான் என ஒரு கதையைக் கூறினான். வந்திருந்தவன் கொண்டு வந்திருந்த மாலை இலவரசனுடயதுதான் என்பதை புரிந்து கொண்டவர்கள் அதைக் கேட்டு கதறி அழத் துவங்க வந்திருந்தவன் கிளம்பிச் சென்று விட்டான். வந்தவன் யார் என்பதை யாரும் சரியாக கவனிக்கவில்லை. அதே சமயம் அந்த மாலையைக் கண்ட மதாலசையும் இளவரசன் மடிந்துவிட்டான் என எண்ணிக் கொண்டு அதிர்ச்சியால் இறந்து விழுந்தாள் .

ராஜ்யமே துயரத்தில் ஆழ்ந்தது. அவற்றை வெற்றிகரமாக செய்துவிட்டு வெளியேறிய தாளகேது' ஆஹா....என் சகோதரனைக் கொன்றவனை பழி வாங்கி விட்டேன்' என ஆடிக் கொண்டு தனது நகருக்கு சென்றான். இதற்கு இடையில் யார் யாரையோ வழி கேட்டு நகருக்குள் திரும்பி வந்த இளவரசன் நகரமே துக்கத்தில் இருந்ததைக் கண்டு துணுக்குற்றான். அவசரம் அவசரமாக அரண்மனைக்குள் நுழைந்தவனைக் கண்டு அனைவரும் அதிர்ந்து போனார்கள். நடந்த அனைத்து கதையையும் அவர்கள் பரிமாறிக் கொள்ள யாரோ நம்மை பழிவாங்கவே இப்படி ஒரு போலி நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் என்ன செய்வது. நடந்தவை நடந்து முடிந்து விட்டனவே. மனைவி இறந்த துக்கத்தை இலவரசனால் மறக்க முடியவில்லை. எத்தனை காலம் அழுது கொண்டே இருப்பது? காலம் அனைத்தையும்  தேற்றும்  என்பது உண்மை.  மெல்ல மெல்ல மீண்டும் அவன் தனது நண்பர்களுடன் ஒன்று சேர்ந்தான். அவனை அவர்கள்தான் தேற்றி ஆறுதல் கூறிக் கொண்டு இருந்தார்கள்.

இதற்கு இடையில் நாகலோகத்தில் இருந்து சென்ற தமது பிள்ளைகள் மனித உருவிலே இன்னமும் பூமியிலே வாழ்ந்து கொண்டு திரும்பி வர மறுக்கின்றார்களே என அவர்களின் தந்தையான நாகதேவன் மனம் வருந்தினான். ஆகவே ஒரு நாள் அவர்களை பாதாளத்துக்கு வரவழைத்து அவர்கள் பூமியிலே என்ன செய்கிறார்கள், யாருடன் பழகிக் கொண்டு இருக்கின்றார்கள். ஏன் பாதாளத்துக்கு வர மறுக்கின்றார்கள் என அனைத்தையும் கேட்டு அறிந்தான். அவர்கள் தாங்கள் ஒரு  நாட்டின்  இளவரசன் ருதுஜ்வஜனிடம் நண்பர்களாக இருப்பதாகவும், ருதுத்வஜனின் நல்ல பண்புகளையும், நல்ல குணங்களையும்  கொண்டவன் என்பதை அவரிடம் எடுத்து உரைக்க அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் அவர்கள் அவனைப் பற்றிக் கூறிய துயரக் கதையைக் கேட்டு மனம் வருந்தினார். அவன் ருதுத்வஜனைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு இருந்தான். அந்த நாட்டில் நல்ல முறையில் ஆட்சி நடக்கின்றது, யாரும் துன்பப்படுத்தப் படுவதில்லை என்பதை எல்லாம் தெரிந்து வைத்து இருந்தான். ஆகவே தனது மகன்களின் நண்பனின்  துயரத்தைத் தீர்க்க என்ன வழி என யோசிக்கலானான். அவனுக்கு ஒரு வழி புலப்பட்டது.

தனது ராஜ்ய பரிபாலனத்தை அவ்வபோது பூமியில் இருந்து அங்கு வந்து கவனித்துக் கொள்ளுமாறு தமது பிள்ளைகளிடம் கூறி விட்டு இமயமலைக்குச் சென்று சரஸ்வதி தேவியிடம் வரம் கேட்டு தவத்தில் இருந்தான். சரஸ்வதி தேவியை நினைத்து தவம் இருந்தவன் முன் சரஸ்வதி தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டாள். அவன் தன்னுடைய இறந்துவிட்ட சகோதரன் மீண்டும் உயிர் பிழைத்து எழ வேண்டும், தன்னுடைய ஒரு குறிப்பிட்ட வேலை முடியும் வரை அவர் உயிருடன் இருக்க வேண்டும் என்றும் தம் இருவருக்கும் அற்புதமான கான மழை பொழியும் கலையை அருள வேண்டும் என்று கேட்டான். அவர் சகோதரர் ஏற்கனவே இசைக் கலைஞ்சர் . அற்புதமான இனிய பாடல்களை பாடுபவர் . அவர் கேட்ட வரனை சரஸ்வதி தேவி அருள மன்னனின் சகோதரர் உயிர் பெற்று எழுந்தார். உடனே அந்த நாக மன்னன் தனது சகோதரனிடம் நடந்த அனைத்தையும் எடுத்துக் கூறி தாம் இருவரும் சிவ பெருமானை சந்தித்து ருதுத்வஜனின் இறந்து விட்ட மனைவியான மதாலசை தாம் குடும்பத்தில் ஒரு பெண்ணாக பிறக்க வேண்டும், மீண்டும் அவளை ருதுத்வஜனின் மனைவியாக்கி அவனுக்கு மன மகிழ்ச்சியை தர வேண்டும் என வரம் பெற வேண்டும் என்று தம்முடைய எண்ணத்தைக்  கூறினார். நாக மன்னனின் சகோதரரும் உடனே அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். இரண்டு சகோதரர்களும் கயிலாயத்திற்குச்  சென்று சிவபெருமானை துதித்து கான மழை பொழிந்தார்கள். சிவபெருமான் இசைக்கு மயங்குபவர். ஆகவே அவர்களது பக்தியை மெச்சி என்ன வரம் வேண்டும் என்று கேட்க  அவர்களும் இறந்து விட்ட மதாலசை தமது குடும்பத்தில் மகளாகப் பிறந்து உடனேயே பெரியவளாக வேண்டும், அவள் பழைய உருவை எடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள அவரும் அதற்கு அருள் புரிய அவர்கள் குடும்பத்தில் மதாலசை பிறந்து உடனேயே பழைய வயதையும் உருவையும் அடைந்தாள். அந்த சகோதரர்கள் அதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அடுத்து அவளை எவர் கண்ணிலும் படாமல் ரகசியமாக அரண்மனையில் பாதுகாப்பான இடத்தில் கொண்டு வைத்தார்கள். தனது பிள்ளைகளை வரவழித்த நாகதேவன் அவர்களிடம் நடந்த அனைத்தையும் கூறி விட்டு ருதுத்வஜனை எப்படியாவது அங்கு கொண்டு வந்து விட்டால் மீண்டும் அவனுடன் மதாலசையுடன்  சேர்த்து வைக்கலாம் என்று கூறினார்கள். ஆனால் அவன் அங்கு வந்து மெல்ல மெல்ல உண்மையை புரிந்து கொள்ளும்வரை அந்த விஷயம் அவனுக்கு தெரியக் கூடாது என்று கூறினார். காரணம் அவன் அதனால் அதிர்ச்சி அடைந்து பைத்தியம் ஆகி விடக் கூடாது என்பதினால்தான்.

Our Sincere Thanks to 
Santhipriya

https://santhipriyaspages.blogspot.in/ 

No comments

Powered by Blogger.